சமூக அக்கறையோடு அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில வணிகப் படங்கள் வருவதுண்டு. ஒரு முழு நீள வணிகப் படம் ஏற்படுத்தும் உணர்வுப் பறிமாற்றங்களைக் குறும் படங்களாலும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு யூ டியூப்பில் வெளிவந்திருக்கும் "குறியீடு" கட்டியம் கூறுவதாய் அமைந்திருக்கிறது.
உரையாடல்கள் எதுவுமின்றி காட்சிகள் வழியாக விரிகின்ற திரை மொழியில் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகளையும் வன்மங்களையும் புலப்படுத்தி இருப்பது கவனிக்க வேண்டியதாகிறது.
கற்களும் கள்ளிகளும் மண்டிக் கிடக்கும் மலைக் காடுகளில் காட்சிகள் நகர்கின்றன. காதல் வயப்பட்ட இரு வேறு சமூக மனிதர்களைச் சாதியம் எப்படிக் கொல்லத் துணிகிறது ? அதன் கோர முகம் எது ? என்பதையெல்லாம் காட்சிகளில் விரித்துக் கிடத்தியிருக்கிறார் இயக்குநர்.
சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழும் நிலப்பரப்பில் , சாதிய ஆணவத்தைப் படுகொலை செய்வதாய்ப் படம் முடிவது, வழக்கமான அழுகையும் ஒப்பாரியுமாய் இப்படம் அல்ல என்பதைச் சொல்லி விடுகிறது.
திருப்பிச் செய்தலின் திரை மொழியாய்க் குறியீட்டுப் பொருளை உணர்த்தி நிற்கிறது குறியீடு எனும் இப்படம் . சாகச் செய்வாரைச்
சாகச் செய்தல் வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதால் குறியீடு என்றாயிற்று எனவும் கூறலாம்
படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது உடல் மொழியால் உணர்வுகளையும் உரையாடல்களையும் கச்சிதமாகப் புலப்படுத்தி இருக்கிறார்கள். வறண்ட நிலப்பரப்பையும் வரட்டுக் குணம் கொண்ட மனிதர்களையும் காதல் அரும்பிய இளசுகளையும், சாகடிக்கப்பட்ட காதலனின் காதலியாகப் பயித்தியமாகித் திரியும் அவலத்தையும், கருப்பனாய் ஆணவம் அழிக்கும் தாண்டவத்தையும் தவிப்போடும் உயிர்ப்போடும் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாராட்டப்பட வேண்டியவர்.
படத்தின் மிகப் பெரிய பலமே பின்னணி இசைதான். படம் நெடுகப் பயணிக்கும் இசைதான் காட்சி மொழிகளை இன்னும் வலுவுடனும் உயிருடனும் நம்மோடு நெருக்கப் படுத்தி விடுகிறது.
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் காட்சி மொழியில் குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் வினோத் மிசுரா மற்றும் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக