வியாழன், 30 ஜூலை, 2020

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் : டி.தருமராசின் ‘அயோத்திதாசர்’ நூலை முன்வைத்து…:- மகாராசன்


தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது. அது, ஒற்றைத் தன்மையானதுமல்ல; ஒன்றை மட்டும் மய்யப்படுத்தியதுமல்ல. மேலதும் கீழதுமாக, மய்யமும் விளிம்புமாகக் கலந்த பன்மையின் தொகுப்பாகவே தமிழர் அறிவு மரபு வடிவமைந்து வந்திருக்கிறது. இவ்வாறாக, ஒவ்வொரு காலத்திய அறிவாளுமைகளால் முன்னெடுக்கப்பட்ட அறிவுச் செயல்பாடுகள் பொதுச்சமூகத்தின் ஏற்பைப் பெறுவதிலும் புறக்கணிப்பைச் சந்திப்பதிலும் நிறைய காரணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று சாதி; மற்றொன்று கருத்தியல்சார் அரசியல் ஆகும்.

சாதியும் (Cast), கருத்தியல் (Ideology) சார்ந்த அடையாள அரசியலும்தான் ஒன்றைப் பேசு பொருளாக்குவதில் மிக முக்கியப் பங்கை வகிக்கக் கூடியவை. அக்காலத்திலிருந்து இன்றுவரையிலும் இதுதான் தமிழ்ச் சமூகத்தின் மறைபண்பாய் இருந்துகொண்டிருக்கிறது.

அயோத்திதாசர் எனும் பேசுபொருள் :

தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபைத் தமது அறிவுச் செயல்பாடுகளால் வளப்படுத்தியவர்களுள் அயோத்திதாசப் பண்டிதரும் ஒருவர். அயோத்திதாசரைக் குறித்தும், அவரது அறிவுச் செயல்பாடுகளைக் குறித்தும் பேசு பொருளாக்கி வெளிவந்திருக்கும் ஆய்வுநூல் பேராசிரியர் டி.தருமராசு எழுதிய அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை எனும் நூலாகும். கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக 2019இல் வெளியான இந்நூல், அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகள் முழுவதையும் ஆராய்ந்து அவற்றைப் பேசு பொருளாக்கியிருக்கிறது.

தமிழ்ச் சமூகம் அயோத்திதாசரைப் பேசு பொருளாக முன்னெடுக்க மறந்த அல்லது மறைத்ததன் பின்புலம் குறித்து எழுதும் நூலாசிரியர், “சுமார் 125 வருடங்கள் கழித்து இன்றும்கூட தமிழ் கூறும் நல்லுலகில் ‘அயோத்திதாசப் பண்டிதர்’ என்ற பெயர் எந்தவொரு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், தமிழகத்தின் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கிய அயோத்திதாசர், தமிழகத்து வரலாற்றாய்வாளர்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டார்.

தமது மரணம் வரையிலும், மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அயோத்திதாசரைப் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இடம்பெற்று விடாதபடி பார்த்துக் கொண்ட தந்திரம் இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் வெற்றிகரமாகவே செயல்பட்டு வந்தது.
அயோத்திதாசரின் சமகாலத்தில் வாழ்ந்து வந்த தேசியக் கவிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், சுதேசிகளுக்கும் அவருக்குப் பின் தோன்றி, சென்ற நூற்றாண்டில் தமிழகமே தலைமேல் வைத்துக் கூத்தாடிய திராவிடச் சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவரை இருட்டடிப்புச் செய்ததில் கணிசமான பங்கு இருக்கவே செய்தது. தமிழ்ச் சமூகத்தின் நாடி நரம்புகளிலும் புரையோடிப் போயிருக்கும் சாதிய வெறியையும் காழ்ப்புணர்வையும் தவிர்த்து இதற்கு வேறென்னதான் காரணமாக இருக்க முடியும்?’’ (பக். 41,42) என்கிறார்.

அவர் கருதுவதுபோல, அயோத்திதாசரைப் பேசு பொருளாக முன்னெடுக்காமைக்குச் சாதியம் மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அயோத்திதாசரின் சாதிப் பின்புலம் சார்ந்த வேறுபல சமூக ஆளுமைகளோடும் அரசியல் சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுத்திருப்பதோடு, அவற்றைப் பேசு பொருளாகவும் மற்றவரும் பொதுச் சமூகமும் முன்னெடுத்திருக்கும் வரலாறும் இருக்கிறது. ஆகவே, அயோத்திதாசரைப் பேசு பொருளாக்க மறந்தது அல்லது மறைத்ததில் சாதியம் மட்டுமே காரணம் அல்ல எனக் கருதலாம்.

பிறகு ஏன் அயோத்திதாசர் பேசுபொருளாக முன்னெடுக்கப்படவில்லை?

குறிப்பாக, திராவிட இயக்கங்களாலும், திராவிட அரசியல்வாதிகளாலும், திராவிடக் கருத்தியல் செயல்பாட்டாளர்களாலும் அயோத்திதாசரை முன்னெடுக்காமல் போனதற்கும் / முன்னெடுக்காமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் காரணம் ஒன்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். அது, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே ஆகும்.
தமிழர் அடையாள அரசியலை உள்ளீடாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளாலும் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்குப் பின்புலமும் அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே காரணமாகும்.

திராவிட அரசியலிலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்தும் வேறுபட்டதான தன்மைகளைக் கொண்டிருப்பதே அயோத்திதாசர் முன்வைத்த தமிழர் அடையாள அரசியலாகும். அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியலையே பேசு பொருளாக முன்வைத்திருக்கிறார் டி.தருமராசு. அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியலைப் புரிந்துகொள்வதற்கான திறப்பைத் தருவதாக அமைந்திருக்கிறது அவரது நூல்.

அடையாள அரசியல் :

அயோத்திதாசர் முன்னெடுத்த தமிழர் அடையாள அரசியலானது, அக்காலத்தில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட மற்ற அடையாள அரசியல்களிலிருந்து வேறுபட்டிருக்கக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முன்பான காலகட்டத்தில் பல்வேறு அடையாள அரசியல்கள் முன்னெடுக்கப்பட்ட அதே அரசியல் சமூகச் சூழலில்தான் அயோத்திதாசரும் தமது அடையாள அரசியலை முன்வைத்திருக்கிறார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகிற அடையாள அரசியல்களுள், பிராமண மேலாதிக்க எதிர்ப்பு அரசியலும் ஒன்றாகும். அயோத்திதாசர் முன்னெடுத்த அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்திருக்கிறது. அவருக்குப் பிந்தைய திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலிலிருந்து முற்றிலும் முரண்பட்டதான அடையாள அரசியலையே அயோத்திதாசர் முன்வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிவுச் செயல்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது.

பிராமண மேலாதிக்கத்தை எதிர்க்கும் வகையில் உருவான அயோத்திதாசரின் அடையாள அரசியலையும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலையும், தமிழ்ச் சமூகத்தில் நிலைகொண்டிருந்த அவற்றின் வகிபாகத்தையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போதுதான் இருவேறு அடையாள அரசியலின் முரண்கள் தெளிவாகும்.

எதிர் மரபு :

தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்தேறி ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும் தமதாக்க முயன்றதோடு, அதிகாரப் பீடங்களைக் கைப்பற்றுவதற்கும் உரிய சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி இருக்கின்றனர். ஆரியப் பிராமணர்களின் சூழ்ச்சியில் தமிழரின் அதிகாரப் பீடங்கள் பலியாகிப்போனதும் அந்தந்த காலங்களில் நிகழ்ந்திருந்தாலும், ஆரியப் பிராமணர்கள் கட்டமைத்து வந்த பிராமணியக் கருத்தாக்கத்தை எதிர்ப்பதும் மறுப்பதுமான கருத்தியல் போர் மரபைத் தமிழர்கள் தமது அறிவுச் செயல்பாடுகளின் வழியே  வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.

பிராமணிய எதிர்ப்பு எனவும், ஆரிய எதிர்ப்பு எனவுமான ஓர் எதிர்மரபு தமிழரின் அறிவு மரபிலும் அறிவுச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆரியப் பிராமணிய மரபுக்கெதிரான குரலும் அதனையொட்டிய செயல்பாடுகளும் தமிழர் வரலாற்றில் நடந்தேறியிருக்கின்றன. இத்தகைய ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் வரலாற்று நீட்சியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் குரல் தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், அரசியல் வடிவமும் பெறத்தொடங்கியிருக்கிறது.

பிராமண மேலாதிக்கம் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஆங்கிலேய வல்லாதிக்கச் சுரண்டல் ஒடுக்குமுறை ஆட்சி நிலவிக்கொண்டிருந்தாலும்கூட, அதிலும் அரசாங்க உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் பிராமணர்களின் அதிகப்படியான பங்கேற்பும் இருப்பும் தலையீடும் அதிகாரப் பரவலைச் செயலாக்குவதில் தலைதூக்கி இருக்கின்றன. அதாவது, ஆங்கிலேயர்களின் வல்லாதிக்க ஆட்சி அதிகாரத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகளிலும், நகரம் சார்ந்த பகுதிகளில்  உருவாகிக் கொண்டிருந்த தொழில்துறைகளிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர். 1850 காலகட்டங்களில் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆங்கிலேய வல்லாதிக்க அரசு நிர்வாகப் பணிகளில் வட இந்தியப் பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியப் பிராமணர்களே உயரிய இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாக, மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த  பிராமணர்கள்  அரசுப் பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கியதால், அவர்களது அரசியல் செல்வாக்கும் பெருகியிருக்கிறது. இதனால் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதோருக்கும் இடையே அரசியல், சமூகம், பொருளாதாரம், வாழ்வியல், பண்பாட்டு நிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே நிலவி இருக்கின்றன.

இந்நிலையில், ஃபேர் பிளே (Fair Play) எனும் பெயரில் 1893இல் வெளியான இரண்டு புத்தகங்கள் அரசுப் பணிகளில் பிராமணர்களின் மேலாதிக்கத்தையும், பிராமணர் அல்லாதவர்கள் மீதான ஒதுக்குதல்களையும் பேசு பொருளாக்கி வெளிவந்திருக்கின்றன. அவற்றுள், ‘பிராமணர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப் பணியும்’ (The Non – Brahmin Races and Indian Public Service) என்பது முதல் புத்தகம்.

நூற்றைம்பது ஆண்டுகளாகப் பெயருக்குத்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள்; உண்மையில் இங்கே பிராமணர்களின் ஆட்சிதான் நடந்து வருகிறது எனவும், பிராமணர்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரசுக் கட்சி இயங்குகிறது;  இந்திய அரசுப் பணிகள் அனைத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே என்ற நிலைதான் இன்னமும் நீடித்து வருகிறது என்பதே முதல் புத்தகத்தின் சாரம்.

அடுத்ததாக, ‘பிராமணர் அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்’ (The Ways and Means for the Amelioration of Non – Brahmin Races) எனும் இரண்டாவது புத்தகமானது, அனைத்து அரசுப் பணிகளுமே பிராமணர்களுக்கு என்ற நிலையை மாற்றவேண்டும் எனில்,  வேலைவாய்ப்பு என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு புதிய இயக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும்,  அதற்குப் பிராமணர் அல்லாதார் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்; புரிதலையும் விழிப்புணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பிராமணர் அல்லாதார் தங்களுக்கென்றே சில பத்திரிகைகளைத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.

அதாவது, பிராமணர் அல்லாதவர்களின் பிரச்னைகளை விளக்கும் வகையில் முதல் புத்தகமும், அவற்றுக்கான தீர்வுகளைச் சொல்லும் வகையில் இரண்டாவது புத்தகமும் வெளிவந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்போதைய அரசாங்க உயர் பதவிகளில் பெரும்பாலும் பிராமணர்களே இருந்திருக்கிறார்கள். மற்ற கீழ்ப் பதவிகள்தான் பிராமணர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. உத்தரவு போடுவதும் அதிகாரம் செலுத்துவதுமே பிராமணர்களின் பணி உரிமையாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் ஏவுகிற பணிகளைச் செய்து முடிப்பதுதான் பிராமணர் அல்லாதவர்களின் பணிக் கடமையாக நிலவி இருக்கிறது.

பிராமணர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காகப் பணியிடங்களில் புறக்கணிப்பும் அவமதிப்பும் மறுப்பும் என பிராமணர்களின் வஞ்சனை அதிகரித்த காரணத்தால், அரசுப் பணிகளில் இருந்த பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான், பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராகப் பிராமணர் அல்லாதவர்களுக்கான இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் முன் வந்திருக்கின்றனர்.

பிராமணர் அல்லாதார் சங்கம் :

பிராமண மேலாதிக்கம் நிலவிய இத்தகையப் பின்புலத்தில்தான் 1909இல் வழக்கறிஞர்களாக இருந்த பி.சுப்பிரமணியம், எம்.புருசோத்தம நாயுடு ஆகியோர் இணைந்து ‘சென்னை பிராமணர் அல்லாதார் சங்கம்’ (The Madras Non Brahmin Association) எனும் சங்கத்தை, பிராமணர் அல்லாதவர்களின் பிரச்சினைகள் குறித்த அக்கறையோடும், அவர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கத்தோடும் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசாங்க உயர் பதவிகளில் பிராமணர்களின் மேலாத்திக்கம் பெற்றிருப்பதற்கு, பிராமணர்கள் பெற்றிருக்கும் கல்வி அறிவும் புத்திக் கூர்மையும்தான் காரணம் எனும் கருத்தைக்கொண்டு, நல்ல புத்திக் கூர்மையும், கல்வி கற்கும் ஆர்வமும் கொண்ட மேற்கொண்டு படிப்பதற்கு வசதியில்லாத நிலையிலிருக்கும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவிகளைச் செய்தல், பிராமணர் அல்லாத இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்நுட்பக் கல்வியைப் பெற  உதவுதல், அவ்வாறு கல்வியைப் பெற்றிருக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் ஊக்கத்தையும் சங்கம் கொடுத்தல் எனும் நோக்கங்களைக் கொண்டு அச்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதாவது, சமூக அளவில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த பிராமணர் அல்லாத மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் சங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது. எனினும், பொருளாதாரப் பின்புலம் இன்மையாலும், வகுப்புவாதத்தைத் தூண்டுகிறார்கள்; இனவெறியைப் பரப்புகிறார்கள்; அதனை ஊக்குவிக்கக்கூடாது என்பதான பிராமணர்களின் எதிர்ப்பாலும் அச்சங்கம் மேற்கொண்டு செயல்பட இயலாமல் போயிருக்கிறது.

சென்னை ஐக்கியக் கழகமும் திராவிடர் சங்கமும் :

மேற்குறித்த அதே காலகட்டத்தில், அரசுப் பணிகளில் இருந்த பிராமணர் அல்லாதவர்களின் பெருவாரியான பங்கேற்போடு சரவணப் பிள்ளை, ஜி.வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், என்.நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணர் அல்லாதவர்களால் இணைந்து 1912இல் ‘சென்னை ஐக்கியக் கழகம்’ (The Madras United League) என்ற புதிய இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிராமணர் அல்லாதவர்களிடம் அச்சங்கத்தின் அறிமுகம் மெல்லப் பரவத் தொடங்கிய பிறகு, இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனும் இருவேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

புதிதாக வைக்கப்படும் பெயர், பிராமணர் அல்லாத மக்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கவேண்டும் என்ற நோக்கில் பிராமணர் அல்லாதார் சங்கம் என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் எனவும், ஏற்கெனவே அந்தப் பெயரைப் போலவே 1909இல் ஒரு இயக்கம் உருவாகி மறைந்துவிட்டது. அதையே வைத்துக் கொள்ளலாம் எனவும் முன்மொழியப்பட்டிருக்கிறது. எனினும், பிராமணர் அல்லாதோர் எனும் பெயரானது எதிர்மறைப் பெயராக இருக்கிறது எனக் கருதியும், சென்னை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த பிராமணர் அல்லாத மக்களுக்கான பொதுவான பெயர் வைக்கக் கருதியும் ‘சென்னை திராவிடர் சங்கம்’ (The Madras Dravidian Association) என்று அச்சங்கத்திற்குப் பெயர் வைத்துவிடுகிறார்கள்.

அதாவது, பிராமணர் அல்லாதவர்களால் - பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு சங்கமானது, தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் ஆகியோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு திராவிடர் சங்கமாக வடிவம் அடைந்திருக்கிறது. மேலும், சி.நடேச முதலியார், பிட்டி.தியாகராயச் செட்டியார், பனகல் அரசர் எனும் ராமராய நிங்கார், டி.எம்.நாயர் உள்ளிட்ட பிராமணர் அல்லாத பிரபலங்களின் ஆதரவும் வழிகாட்டலும் அச்சங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதனால், அச்சங்கத்தின் செயல்பாடும் காங்கிரசைச் சார்ந்த பிராமணர் அல்லாதவர்களின் ஆதரவும் அதிகரித்திருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் பிராமணர் அல்லாத மக்களின் மீது நடத்தப்பட்ட ஒதுக்கல்களையும் இழிவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில் 1915இல் சென்னை திராவிடர் சங்கமானது  இரண்டு கருத்துவிளக்க நூல்களை வெளியிட்டிருக்கிறது.  எஸ்.என்.கே என்பவர் தொகுத்த ‘பிராமணர் அல்லாதார் கடிதங்கள்’ (Non Brahmin Letters) எனும் நூலில், பிராமணர் அல்லாத தலைவர்கள் எழுதிய இருபத்தியொரு கடிதங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

சி.சங்கரன் நாயர் எழுதிய ‘திராவிடப் பெருமக்கள்’ (Dravidian Worthies) என்ற நூல், கல்வி கற்பதில் பிராமணர் அல்லாதவர்களின் நிலையைக் குறித்து விவாதித்திருக்கிறது. மேற்குறித்த இரண்டு நூல்களுமே பிராமணர் அல்லாதவர்கள் தமக்குரிய தனித்துவத்தைப் பெறவேண்டுமெனில், அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும் எனவும், குறிப்பாக, திராவிட மகா சபை என்ற பெயரில் விரிவான அரசியல் அமைப்பு ஒன்றைத் தொடங்கி மாவட்டம், மாநகரம், நகரம், கிராமம் என்று பல்வேறு மட்டங்களில் அந்த இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளன. திராவிடர் சங்கத்தின் வளர்ச்சியைக் காங்கிரசுக் கட்சியில் இருந்த  பிட்டி. தியாகராயச் செட்டியார், டி.எம்.நாயர் உள்ளிட்ட தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில்தான், டி.எம்.நாயரின் அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதாவது, 1916 ஆகசுடு மாதத்தில் டெல்லி சட்டசபைக்குச் சென்னை மாகாணத்தில்  நடைபெற்ற தேர்தலில் டி.எம்.நாயர் தோல்வியடைந்திருக்கிறார். நாயரை எதிர்த்துப் போட்டியிட்ட சீனிவாச சாசுதிரி என்ற பிராமணர் வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தது டி.எம்.நாயரை வெகுவாகப் பாதித்திருக்கிறது. பிராமணர்கள் தம்மைத் திட்டமிட்டுத் தோற்கடித்து விட்டார்கள் என்று அதிருப்தி அடைந்திருக்கிறார் டி.எம்.நாயர்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் / நீதிக் கட்சி :

 பிராமணர் அல்லாதோருக்காக ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கியே ஆக வேண்டும் என்கிற அரசியல் தேவையைப் பிராமணர் அல்லாதவர்கள் கைக்கொள்ளத் தொடங்கியது அப்போதுதான் நடந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடுகளின் விளைவாக 1916ஆம் ஆண்டு சி.நடேச முதலியார், டி.எம்.நாயர் மற்றும் தியாகராயச் செட்டியார் ஆகியோர் இணைந்து ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation) எனும் அரசியல் கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், அதன் அரசியல் பிரிவாக நீதிக் கட்சி (Justice Party) என்றே பரவலாக அறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அப்போது நிலவிய ஆங்கிலேய வல்லாதிக்க அரசின் சட்டமன்றங்களிலும் ஆட்சியாளர்களிடமும் முறையீடு செய்து அரசுப் பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறுவதற்குப் பலவாறு முயற்சிகள் செய்திருக்கிறது நீதிக்கட்சி. மேலும், அப்போதைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியே காங்கிரசுக் கட்சிக்கு அரசியல் மாற்றாகச் செயல்பட்டிருக்கிறது. இக்காலத்தில்தான் மாண்டேகு சேம்சுஃபோர்டு அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம்1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி என்பதான ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரசுக் கட்சி இம்முறையை ஆதரிக்கவில்லை. எனினும், நீதிக் கட்சி அதனை ஆதரித்திருக்கிறது. இரட்டை ஆட்சி எனும் இம்முறையின் மூலம் பிராமண ஆதிக்கத்தை வீழ்த்தி, பிராமணர் அல்லாதவர்களுக்கான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என அது நம்பியது.  இம்முறையின்கீழ் 1920ஆம் ஆண்டு முதன்முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறது. 1920 முதல் 1937 வரையிலான காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் அய்ந்தில் நான்கு முறை நீதிக்கட்சி அரசுகளே ஆட்சி புரிந்திருக்கின்றன. இவ்வாறாக, பிராமண எதிர்ப்பே நீதிக்கட்சி அரசியல் கொள்கைகளின் மய்யக் கருத்தாக இருந்திருக்கிறது.

நீதிக் கட்சியானது அரசியல் கட்சியாகப் பரவிய அதே காலகட்டத்தில் 1919இல் காங்கிரசுக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு அரசியல் களத்திற்குள் நுழைந்திருக்கிறார் ஈ.வெ.ரா பெரியார்.

சுயமரியாதை இயக்கம் :

1922இல் அப்போதைய சென்னை மாகாணத்தின்  காங்கிரசுக் கட்சித் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு, அரசுப் பணிகளிலும் கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையைக் காங்கிரசுக் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்மொழிந்திருக்கிறார் பெரியார்.

பெரியாரின் இந்தக் கோரிக்கையை அன்றைய  காங்கிரசுக் கட்சியில் உள்ளவர்களே நிராகரித்திருக்கிறார்கள். இதனாலேயே 1925இல்  காங்கிரசுக் கட்சியிலிருந்து பெரியார் விலகியிருக்கிறார். அதேவேளையில், சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி, சமூக விடுதலைக்கான பிரச்சார இயக்கமாகச் ‘சுயமரியாதை இயக்கம்’ எனும் இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார் பெரியார்.

பிராமணர் அல்லாதோர் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், பிராமணர் அல்லாதோர் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவுமான நோக்கில்  அதன் முக்கியக் கொள்கைப் பரப்புரைகள் அமைந்திருக்கின்றன. மூடப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்த்தல்; மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுத்துத் தெளிவுடையவர்களாக மாற்றுதல்; பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தல் போன்றவை அதன் பிரச்சாரச் செயல்பாடுகளாக அமைந்திருக்கின்றன.
இதனினும், சுயமரியாதை இயக்கத்தின் முக்கியப் பிரச்சாரக் கொள்கையாக அமைந்திருந்தது எதுவெனில், அரசு நிருவாகப் பணி, கல்வி போன்றவற்றில் வகுப்புவாரியான இட ஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அப்போதைய ஆங்கிலேய அரசு நிருவாகத்தை  வலியுறுத்தியதாகும். இதனால், சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, நீதிக்கட்சி ஆதரவு பெரியாருக்கும், பெரியாரின் ஆதரவு நீதிக் கட்சிக்கும் அக்காலத்தில் கிடைத்திருக்கிறது.

அப்போதைய சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு மாற்றாகவும், பிராமணர் அல்லாதவர்களின் அரசியல் கட்சியாகவும் இருந்து ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த நீதிக் கட்சியானது, 1937ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தபிறகு தேக்கநிலையை அடையத் தொடங்கிய காலத்தில்தான் அதன் தலைமைப் பதவியைப் பெரியார்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகமும் திராவிடக் கட்சிகளும் :

அதன் பிறகான காலத்தில், நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் இருந்தபோது 1944இல் நீதிக் கட்சி எனும் பெயர் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் திராவிடர் கழகம் என்றே அழைக்கப்பட்டும் வருகின்றது.

அன்றைய காலகட்டங்களில் பெரியாரின் கருத்துகளைப் பேச்சிலும் எழுத்திலும் படைப்பிலும் மிகத் தீவிரமான அரசியலாக முன்னெடுத்தவர்களுள் ஒருவரான அறிஞர் அண்ணாவும் வேறு சிலரும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) எனும் கட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பிற்காலத்தில் தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர் 1972இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) எனும் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். திராவிடர் கழகம் தவிர தி.மு.க; அ.இ.அ.தி.மு.க; தி.மு.கவிலிருந்தும் அ.இ.அ.தி.மு.கவிலிருந்தும் பிரிந்த பலப்பல அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய இந்திய நாடாளுமன்ற / சட்ட மன்றத் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் என்பதான நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

எனினும், திராவிடர் கழகத்திற்கு முன்பும் பின்புமான இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் ‘திராவிட இயக்கங்கள்’ என்றே   பொதுவாகச் சுட்டப்படுகிறது. அந்தவகையில், தமிழ் நாட்டின் ஒரு நூற்றாண்டுகால ஆட்சி அதிகாரத்தின் பெரும்பகுதியைத் திராவிட இயக்கம்தான் இன்னும் செலுத்திக் கொண்டிருக்கிறது அல்லது திராவிட இயக்கத்தின் துணையோடுதான் தமிழகத்தில் ஒரு நூற்றாண்டு கால ஆட்சி நடந்திருக்கிறது.

திராவிட இயக்க அரசியல் :

பிராமண எதிர்ப்பு, காங்கிரசுக் கட்சி எதிர்ப்பு, பிராமணர் அல்லாதவர்களின் நலன், வகுப்புவாரியான இட ஒதுக்கீடு, சுய மரியாதை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, கோயில் நுழைவு உரிமை, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்தம், சமூக சமத்துவம், கல்வி, இந்துமத எதிர்ப்பு, தமிழ் நாட்டுரிமை எனத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சமூகத் தளங்களில் இதழ்கள், நூல் வெளியீடுகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள், சிறை செல்லல் போன்றவற்றின் வாயிலாகத் தீவிரப் பிரச்சாரங்களைப் பெரியார் மேற்கொண்டிருக்கிறார்.
பெரியார் மேற்கொண்ட அரசியல் சமூகச் சீர்திருத்தப் பணிகளால் பிராமணிய எதிர்ப்பும், பிராமணர் அல்லாதவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, ஆட்சி அதிகார நலன்களும் உள்ளடக்கிய வெகுமக்கள் அரசியலை - வெகுமக்களிடம் கொண்டுசேர்க்கிற வெகுமக்கள் இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் வலுவாகவே பரவலாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் நேரடிப் பங்கேற்பு செலுத்தாத வெகுமக்கள் இயக்கமாய் அதன் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

அப்போதைய சென்னை மாகாணம் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னட நிலப்பகுதிகளையும், அந்நிலப் பகுதிகளைச் சார்ந்த தமிழர், தெலுங்கர், மளையாளி, கன்னட மக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. எனினும், பிராமண மேலாதிக்க எதிர்ப்பை முன்வைத்த பிராமணர் அல்லாதவர்களுக்கான திராவிட இயக்கத்தையோ அல்லது திராவிடக் கருத்தியல் செயல்பாடுகளையோ ஆந்திரத் தெலுங்கர், கருநாடகக் கன்னடர், கேரள மலையாளிகள் போன்றோர் அவரவர் நிலப்பரப்பிலான சமூகச் சூழலில் முன்னெடுக்கவுமில்லை; பரவலாக்கவுமில்லை; அவற்றில் முனைப்பும் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, திராவிட இயக்கத்தின் பிராமணிய மேலாதிக்க எதிர்ப்பு மற்றும் பிராமணர் அல்லாதவர்களின் சமூக, அரசியல், கல்வி, பொருளாதார நலன்கள் சார்ந்த அமைப்பாக்கச் செயல்பாடுகளும் அவற்றின் கருத்தாக்கச் செயல்பாடுகளும் தமிழ்நாட்டளவில் தமிழ்ச் சமூகத்தை முன்வைத்தே நடந்தேறியிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதவர்களின் வெகுமக்கள் அரசியல் திரட்சிக்கும், பிராமணர் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்திற்கும் திராவிட இயக்கம்தான் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதவர்களின் ஒரு நூற்றாண்டுகால அரசியல் தேவையைத் திராவிட இயக்கம்தான் பூர்த்தி செய்திருக்கிறது.

அந்தவகையில், தமிழ்ச் சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் வகிபாகத்தை மறைக்கவோ மறக்கவோ முடியாது. தமிழ்ச் சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் திராவிட இயக்கதின் பங்கேற்பு மிகப்பெரும் துணையாகவே இருந்திருக்கிறது என்பதை வரலாறு குறித்தே வைத்திருக்கிறது.

திராவிட இயக்க அடையாள அரசியல் :

பிராமண மேலாதிக்க எதிர்ப்பும் பிராமணர் அல்லாதவர்களின் சமூக அரசியல் நலனையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம் முன்மொழிந்த திராவிட அரசியல், பிராமணர் அல்லாதவர்களின் அரசியலாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான ஓர் அடையாள அரசியலாகத் திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
மேற்குறித்தவாறு, தமிழ்ச் சமூகத்தில் தமிழ்ச் சமூகத்தை முன்வைத்துக் கட்டமைக்கப்பட்ட திராவிட இயக்கமானது, பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதவர்களின் அடையாள அரசியலாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அந்த அடையாள அரசியலில் ‘தமிழர் அடையாளம் நீக்கம்’ செய்யப்பட்ட ஒன்றாகவே வடிவமைக்கப்பட்டு வந்திருக்கிறது. பிராமணர் அல்லாதவர் இயக்கங்கள் ஒன்றுகூட தமிழ் / தமிழர் எனும் அடையாளத்தோடு இயங்கவில்லை. மாறாக, பிராமணர் அல்லாதார் / தென்னிந்தியர் / திராவிடர் எனும் அடையாளத்தையே முதன்மைப்படுத்திச் செயலாற்றி உள்ளன.

அவ்வகையில், திராவிட இயக்கத்தின் பிராமணர் அல்லாதோர் எனும் அடையாள அரசியல் என்பது, தமிழர் அடையாளம் நீக்கம் செய்யப்பட்ட தமிழர் அல்லாதவரான தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளிட்டவர்களின் அடையாளங்களை உள்ளீடாகக் கொண்டதாகும். அதாவது, பிராமணர் அல்லாதோர் என்பதற்குள் தமிழர் அல்லாதவரும் பங்கேற்கும் அரசியல் சமூகப் பொருளாரதார ஆட்சி அதிகார வாய்ப்புகளைத்தான் திராவிட இயக்கத்தின் அடையாள அரசியல் தந்திருக்கிறது; இன்னும் தந்து கொண்டிருக்கிறது.

திராவிட இயக்க முன்னோடி :

பொதுவாக, திராவிட இயக்கமே பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் எதிர்ப்பியக்கத்தின் தோற்றுவாயாகவும், எல்லா சமூகப் பிரிவினரும் உள்ளடக்கிய வெகுமக்கள் இயக்கமாகவும் கருதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. மேலும், திராவிட இயக்கத்தின் திராவிட அரசியலே பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிரான கருத்தியலாகவும் பேசு பொருளாக்கப்படுகிறது.

ஆனால், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே, திராவிட இயக்கத்தின் திராவிட அரசியலுக்கு முன்பாகவே பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்த பிராமணிய எதிர்ப்பியக்கத்தையும், பிராமணிய எதிர்ப்பு அரசியலின் கருத்தியலையும் தமிழ்ச் சமூகம் எல்லாக் காலத்திலும் கண்டடைந்தே வந்திருக்கிறது. அந்தவகையில், பிராமணிய மேலாதிக்க எதிர் மரபின் தொடர்ச்சியாய் இயக்கமாகவும் கருத்தியலாகவும் திகழ்ந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.

பிராமண மேலாதிக்க எதிர்ப்பை மய்யப்படுத்திய அரசியலையும் கருத்தியலையும் திராவிடம் / திராவிடர் எனும் பெயரில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே / அதை முன்னெடுப்பதற்கு முன்பாகவே அதே திராவிடர் / திராவிடம் எனும் பெயரில் பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்த இயக்கத்தையும் அதன் கருத்தியலையும் மிகத் தீவிரமாக முன்னெடுத்த வரலாறும் தமிழ்ச் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரலாற்று நீட்சியின் அடையாளம் அயோத்திதாசப் பண்டிதருடையது ஆகும்.

அயோத்திதாசர் பின்புலம் :

1845ஆம் ஆண்டில் மே மாதம் 20ஆம் நாளில் பிறந்த அயோத்திதாசர் (20.05.1845 - 05.05.1914), இளவயதுக் காலங்களில் தமது பெற்றோர் இட்ட காத்தவராயன் எனும் இயற்பெயராலே அறியப்பட்டிருக்கிறார். அவரது பிறப்பிடம் சென்னை எனவும், கோவை மாவட்டத்திலிருந்த ஒரு சிற்றூர் எனவும் கூறப்படுகிறது. எனினும், தமது தந்தையின் பணி காரணமாக நீலகிரிக்குப் புலம் பெயர்ந்திருக்கிறார். நீலகிரியில் ஜார்ஜ் ஹாரிங்டனிடம் அவரது தாத்தா வேலை பார்த்து வந்த குடும்பச் சூழல், இளம்வயதில் அயோத்திதாசருக்குப் பலவகைகளில் உதவியாய் இருந்திருக்கிறது.

அயோத்திதாசர், தமது தந்தையிடமும் சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்திதாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றிருப்பதோடு, தமிழ், ஆங்கிலம், வடமொழி மற்றும் பாலி போன்ற மொழியறிவும் நிரம்பப் பெற்று விளங்கியிருக்கிறார். அதோடு, சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார். தமது ஆசிரியர் மீது கொண்ட அன்பாலும் மதிப்பாலும் காத்தவராயன் என்ற தமது இயற்பெயரை  அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அத்வைதானந்த சபை :

அயோத்திதாசர் தமது 25ஆவது வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான மலைவாழ் மக்களை முன்வைத்து 1870களில் ‘அத்வைதானந்த சபை’ என்கிற ஒன்றை நிறுவியிருக்கிறார்.
அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அதனுடைய கொள்கைகள், சடங்குகள், பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றைப் பகுத்தறிவு ரீதியிலான தேடலோடே அணுகி இருக்கிறார். குறிப்பாக, இச்சபை இரண்டு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார் டி.தருமராசு. “ஒன்று, கிறித்துவ சமயப் போதகர்களின் சமயப் பரப்புப் பணிகளுக்கு எதிரான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது; இரண்டு, அத்வைத மரபின் மூலம் வர்ணாசிரம, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்துவது’’(பக். 43) எனும் நோக்கிலேயே அச்சபையை அயோத்திதாசர் முன்னெடுத்திருக்கிறார்.

திராவிட பாண்டியன் இதழ் :

1880களில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் வெசிலியன் சபைப் பள்ளியொன்றை ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்காக  நடத்திக்கொண்டிருந்த வெசிலி சபையைச் சார்ந்த ஜான் ரத்தினத்துடன் அயோத்திதாசருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றுகிற வாய்ப்பும் அயோத்திதாசருக்குக் கிடைத்திருக்கிறது.  அவ்விருவரும் இணைந்து ‘திராவிட பாண்டியன்’ என்ற செய்தி இதழை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். ‘திராவிட பாண்டியன்’ இதழ் மூலமே அயோத்திதாசர் பத்திரிகைத் தொழிலின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

திராவிட மகாஜன சபையும் ஆதித் தமிழர் எனும் அடையாள முழக்கமும் :

இதனையடுத்து, 1881ஆம் ஆண்டு அயோத்திதாசரின் பெருமுயற்சியால் ‘திராவிட மகாஜன சபை’ என்ற அமைப்பு தொடங்கப் பெற்றிருக்கிறது. நீலகிரியில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் தலைவராக அயோத்திதாசரே பணியாற்றியிருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில்தான் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளை ‘இந்துத்துவம்’ எனும் வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றிருக்கின்றன.

