திங்கள், 18 டிசம்பர், 2017

சடங்கியல் பின்புலமும் கலை உருவாக்கமும்: ஏறு தழுவுதலை முன்வைத்து...




வடமொழி மரபில் எழுத்தியல் (சிட்சை), சொல்லியல் (வியாகரணம்), பொருளியல் (நிருத்தம்), செயல்முறை (கல்பம்), யாப்பு (சந்தஸ்), கணியம் (ஜ்யோதிஷம்) என்கிற ஆறு (ஷட்) அங்கங்களைக் கொண்டு செய்யும் செயலை ஷட் அங்கங்கள் என்று கூறுவர். இதுவே, நாளடைவில் மருவி சடங்கு என்று ஆகிவிட்டதாகக் கருதுவர். ஆனால், தமிழ் மரபில் சடங்கு என்பதற்கு வேறான பொருண்மையும் பொருள்கோடலும் உண்டு.

சடங்கு என்பதன் வேர்ச்சொல் சட்டம் என்பதாகும். சட்ட + அம் + கு = சடங்கு. அதாவது, சட்ட எனும் சொல்லிற்கு ஒழுங்கு முறையான, செவ்விதான எனப் பொருள் உண்டு. அம் என்பதற்கு அழகியது எனப் பொருளுண்டு. கு என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதியாகும். ஆக, ஒரு செயலைச் செம்மையுடனும் ஒழுங்கு முறையுடனும் அழகாகச் செய்விக்கும் தன்மையைச் சடங்கு எனப் பொருண்மை கொள்ளலாம். 

ஒரு சமூகக் குழுவினரால் புரிந்து கொள்ளப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான ஒன்று, காலங்காலமாகவும் மரபு வழியாகவும் பயிலப்பட்டு, அதன் பயன்பாட்டைக் கருதியும் ஏதோ ஒருவகையில் தக்கவைக்கும் நோக்கத்திலும் அதனைக் குறியீட்டுத் தன்மைகளுடன் புலப்படுத்துகிற ஒரு செயல்பாட்டைச் சடங்கு என வரையறுக்கலாம். ஒரு மனித சமூகக் குழுவினரால் குறியீட்டு நிலையில் நிகழ்த்தப்படுகிற செயன்மைகள், திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படுவதின் வழியாகச்  சடங்கு எனும் நிலைத்த வடிவத்தைப் பெறுகின்றன.

செயல் வடிவம் என்பதுதான் சடங்கின் சிறப்புக் கூறு ஆகும். அதாவது, சடங்கு என்பதே நிகழ்த்தப்படுவதாகும். சடங்கில் நிகழ்த்துதல் என்பதே அதன் அடிப்படைக் கூறாக அமைகிறது. இத்தகைய சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் தன்மை கொண்டவை. சடங்கின் மற்றொரு சிறப்புக் கூறாக அமைவது, அது பலரின் கூட்டு முயற்சியால் நிகழ்த்தப்படுவதாகும். விதிவிலக்காக, சில சூழல்களில் தனி மனிதரால் அவை நிகழ்த்தப்பட்டாலும்கூட, அவை பெரும்பாலும் கூட்டுத் தன்மை உடையவையாக, சமூகம் சார்ந்தவையாகவே நிகழ்த்தப்படுகின்றன.

நிகழ்த்து வடிவமே சடங்கின் வடிவம் எனக் கொள்கிறபோது, நிகழ்ந்தவற்றையே நிகழ்த்திக் காட்டும் தன்மையைச் சடங்கு கொண்டிருக்கிறது எனலாம். அதாவது, வாழ்வியலோடும் உணர்வோடும் நெருக்கமாய்ப் பிணைந்து கிடந்த ஒரு சமூகக் குழுவின் கடந்த காலத்திய அல்லது நிகழ்காலத்திய செயன்மைகளே, போலச் செய்தலாகவோ பாவித்தலாகவோ உணர்வுநிலை சார்ந்தும் நம்பிக்கை சார்ந்தும் நிகழ்த்தப்படுகிறபோது அவை சடங்குகள் எனும் மீவியல் தன்மையையும் நிகழ்த்து வெளிகளையும் கொள்கின்றன.

மனித சமூகக் குழுவின் வாழ்வியல் செயல்பாடுகளின் வழியே பாவனைகளாகவோ போலச்செய்தல்களாகவோ மேற்கொள்ளப்படுகிற இத்தகைய சடங்குகள்தான், அழகியலோடும் உணர்வெழுச்சியோடும் புலப்படுத்தப்படுகிறபோது நிகழ்த்துக்கலை எனும் வடிவத்தைப் பெறுகின்றன. அவ்வகையில், தமிழ்ப் பண்பாட்டு மரபில் நிகழ்த்துக் கலை வடிவமாய்ப் பரிணமித்திருக்கும் ஏறு தழுவுதல், தமிழ்ச் சமூகத்தின் சடங்கு வெளியிலிருந்து உருக்கொண்ட நிகழ்த்துக் கலை என்பதையும், சடங்கியல் பின்புலத்தில் கலைகள் தோற்றம் பெறுவதையும் விளக்கப்படுத்துகிறது இக்கட்டுரை.

தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்துச் சடங்காகப் புலப்படுத்துகின்ற பெரும்பாலான சடங்குகள், வேளாண் உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து பார்க்கும் அல்லது போலச் செய்து காட்டும் சடங்குகளாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு நிகழ்த்துச் சடங்கிற்குப் பின்னாலும் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளின் போலச் செய்தல் நோக்கமும் செயன்மையும் புதைந்து கிடக்கிறது. வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து புலப்படுத்தும் நிகழ்த்துச் சடங்குகள், பெரும்பாலும் உற்பத்தியோடு தொடர்புடைய விலங்குகளோடும் தொடர்பு உடையதாய்த்தான் அமைந்திருக்கின்றன .

உலகில் உள்ள மனித சமூகங்கள் பலவும் விலங்குகளோடு தொடர்புடைய சடங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஆத்திரேலிய ஆதிவாசிகள், புதர்களுள் ஒளிந்திருக்கும் விலங்குகளை வேட்டை ஆடுவது போலக் குழு நடனம் ஆடுவார்கள். புதர்களை விலக்கிச் செல்வது போல முதலில் சைகை செய்து ஆடுவார்கள். புதர்களில் இருந்து ஒலி வருவது போலத் தங்கள் குரலாலும் இசைக் கருவிகளாலும் ஒலி எழுப்புவார்கள். விலங்குகள் ஓடுவதுபோல ஆடுவார்கள். பின்னால் அவற்றை பூமராங் என்ற கருவியை எறிந்து கொல்வதுபோல ஆடுவார்கள். அடிபட்ட விலங்குகள் துடிப்பதுபோல ஆடுவார்கள்.

அதேபோல, ஆப்பிரிக்க இனக்குழு மக்கள், வலையில் மான்களை வீழ்த்துவதுபோல நடனமாடுகிறார்கள். பெண்கள் மான்களாகவும் ஆண்கள் வேட்டைக் குழுவினராகவும் பிரிந்து நின்று ஆடுவார்கள். ஆண்கள் தங்கள் உடலினுள் வெளியிலிருக்கும் ஒரு விலங்கின் சக்தி புகுவது போல நினைத்து, வலை வீசுவது போல் ஆடுவார்கள். பெண்கள் வலையில் அகப்படுவதுபோல் ஆடுவார்கள்.

மெலனீசியாவில் மீன் பிடிக்கும் பருவம் ஆரம்பிக்கும்போது விருந்தும் குழு நடனமும் நடைபெறும். அதில் காற்றடிப்பது, கடல் அலையில் படகு மிதப்பது, வலை வீசுவது, மீன் வலையில் அகப்படுவது, படகு கரை சேருவது, மீன் அதிகம் பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக ஆடுவது போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள் என்கிற குறிப்புகளைத் தருகிறார் நா.வானமாமலை. மேற்குறித்த நிகழ்த்துக் கலைகளையும் சடங்குகளையும் போலச் செய்தல் சடங்குகள் எனக் குறிக்கின்றனர் மானுட ஆய்வாளர்கள். 

உணவைத் தேடியும் உற்பத்தி செய்தும் வாழ்ந்து வந்திருக்கிற மனித சமூகத்தின் சடங்குகளில், விலங்குகளும் செடிகளும் கொடிகளும் மரங்களும் நிலமும் விதைகளும் முதன்மை பெறுவது தவிர்க்க முடியாது.

வேட்டை வாழ்க்கையை முற்றிலும் கைவிட்டு, உழவுத் தொழிலில் உணவு பெற்று வாழும் மக்கள் இனத்தவரிடையேகூட வேட்டைக்கால நம்பிக்கைகளின் எச்சங்கள் இருக்கின்றன எனும்போது, உழவுத் தொழில் சார்ந்த செயன்மைகளில் பல்லாயிரம் ஆண்டு காலத் தொடர்பை இன்னும் உயிர்ப்போடு தங்களது வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் மக்களது நிகழ்த்துச் சடங்குகளும் விலங்கோடு தொடர்புடையவையாகத்தான் அமைந்திருக்கும். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் நிகழ்த்துச் சடங்குகள் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்ததாகவும், மாடுகள் சார்ந்ததாகவும் இருப்பதைக் காண முடியும்.

தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடுகளை மதிப்புடனும் மகிழ்வுடனும் கொண்டாடி வந்து கொண்டிருப்பதைப் பல பண்பாட்டுக் கூறுகளின் வழியே அறிய முடியும். இத்தகைய வேளாண் உற்பத்தியின் உயரிய பண்பாட்டுப் புலப்பாடுதான் பொங்கல் சார்ந்த சடங்குகளும் நிகழ்த்துக் கலைகளும்.

தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி உழைப்பும் வாழ்நிலையும் வேளாண்மையோடு தொடர்புடையதாக இருந்ததால், வேளாண் உற்பத்தியின் அறுவடைக்காலமே, உணவுக்கும் செல்வத்திற்கும் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய காலமாகும். அத்தகைய அறுவடையையும் அதற்குத் துணை நின்றவற்றையும் நன்றியோடும் மதிப்போடும் வாழ்த்தவும் வணங்கவும் செய்தனர் தமிழர். அதைத்தான் பொங்கல் விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்வகையில்தான், தையள் மாதம் என்கிற சுறவம் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சமூகத்தின் விழாக்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், இன்னும் பிற நிகழ்த்துதல்கள் அந்தச் சமூகத்தின் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமாக சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும் சமூகங்கள், அவை சேமித்து வைத்திருக்கும் கூட்டு நினைவுகளைச் சடங்குகள் விழாக்கள் மூலம் வெளிப்படுத்துவதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதற்கு உதவுகின்றன. இவற்றிலிருந்தே சமூகத்தின் ஆதி வரலாற்றை அறியவும் மீட்டெடுக்கவும் முடியும் என்கிறார் பால்கன்னர்டன் எனும் இன வரைவியல் ஆய்வாளர்.

அந்த வகையில், குழுவாகவும் இனக்குழுவாகவும் சாதியாகவும் பன்மை அடையாளங்களை உள்ளீடாகக் கொண்டு வளர்ச்சி அடைந்த தமிழ்த் தேசிய இனத்துள், தனி மரபாகவும் கலப்பு மரபாகவும் கூட்டு மரபாகவும் பொது மரபாகவும் முன்னெடுத்துக் கொண்டாடுகிற பண்பாட்டு அடையாளங்களுள் பொங்கல் பண்பாடும் ஒன்று. அதனால்தான் பொங்கல் பண்பாட்டைத் தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்திப் பண்பாடாகக் கருதப்படுகிறது. இதுவே தமிழ் நிலத்தின் உயிர்ப் பண்பாடாகவும் காணப்படுகிறது. 

பொதுவாகவே, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் உற்பத்தி சார்ந்தும் உயிரின வளமை சார்ந்தும் அறம் சார்ந்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியலைக் கொண்டிருக்கும். இத்தகையத் தமிழ் மரபு, சமயச் சார்பற்றவை. அதனால்தான், வைதீகம் எனப்படுகிற பார்ப்பனிய மரபு, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் அனைத்தையும் தமக்குரிய எதிர் அடையாளமாகவே கட்டமைத்தன.

தமிழ்ப் பண்பாட்டு மரபும் பார்ப்பனியத்தை எதிர்க்கும் - மறுக்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழ் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது பார்ப்பனியம்.

பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது என உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவம் எனக் கருதுகிற சமசுக்கிருத மரபில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான். 

பார்ப்பனர்கள்  நிலம் வைத்துக் கொள்ளலாம்; உணவு உட்கொள்ளலாம். ஆனால், வேளாண் தொழிலான உழவுத் தொழிலை மட்டும் அவர்கள் செய்யக் கூடாதாம். பார்ப்பனர்கள் பசு மாட்டைத்தான் தங்களது அடையாளமாகக் கருதுவர். ஆனால், தமிழர்களோ நிலத்தில் இறங்கி சேற்றில் உழைக்கும் வேளாண்மைத் தொழிலைத்தான் தங்களது உற்பத்தி அடையாளமாகக் காண்கின்றனர்.

உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளைத்தான் தங்களது பண்பாட்டு அடையாளமாகக் காண்கின்றனர். அதனால்தான், ஏரையும் உழவையும், நிலத்தையும் மாடுகளையும், பயிர்களையும் அறுவடையையும், உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில் பொங்கல் பண்பாட்டை வளப்படுத்தியிருக்கிறார்கள். இத்தகையப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சிதான் மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகள். அவைதான், மாட்டுப் பொங்கல் சார்ந்த நிகழ்வுகள்.

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும்.

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, கழுத்துமணி ஆரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது.

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனைப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்று கூடி நடத்தப்பட்டிருக்கிறது.

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும் உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்வதை வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப்பட்டிருக்கிறது. இந்த நேர்த்திக்கடன் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது.

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்டதோடு கால்களில் சலங்கை கட்டிய அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு , தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனே தான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர்.

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும் தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.

மனிதர்களும் மாடுகளும் மாறிமாறி உழைக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன; சோர்ந்து போகின்றன. இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக்கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வுக் காலமும் தேவைப்பட்டிருக்கின்றன. அந்த ஓய்வு என்பது, உணவோ உறக்கமோ மட்டுமல்ல. உணவும் உறக்கமும் உடல் சோர்வையும் தேய்வையும் வேண்டுமானால் போக்கும். உள்ளத் தேய்வையும் சோர்வையும் போக்கவேண்டுமானால் உள்ளம் மகிழும்படியான பொழுதுபோக்கும் நடவடிக்கையும் வேண்டியிருந்திருக்கும். அதனாலேயே உள்ளக் கிளர்ச்சியும் எழுச்சியும் மகிழ்ச்சியும் தரும்படியான கலைகளையும் விளையாட்டுகளையும் நிகழ்த்தியும் பங்கேற்றும் வந்துள்ளனர் முன்னோர்.

காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்த இந்நிகழ்த்து முறைகளும் பண்பாடாய் வடிவமைந்து போகின்றன. அவ்வகையில், வாழ்வோடும் தொழிலோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மனிதர்களும் மாடுகளும் பொழுதுபோக்காய் விளையாடி மகிழும் விளையாட்டு மரபாய் உருக்கொண்டதாகத்தான் மாடு தழுவல் பண்பாடு வடிவமைந்திருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

இச் சடங்கு நிகழ்வு, வேளாண் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் அதேவேளையில், வேளாண் உற்பத்தி சார்ந்த சந்தைப்  பொருளியலையும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஒரு சடங்கு பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விழாக்களாகக் கொண்டாடப்படும் போதுதான் அதன் சந்தைப் பொருளாதாரம் விரிவடைந்திருக்க முடியும்.

தொழில் உறவுகள், வணிக உறவுகள், புழங்கு பொருள் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பண்டமாற்று எனப் பொருளியல் சார்ந்த நடவடிக்கைகளும் இது போன்ற சடங்குகளுக்குள் மறைந்திருக்கின்றன. அதாவது, வேளாண்மை சார்ந்த தேசிய இனத்தின் தற்சார்புப் பொருளாதாரப் பின்புலம் இதற்குள் உண்டு. ஆதலால் தான், மாடு தழுவல் சடங்கானது பெருமகிழ்வுக்கான விழாவாக மாறிக்கொண்டது. 

மாடுகளுள், குறிப்பாகக் காளை மாடுகளே ஏரில் பூட்டி உழவு செய்திருப்பதால், ஏர் மாடுகள்,  எருதுகள், ஏறுகள் என்றழைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் மாடு தழுவுதல் என்பதுகூட எருது தழுவுதல், ஏறுகோள், ஏறு தழுவுதல் என இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய மாடு தழுவல் நிகழ்வு இன்னும் வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு, காளை விரட்டு, ஏறு விடுதல், வடமாடு, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என வட்டாரம் சார்ந்து அழைக்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்துமே மாடுகளைத் தழுவிக்கொள்ளும் நிகழ்வைத்தான் குறிக்கின்றன.

மாடு தழுவல் என்னும் நிகழ்வானது சடங்காய் மட்டும் தேங்காமல், தமிழினத்தின் இன்னுமொரு பண்பாட்டு விழாவாகவும் பரிணமித்து வந்திருப்பதைக் காண முடியும். அவ்வகையில், மாடு தழுவலைக் குறித்தத் தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கலை சார்ந்த தடயங்களும் நிரம்ப உள்ளன.

சிந்து வெளி என்றழைக்கப்படுகிற மொகஞ்சதாரோ, அரப்பாவில் நடைபெற்ற அகழாய்வுகள் தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளன. சிந்து வெளியில் மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஏறு தழுவுதலைக் குறிக்கும் சின்னம் என்கிறார் அய்ராவதம் மகாதேவன்.

வளைந்த கொம்புகளுடைய ஒற்றை எருது, மூர்க்கமான கோபத்துடன் முதுகுப் புறமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு, விரைந்து முன் நகர்ந்து மாடு அணையும் மனிதர்களை முட்டி வீச, அவர்களில் இருவர் காற்றில் மிதப்பது போலவும், ஒருவர் எருதைத் தாவி அணைவது போலவும், மற்ற இருவர் முன் பின்னாகத் தலை குப்பிறக் கீழே விழுவதுமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் சிலவும் ஏறு தழுவதலைக் குறித்துப் புலப்படுத்துகின்றன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் கி.மு 2000 முதல் 1500 வரையிலான காலத்தைச் சார்ந்த பாறை ஓவியம் காந்தி ராசன் அவர்களால் கண்டறியப்பட்டது. கூரிய கொம்புகளும் சிலிர்த்த  திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார் அவர். மேலும், மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து மேட்டுப்பட்டியிலும் ஒரு பாறை ஓவியம் அவராலேயே கண்டறியப்பட்டுள்ளது.

திமிலுடன் கூடிய ஒரு காளையை மனிதர் ஒருவர் அடக்க விரட்டுவது போன்று அமைந்த அவ் ஓவியம் கி.மு 1500 ஆம் காலத்தைச் சார்ந்தது ஆகும். இதேபோல, தேனி மயிலாடும்பாறைக்கு அருகில் அருக வெளியில் உள்ள சித்திரக்கல் புடவில் திமிலுடன் கூடிய காளையின் ஓவியம் பாலமுருகன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இவைகள் போக, தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நடுகற்கள் ஏறு தழுவலைக் குறித்த புடைப்புகளையும் குறிப்புகளையும் தருகின்றன. பல்வேறு கல்வெட்டுகளும்கூட ஏறு தழுவல் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

நடுகற்களுள் பல வகை உண்டு. புலியோடு போராடி மாண்டவருக்கு எடுக்கப்பட்ட கல், புலிக் குத்திக் கல் என்று சுட்டுவர். அதே போல, பன்றிக் குத்திக் கல், யானைக் குத்திக் கல் எனப் பல வகையும் உண்டு. அவற்றுள், எருது பொருதார் கல் ஒன்றையும் ஆய்வாளர் சுட்டியுள்ளனர். இதில், காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தகையச் சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன எனக் கூறும் பெருமாள் முருகன், சேலம் மாவட்டத்தில் உள்ள எருது பொருதார் கல் ஒன்றில் காணப்படும் செய்தியைக் குறித்தும் விளக்கப்படுத்தியுள்ளார். கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான். சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு என்கிறது அந் நடுகல் . கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் இது. இதில் எருது விளையாடி என்னும் தொடர் இடம் பெறுவது கவனத்திற்குரியது என்பார் அவர்.

குறிஞ்சி நிலத்து விலங்காகிய மாடுகள் முல்லை, மருதம், பாலை நிலத்து மக்களோடும் தொழிலோடும் வாழ்வோடும் பினைந்து கிடந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவாறாக விவரித்துள்ளன. அவற்றுள் ஏறு தழுவலைக் குறித்த பதிவுகளும் உண்டு.

சங்க கால முல்லைக்கலியில் ஏறு தழுவல் குறித்த பாடல்கள் பலவுண்டு. எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் என ஏறு தழுவல் களம் காட்டப்படுகிறது.

மருப்பில் கொண்டும் மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச் சாடி
கொள இடம் கொளவிடா நிறுத்தன ஏறு –
என, ஏறு தழுவலின் களத்தை விவரிக்கிறது கலித்தொகை. அக் களத்தில் நிற்கும் ஏறுகள், தம்மை அடக்குவதற்காய் வருகின்றவர்களைக் கொம்பினால் குத்திக் கீறி தம் வீரத்தைக் காட்டி நின்றதைக் கூறும் கலித்தொகை ,

கழல உழக்கி, எதிர் சென்று சாடி
அழல்வாய் மருப்பினால் குத்தி
உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்டதம் புண்வார் குருதியால் கைபிசைந்து மெய் திமிறி
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந் தாங்கு ஊர்ந்தார் ஏறு.
ஏறு தம் கோலம்செய் மருப்பினால்
தோண்டிய வரிக்குடர் ஞாலம் கொண்டு
எழூஉம் பருந்தின் வாய்வழீஇ 
ஆலும் கடமும் அணி மார் விலங்கிட்ட
மலைபோல் சினை
என்றுரைக்கின்றது. மேலும், கலித்தொகையின் முல்லைத் திணைப் பாடல்களில் (101 முதல் 107) பலவற்றிலும் ஏறு தழுவுதலைக் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன.

உழவில் பங்கேற்கும் ஏர் மாடுகளைத் தவிர, அதில் பங்கேற்காத காளை மாடுகளும் உண்டு. இவை பொலி காளைகள் எனப்பட்டன. இக்காளைகளே ஏறு தழுவல் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்கக் கூடியவை. இதைக் குறித்துக் கலித்தொகை ஒரு காட்சிபோல் விவரிக்கிறது.

திமில் பெருத்த  இக்காளைகள், பல நிலத்திலிருந்து நீரைக் கொண்டு வருபவை போல நிலத்தை முட்டித் தோண்டின. சில காளைகள் நிலத்தை நொறுக்கின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துச் சிலைத்துக் கொண்டன. சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இவ்வாறு இந்தக் காளைகள் வீரமுடன் போரிட்டுச் செல்வது, மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருத நிலத்து மள்ளர்களை ஒத்ததாக இருக்கிறது என முல்லை நிலத்தையும் மருத நிலத்தையும் இணைவிக்கும் வகையில்,

நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல –
களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன
எனப் புலப்படுத்தியுள்ளது கலித்தொகை.

ஏறு தழுவல்போல, எருதுக்கட்டு எனும் மாடு தழுவல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்திருக்கிறது.

நாச்சங்காளை வடம் வெட்டிக் கன
பாய்ச்சல் காட்டும் பரையெல்லாம்
சிம்பும் எருது வடம் தொட்டு இழுத்துக்
கொம்பு பிடித்து விளையாடி
என்றும்,
எருது கட்டினர் குடும்பரே
என்றும் அந்நூல் விவரிக்கிறது.

ஏறு தழுவல் என்பது இன்னொரு வகையில் ஒரு பாவனை விளையாட்டுத்தான். மாடும் மனிதரும் இரு வேறு உயிர்ப்பான உறவுகள். மாடுகளைக் குறித்து மனிதரும், மனிதரைக் குறித்து மாடுகளும் இணக்கத்தோடும் பரிவோடும் புரிந்தே வைத்துள்ளனர். அதனால்தான் இரு தரப்பும் தம் வீரத்தை விளையாட்டாகக் காட்டிக் கொள்கின்றன. வெல்வதும் தோற்பதுமான பாவனைகள் தழுவல்களோடு முடிந்து போகின்றன. அதைத்தான் ஏறு தழுவல் நிகழ்வுகள் போலச் செய்து காட்டுகின்றன. இதனை ஏறு கொள் வென்றி எனச் சுட்டுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை. இதுபோன்று விலங்குகளோடு தொடர்புடைய விளையாட்டுகளையும் அந்நூல் தெரிவிக்கின்றது.

கோழி வென்றி , தகர் (கிடாய்) வென்றி , யானை வென்றி, சிவல்(கவுதாரி) வென்றி , கிளி வென்றி , குதிரை வென்றி எனப் பல வகை வென்றிகள் குறித்த விரிவுப் பதிவுகள் அந்நூலில் உண்டு. இவை யாவும் விலங்குகளை விலங்குகளோடு பொருதச்செய்யும் விளையாட்டுக்கள். ஆனால், விலங்கோடு மனிதர் தழுவும் விளையாட்டு மாடு தழுவல் மட்டும் தான்.

வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்காய்த் திகழும் ஏறு தழுவலானது, பயில்முறைத் தேவைக்கான தழுவலாகவும் அமைந்திருப்பதைப் பள்ளு நூல்கள் தெரிவிக்கின்றன .

பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
   பூட்டும் பொழுதிலொரு புல்லைக் காளை
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி
  முடுக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட
மாட்டுக் குறும்படங்க மறிப்பன் எனவே
  வடிவழகக் குடும்பன் வந்து மறித்தான்.
கோட்டு முனையாலது குத்துமளவில் குடும்பன்
  சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான்
என உழும் களத்தில் மாடு முட்டுகிற நிகழ்வைக் காட்டுகிறது முக்கூடற் பள்ளு.

காளைகளோடு தழுவிப் பழகியிருந்தால் மட்டுமே - காளைகளைத் தம் வயப்படுத்தும் பயில்முறை தெரிந்திருந்தால் மட்டுமே காளைகளை உழவில் கையாள முடியும். அத்தகைய பயில் முறைகளையும் - பழகு முறைகளையும் நிகழ்த்திப் பார்க்கும் சடங்காகத்தான் மாடு தழுவல் எனும் ஏறு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையத் தழுவல் சடங்கு உழவில் ஈடுபட்ட உழவர்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருப்பதையும் பள்ளு நூல்கள் சொல்கின்றன.

மாடு முட்டியதால் கீழே விழுந்து கிடந்த பள்ளர், மறுபடியும் காளைகளைத் தம் வயப்படுத்தி ஏரில் பூட்டி உழுததை
பள்ளன் எழுந்து நிலை தரித்தான்- நின்ற
பள்ளியர் முகம் பார்த்துச் சிரித்தான்.
மெள்ளப் புருவம் கோட்டி நெரித்தான் - மாட்டை
மீளவும் பூட்டி உழத் தரித்தான்
என்கிறது முக்கூடற் பள்ளு.  இவ்வாறாக, வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கான மாடு தழுவலைக் குறித்த பதிவுகள் அமைந்திருக்கின்றன.

ஏறு தழுவுதல் மனிதர்க்கும் மாடுக்கும் இடையே நிகழ்கிற ஒரு விளையாட்டு மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், இது மனிதர்களின் வீரத்தைக் காட்டும் நிகழ்வு அல்ல. இரு தரப்பு வீரத்தையும் தினவையும் தழுவலின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிற - உணர்வைக் கொடுத்துப் பெற்றுக் கொள்கிற பரிமாற்ற விளையாட்டு அவ்வளவே. மனிதர்களைக் காட்டிலும் மாடுகள்தான் வலிமை மிக்கவை; மூர்க்கம் கொண்டவை; துள்ளல் நிறைந்தவை; தினவு மூண்டவை. ஆதலால், காளைகளுக்கே வீரம் மிகுந்திருக்கும். அதனால்தான் மாடு தழுவுதலைக்கூட மஞ்சு விரட்டு என்கின்றனர். மைந்து என்றால் வீரம் என்று பொருள். மாடுகளின் மைந்து விரட்டலே மஞ்சு விரட்டு என்றாயிற்று என்பார் தொ.பரமசிவம்.

முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருத நிலத்து மக்களின் வேளாண் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவையின் பொருட்டு உருவான தன்னுறு தொழிலோடும் மாடுகள் பிணைந்து கிடக்கின்றன. இவ்வாறு, மூவகைப்பட்ட தொழில்சார் சமூகத்தினரும் மாடுகளைப் பயன்படுத்தி, மாடுகளோடு தொழிற்பட்டு, மாடுகளைச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்ததால் ஏறு தழுவுதலும் இயல்பாகத் தோன்றி வளர்ந்தது என்பார் இ.பேச்சிமுத்து .

ஆக, மாடு தழுவல் என்பதும் - அதன் நோக்கம் என்பதும்  மனித வீரத்தை நிலை நாட்டுவதற்கல்ல; மாறாக, வேளாண் உற்பத்தியின் ஒரு நிகழ்த்துச் சடங்கு  மட்டுமே என வரையறுக்கலாம். அச் சடங்கும் விளையாட்டும்தான் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடாய் நீட்சி அடைந்து வந்திருக்கிறது.

கூடவே, இந்நிகழ்த்துச் சடங்கு, வேளாண்மையோடு நேரடி உழைப்பில் ஈடுபட்டு வந்திருக்கும் உழுதுண்ட உழவுக் குடிகளின் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளம் எனவும் வரையறுக்கலாம்.

குறிப்பாக, சிறு மற்றும் குறு அளவிலான நிலத்தோடு  உழைப்பில் உறவாடிக் கிடந்த உழவுக்குடிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைத் தொழில் குடிகளின் பண்பாட்டுக் கண்ணியாகவும் அது அமைந்திருக்கிறது எனலாம்.

பார்வை நூல்கள் :
1. ஏறு தழுவுதல் : வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் – மகாராசன்.
2. ஏறு தழுவுதல் சல்லிக்கட்டு: தொன்மை பண்பாடு அரசியல் - பாவெல் பாரதி (தொ.ஆ).
3. கலித்தொகை மூலமும் உரையும் – அ.விசுவநாதன்.
4. பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் - பாவாணர்.
5. பண்பாட்டுக் கட்டுரைகள் - பாவாணர்.
6. தமிழியல் கட்டுரைகள் - பாவாணர்.
7. தமிழர் பண்பாடும் தத்துவமும் - நா.வானமாமலை.
8. புறப்பொருள் வெண்பாமாலை - பொ.வெ.சோமசுந்தரனார் உரை.
9. அசல் மனுதர்ம சாஸ்திரம் - கி.வீரமணி ஆய்வுரை .
10. தமிழ் இலக்கியத்தில் சேர சோழ பாண்டிய மரபினர் - குருசாமி சித்தர்.
11. மானுட வாசிப்பு: தொ.ப தெறிப்புகள் - தயாளன் : சண்முகானந்தம்.
12. முக்கூடற் பள்ளு - ந.சேதுரகுநாதன் உரை.
13. திருவேட்டை அய்யனார் பள்ளு - ப.வே.நாகராசன் (ப.ஆ).
14. தமிழ் விக்கிப்பீடியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக