சனி, 18 நவம்பர், 2017

புதியக் கல்விக் கொள்கையில் மறைந்திருக்கும் பார்ப்பனிய ஆணாதிக்க வணிகமயக் குரல்.



கற்றுக் கொள்வதையும் கற்றுக் கொடுப்பதையும் ஒருங்கே கொண்டிருக்கும் உயிர்ப்பான செய்கை தான் கல்வி .

ஒவ்வொரு மனித சமூகமும் தமக்கு உகந்த கல்விச் சூழலைக் காலத்திற்கேற்ற படியும் சமூகத்திற்குப் பயனளிக்கும்படியும் கல்விச் செயன்மைகள் குறித்த வரைவுகளை உருவாக்கியே வந்துள்ளன.

இந்தியச் சமூக அமைப்பில் கடந்த காலத்தில் நிலவிய கல்வி முறைகள் சாதிய, பாலின, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வந்துள்ளன. ஆங்கிலேய   வன்குடியேற்ற அதிகாரம் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வி முறையானது எல்லோருக்குமான கல்வி வாய்ப்புகளைத் தரும்படியாக இருந்திருப்பினும், ஆங்கிலேய அதிகாரத்திற்குச் சேவகம் செய்யும் மங்குனிகளை உருவாக்குவதிலேதான் குறியாய் இருந்தன. குறிப்பாக, மனப்பாடக் கல்வி முறையே நவீனக் கல்வி முறையாக மெக்காலேவால் வடிவமைக்கப்பட்டது.

பெயரளவிலான இந்திய விடுதலைக்குப் பின்பும் மெக்காலே கல்வி முறையே வெகு காலமாக நீடித்து வருகின்றது. அதோடு, தாய் மொழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது எனும் கருத்து நிலை மேலோங்கச் செய்யப்பட்டுள்ளது.

கல்வி என்பது அறிவையும் ஆற்றலையும் பண்பையும் அறத்தையும் ஆளுமையையும் உருவாக்கித் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். கல்வி பெறும் ஒரு மனிதர், அக்கல்வியால் இச் சமூகத்திற்கான பங்களிப்பைச் செய்பவராக மாற்றி அமைக்க வேண்டும்.

சமூகப் பயன்மிக்கதாகத்தான் கல்விச் செயல்பாடு அமைய வேண்டும். ஆனால், இதுவரைக்குமான கல்விச் செயல்பாடுகளும் அதன் கொள்கைகளும் சமத்துவத்தையோ அறிவுத் திறப்புகளையோ படைப்பாக்கத்தினையோ வளர்ப்பதற்குப் பதிலாக, ஆளும் அதிகார வர்க்கத்தினருக்கான மிகச்சிறந்த சேவகர்களையே உருவாக்கி வந்திருக்கின்றன. சொல்லப்போனால், தன்னறிவையும் தன்மானத்தையும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, தன்னலமும் குறுகிய எண்ணமும் கொண்ட அடிமைகளையே உருவாக்கியிருக்கின்றன.

கடந்த காலத்திய அனைத்துக் கல்வி முறைகளும் அவற்றின் கொள்கைகளும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தை உள்ளும் புறமுமாகப் பூடகமாய்க் கொண்டிருந்தன.

இப்போதைய அதிகார மய்யத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது, பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் ஆணாதிக்கத் திமிரையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பதோடு, கல்வியைக் காசாக்கிப் பார்க்கும் வணிகத்திற்கான சந்தைப் பொருளாகவும் ஆக்கியிருக்கிறது. இன்னும் கூடுதலாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கான திறமையான அடிமைகளை உருவாக்குவதில் முனைப்பாய் இருக்கின்றது.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான சமசுக்கிருதத்தின் முக்கியத்துவம், இந்தியக் கலாச்சார ஒற்றுமைக்கு அதன் தனித்துவமான பங்களிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை சமசுக்கிருதம் பயில்வதற்கான வசதிகள் தாராளமாகச் செய்து தரப்படும் எனப் புதிய கல்விக் கொள்கையின் உள்ளீட்டில் கூறப்பட்டுள்ளது.  

மக்கள் வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம், அது தேவ பாசை என்ற பார்ப்பனியக் கருத்தாக்கம் தான். இந்தியாவில் 1721 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 122 மொழிகள் வளர்ச்சி அடைந்தவை. மீதமுள்ள 1599 மொழிகளின் வளர்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இல்லை.

தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளின் ஆட்சி மொழி மற்றும் பயிற்று மொழி குறித்தும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் அக்கறை செலுத்தவில்லை. மாறாக, செத்துப் போன ஒரு மொழியை உயிர்ப்பித்து அதனையே இந்திய தேசத்தின் தேவ பாசையாக உருவாக்குவதில் முனைப்பும் வேகமும் காட்டுகிறது. சமக்கிருதம் உயிர்த்தெழ வைக்கச் செய்வதன் நோக்கமே பழைய குருகுலக்கல்வி - பார்ப்பனியக் கல்வி - வேதக்கல்வி முறையை நவீனப்படுத்துவதற்குத்தான்.

சமக்கிருத வளர்ச்சிக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், தமிழ் போல அதுவும் ஒரு மொழி தான். பிரச்சினை எதுவென்றால், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கே சமக்கிருதம் தான் காரணம், அதனால் சமக்கிருத மொழியின் வளர்ச்சி அவசியம் என்பதாகச் சொல்வது தான் பிரச்சினை. அதாவது, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் யாவும் திராவிட மொழிக் குடும்பம் எனும் தனித்த மொழியினத்தைச் சார்ந்தவை. தமிழி மொழிக் குடும்பங்கள் வேறு, சமக்கிருத மொழிக் குடும்பம் வேறு.

தமிழும் சமக்கிருதமும் வேறு வேறு. எதிரும் புதிருமானது. நிலைமை இவ்வாறிருக்க, சமக்கிருதமே தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் தாய் என்கிற பழங்கதையை மீண்டும் கட்டமைக்க முயற்சிப்பதன் வெளிப்பாடு தான் புதிய கல்விக் கொள்கையில் சமக்கிருத மொழிக்கு முதன்மை அளித்திருப்பதாகும். சமக்கிருத மேலாதிக்கத்தின் வெளிப்பாடு இது.

புதிய கல்விக் கொள்கையின் இன்னொரு ஆபத்து, இட ஒதுக்கீட்டு முறை நீக்கம் என்பதாகும்.
கல்வி மற்றும் பணியிடங்களில் நிலவுகிற சாதி, சமய, பாலின, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமைகளையும் சுரண்டல்களையும் நீக்குவதற்கான எந்த வழிமுறைகளையும் சொல்லவில்லை என்பதோடு, பட்டியல் மற்றும் பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளைக் குறித்து மவுனத்தையே வெளிக்காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் ஏதேனும் ஒரு சொல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்றால் அது இட ஒதுக்கீடு எனும் சொல்தான். ஆக, கல்வி வேலைவாய்ப்புகளில் இருந்து வரும் இட ஒதுக்கீடு எனும் முறையே கூட நீக்கப்படுவதற்கான முன்னெடுப்பாகத்தான் இவ் வரைவு அமைந்திருக்கிறது. இட ஒதுக்கீடு நீக்கம் என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகவே முன்நிறுத்தப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒன்று, இணைப்புப் பள்ளிகளை உருவாக்குதல் என்பதாகும். அதாவது, குறைந்த மாணவர் சேரக்கையும் உள்கட்டமைப்பும் இல்லாத பள்ளிகளை உருவாக்குதல் என்பது திட்டம். இது நல்ல திட்டம் என்பது போலத் தோன்றும். ஆனால், அதன் நோக்கம் வேறு. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருதல், போதிய ஆசிரியர்களை நியமித்தல் போன்றவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக, அம்மாதிரியான பள்ளிகளை ஒழித்து ஒரே பள்ளியாக _ இணைப்புப் பள்ளிகளாக உருவாக்குதல் என்பது, ஏழை எளிய அடித்தள மக்கள் வாழிடப் பகுதிகளில் அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனும் கோட்பாட்டிற்கே நேர் எதிரானது ஆகும். இணைப்புப் பள்ளிகள் எனும் இத்திட்டம், பள்ளிகள் தனியார்மயமாதலை மறைமுகமாக ஆதரிக்கும் திட்டமாகும்.

புதிய கல்விக் கொள்கையின் அபத்தங்களுள் ஒன்று, பெண் ஆசிரியர்களைக் குறித்த மதிப்பீடு ஆகும். பள்ளிக் கல்விச் சீரழிவிற்கு, பெண் ஆசிரியர்கள் அதிக அளவுக்குப் பணி அமர்த்தப்பட்டிருப்பது தான் காரணம் எனப் புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாகக் குசராத் அரசின் கருத்துரு  அமைந்திருக்கிறது. அதாவது, அறிவு ஆற்றல் ஆளுமை என யாவுமே ஆண்களால் தான் கற்றுத் தரப்பட வேண்டும். அறிவிலும் ஆற்றலிலும் ஆணே மேலோங்கி இருப்பவர். பெண் என்பவர் குறைவுடைய ஆண் என்கிற ஆண்நோக்கு - ஆணாதிக்கம் வெளிப்படும் களமாகக் கல்வித்துறையையும் வடிவமைக்க புதிய கல்விக் கொள்கை முயல்கிறது என அப்பட்டமாகவே தெரிகிறது. இது, தொடக்கக் கல்வி நிலையில் பெண் ஆசிரியர்களே இருப்பது நல்லது என்கிற கருத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

புதிய கல்விக் கொள்கை வரைவானது பிற்போக்கானது மட்டுமல்ல, உலகமயச் சந்தையில் கல்வியும் ஒரு வணிகப் பொருளாக ஆக்கப்பட்டுள்ள பண்டம் எனும் அபத்த நிலையையும் உருவாக்கியுள்ளது.

உயர் கல்வி என்பது படிக்கிற அந்தத் தனிநபருக்குத்தான் பயனளிக்கிறது. சமூகத்திற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அதற்குச் செலவிடும் தொகைக்கு அந்தத் தனி நபரே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால், உயர் கல்வியை ஒரு பொது மக்களுக்கான பொருளாகக் கொள்ள முடியாது. அதை ஒரு திறன் சாராப் பொருள் என்றே கொள்ள வேண்டும் என இந்திய அரசின் முன்னைக் கல்வி அமைச்சர் யுனெசுகோ மாநாட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது.  அதன் நீட்சிதான் காட் ஒப்பந்தமும் கூட.

உயர் கல்வி அனைத்தும் சேவைத் துறையிலிருந்து வணிகத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதையே காட் ஒப்பந்தம் சுட்டுகிறது. உலகமயமாக்கலின் ஓர் அங்கம் தான் காட் ஒப்பந்தம் . காட் ஒப்பந்த விதிகளின்படி தான் புதிய கல்விக் கொள்கை.

சேவைக் கட்டணங்கள் செலுத்தி அயல் நாட்டு விற்பனையாளரிடமிருந்து இணையதளம் மூலமாகக் கல்வி பெறுதல்,

 வெளிநாட்டிற்கு நேரடியாகச் சென்று கட்டணங்கள் செலுத்திக் கல்வி பெறுதல்,

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து சேவைக் கட்டணம் வசூலித்துக் கல்வி வழங்குதல்,

வெளிநாட்டு ஆசிரியர்கள் தனியாட்கள் என்ற முறையில் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள நிறுவனங்களில் சேவை வழங்கி கட்டணங்கள் வசூலித்தல்
என்பவை தான் காட் ஒப்பந்த விதிகளின் -புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கின்றன.

அதாவது, கல்வி என்பது பணம் கொடுத்து வாங்கும் ஒரு பண்டம். இந்த வணிகத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை. கல்வியை அளிக்கும் பொறுப்பு அரசிடம் கிடையாது, அது தனியார் பொறுப்பு. பணம் இருப்பவர் மட்டுமே கல்வியைப் பெறலாம். பணமில்லாதவர் படிக்கும் கனவைக் கலைத்து விட்டு, குலத்தொழில் என ஏதாவது ஒன்று இருந்தால்  அதைச் செய்யப் போகலாம் என்கிற நிலைமைகளை வழிமொழிவதாகவே புதிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இது சாமானியர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.

ஆக,
சமக்கிருத - பார்ப்பனிய மேலாதிக்கத்தைப் போதிக்கிற, ஆணாதிக்கத் திமிரைக் காட்டுகிற,
இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கு எதிராக இருக்கிற, ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, கல்வியை விற்பனைப் பண்டமாக்கி வணிகப்படுத்துகிற
கல்விக் கொள்கையாகவே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே,
புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்த்தாக வேண்டியது நாம் வாழும் காலத்தின் கட்டாயம்.

புதிய கல்விக் கொள்கை குறித்துக் கீழ்க்காணும் நூல்கள் மேலும் விளக்கப்படுத்தியுள்ளன.

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும் - அ.மார்க்சு.

தேசிய கல்விக் கொள்கை: மகாராசாவின் புதிய ஆடை - தேனி சுந்தர்.

புதிய கல்விக் கொள்கை:
பற்றி எரியும் ரோம்.. ஊர் சுற்றும் நீரோ - இரா.நடராசன்.

புதிய கல்விக் கொள்கை: மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?- நா.மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக