வெள்ளி, 10 ஜூலை, 2020

வேளாளர் யார்?: மகாராசன்


மனித சமூகத்தின் உயிர்வாழ்த் தேவையான உணவுப் பொருட்களை மனித சமூகமே உற்பத்தி செய்துகொள்வதான செயல்பாடுகளை வேளாண்மை எனும் சொல்லால் தமிழர் மரபில் குறிக்கப்பட்டிருக்கிறது.

நிலம், உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப்பண்பு போன்றவற்றால் உடலியல் திறனாலும் உளவியல் ஈடுபாட்டாலும் உணவு உற்பத்திப் பண்பாட்டாலும் தமக்கென வாழ்வியல் பண்புகளை வகுத்துக் கொண்டவர்கள் வேளாண்மை சார்ந்த குடிகளாகச் சமூக உருவாக்கம் அடைந்திருக்கின்றனர்.

வேளாண்மை எனும் தொழிலைக் காலங்காலமாய் மேற்கொண்டுவந்த வேளாண் தொழில் மரபினரை வேளாண்மை எனும் சொல்லின் வேர்ச்சொல்லைக் கொண்டு (வேள் - நிலம். வேள்+ஆள் >நிலத்தை உழவால் ஆள்தல்) வேளாள்+அர்> வேளாளர் எனக் குறிக்கப்பட்டனர். இது, நிலத்தில் வேளாண்மை செய்யும் தொழில் பிரிவினர் அனைவரையும் குறிக்கும் தொழிற்பெயராகவே காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், நிலத்தில் உழவுத்தொழில் புரிந்து வேளாண் தொழில் மரபினராகத் திகழும் ஒரு சமூகத்தினர், தங்களது பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்துத் 'தேவேந்திரகுல வேளாளர்' எனும் பெயரில் அரசாணை வழங்கக் கோருகிறார்கள். அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு வரலாற்றுச் சான்றுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் அடுக்கடுக்காய் முன்வைத்திருந்தபோதிலும் தமிழ்நாட்டை ஆண்டு வந்த/வருகிற கழக அரசுகள் மவுனமாய் இருந்து வருகின்றன. பெரும்பாலான இதரக் கட்சிகளும் இதனைக் கண்டுகொள்ளத் தயங்குகின்றன. இங்குள்ள பெரும்பாலான உயர்த்திக்கொண்ட சாதியவாதிகளும் 'வேளாளர்' எனும் பின்னொட்டுச் சொல்லால் குறிக்கப்பட்டு அரசாணை வெளியிடுவதற்குக் கடுமையான எதிர்ப்புகளை உள்நோக்கத்துடன் வெளிப்படுத்தி வருகின்றன.

வேளாளர் எனும் சொல்லும் அதற்குரிய அடையாளமும் மதிப்பும் உயர்த்திக்கொண்ட தங்கள் சாதிகளுக்கு மட்டுமே உண்டு என்பதாகப் பொய்யான நேர்மையற்ற வாதங்களைச் சமூகப் பொதுவெளியில் வெளிப்படுத்தி வருகின்றனர் சாதியாதிக்கவாதிகள்.

வேளாளர் என்பது ஒரு சாதிப் பெயர் அல்ல; அது வேளாண்மை செய்யும் தொழிலால் குறிக்கப்படும் தொழிற்பெயர். வேளாண்மையோடு உறவும் அறிவும் உழைப்பும் கொண்டிருக்கும் யாவரையும் குறிக்கும் தொழிற்பெயர்தான் வேளாளர். இப்பெயர் ஒருசில குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டுமே உரியது; மற்றவர்கள் உரிமை கோர முடியாது, கூடாது என்று சொல்வதற்குப் பின்னால் சாதியாதிக்க வெறியும் திமிரும்தான் வெளிப்படுகின்றன.

வேளாண்மைத் தொழிலை தொழில் மரபாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், தங்களை வெறுமனே வேளாளர் என்று மட்டுமே குறிக்கவேண்டும் என்றோ அல்லது மற்ற சமூகத்தினரின் அடையாளச் சொற்களால் (சைவ வேளாளர், துளுவ வேளாளர், கொங்கு வேளாளர், இசை வேளாளர் போன்ற பெயர்ச் சொற்களால்) குறிக்க வேண்டும் என்றோ கோரவில்லை.

வேளாண்மைக்கு அடிப்படையாகக் கருதப்படுவதும், மருத நிலத்தின் தெய்வமாகக் கருதப்படுவதும், மழைத் தெய்வமாகக் குறிக்கப்படுவதுமான இந்திரன் எனும் குலத்தைச் சார்ந்த வேளாளர் எனும் அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில்தான் அரசாணை வேண்டும் என்கிறார்கள். அவர்களது இந்தக் கோரிக்கையை எதிர்ப்பதும் மறுப்பதும் மனிதப் பண்பும் அல்ல; சனநாயகப் பண்பும் அல்ல.

உண்மையில், வேளாளர் என்போர் யார் என்பதற்குப் பண்டிதர் அயோத்தி தாசர் தரும் விளக்கம் முக்கியமானது.

"கையையும் காலையும் ஒரு இயந்திரமாகக் கொண்டு பலவகைச் சூத்திரங்களைச் செய்து, பூமியைத் திருத்தி தானிய விருத்தி செய்து சர்வ சீவகர்களுக்கும் உபகாரியானோர்களை வடமொழியில் சூஸ்திரர், சூத்திரர் என்றும், தென் மொழியில் வேளாளர், மேழிச் செல்வர், பூபாக்கியர் என்றும்,
இவற்றுள், மூன்று பாகமாகப் பிரித்ததுமன்றி பூமியைத் திருத்தி விருத்தி செய்வோருக்கு உழவர், பள்ளர், உழவாளர், மேழியர், வேளாளர்" என்றும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.
(சான்று: பண்டிதர் அயோத்தி தாசர், தமிழன் இதழ் 2:25, டிசம்பர் 2, 1908. /அயோத்தி தாசர் சிந்தனைகள், தொகுதி 1.)

நிலத்தில் வெளிப்படும் உழைப்பு மற்றும் உற்பத்தித் தொழில் நுட்பங்களையே சூத்திரம் என்கிறார் பண்டிதர். வேளாண்மைத் தொழில் வித்தைகளை (சூத்திரங்களை)ச் செய்வதனால்தான் வேளாளர்கள் சூத்திரர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்கிறார் அவர்.

அயோத்தி தாசரின் இக்குறிப்பின் வழி வேளாளர் யார் என்பது தெளிவாகும். ஆகவே, வேளாளர் என்னும் பின்னொட்டுச் சொல்லால் குறிப்பிடுவதற்கும் அழைக்கப்படுவதற்கும் அரசாணை வெளியிடக் கோருவதற்கும் முழுத்தகுதியும் உரிமையும் உழவுத்தொழில் மரபில் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இருக்கிறது என்றே கருதலாம்.

ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
10.07.2020.

#வேளாண்_மக்கள்_ஆய்வுகள்
#agrarian_studies

3 கருத்துகள்:

  1. ஜெயவீரபாண்டியன்10/7/20, 7:15 PM

    ஐயா, பழந்தமிழ் இலக்கியங்கள் வேளாண்மை என்ற சொல்லை விருந்தோம்பல் என்ற பொருளில் தானே பயன்படுத்தியுள்ளன.

    வேளாண்மை என்ற சொல்லை உழுதொழில் என்ற பொருளில் பயன்படுத்திய ஒரே ஒரு பழந்தமிழ் இலக்கியக் குறிப்பு கூட இல்லையே.

    தேவேந்திர குலத்தாராகிய மள்ளர் மருத நில குடிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    ஏதாவது சான்று இருந்தால் குறிப்பிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JeyaVeera Pandian
      திரிகடுகம் வேளாண் குடி பற்றி கூறுகையில்,
      “கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
      பழகினும் பார்ப்பாரைத் தீபோல் – ஒழுகல்
      உழவின்கட் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
      அழகென்ப வேளாண் குடிக்கு” (திரி:42)
      என்கிறது. இவ்விடத்து வேளான் குடிக்குத் தொழில் உழவு என்பதைச் சுட்டுகிறது. இது தொல்காப்பியர் கூறிய வேளாண் மாந்தர்க்கு உழுதூண் என்பதை நினைவூட்டுகிறது. சிறுபஞ்சமூலம்,
      “வேளாண்மை கொல்லார்”; (சிறு:46:2)
      என்பதால் நற்குணத்தார் பலருக்கும் பயன்படும் பயிர்த்தொழிலைக் கெடுக்கமாட்டார்கள் எனக் கூறுகிறது. ஈண்டு வேளாண்மை என்பது உழவுத் தொழில் என உணரமுடிகிறது. முதுமொழிக் காஞ்சி,
      “பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது” (முது:36)
      எனக் கூறும். இதனால் தெரிவது விருப்பம் இல்லாவிட்டாலும் விருப்பமுடையவர் போல் செய்யும் ஈகையானது நீசத் தன்மையின் நீங்கி ஒழியாது என்பதாம். இவ்விடத்து வேளாண்மை எனும் சொல் ஈகை என்னும் பொருளில் ஆளுப்பட்டுள்ளiமை நோக்கத்தக்கது.

      இதுகாறும் செம்மொழி இலக்கியங்கள் சுட்டும் வேளாண், வேளாண்மை எனும் சொற்கள் உணர்த்துவது கொடை, உதவி பயிர்த் தொழில் ஆகிய மூன்று பொருளைத் தருவதால் வேளாண்மை என்பது ஒரு சொல் பலபொருள் தன்மை உடையது. அத்துடன் உலகத்து உயிர்கள் வாழ்வதற்கு உழவுத் தொழிலை மேற்கொண்டு உணவை உற்பத்தி செய்து கொடையாகக் கொடுத்து உதவுதல் எனும் நிலையில் உழவுத் தொழிலுக்கு வேளாண்மை என்னும் பெயர் ஆகி வந்ததால் அது ஆகுபெயராயிற்று.

      நீக்கு
    2. உழவு என்பது தொழில். உழவுத்தொழிலைச் செய்வோர் உழவர். வேளாண்மை > வெள்ளாமை என்பது உழவின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட படைப்பு. வேளாண்மை > வெள்ளாமையை உருவாக்கியவர்கள் வேளாளர்கள். வேளாண்மை எனும் படைப்பை உருவாக்குபவர்கள் உழவுத்தொழில் புரியும் உழவர்கள்தான். இரண்டுக்கும் தொடர்பில்லை என்பது சரியல்ல. பழந்தமிழில் வேளாண்மை பற்றிய சொல்லாடல்கள் இருக்கின்றன. அதற்குப் பொருள்கோடல் செய்யும் விதத்தில்தான் அதன் பொருள் இருக்கிறது. பழந்தமிழில் உழவரையும் வேளாண்மையையும் ஒருங்கே குறிக்கும் பாடல்கள் இல்லை என்பதற்காக உழவர்களும் வேளாண்மையும் இல்லை; அவர்களுக்குத் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது.

      நீக்கு