திங்கள், 13 ஜூலை, 2020

தமிழர் சமய மரபும் கொச்சைப் பொருள்முதல்வாதப் பகுத்தறிவு வாதிகளின் அறிவுக் குறைபாடும்: மகாராசன்

ஆரிய பிராமணியத்தோடும் அதன் வைதீக வழிபாட்டு மரபுகளோடும் எவ்வகையிலும் உறவும் ஈடுபாடும் இல்லாத வழிபாட்டுக் கூறுகளே தமிழரின் சமய வழிபாட்டு மரபில் இருக்கின்றன.

தமிழர் மரபு சார்ந்தும் நாட்டுப்புற வழக்கு சார்ந்தும் நிலவுகிற வழிபாட்டு உணர்வுகளையும், அதை சமயப் பண்பாட்டு அடையாளமாக வெளிப்படுத்துகிற மனிதர்களையும் கொச்சைப்படுத்துவதின் மூலம் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவானவர்களாக ஆக்க முடியாது. சமூக மாற்றங்களும், உற்பத்திச் செயல்பாடுகளும், அறிவியல் சிந்தனைகளும், கல்வியும் அது சார்ந்த கண்ணோட்டமும், பல வகைச் சிந்தனைப் போக்குகளும் பெருவாரி மக்களுக்கும் ஒருசேரச் சென்று சேர்கிறபோதுதான் அவர்களின் பகுத்தறிவு விரிவடையும்.

பொதுவாக, இங்கிருக்கும் ஒவ்வோர் (மொழி/இனம்/சமய மரபு போன்ற) பண்பாட்டு அசைவுகளுக்கும், ஆரிய பிராமண வைதீகப் பண்பாட்டு மரபுகளுக்கும் நேர் எதிரான முரணும் பகையும் காலங்காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலேயே பிராமணிய மரபு வடிவங்களைப் போலவே, இங்குள்ள தமிழர் சமய மரபு வடிவங்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பதும் அணுகுவதும் விமர்சிப்பதும் என்பது, உண்மையான பிராமண எதிர்ப்பு என்பதாகி விடாது.

மாறாக, வைதீகத்தின் எதிர் மரபாகிய தமிழரின் சமய மரபுகளையெல்லாம் பிராமணிய வைதீகச் சாயம் பூசி அவற்றையெல்லாம் பிராமணிய வைதீகத்தின் பக்கம் தள்ளிவிடுகிற/அதுவாகக் கூட்டியும் காட்டியும் செய்கிற போக்கைத்தான் கொச்சைப் பொருள்முதல் வாதப் பகுத்தறிவு வாதங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அதாவது, இங்குள்ள தமிழரின் சமய மரபுகளை ஆரிய வைதீக பிராமணியம் தன்வயப்படுத்தியும் சமக்கிருதமயப்படுத்தியும் வருகின்ற சூழல் ஒருபுறம் இருக்க, தமிழர் சமய மரபுகளையெல்லாம் பிராமணிய மரபுகளைப் போல பகுத்தறிவு அற்றவை; ஆபாசம் நிறைந்தவை; பிற்போக்கானவை; இழிவானவை; வெறுக்கத்தக்கவை எனக் கொச்சையாக எடுத்துரைத்தும் அடையாளப்படுத்தியும் வருவதன் மூலம், அவற்றையும் ஆரிய பிராமணிய வைதீகச் சாயம் பூசுவதும் மறுபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னதை ஆன்மீகம் எனும் பேரில் ஆரியம் செய்கிறது. பின்னதைப் பகுத்தறிவு எனும் பேரில் நடக்கிறது. இவ்விரண்டு போக்குகளுமே தமிழர் சமய மரபுகளுக்கு ஆரிய பிராமணிய வைதீகச் சாயம் பூசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

தமிழரின் சமய மரபுகளை இயங்கியல் பூர்வமான வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், வெறும் கொச்சைப் பொருள்முதல்வாதத்தால் அணுகும் இந்தப்போக்கு, சமய மரபுகளைப் பின்பற்றுகிறவர்களின் எதிர் மன உணர்வுகளையே வளர்த்தெடுத்து ஆரிய பிராமணிய வைதீகத்தின் பக்கம் அணி சேர்க்க உதவும் பேராபத்தும் இருப்பதை உணராமல் இருப்பதும், ஆரிய பிராமணிய வைதீக மரபுகளுக்கு எதிராக இருக்கும் தமிழர் சமய மரபுகளை அடையாளம் காணாமல் இருப்பதும் பகுத்தறிவுவாதிகளின் அறிவுக் குறைபாடின்றி வேறில்லை.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்.
13.07.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக