திங்கள், 1 ஏப்ரல், 2019

சுளுந்தீ : கதைக் களப் பயணங்களும் கதையின் நுண் அரசியலும்:- மகாராசன்




கடந்த ஓராண்டுக்கு முன்பாக முகநூல் வாயிலாகத் தோழர் முத்துநாகு அவர்களிடம் நட்பறிமுகம் இருந்தாலும், நேரிடையான அறிமுகமும் பழக்கமும் எம் இருவருக்கும் முன்பின் இருந்திருக்கவில்லை.

ஒரு நாள், உங்களைச் சந்திக்க வேண்டும் என்றார். நானும் வாருங்கள் என்றேன். வந்தவர், பெரிய அளவிலான  ஒளி அச்சுப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தக் கதையைப் படித்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று சொல்லுங்கள் என்றார். நான் தயங்கியபடி, ஏறு தழுவுதல் பற்றிய இன்னொரு நூலுக்கான எழுத்துப் பணியில் இருக்கிறேன் தோழர். என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியாது. இருப்பினும், ஒரு இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள். படித்து விட்டுச் சொல்கிறேன் என்றேன்.அவரும் சரி என்றார்.

கதையைப் பற்றி ஆலோசனை சொல்ல ஏகத்துக்கும் ஆள் இருக்கையில, என்னய எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? என்று கேட்டேன். முகநூலில் உங்களது எழுத்துகளைக் கவனித்து வருகிறேன். நீங்க தான் இதப் படிச்சி சொல்றதுக்குச் சரியான ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன் என்றார். முகநூல் வித்தைகள் ஒருத்தரக் கொண்டாந்து சேத்துருக்கேன்னு உள்ளுக்குள் மப்பேறிக் கொண்டதை உணர்ந்தவாறே, மனசுக்கு என்ன படுதோ அத வெளிப்படையா பட்டுன்னு சொல்லிப் புடுவேன் தோழர். நல்லாச் சொல்லணும்னு மட்டும் நினைச்சுப்புடாதீங்க என்று சொன்னேன். அவரும் சரிங்க என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

நம்மளயும் ஒரு ஆளு நம்பி எதையோ ஒன்ன கொடுத்துட்டுப் போயிருக்கே என நினைத்துக் கொண்டு தான் அதைப் படிக்கத் தொடங்கினேன். அவராகவே  தமிழில் ஒளி அச்சு செய்திருந்ததால் எழுத்துப் பிழைகள் ஏகத்துக்கும் நிறைந்து கிடந்தன. ஆனாலும், ஒரு பத்துப் பதினைந்து பக்கங்கள் வாசித்துக் கடக்கையில் எழுத்துப் பிழைகளைக் காட்டிலும் வேறு ஏதோ ஒன்று இந்தக் கதைக்குள்ளும் இந்தப் புத்தகத்துள்ளும் ஒருவிதமான உயிரோட்டம் இருப்பதை உணரவும் உள்வாங்கவும் முடிந்தது.

படிக்க படிக்க எழுத்துப் பிழைகள் என்பதையெல்லாம் தாண்டி அதன் தரவுகள் என்னை மிரள வைத்தன. நான் இதுவரையிலும் படித்திராத கண்டிராத இந்த நிலத்தின் அரத்தமும் சதையுமான சமூக நிகழ்வுகளைக் கண் முன் நிறுத்தக்கூடிய கதைக்களமாக நூல் விரிந்து கொண்டே போனது.
மிகக் கனமாகவும் அடர்த்தியாகவும் தரவுகளாய் விரிந்து கொண்டே போனது நூல். ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பத் திரும்ப வாசித்து அதன் சொற்களோடும் கதையோடும் பயணித்துப் பயணித்து தான் அடுத்த பக்கத்திற்கு நகர்ந்தேன். பத்திக்குப் பத்தி, பக்கத்திற்குப் பக்கம் குறிப்புகள் போட்டுக் கொண்டே தான் வந்தேன்.

எந்த இடத்தில் என்ன சொல்ல வேண்டும்;சொல்லப்பட்டது சரியா; இந்த இடத்தில் போதவில்லை; இந்த இடம் தேவையில்லை. இந்தப் பகுதியில் முரண்பாடு இருக்கிறது; தகவல் பிழை, தரவுகள் சரிதானா. இந்தப் பகுதி அங்கு வர வேண்டும். இது இப்படி இருந்தால் சரி என்று எல்லாப் பக்கங்களிலும் குறிப்புகள் எழுதிக் கொண்டேதான் வந்தேன். ஒரு கட்டத்தில், நான் வெகுகாலமாக எந்த வரலாற்றை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அந்த வரலாற்றையே ஒரு கதைக்குள் இந்த மனுசன் கொண்டாந்துட்டாப்பளயே என்று மெய்சிலிர்த்துப் போனேன்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும்கூட கிட்டத்தட்ட ஒரு ஆறு மாத காலம் இந்த நூல் குறித்த செப்பனிடுதல் பணிகளில் எம்மை முழுதுமாக ஒப்படைக்கும்படி இந்த நூல் கோரியதாகவே நான் உணர்ந்தேன். படித்துப் படித்து வியந்து போய் தோழர் முத்து நாகுவிடம் செல்பேசியிலும் நேரில் வரவழைத்தும் நிறைய நிறையப் பேசிக் கொண்டே இருந்தேன்.

வேறு எவரும் செய்யாத - செய்ய முடியாத - செய்ய விரும்பாத ஒரு வேலய நீங்க செஞ்சிருக்கீங்க தோழர். மிக நேர்மையாவும் உண்மையாகவும் இந்தக் கதைய வரலாறாகச் சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இது பேசப்பட வேண்டிய புத்தகம். கண்டிப்பா இந்த நூல் பேசப்படும் என்று அடிக்கடி அவரிடம் சொன்னேன்.

இந்தக் கதைய நிறையப் பேத்துட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லி கருத்த கேட்டேன். பலரும் படிச்சாங்களா என்னான்னு தெரியல. எல்லாரும் நல்லா இருக்கு என ஒத்த வார்த்தையோட நிப்பாட்டிக்குவாங்க. நீங்க ஒருத்தருதான், இந்தப் புத்தகத்தப் பத்தி ரொம்ப சிலாகிச்சுப் பேசுறீங்க. நீங்க தான் இதக் கொண்டாடுறீங்க என்று சொன்னார்.

நூல் செப்பனிடுதலில் தலையிடலாமா தோழர் என்றவுடன், அவரும் மனமுவந்து நூலின் பல பகுதிகளைக் குறித்துத் திரும்பவும் மீளவும் திருத்தியும் சேர்த்தும் எழுதி எழுதிக் கொண்டு வந்து கொண்டே இருந்தார். கதைக்களம்-கதையோட்டம் - கதைமாந்தர்கள் என்பதற்கேற்ப அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நூல் பெரும்பான்மையான செம்மை வடிவம் பெற்றது.

இதைப் பதிப்பகம் வாயிலாக அச்சில் நூல் வடிவமாகக் கொண்டு வரலாம் என்ற எனது விருப்பத்தைச் சொன்னேன். ரெண்டு மூணு பதிப்பகத்திடம் கொடுத்திருக்கேன். அவங்க ஒன்னும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல என்றார்.

என்னுடைய நூல்களை அண்மைக்காலங்களில் வெளியிட்டு வரும் தோழர் அடவி முரளி வாயிலாக நூலைக் கொண்டு வரலாம். அவருக்கு இது போன்ற கதைக்களம் பிடிக்கும் என்றேன். உடனே அனுப்பியும் வைத்தோம். தோழர் முத்துநாகு அவர்களை முரளி தோழருக்கு முன் பின் தெரியாது. எனினும், முரளி தோழரும் படித்து விட்டு ஆதி பதிப்பகம் மூலமாக  புத்தகமாகக் கொண்டு வந்திரலாம் என்றார். சென்னை புத்தகக் காட்சிக்குச் சாத்தியமா என்றேன். கண்டிப்பாகக் கொண்டு வந்திரலாம் என்று வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன. தோழர் முரளி நம்பியது என்னையவோ தோழர் முத்துநாகுவையோ அல்ல. அந்த நூலை மட்டுமே நம்பினார். அந்தளவுக்கு நூல் தரமாய் இருக்கிறது என்றார்.

இடையில், நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகள் வேறு ஒருவர் செய்து கொடுப்பதாக இருந்தது. அவருக்கு உடல் நிலை சரியில்லாது போக, கடைசியில் நானே மெய்ப்பும் பார்த்தாக வேண்டிய நிலைக்கும் வந்துவிட்டது. நான் எழுதிய எந்தவொரு நூலுக்கும் கூட இப்படி மெனக்கெட்டது கிடையாது. அந்தளவுக்கு மனதுக்கு நெருக்கமாய் இந்த நூல் உள்நுழைந்து கொண்டது.

தோழர் முத்துநாகுவும் தோழர் முரளியும் இந்த நூல் செம்மையாகக் கொண்டு வருவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அனுமதியையும் எமக்கு வழங்கியதால் நூலைச் செப்பனிட நானும் மெனக்கெட்டுப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

மிகப் பெரிய நூலா வந்துருச்சே தோழர். இத எப்புடி கொண்டு போய்ச் சேக்குறது என்று தயங்கிச் சொன்னார் முத்துநாகு. வேறு எந்தப் பின்புலமும் படை பலமும் இல்லாது போனாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த நூலைக் குறித்த அறிமுகத்தைக் கொண்டு போக முடியும் என்று சொன்னேன். அதன்படியே அந்த நூலைக் குறித்து முகநூலில் பதிவொன்று எழுதினேன். அதில் உள்ள ஒரு சில பகுதிகளை நூலின் பின் அட்டையில் இடம் பெறச் செய்திருக்கிறார் தோழர் முரளி.

இந்த நூல் தமிழில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்றே கருதினேன். அது இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரது வாசிப்புக்கும் கவனிப்புக்கும் உள்ளாகி வருகிறது.

மிக முக்கியமான - நல்லதொரு நூல் உருவாக்கத்தில் பங்கெடுத்தமைக்கு மனம் நிறைவடைந்திருக்கிறது.

சுளுந் தீ நூலைக் குறித்து
நான் எழுதிய பதிவு வருமாறு:

சுளுந்தீ:
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம்.

வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல்.

தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு.

தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது.

இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட.

தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.

இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது.

தோழர் முத்துநாகுவின் சுளுந்தீ, மக்கள் வரலாற்றியலின் தமிழ் அடையாளம் என்றே கருதலாம்.

படங்கள்:

சுளுந்தீ கதைக் களத்தின் மிக முக்கியமான இடங்களினை நேரிடையாகப் பார்க்க வேண்டும் என்றவுடன், ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் சென்று வரலாற்றுத் தடயங்கள் சிலவற்றைக் காட்டினார் தோழர் முத்துநாகு.

1. பாண்டியர்களின் பெரு வழிச்சாலையில்  (கன்னாபட்டி - செக்கா பட்டி) இருந்த சுங்கச் சாவடி மற்றும் வணிகச்சந்தையாக இருந்த கோட்டை. (குன்னுவராயன் கோட்டை).
2. பாண்டியர் காலக் கோயிலான விண்ணதிரப் பெருமாள் கோயில்.
3. சோழர் கால சிவன் கோயில்.
4. மஞ்சளாறு, வைகையாறு, மருதாநதி எனும் மருதையாறு ஆகிய மூன்று ஆறுகளும் சேர்கிற கூடுதுறை.







ஏர் மகாராசன்.

1 கருத்து:

  1. சுளுந்தீ - நெருப்பிற்காகவும், உப்பிற்காகவும் துன்பங்களை விதைத்த வந்தேறிகள் - தொல்குடிகளைத் துரத்தி நிலங்களை பிடுங்கிட குலநீக்க முறையை பயன்படுத்தியதும், உறவுகளுக்குள்ள முரண்களை அரண்மனையார்கள் உபயோகித்து கொண்டதும் - அனைத்தையும் விட ஆக சிறந்த மருத்துவர்களை/ மருத்துவ முறைகளை மரணிக்க வைத்ததும்... இன்னமும் ஏராளமாக... தமிழ் நிலத்தில் தீ பற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என தமிழ் குடிகளை தொடர் மௌனிக்க செய்ததும்.

    பதிலளிநீக்கு