மண்மீதும் மக்கள்மீதும் தீராக்காதல் உடையது பாவலர் மகாராசன் அவர்களின் எழுத்து. அது சொல் நிலத்தில் கிளைத்து, நிலத்தில் முளைத்த சொற்களில் தழைத்திருக்கிறது. அறுவடைக்குப்பின் பொறுக்கும் வயல்குருவிகளைப் போல தேடி எடுத்த சொற்களால் விருந்து படைத்திருக்கிறார்.
அணத்தல், குதியாளம், உக்கிப் போதல், தொளிவயல், மிடுக்கொலி, குதுவல், விதைநெத்து இவை வரப்புகளில் குந்தி வயல் வெடிப்பில் பொறுக்கிச் சேர்த்தவை; படைப்பழகைக் கூட்டுபவை.
தாய்மொழியில் வறியனாக இருப்பவன் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியாது; அவன் பொய்யும் புரட்டும் எழுத பிறமொழியில் கடன் வாங்குவான். எங்கள் மகாராசன் முதன்மொழியில் சொல்லெடுத்து கவின்மொழியில் இலக்கியம் செய்திருக்கிறார்.
பேனா என்று எழுதுவது அரிசியில் கல். எழுதுகோல் என்று எழுதுவது அரிசியில் உளுந்து. மகாராசன் அரிசியை அரிசியாக வைத்திருக்கிறார், உளுந்தை உளுந்தாக வைத்திருக்கிறார் . பேனா என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இறகு என்று பொருள். தமிழில் இறகிற்கு இன்னொரு பெயர் தூவி. தூவியிலிருந்து பிறந்த எழுதுகோல் தூவல். அது பாவலரின் படைப்பில் மைத்தூவலாகித் தாய்மொழி காக்கிறது.
அதுபோல தமிழ்மரபுக் கூறுகளில் ஒன்று மொழிமுதல் எழுத்துகள். அவற்றில் ஒன்று ரகரம் மொழிமுதலாக வராமை.. எல்லா சொற்களுக்கும் சகட்டுமேனிக்கு இகரம் சேர்ப்பது பிழையாகி விடும். ரங்கராசன் என்னும் பெயரில் இகரம் சேர்த்தால் இரங்கராசன் என்று பொருள் மாறிவிடும். ஒரு சில சொற்களுக்குப் பொருள் அடிப்படையில் அகரம் மொழிமுதலாக வரும். அப்படி ஒரு சொல்தான் ரத்தம். எல்லோரும் இரத்தம் என்று எழுதுவதைப் பாவலர் அரத்தம் என்று பொருள் அறிந்து கையாண்டுள்ளார்.
"குருவும் கெழுவும் நிறனா கும்மே'' என்னும் நூற்பாவின்படி, குரு என்பது சிவப்பு. சிவப்பான நீர் குருதி. அதுபோலவே அர் என்றால் சிவப்பு. அரத்தம் என்றால் செந்நீர் எனப் பொருள். அதைப் புரிந்து இரத்தம் என்று எழுதுவதைத் தவிர்த்திருக்கிறார். தமிழறிந்த கவியரசுகள் ரத்தம் என்பதோடு முடித்து விடுகின்றன. இதில் பாவலரின் பொறுப்புணர்வும் கையாளும்துணிவும் உணர முடிகிறது
புதுச்சொல் படைக்கும் பாவலரின் பாங்கு, நூலின் நோக்கோடு நம்மை ஒன்றச் செய்கிறது. நிலத்தாள், மலைத்தாய்ச்சி, வனத்தாய்ச்சி, கடல்தாய்ச்சி என நீளும் அவரின் சொல்லாக்கங்களை வெறுமனே கடந்து போய் விட முடியாது. இயற்கையை நேசிக்கும் ஒருவன் எல்லாவற்றையும் தாயாகக் கொண்டாடும் உயர்பண்பு. இன்னுஞ் சொல்லப்போனால் இவற்றைத் ஐந்திணை வேறுபெயர் எனலாம்.
பாவலர் மேற்கொண்ட பாடுபொருளும் நடைஅழகியலும் நாம் கொண்டாட வேண்டியவை.
அடைகாத்துப் படுத்திருக்கிறது
நிலத்தில்
கவிழ்ந்திருந்த
வானம்."
"அந்தியில்
பூத்திட்ட ஈசல்
அடைமழை அச்சாரத்தைத்
தந்து விட்டுப் போயிருக்கிறது."
"வாழ்தலின் பேரின்பத்தை
மணக்க மணக்கப் பாடியது
பூப்பெய்திய காடு"
போன்ற இடங்களில் மகாராசன் குறிஞ்சிக்கபிலராக மாறுகிறார்.
இன ஓர்மைக்கான சாதிஎதிர்ப்பு வரிகள் செறிவானவை.
மேல்காட்டுப் பூக்களும்
அணைத்து மணந்து
கூடிக் கிடந்தன."
இதையும் அவர் நிலத்தில் இருந்துதான் எடுக்கிறார்.
மண்ணின் கருப்பொருட்களான பூக்களும் கொடிகளும் பறவைகளும் தனிப் பொழிச்சல்களாகவம் இடையிடையேயும் வந்து அழகு செய்கின்றன. அவை உழைப்புச் சுரண்டல், நிலவளக் கொள்ளை, ஆகியவற்றிற்கு எதிராகவும் இன விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் எழுப்புகின்றன. இனக்கொலைக்கு எதிரான நெருப்பு வரிகளும் நிலத்தில் தொடங்கி நிலத்தில் முடிகிறது.
முப்புரி நூலாலும்
இறுகக் கட்டிய தொரட்டிகளால்
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு
சுருண்டு போயின வேர்கள்.
ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின்
உயிர்ச்சத்தை உறிஞ்சி
பெருவனத்தை வரைந்திருந்தது.
மறப்பாய்ச்சலில்
வன்னி நிலத்தில்
கருநாகங்களின் துரோகத்தைக்
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த
சிங்கக் கூர்வாளை
ஏந்திச் சிரித்தான் புத்தன்.
தப்பிய புலிகளின்
கால்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்."
மண்ணின் மீது கொண்ட பெருவிருப்பின் வெளிப்பாட்டை இந்நூல் முழுதும் காண முடிகிறது. நூலுக்கு என்று எதையும் அவர் திட்டமிட்டு எழுதவில்லை. அவர் வாழும் வாழ்க்கையே எழுத்தில் முளைத்த நிலமாகி இருக்கிறது. வாழ்த்துகள்.
பாவலர் த.ரெ. தமிழ்மணி
திருவாரூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக