செவ்வாய், 20 டிசம்பர், 2016

கள்வரும் களவாடுதலும் கன்னமிடுதலும்: நவீனப்படும் மரபு.


தமிழ் மரபில் அய்வகை நிலத்து இயல்புகளும், மக்கள் பிரிவுகளும், தொழில் முறைகளும்,வாழ்வியல் புலப்பாடுகளும்,பண்பாட்டுக் கோலங்களும் மிக விரிவாகவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள்,பாலை நிலத்து விவரிப்பும் உள்ளடங்கும்.

குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்கிறது சிலப்பதிகாரம் . முதுவேனில் காலத்து நிலத் திரிபை அது பேசுகிறது.

நிலத்தின் இயல்புகள்தான் அந்நிலத்து மக்களின் தொழிலையும் வாழ்வியலையும் பண்பாட்டையும் வடிவமைக்கின்றன. அவ்வகையில், பாலை நிலத்து மனிதர்கள், அந்நிலத்துக் குணவியல்புகளைக் கொண்டவராகத்தான் இருக்க முடியும்.

மற்ற நால்வகை நிலங்களும் உற்பத்தி சார்ந்த தொழில் உறவுகளை வடிவமைக்கும் தன்மைகளைக் கொண்டிருக்க, பாலை மட்டும் தான் உற்பத்திக்கும் தொழிலுக்கும் வாகாய் அமைந்திருக்கவில்லை. எனினும், அந்நிலம் சார்ந்த மக்களும் உயிர் வாழத் தானே வேண்டும். அவ்வாறு வாழ்ந்தும் இருப்பதைத் தான் பாலைத் திணை நமக்குப் புலப்படுத்தியிருக்கிறது.

முதுவேனில் எனப் பெறும் கடும் கோடைக்காலத்தில் ஓருணவுக்கும் தொழில் வழியின்றித் தவிக்கும் பாலை நிலத்து மக்கள்,களவுத் தொழில் மேற்கொள்ள நேரிடுகிறது. பின்பு, அதுவே தொழில் வழக்காறாய் ஆகிப் போய் விட்டிருக்கிறது.

வழிப்பறி, திருட்டு, கொள்ளையடித்தல் போன்ற களவுத் தொழில் என்னும் களவாடுதல் தொழிலை மேற்கொண்ட எயினர், வேட்டுவர் முதலிய வகுப்பினரே கள்வர் எனப்பட்டனர். மேலும், கள்வம் எனும் திருட்டுத் தொழில் செய்வோரையும் கள்வர் என்றே அழைக்கப்பட்டனர். இந்நிலையில், களவாடும் தொழில் மேற்கொண்ட கள்வர்களின் தொழில் நுணுக்கங்கள் குறித்தான நூல்களும் இருந்திருக்கின்றன என்பதைச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டிருக்கிறது.

மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவி என்று எட்டுடன் அன்றே இழுக்குடை மரபில் கட்டூண் மாக்கள் துணையெனத் திரிவது
(சிலப்.16:166 - 9) எனச் சிலப்பதிகாரம் குறிப்பது, களவு நூலின் கூறுகளாகும்.

இத்தகையக் களவு  நூலைக்  "கரவட" நூல் என்கிறார் பாவாணர். கரவடம் என்பதற்கு வஞ்சகம், களவு எனப் பொருள் கூறுகிறது செந்தமிழ் அகராதி. மேலும்,கரவர், கரவடர் என்போர் திருடர், கள்வர் என்றே அந்நூல் குறிப்பிடுகிறது.

களவாடும் தொழில் மேற்கொள்ளும் கள்வர்கள் திடுதிப்பென்று களவை மேற்கொள்ளுதல் கிடையாது. இடம், காலம், சூழல், நிமித்தம், வழி போன்ற களவுக்கான நிமித்தங்கள் பார்த்துத்தான் களவு மேற்கொள்வர். அவ்வாறான களவு நிமித்தங்களுள் ஒன்று தான் கன்னம் இடுதல் அல்லது கன்னம் வைத்தல் என்பதாகும்.

சுவரில் துளையிட்டுக் களவாடுதலுக்குக் கன்னமிடுதல் என்று சொல்வதுண்டு. கன்னமிடும் இத்துளைக் கருவியைக் கன்னக்கோல் எனவும் குறிப்பர். இதைக் குறித்த பழமரபுக் கதையும் ஒன்றுண்டு. அதாவது, மின்னலானது வாழை மரத்தில் இறங்கினால் அம்மரம் கருகிப் போய் கன்னக்கோல் கிடைக்கும். அதைக் கொண்டு எந்தக் கடினமான சுவரையும் துளையிட்டு விடலாம் என்கிறது அக்கதை.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இட்ட கதையாய்
எனும் பழமொழியும் கன்னமிடுதலைக் குறிப்பதை உணரலாம். ஆக, கள்வரின் களவாடும் திறத்தில் கன்னமிடுதல் என்பது கைதேர்ந்த ஒன்றாகவே கருதப்பட்டிருக்கிறது.

செல்வத்தையும் பொருளையும் களவாடுதலுக்காகவே முரட்டுத் தோற்றத்தையும் பேச்சு முறைகளையும் கள்வர்கள் வருவித்துக் கொண்டிருக்க வேண்டும். அதோடு, கழுத்தறுப்பென்னும் கொலையும் கூட களவாடுதலில் தவிர்க்க இயலாத செய்கையாகவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

களவாடும் இக் கள்வரை
நால் நில மக்கள் பிரிவினரும் வெறுத்தது மட்டுமில்லாமல், அவர்களைக் கண்டு அஞ்சவும் செய்தனர். இந்த அச்சமும், உடைமைகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் தான் கள்வர்களின் துணிவை அதிகப்படுத்தின.   ஆனாலும், உழைத்தும் உற்பத்தியிலும் ஈடுபட்டுப் பொருள் சேர்க்கும் ஒரு பிரிவினர், கள்வரை எதிர்த்தே வந்திருப்பதையும் வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நால் நிலப் பொது வெளிச் சமூகம் கள்வர்களைக் கொடூரமானவர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் கொலையாளிகளாகவும் தான் புரிந்து வைத்திருக்கிறது. ஆயினும், கள்வர்களிடமும் பண்பாட்டு விழுமியங்கள் இருந்திருக்கின்றன என்பதற்குப் பாவாணர் சில சான்றுகளை முன்வைத்திருக்கிறார்.

எளியரின் பொருளைக் கவராமை, புலவரைப் போற்றுதல், விருந்தோம்பல், ஈகையரைக் காத்தல் போன்ற பண்பாட்டுக் கூறுகளைக் கைவிடாது ஒழுகியவர்கள் கள்வர்களும் தான் என்கிறார். புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் அவ்வப்போது வள்ளல்களிடத்தில் பெற்ற பரிசில் பொருளைக் காட்டு வழிகளில் பறிகொடுக்காது வீடு கொண்டு வந்து சேர்த்தது கள்வரின் பண்பாட்டுத் தன்மையே.

இந் நூற்றாண்டிலும் கள்வரும் கொள்ளைக்காரரும் பல இடங்களில் பண்பாடு காட்டியுள்ளனர். மன்னார்குடியிலிருந்த ஒரு பண்ணையார் தம் பெருங்குடும்பத்துடன் இராமேசுவரம் போய்ப் பல வண்டிகளில் திரும்பும்போது, வழிப்பறித்த கொள்ளைக் கூட்டத் தலைவன், அப் பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியராய் இருந்ததினால், அவர் இருந்த வண்டியை மட்டும் தானே காவல் செய்து கவராது விட்டு விட்டான் என்கிறார் பாவாணர். களவாடும் கள்வரின் இன்னொரு முகம்தான் இது.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. அய் வகை நிலத்திலும் மனிதர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். அய் வகை நிலங்களும் நிறமும் குணமும் இயல்பும் வாகும் மாறிப் போய்,திரிந்து போய், சிதைந்து போய், அழிந்தும் போய்க் கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன.

நால் நிலத்திலும் தொழிலும் இல்லை, வாழ்வும் இல்லை. ஆனாலும், தமிழ் நிலமெங்கும் பாலைதான். தமிழ் நிலமெங்கும் கள்வர் தான். தமிழ் நிலமெங்கும் களவாடல் தான். தமிழ் நிலமெங்கும் கன்னமிடுதல் தான்.

உள்ளூர்க் கள்வர்களோடு உலகக் கள்வர்களும் கைகோர்த்திருப்பதால், கன்னமிடுதல் என்பதையும் களவாடுதலையும் புதியதாய் ஆக்கியிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக