நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் எனும் அய்வெளி சூழ்ந்த இந்தப் பேரண்டமே நிலக்கோள். இந்நிலக்கோள் தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியக் கோளையும் சுற்றி வருவதால் பல்வேறுபட்ட தன்மைகளையும் இயல்புகளையும் தோற்றத்தையும் அமைப்பையும் வாகையும் கொண்டதான பன்மைச் சூழலைக் கொண்டதாகத் திகழ்கின்றது. அதனால் தான், பன்மை உயிர்க்கோளம் நிரம்பியதாய் அது இருக்கின்றது.
உயிர் வாழ்கிற மனிதர், பயிரினங்கள், விலங்குகள் என அத்தனை வகைப்பட்ட உயிரினங்களும் நிலக்கோளின் சூழலியல் பண்பாட்டுக்கு உகந்தும் ஒத்திசைந்தும்தான் உயிர் வாழ்கின்றன. அதாவது, உயிரினங்களின் உயிர் வாழ்த் தேவைகளுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதன்மையானதாகவும் இருப்பது நிலக்கோளின் சூழலியல் பண்பாடு தான். சுழலுவதாலும் சூரியனைச் சுற்றி வருவதாலும் நிலத்தின் தோற்றப்பாடுகளும் பொழுதுகளும் மாறி மாறி வருகின்றன. இந்தச் சூழலியல் தன்மைகளே உயிரினங்களின் தோற்றம், வாழ்முறை, உணவுப் பழக்கம், உயிரினக் குணவியல்புகளை வடிவமைக்கின்றன. ஆக, ஓர் உயிரினத்தின் இருப்பைச் சூழலியல் பண்பாடே வடிவமைக்கிறது எனலாம்.
உயிரினங்களின் வாழ்வெளியாய் இருக்கிற சூழலியல் வெளியை முதல் பொருள் என்கிறது தமிழ் மரபு. இதனை,
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப
என்கிறது தொல்காப்பியம். அதாவது, நிலமும் பொழுதும் தான் உயிரின வாழ்வெளிக்கு முதன்மையானவையும் அடிப்படையானவையும் என்பதால், அவை முதல் பொருள் எனக் குறிக்கப்படுகிறது.
இந்த முதல் பொருளின் அமைவைப் பொருத்துத் தான் உயிரினங்களின் வாழ்முறை அமைவுகள் அமைந்திருக்கின்றன. நிலத்தோடும் பொழுதோடும் இசைந்து கிடக்கிற பன்மை உயிர்க்கோளச் சூழலே சூழலியல் பண்பாடு பொதிந்திருக்கும் உயிர்ப் பண்பாடாகும்.
நிலம், நிலத்தில் நிகழ்கிற பொழுதுகள் என்கிற முதல் பொருளின் அமைவுகள் தான் அந்நிலத்திற்குரிய உயிரினங்களின் வாழ்வெளியைக் கட்டமைக்கின்றன. அவைதான், அந்நிலத்திற்குரிய கருப்பொருட்கள் என்பதாகச் சுட்டப்படுகின்றது.
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப
என்கிறது தொல்காப்பியம். ஆக, உயிரினப் புழங்கு வெளியில் வடிவமைந்த அல்லது வடிவமைக்கப்படுகிற கருப்பொருட்கள் என்பவைகூட முதல் பொருளின் அடிப்படையிலிருந்தே அமைவாக்கம் பெறுகின்றன. இம் முதல் பொருளும் கருப்பொருட்களும் தான் வாழ்வியல் பண்பாட்டை வடிவமைக்கின்றன. இத்தகையப் பண்பாட்டு ஒழுகலாற்றையே உரிப்பொருள் எனச் சுட்டுகிறது தமிழ் மரபு.
முதல், கரு, உரி என்கிற இம் மூன்று வெளிகளையே திணை என்னும் சொல்லால் குறிக்கிறது தமிழ் மரபு. சூழலியலோடு இணைந்த வாழ்க்கை முறையைத் தான் திணை நிலை வாழ்க்கை முறை எனத் தமிழ் மரபு கொண்டாடியிருக்கிறது. சங்க காலத்திய இலக்கியங்கள் திணை மரபை வழிமொழிந்தவைதான். அதனால் தான் திணை என்னும் சொல் கூட நிலம், பண்பாட்டு ஒழுகியல் போன்ற விரிந்த அளவில் பொருண்மை தரக்கூடிய ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.
இத் திணை மரபு சூழலியல் மரபை உள்வாங்கித்தான் செழித்திருக்கிறது. அந்த வகையில், தமிழ்த் திணை மரபில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அய் வகை நிலங்கள் குறிக்கப்படுகிறது. அய் வகை நிலங்களின் வாகு தான் அய் வகை நிலங்களிலும் பரவிக்கிடந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொழில் முறைகளையும் பண்பாட்டு முறைகளையும் வடிவமைப்பதில் முதன்மைப் பங்காற்றியுள்ளன. ஒவ்வொரு நிலம் சார்ந்த மனித வெளியை மிக விரிவாகவே விளக்கப்படுத்துகின்றன தமிழ் இலக்கணங்கள்.
நிலத்தைப் பகுத்திருப்பதைப் போலே, நிலத்தில் நிகழ்கிற பொழுதையும் பகுத்திருக்கும் பாங்கு மிகச் சிறப்பானது. பொழுதைப் பெரும் பொழுது, சிறு பொழுது என இரண்டாகப் பகுத்திருப்பது சூழலியல் அறிவைப் புலப்படுத்துவதாகும்.
ஓர் ஆண்டின் ஆறு பிரிவுகள் பெரும் பொழுது என்றும், ஒரு நாளின் ஆறு பிரிவுகள் சிறு பொழுதுகள் என்றும் பகுத்துள்ளனர் தமிழ் முன்னோர் . சூழலியல் மாற்றங்களைக் கணக்கில் கொண்டே கார்காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் எனச் சூழல் மாற்றத்திற்குத் தகுந்தாற்போலப் பெரும் பொழுது வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதே போல், ஒரு நாளில் ஒவ்வொரு நான்கு மணி நேரப் பொழுதும் ஒரு சிறு பொழுதாய்க் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என ஆறு வகைச் சிறு பொழுதுகள் சுட்டப்படுகின்றது.
நிலத்தில் நிகழ்கிற இத்தகைய சூழல் மாற்றங்களுக்கு ஏற்பத்தான் தமிழர்களின் வாழ்க்கை முறையும் பண்பாட்டு முறையும் புலப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழர்களின் உணவு, உடை, தொழில், வழக்காறு, சடங்கு, விழா, கலை, நுகர்வு என எதுவானாலும் சூழலியலுக்குத் தக்கவாறும் அதனை ஏதோ ஒரு வகையில் மெய்ப்பிக்கும் வகையிலும் தான் அமைந்திருந்தன. குறிப்பாகச் சொல்வதானால் இயற்கையோடு இயைந்த சூழலியலைக் கொண்டாடும் வகையிலேதான் தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்கள் இருந்திருக்கின்றன.
பொங்கல் விழா நிலத்தையும் கதிரவனையும் காளைகளையும் பசுக்களையும் உழவர்களையும் போற்றுகிற உணவு உற்பத்தி சார்ந்த சடங்கியல் விழா தான். இந்திர விழா, மழையை வழிபட்டும் வாழ்த்துவதுமான ஒரு சடங்கு விழா தான். அதேபோல, ஆடிப்பெறுக்கு என்பதும் ஆற்றில் வருகிற புது நீரைப் பதினெண் குடிகளும் சேர்ந்து வரவேற்கிற ஒரு சடங்கு நிகழ்வுதான். இந்த வரிசையில், சூழலியல் பண்பாட்டைப் புலப்படுத்தக் கூடிய இன்னுமொரு விழா தான் கார்த்திகைத் தீபம் எனப் பெறும் மா ஒளித் திருவிழா ஆகும். கிருத்திகை எனும் சமக்கிருதச் சொல்லையே தமிழில் கார்த்திகை எனக் குறிக்கின்றனர். இம்மாதத்தை நளி என்பதாகத் தமிழில் குறிப்பர்.
வானியல் அறிவின் புலப்பாடே மாதங்களின் பெயர்களும், நாட்களின் பெயர்களுமாகும். ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட் கிழமையை முதன் முதல் ஏற்படுத்தியவரும் தமிழரே என்கிறார் பாவாணர்.
பெரும் பொழுதைச் சூழல் மாற்றத்திற்குத் தகுந்தாற்போல வகுத்திருப்பதைப் போலவே, ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு பெயர் வைத்து அறிந்திருப்பதும் அன்றைய வானியல் அறிவைக் காட்டுகின்றது. முழு மதியானது தேய்ந்து மறுபடியும் முழுத் தோற்றம் கொள்ளும் நாட் கணக்கையே ஒரு மாதம் என்பதாகச் சுட்டுகின்றனர். நிலவுக்கருகில் விடியற்காலையில் தெரிகிற விண்மீன்கூட்டத் தொகுதியின் தோற்றப்பாட்டை வைத்தே அந்த மாதத்திற்கான பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பன்னிரு ஓரைகள் என்பர் சான்றோர் . இப்பன்னிரு ஓரைகளே தமிழ் மாதங்களின் பெயர்களாகும். தை முதலாக மார்கழி வரையிலான மாதப் பெயர்கள் தமிழே கிடையாது. சைத்ரா முதல் பல்குனா வரையிலான சமக்கிருத மாதங்களின் பெயர்களே தமிழ் மாதங்களாகச் சமக்கிருத மயமாக்கப்பட்டுள்ளன.
சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை , ஆடவை, கடகம் , மடங்கல் , கன்னி , துலை , நளி , சிலை போன்றவையே தமிழ் மாதங்களின் பெயர்கள் . பன்னிரு மாதங்களும் வானியல் தோற்றத்தைத் தெரிவிக்கும் வானியல் பெயர்கள் தான். ஆக , மாதங்கள், பெரும் பொழுதுகள் , சிறு பொழுதுகள் என எதுவாய் இருந்தாலும் இயற்கையோடும் அன்றைய அறிவியலோடும் வாழ்வியலோடும் தான் பிணைந்து கிடந்துள்ளன.
வழிபாட்டுச் சடங்குகள் கூட இயற்கை நெறிப்பட்டே வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வைதீகச் சாயல்படாமல் இயற்கையைப் போற்றியும் வணங்கியும் வாழ்த்தியும் வந்துள்ள மரபு தான் தமிழ் மரபு. பிற்காலத்திய அதிகார மாற்றங்களாலும் பண்பாட்டுத் திணிப்புகளாலும் தமிழ் மரபுகள் பெரும்பாலும் சமக்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று தான் தீபாவளி.
தமிழர்களின் விளக்கொளிப் பண்பாட்டு மரபையே வைதீக மரபானது அறிவுக்கு ஒவ்வாதக் கட்டுக்கதைகளால் தீபாவளிப் பண்டிகையாய் நம்மேல் திணித்திருக்கிறது. ஆனால், தமிழ் மரபில் தீப ஒளிப் பண்டிகை என்பது கார்த்திகை எனும் நளி மாதத்தில் கொண்டாடுகிற விளக்கொளிப் பண்பாடு தான். நளி மாதம் கூதிர் காலத்து மாதங்களுள் ஒன்று.
கொலைக் களத்து ஏதிலார்போல கூதிர் காலத்து மாலைப் பொழுதுகள் அமைந்திருக்கும் எனச் சுட்டுகின்றன இலக்கியங்கள். அதாவது, கூதக் காலமே கூதிர் காலம். கூதிர் காலத்துக் குளிரும் வாடைக்காற்றும் வாட்டி எடுக்கும் தன்மை கொண்டவை. அது மட்டுமல்லாமல் வெகு விரைவிலேயே சூரியன் மறையத் தொடங்கி இருட்டத் தொடங்கி விடும். ஆகையால்தான், குளிரைப் போக்கவும் வெளிச்சம் ஏற்றவும் தங்களின் புழங்கு வெளிகள் தோறும் விளக்குகளை ஏற்றிக் கூதிர் காலத்தை வரவேற்றனர்.
கூதிர் காலம் முழுவதும் விளக்கேற்றுதலையே பண்பாடாய்க் கொண்டிருந்தனர் தமிழ் முன்னோர் . கால மாற்றத்தில் நளி மாதத்து நிறைமதி நாளில் வீடுகள் தோறும் நிறைய விளக்குகள் ஏற்றி மகிழ்வையும் இயற்கையையும் கொண்டாடி வருகின்றனர். மா ஒளி ஏற்றும் இப் பண்பாடு சமயம் சார்ந்த அல்லது வைதீகம் சார்ந்த ஒன்றாகச் சுருக்கப்படுகிறது. மா ஒளி என்னும் விளக்கேற்றும் பண்பாடு சூழலியல் சார்ந்த பண்பாட்டின் புலப்பாடு தான். இதனை விளக்கீடு என்னும் சொல்லால் குறிக்கிறார் திருஞானசம்பந்தர். தொல்கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்கிறது சம்பந்தர் தேவாரம் . அதாவது, கார்த்திகை என்னும் நளி மாதத்து நிறைமதி நாளில் ஆறு விண்மீன்கூட்டம் நிலவுக்கருகில் கூடியிருக்கும் நாளைத் தான் விளக்கீட்டு நாளாகப் பழந்தமிழர் கருதியுள்ளனர். மேலும், முழு நிலவுக்கருகில் தெரிகிற அறு மீன்கூட்டம் நல் நிமித்தங்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டிருக்கிறது. அதாவது, பொருள் தேடல் காரணமாகவோ பிழைப்பு தேடியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர், எவ்வித இடையூறும் இன்றித் திரும்புவார் என்பதற்கான நல் நிமித்தங்களுள் ஒன்றாக நளி மாதத்து நிறைமதி நாளில் தெரிகிற அறு மீன்கூட்டத்தையும் கருதியுள்ளனர்.
பிரிந்திருந்த தலைவியும் தலைவரும் ஒன்று சேர்கிறபோது, இல்லத்தையும் உள்ளத்தையும் கதகதப்பாக்கிக் கொள்ளும் குறியீட்டு நிகழ்வாகவும் இது அமைந்து போகிறது. இல்லற வாழ்வின் இன்பச் சிலிர்ப்புகள் சிம் படித்துப் பூக்கின்ற பருவமும் இதுதான். இந்தப் பருவத்தில் தான் கார்த்திகைப் பூ எனப்படுகிற செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும். விளக்கு எரிவதைப் போன்ற தோற்றப் பொலிவோடு தான் காந்தள் பூக்களும் காணப்படும். இதனை,
நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலை நாள் விளக்கின் தகை வுடைய வாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி
எனக் குறிக்கிறது கார் நாற்பது எனும் நூல்.
விளக்கேற்றும் இப்பண்பாட்டியல் குறித்த பதிவுகள் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன. சமயச் சார்பற்ற, வைதீகம் சாராத, மாசு இல்லாத ஒளித் திருநாள் என்பது இதுவாகத்தான் இருக்க முடியும். பிற்காலத்தில் தான் இதன் மதிப்பும் முன்னெடுப்பும் குறைந்து போனது.
சிற்றூர்ப்புறங்களில் விளக்கேற்றுதலோடு மாவுளி சுற்றுதல் என்கிற நிகழ்வும் நடைபெறுவதுண்டு. சிறுவர் களும் இளவட்டங்களும் தனித்தனியாகவே தமக்குத் தோதான வகையில் கம்பியை வளைத்துத் துணிகளைச் சுற்றித் தீப்பந்தம் செய்து வைத்துக் கொள்வர்.
ஊரில் உள்ள அனைவரும் ஒன்று கூடி ஊர் மந்தையில் சொக்கப்பனை என்கிற பொம்மை கொண்டு வந்து ஊரெல்லாம் கொண்டு ஓடிய பின்பு ஊர் எல்லையில் தீயிட்டுக் கொளுத்துவர். எரிகிற சொக்கப்பனையிலிருந்து தான் தீப்பந்தங்களுக்கான நெருப்பைப் பிடித்துக் கொண்டு மாவுளியோ மாவுளி எனச் சுற்றுவர். இந்த மாவுளி தான் மா ஒளி ஆகும்.
மா ஒளியை ஒவ்வொரு வட்டாரத்தினரும் வேறு வேறு பெயர்களாலும் குறிக்கின்றனர். இதனை மாம்ளி (சுளுந்து) சுற்றுவது எனக் குறிக்கிறார் பால்பாண்டி. இது நாணல் (சம்பை) தண்டையை அறுத்து, காய வைத்து, சிறுசிறு முடிச்சுகளாக கட்டி தீயை பற்ற வைத்து விளையாடக்கூடிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதைக் குறித்துப் பாலா பாரதி கூறுகையில், ‘மாவளி’ சுற்றுதல் கார்த்திகைத் தீபநாளில் நடைத்தப்படும் விளையாட்டாகும். பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக்கொள்வார்கள். இப்பொட்டலத்தை பனைஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக்கொண்டு நெருப்பை வைத்து விடுவார்கள். இப்போது கயிற்றைப் பிடித்து வேகமாக சுற்றுவார்கள். அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு சுற்றுவதற்குத் தகுந்தவாறு பல உருவங்களை ஏற்படுத்தும். அப்போது "மாவளியோ மாவளி" என்று சத்தமிடுவார்கள். இது பார்ப்பதற்கு ஒரு இனிய காட்சியாக இருக்கும். மா ஒளி = பெரிய ஒளி என்பது மருவி மாவளி ஆகியிருக்க வேண்டும். இவ்வழக்கம் நீண்டகாலமாக வழக்கில் இருப்பதை, இக்காட்சி பாறை ஓவியத்தில் காணப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சியைக் காணலாம் என்கிறார்.
கார்த்திகைத் திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள். இது பெரிய கம்பி மத்தாப்பூவுக்குச் சமம்.
பனை மரத்தின் பூக்களை இதற்குப் பயன்படுத்துவர்.பொதுவாக, கார்த்திகை மாதம் மழை அதிகமாப் பெய்யும். அதனால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே இத சேகரிச்சு வச்சிக்குவாங்க .
ஒரு ஒன்பது பத்து மணியளவில் அரையடி விட்டம் ,ஒன்னரையடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதில் இந்த பனம்பூக்களைச் செங்குத்தாக நிறுத்தித் தீயை வைக்கணும் ...அதை எரியவிடாமல் ..பூபோல பொசுங்கனும் அந்த மாதிரி பதம் வேணும் ...கொஞ்ச நேரம் முறத்தால் வீசி அதை புகைய விட்டு ,பூசணி இலைகளை மேல போட்டு மண்ணை அள்ளி மூடிடனும் . மாலை நாலைந்து மணிக்கு மண்ணை தோண்டி குழியில் உள்ள கரியை பக்குவமா எடுத்து (இல்லனா அது அங்கேயே தூளாகிடும்) ,அம்மியில் வைத்து அரைச்சி மாவாக்கிக்கனும் (கொரகொரனு இல்லாம ,நல்லா தூளாகவும் இல்லாம பதமா அரைச்சதான் பூ நல்லா கொட்டும்)
அரசே தூளை ஒரு நூல் துணியில் வச்சி உருளை வடிவுல உருட்டி கட்டி வச்சிடனும் .
பனை மரத்தோட மட்டையை வெட்டி (காம்பு நீளமா உள்ள விளைந்த ஓலை மட்டையை வெட்டணும் ) ஓலை மற்றும் காம்பின் மறுபகுதி இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு நடுப்பகுதியை மட்டும் எடுத்து இருபுறமும் உள்ள முள்ளை சீவி ,மட்டையை மூன்றாக முக்கால் அளவு பிளந்து ,துணி உருளைய மட்டையின் பிளந்த பாகத்தில் வச்சி மட்டையை கட்டிடனும் , மறுமுனையில் கயிறு கட்ட ஏதுவாக மட்டையை சீவி ,தேவையான நீளமுள்ள கயிறை கட்டினால் மாவளி தயார் . மேல்புறம் நெருப்பு வைத்து உருளையை நெருப்பூட்டி கயிறை எடுத்து சுத்த வேண்டும் .பூ கொட்டும் போது நமது செய்திறன் அதில் வெளிப்படும்.
உருளையின் அளவை அரைக்கும் மாவு நிர்ணயிக்கும் ,மட்டையின் அளவை உருளையின் அளவு நிர்ணயிக்கும் , கயிறின் அளவு சுத்துகிற ஆளை பொறுத்து அமையும் .
மாவட்டத்திற்கு மாவட்டம் செய்யும் முறையிலும் ,உபயோகிக்கும் பொருளிலும் சிறிய மாற்றம் உண்டு .
இதையெல்லாம் நான் இழந்து பதிமூன்று வருடமாகிறது எனத் தமது கடந்தகால நினைவைப் பகிர்கிறார் பொறியாளர் ஆறுமுகம் கணேசன்.
மா ஒளிப்பந்தம் ஆண் பனைப் பூவில் செய்வதும் உண்டு. ஆண்பனைப் பெயர் அலகுப்பனை. அதன் பூவின் பெயர் அலகுப்பரல். ஓரங்குல விட்டக் குச்சி போல இருக்கும் தண்டில் வேப்பம் பூ அளவுள்ள பூக்கள் சொருகி வைத்தாற் போல் இருக்கும். காய்ந்த இந்தத் தண்டைக் கருக்கித் தூளாக்கித்தான் பூவானம் விடுவார்கள். மேலும், குமரி மாவட்டத்தில் இந்தத் தூள் பொட்டலத்தை அரளிச்செடியின் முக்கவைக் குச்சியினுள் வைத்து மூன்று முனைகளையும் இணைத்துக்கட்டி ஒரு கயிற்றின் முனையில் கட்டி நெருப்பிட்டுச் சுற்றுவர். போரிகளைப் பொழிந்துகொண்டே அது சுழலும். சொக்கப்பனைக்கு அங்கு மாரி மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் சிறுதும்பையின் உயரமுள்ள பொரிஞ்சை என்ற செடியை சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடின்றி பிடுங்கி காய வைத்துச் சிறுசிறு கட்டுகாளாகக் கட்டி மூங்கில் கயிற்றினுள் வைத்து மேல் நோக்கிச் சுற்றிக் கட்டி கிழ் முனையில் தீவைத்தால் சடசட என்ற ஒலியுடன் எரிவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மழைச்சீர்மை குலைந்த பின் இந்தச் செடி முற்றிலுமாக மறைந்துவிட்டது என்கிறார் குமரிமைந்தன்.
மா ஒளித் தீப்பந்தங்களைச் சுற்றிக் கொண்டே காடுகள், தோட்டங்கள், வயல்கள், கண்மாய் எனக் கூட்டம் கூட்டமாய்ச் செல்வதுண்டு. மா ஒளிப் பந்தம் சுற்றிக் கொண்டு போகையில் காடு மேடுகளில் படுகிற அத்தனை வகையான காட்டுப் பண்டங் களும் யாவருக்கும் சொந்தம் தான். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
கொளுத்திப் போட்ட சொக்கப்பனைச் சாம்பலைப் பெரியோரும் பெண்களும் அள்ளிக் கொண்டு போய் மறுநாள் காலையில் காடுகளிலும் வயல்களிலும் போட்டிருக்கிற வெள்ளாமைகளில் தூவுவதை வழக்கமாக்கிக் கொள்வர். இது போன்றே மூன்று நாட்கள் மா ஒளித்திருநாள் கொண்டாடுதல் பண்பாட்டு வழக்கமாய்ச் சிற்றூர்ப்புற மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இதனை உரி சுற்றுதல் எனப் பதிகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன். இதைக் குறித்து அவர் கூறும்போது , எங்கள் ஊர்ப்பக்கம் இது உரி சுற்றுதல்.மாவளி அமைப்பை போலவே கயிற்றில் கட்டி தொங்கவிடுவதற்குப் பெயர் உறி.அதனால் அந்தப் பெயர் வந்திருக்கும்.அப்போது பாடும் பாடல் கேலி கிண்டல் நிறைந்தது.கொச்சையானது.இப்பாடல்களில் ஒன்றை என் சிறுகதையான 'செவிப்பறை'யில் பயன் படுத்தி உள்ளேன் என்கிறார்.
இந்த ஒளிப் பண்பாடு குறித்துச் சித்த மருத்துவ ஆய்வாளர் குப்பு சித்தர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த மாவளி வெறும் கேளிக்கை அல்ல.இது ஒரு பெரிய கலை.
போர் கலை.
ஓகம் குருகுலம் இந்த பயிற்சிகளை நடத்தி வருகிறது.
இது மா ஒளி அல்ல.
மா வளி.
நம் மீது வீசுவது காற்று.
பல வகை காற்றுகளின் தொகுப்பு வளி எனப்படும்.
வளி இன்றி நெருப்போ ஒளியோ தோன்றாது.
ஒளியை வணங்குவது மறைமுகமாக வளியை போற்றுவதாகும்.
கார் - த்திகை :
இச் சொல் மேகத்தையும் வளியையும் சுட்டுவதையும் காணலாம்.
படத்தில் நீங்கள் பார்க்கும் மாவளி ஒளிர்வதற்கு முதன்மையானது வளிதான்.வளியின் கோலம்தான் ஒளிர்வு.
இக் காலத்தில் பெய்யும் மழையை கொண்டுவரும் மேகத்திற்கும் வளிக்கும் நன்றி தெரிவிக்கவே விளக்கணிவரிசை.
தீபாவளி அன்று ஒரு விளக்குகூட ஏற்றப்படுவதில்லை என்பது கவனிக்கத் தக்கது.
நமது விளக்கணிவிழாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் தீபாவளி என விவரிக்கிறார். மேலும்,
60 அல்லது 70 அகவை மூத்தர்வர்களை அனுகி அவர்களின் இளமைக்காலத்தில் ஊரில் தீபாவளி கொண்டாடி உள்ளார்களா என வினவி தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.
"சொக்கப்பானை” தோற்றமே கார்த்திகை தீபம். கார்த்திகை மாதம் எல்லா தனிய வகை தாவரங்களும் வளர்ந்து பசுமையுடன், சூழ் கொள்ளும் தருணம். இந்த தருணத்தில்தான் பயிர்களை அழிக்கும் பூச்சிகளும் தொன்றி தானியப் பயிர்கள் நாசம் செய்துவிடும். இதை அழிப்பதர்க்காகவே அக்கால விவசாயிகள் அங்காங்கே நெருப்புமூட்டி அதில் பூச்சியை விழவைத்து தானிய பயிர்களை காப்பாற்றினர். தமிழர்களின் வழிபாட்டில் ஒவ்வொன்றிற்குப் பின்னும் விஞ்ஞானம் இருக்கும் என்கிற நம்பிக்கைச் செயல்பாடு இருந்திருக்கிறது என்கிறது சொர்க்க பூமி தஞ்சாவூரு வலைத்தளப் பதிவு.
இப் பண்பாட்டுச் செய்கை குறித்து மு.மகேந்திர பாபு தமது இளமைக் காலப் பாடுகள் குறித்து விவரித்துள்ளதும் கூடுதல் சான்றாகும்.
பள்ளிக்கூடம் விட்டதும் , சேக்காளிகளோடு சேந்து , படப்புப் பக்கம் போய் , சோளத்தட்டய எடுத்து , ஒரு ஆள் உசரத்திற்கு கட்டி , முனியில காஞ்ச ஓல அல்லது சில்லாடய சொருகி , ஒட்டு மொத்த சின்னப் பசங்களும் இருட்டான ஒடனே சூந்த ( சோளத்தட்டை ) தூக்கி தோள்ள போட்டு , மந்தயம்மன் கோவில் திடல்ல கூடுவோம்.
மொதல்ல ஒருத்தன் தீயப் பிடிக்க , பிறகு அவன்ட்ட இருந்து எல்லாரும் தீயப் பிடித்து தலக்கு மேல் வைத்துச் சுத்திக்கொண்டே தெருக்களைச் சுத்தி கம்மாக் கரையில வரிசை வரிசையாய்ச் சுத்தி வருவோம் .
அலையடிக்கும் கம்மாய்த் தண்ணியில சிரட்டையிலும் , ஓலயிலும் வைத்து தீபத்தை ஏத்திவிடுவோம். அலைக்கேற்ப ஆடி ஆடி போவது அவ்வளவு அழகா இருக்கும் பாக்க.
சுத்தி முடிச்சு , சோளத்தட்டையானது குட்டையான உடன் மந்தையம்மன் கோவில் திடலில் ஒட்டு மொத்தமாகப் போட்டு தீ மதமதவென எரிய , அதைத் தாண்டும் இளைஞர் கூட்டம், என அந்நிகழ்வைக் குறித்த பதிவு நீள்கிறது.
இதே போன்ற அனுபவத்தை கலைச்செல்வம் சண்முகம் பகிர்கையில், நாங்கள் சிறு வயதில்
பனம்புடுக்கு விறகுகரி சிறிது உமி..ஆகியவற்றை கலந்து அரைத்தெடுத்து காயவைத்து சிறுபைகளை உருவாக்கி அதை காட்டாமணி கவையில் வைத்துகட்டி..கவையின் மேல் நுனியில் கையில் வைத்து சுற்றக்கூடிய அளவுக்கு இணைத்துகட்டி..
பிறகு பையின் ஒரு ஓரத்தில் உள்ள சிறு துளையில் நெருப்பைவைத்து ஊதி.. பொறிவந்தவுடன்..
தலைக்கு மேல் சுற்றி விளையாடுவோம் என்கிறார்.
நான் சிறுவனாக இருந்தபோது என் அண்ணா அரை அடி × கால் அடி சைசில் துணிப்பை அவராகவே தைத்து அதில் சாம்பலாகாமல் ஆற்றிய அடுப்புக் கரியை தூளாக்கி நிரப்பி தைப்பார். மேலே சாணிக்கரைசலை கெட்டியாக பூசி காய வைப்பார். ஒரு வாரம் முன்னதாக இதைச் செய்வார். நன்கு காய்ந்த பின் கவட்டை குச்சியில் கட்டி கார்த்திகை அன்று இரவில் பயன்படுத்துவோம் என்கிறார் நடராசன் கோவிந்தராசுலு.
எங்களூரில் கம்பந்தட்டையில் சுளுந்து செய்து கொளுத்தி ஊரைச்சுற்றி வருவோம்.இரவில் தனியாக சிறுவர்கள்மட்டும் இரவிறன் பயமின்றி தீப்பந்தம் போல சுளுந்தை சுழற்றி வருவோம் .சுற்று முடிந்தவுடன் அனைவரது சுளுநந்தையும் ஒன்றாக குவித்து தீ மூட்டி அதனை தாண்டி வருவோம் என்கிறார் சசிக்குமார்.
நான் சுற்றிருக்கிறேன்,சுயமாக செய்து,இதைச்சுற்றுவதில் கிடைக்கும் பரவசம் வேறு எதிலுமில்லை,சுயமாக செய்து சுற்றும் போது . உப்பு கரியுடன் உப்பு சேர்த்தால்தான் மத்தாப்பு போல் வெடிக்கும் .
முக்கியமாக துணிபைக்கு பதிலாக பீர்க்கங்காய் முற்றியது எடுத்து அதில் உள்ள தோலை எடுத்துவிட்டு தோலைப்போல் மாட்டுசானத்தை தடவி காயவைத்து எல்லாம் செய்து ஒரு வாரத்திற்கு முன்பாக கார்த்திகைக்காக காத்திருக்கும் சுகமே தனிதான் . இதற்கு பெயர் மாவளி என்று சொல்லுவோம் என்கிறார் இளையாங்குடி குமார் பசுபதி.
மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் இதை மாம்பலி சுத்துவது என்பர் மேலும் ஒட்டு புல்லை முறை பெண்களின் தலையில் தேய்த்து விளையாடுவர் என்கிறார் சதீசு.
எங்கள் பக்கம் ஓர் அகத்திக்கட்டையை நெருப்பில் காட்டி அதனை வேறொரு கட்டையால் தேய்ப்போம். அப்பொழுது நெருப்பு பொறிப் பொறியாக விழும் என்கிறார் உசா பிச்சை மணி.
நாங்கள் துணி பைகளில் சானி பால் சேர்த்து காயவைத்து காட்டாமணக்கு கவட்டைகுச்சியில் கட்டுவோம் பணம் பூ வோடு முல்லு முருங்கை கட்டை சேர்ப்போம் என்கிறார் அ.வி. சக்திவேல்.
இது போன்ற பண்பாட்டுச் செய்கை குறித்துக் கூறும் கோவிந்தராசன் சுப்பிரமணி இது ஒரு இயற்பியலும், வேதியியலும், பொறியிலும் கலந்த செயல் நடவடிக்கை. இதை இவ்வளவு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு எளிதாகச்செய்யும் திறமை இன்று இருக்கிறதென்றால், நமது அறிவியல் அறிவு எவ்வளவு தொன்மையானது என வியக்கிறார்.
இயற்கையைப் பேணுதல் மட்டுமே உயிரினங்களின் இருப்புக்கான அடித்தளம் . இயற்கையை மறந்தும் புறந்தள்ளியும் சுரண்டியும் அமைகிற வாழ்வும் சமூகமும் நிலைத்திருப்பதில்லை என்பதை இயற்கையே பல பாடங்களை உணர்த்தியிருக்கிறது. ஆகையால், இயற்கைச் சூழலியல் பண்பாட்டைப் போற்றிடுவோம், முன்னெடுப்போம்.
இந்நிலையில் தான், கூதிர் காலத்து வாழ்வெளி குறித்த நினைவுகளைப் பேசும் இரபீக் ராசாவின் கவிதை வரிகள் மா ஒளி மாதத்தின் சிறப்பைப் பதிவு செய்திருக்கிறது.
கார்த்திகை..
வெண்பனி இறங்கிடும் கூதிர்கால 'யாமம்'. நெஞ்சறைந்திடும் கோழிகளின், அரை இமை திறக்கும் 'வைகறை'. கன்னங்கருப்பட்டி சாயலின் 'விடியல்'.
பனியப்பிய சில்லென்ற கூதல் 'பகல்'.
பொன்மஞ்சள் மாலையென மயங்கி, 'எற்பாட்டில்' மலரும் தேன் சொரி அந்திப்பூக்கள். வெயிலோன் எப்போது சாய்ந்தான் என்பதைச் சொல்லாத, 'சாயுங்காலம்'.
விண்ணரசை மின்னி மிளிரச் செய்யும், வான்பூவுக்கு நேராய், மண்ணரசில் பொன்பூவாய் பூத்திடும் மாதம்.
மாரியை வழியனுப்பிடும் தீ தேவதை கசிந்து ஒசிந்து ஒளிரும் மாதம்.
ஊர்கூடி, சொக்கப்பனை கட்டி, உப்பிட்டு எரித்து, வெள்ளாமையைக் கருதிடும் மாதம். விளைச்சலுக்காய் உழைத்திடும் காலம் கருதி, மங்கல விழவுகளைத் தவிர்த்திடும் மாதம்.
பால்ப்பிடிச்சு பதமாய் முற்றிடும் நெல்மணி, திணைவகை, சிறுகிழங்கு, சர்க்கரைக் கரும்பு, இஞ்சி, மஞ்சள், பெரும்பூசணி, பொடியவரை, பொன்பீரக்கை, பந்தல்புடலை, மாம்பிஞ்சு, தென்னம்பாளை, தெங்கங்காய்.....
சிறுவயது நினைவாய் என்றென்றுமாய்ப் போய்விடுமா?
கார்த்திகை தேவதையே..
பண்பாட்டு அழகியலும் அரசியலும் நூலில் இருந்து..
பண்பாட்டு அழகியலும் அரசியலும்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு, 2019
அய்யா மிக தத்ரூபமாக இருக்கிறது படிக்கும் போது கடந்து வந்த வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்தது மிக்க நன்றி அய்யா
பதிலளிநீக்குமறந்து போன
பதிலளிநீக்குமறக்கடிக்கப்பட்ட வாழ்வியலை மீட்டுருவாக்கும் பல்வேறு தரவுகள் பொதிந்தது கட்டுரை