1881ஆம் ஆண்டு, ஆங்கிலேய வல்லாதிக்க அரசின் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக் கணக்கிடும் பணியை மேற்கொண்டபோது, சமய அடையாளங்களைப் பதிவு செய்யும் வேலையையும் செய்திருக்கிறார்கள். பவுத்தர், சமணர், கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர் போன்ற செவ்வியல் சமய அடையாளங்களைச் சாராத பெருவாரியான மக்களுக்கு எந்தச் சமய அடையாளத்தை வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

‘யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர், பவுத்தர், சமணர், சீக்கியர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள்’ என 1861 முதல் 1891 வரையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் திரள் ‘இந்து’ எனும் அடையாளத்திற்குள் வலியத் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமாக மறைமுகமான ‘மதமாற்றம்’ நிகழ்வதையும், ‘இந்துக்கள்’ என்ற அடையாளம், உயர்த்திக் கொண்ட சாதியினரின் தந்திரம் மூலம் ஆங்கிலேய வல்லாதிக்க அரசால் வலுக்கட்டாயமாக இந்திய / தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்படுவதையும் அறிந்த அயோத்திதாசர்,  இந்து எனும் அடையாளத் திணிப்பிற்கான எதிர்ப்புணர்வை அக்காலத்திலேயே மிகத் தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்
.
‘இந்து’ எனும் அடையாளம் ஆரியப் பிராமணிய வைதீக மரபை அடித்தளமாகக் கொண்டிருப்பது. அது, சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனக் கருதிய அயோத்திதாசர், இந்து எனும் அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், சாதியக் கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து எனும் அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். இந்து என்ற அடையாளத்தை ஏற்க மறுத்த அயோத்திதாசர்,  அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளத்தையும் மிகத்தெளிவாக முன்வத்திருக்கிறார்.

“இந்திய தேசத்திலுள்ள பழங்குடி மக்களும், பஞ்சமர் என்றழைக்கப்படும் தாழ்த்தப் பட்டவர்களும் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவே, இவ்விரு மக்களும் ‘ஆதித் தமிழர்கள்’ என்பதாகவே கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படல் வேண்டும்’’ (பக். 45) என்ற குரலை 1881ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்து எனும் அடையாளத்திற்கு மாற்றாக அயோத்திதாசர் முன்வைத்த அடையாளம் மொழி அடையாளமாக இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகப் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஆதித் தமிழர்கள் என்ற அடையாளம் தமிழர்களான அவர்களது தமிழ்மொழி அடையாளத்தையும் அம்மக்களின் தொன்மை வரலாற்றையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது.

சாக்கிய பௌத்த சங்கமும் தமிழ்ப் பவுத்தமும் :

பிராமணர்களாலும் உயர்த்திக்கொண்ட சாதியினராலும் ஒதுக்கலுக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்களின் தாழ்வுநிலைக்குக் காரணம் பவுத்தம்தான் எனக் கருதியிருக்கிறார் அயோத்திதாசர். அதாவது, பவுத்தமே ஒடுக்கப்பட்ட மக்களின் பூர்வீகச் சமயமாக இருந்திருக்கிறது; பவுத்தத்தைப் பின்பற்றியதாலேயே அவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள். ஆகவே, சாதி மற்றும் சமயப் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு எதிராகச் சாதி, வருண எதிர்ப்புச் சமயமான பவுத்தமே ஏற்ற தீர்வு என்றும் கருதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, இந்தியப் பாரம்பரிய மரபில் பேசப்பட்ட பவுத்த சமய அடையாளங்களிலிருந்து வேறுபட்ட ‘தமிழ்ப் பவுத்தம்’ என்கிற தமிழர் சமய அடையாளத்தையே கட்டமைத்திருக்கிறார்.

தமிழ்ப் பவுத்தம் எனும் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டே 1898ஆம் ஆண்டு சென்னையில் ‘சாக்கிய பௌத்த சங்கம்’ ஒன்றை  அயோத்திதாசர் தோற்றுவித்திருக்கிறார். தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்திச் செயலாற்றி இருக்கிறார் அயோத்திதாசர்.

ஒரு பைசாத் தமிழன் இதழ் :

தமிழ்ச் சமூக வரலாற்றில் அயோத்திதாசரின் சீரிய பங்களிப்புகளுள் குறிப்பிடத்தக்க மற்றொன்று, இதழியல் பணியாகும். அயோத்திதாசரை ஆசிரியராகக் கொண்டு, சென்னை இராயப்பேட்டையிலிருந்து 1907ஆம் ஆண்டு சூன் மாதம்  19ஆம் நாள் முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களைக் கொண்டு அன்றைய காலணா விலையில் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்திருக்கிறது.

‘உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காகச் சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்றுகூடி இப்பத்திரிக்கையை  ‘ஒரு பைசாத் தமிழன்’ வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்கக் கோருகிறோம்’ என்ற அறிவிப்பின்படி வெளியான ஒரு பைசாத் தமிழன் இதழின் நோக்கமானது, தமிழ்ச் சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அறிவு மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கிறது.

தமிழன் இதழ் பரவல் :

ஒரு பைசாத் தமிழன் இதழ் வெளியான ஓராண்டுக்குப் பிறகு,  ஒரு பைசாத் தமிழன் என்பதில் உள்ள ‘ஒரு பைசாத்’ எனும் முன்னொட்டு நீக்கப்பட்டு ‘தமிழன்’ என்ற பெயரோடு 1908ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26ஆம் நாள்முதல் வெளிவந்திருக்கிறது.

1907 முதல் 1914 வரையிலான காலங்களில் தமிழன் இதழில் வெளி வந்த செய்திகளும் விரிவான தளங்களைக் கொண்டிருந்திருக்கின்றன. குறிப்பாக, மகளிர் பத்தி (Ladies column) எனும் தலைப்பில் பெண்கள் கல்வி, பெண்கள் வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

அடுத்ததாக, பொதுச் செய்தி (Genaral news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள், அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடகக் கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் அக்காலத்தில் பரவி இருக்கிறது என்பர்.

அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயரும் ‘தமிழன்’ எனும் அடையாளத்தையே முதன்மைப்படுத்தி இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அயோத்திதாசர் பேச்சும் எழுத்துமான அறிவுச் செயல்பாடுகள் :

மூட நம்பிக்கை மற்றும் தீண்டாமையை முன்மொழிந்த ஆரியப் பிராமணிய வேத இதிகாசப் புராணங்கள், தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பிராமணிய மேலாதிக்கம், உயர்த்திக்கொண்ட சாதியினரின் சாதிய மேலாதிக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் பூர்வீக வரலாறு, தமிழ் இலக்கியங்கள் மற்றும் வரலாறு பற்றிய மறுவாசிப்பு, அன்றைய அரசியல் சமூகச் சூழல் போன்றவை குறித்தெல்லாம் பேச்சாகவும் எழுத்தாகவும் செயலாகவும் மிகத் தீவிரமாக இயங்கி இருக்கிறார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர, அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதியிருப்பதாகவும், அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது எனவும் கூறப்படுகிறது.

அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம், அம்பிகையம்மன் சரித்திரம், அரிச்சந்திரன் பொய்கள், ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம், இந்திரர் தேச சரித்திரம், இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, சாக்கிய முனிவரலாறு, திருக்குறள் கடவுள் வாழ்த்து, திருவள்ளுவர் வரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், நூதன சாதிகளின் உள்வே பீடிகை, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி, புத்த மார்க்க வினா விடை, மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம், முருக கடவுள் வரலாறு, மோசோயவர்களின் மார்க்கம், யதார்த்த பிராமண வேதாந்த விவரம், விபூதி ஆராய்ச்சி, விவாஹ விளக்கம், வேஷ பிராமண வேதாந்த விவரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம், வேஷபிராமண வேதாந்த விவரம் போன்றவை அயோத்திதாசர் எழுதிய நூல்களாகும்.

அயோத்திதாசர் தமது நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, மூடப்பழக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்தும், அவற்றின் ஊடாகத் தமிழ் மற்றும் பவுத்த அடையாளங்கள் குறித்தும் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்தும், பிராமணர் அல்லாதவர்களின் சாதி மேலாதிக்கத்தை எதிர்த்தும், சாதி பேதமற்றவர்களே தமிழர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களே பூர்வத் தமிழர்கள் என்பதைப் பேசுபொருளாக்கியும் தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத அக்காலத்தில், அனைவருக்குமான சமூக நீதி, சாதிபேதமற்ற சமூக மதிப்பீடுகள், விளிம்பு நிலையிலிருந்த மக்களின் ஒடுக்குமுறைகள் குறித்தெல்லாம் அயோத்திதாசர்  பேசியிருக்கிறார்.

அதிகாரத்தில் சம பங்கு, பிரதிநித்துவ அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணுரிமை, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழியாதிக்க எதிர்ப்பு, வேத புராண எதிர்ப்பு, பிராமணிய மேலாதிக்க எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு போன்றவற்றுக்கான கருத்தியல் உரையாடல்களைச் தமிழ்ச் சமூகத்தில் அயோத்திதாசர் அக்காலத்திலேயே அறிவுச் செயல்பாடுகளாக நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நூற்றாண்டு மறதி :

இந்நிலையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சமூகத் தேவைக்கான கருத்தியல்களைப் பேசுபொருளாக்கிய அயோத்திதாசரைக் குறித்தும், அவரது கருத்தாடல்கள் குறித்தும், அவருக்குப் பிறகான காலங்களில் நிலவியிருந்த திராவிட இயக்கம் பேசு பொருளாக்கி இருக்கவேண்டும். ஏனெனில், திராவிட இயக்கத்தின் ஆகப்பெரும் கருத்தாடல்கள் யாவும் அயோத்திதாசரால் ஏற்கெனவே பேசு பொருளாக ஆக்கப்பட்டவை.

இதைக் குறித்துக் கூறும் டி.தருமராசு, “திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான திராவிடன், பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு, சமதர்மம் போன்றவை தமிழ் பெளத்த மூலவரான அயோத்திதாசரிடமிருந்து கடன் வாங்கப்பட்டவை; அதே போல் வட தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் திராவிட இயக்கம் வேரூன்ற பெளத்த சங்கங்களே அடிப்படையாக இருந்தன. ஏறக்குறைய பெளத்த சங்கங்களின் அழிவிலேயே திராவிட இயக்கம் பிறந்தது” (பக். 97,98) என்கிறார்.

அயோத்திதாசரை முன் மாதிரியாகவும் முன்னோடியாகவும் பேசு பொருளாக்கி இருக்கவேண்டிய திராவிட இயக்கம், அவ்வாறு செய்யாமல் மறந்து போனது அல்லது மறைத்ததன் பின்புல அரசியல் என்ன?

பிராமணிய மேலாதிக்க எதிர்ப்பில் திராவிட இயக்கமும் திராவிட அரசியலும் பிராமணர் அல்லாதவர்களின் இருப்பையும் அடையாளத்தையுமே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, திராவிடர் எனும் பேரில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் உள்ளிட்ட உயர்த்திக்கொண்ட சாதியினரின் / பிற இனத்தவரின் குரலும் அடையாளமும் பங்கேற்பும்தான் அதிகமாய் இருந்திருக்கின்றன.

ஆனால், திராவிட இயக்கத்திற்கும் திராவிட அரசியலுக்கும் முன்பாகவே வெளிப்பட்டிருந்த அயோத்திதாசரின் பிராமணிய மேலாதிக்க எதிர்ப்புக் குரலானது, சமூக, அரசியல், கல்வி, பொருளாதார நிலைகளில் பின் தள்ளப்பட்ட / புறக்கணிக்கப்பட்ட / வஞ்சிக்கப்பட்ட / ஏமாற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் இருப்பையுமே பேசு பொருளாக்கி இருக்கின்றது.

அதாவது, பிராமணிய எதிர்ப்பின் அரசியல் திரளாகவும், அதன் கருத்தியலாகவும் வெளிப்படுகிற பிராமணர் அல்லாதவர் என்பதற்குள், மேற்குறித்த விளிம்பு நிலைக்கும் அப்பாலிருக்கும் மக்களையும் உள்ளடக்கிய பெருந்திரள் குரலையே அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் விளிம்புநிலைக் குரலையும் உள்ளடக்கிய அயோத்திதாசரது பேசு பொருட்கள் / சிந்தனைகள் / செயல்பாடுகள் குறித்து, அவருக்குப் பிறகான சமூக இயக்கங்கள், குறிப்பாகத் திராவிட இயக்கங்கள் ஒரு நூற்றாண்டு காலமாகவே பேசு பொருளாக ஆக்கப்படவில்லை. அதைத்தான் டி.தருமராசு ‘ஒரு நூற்றாண்டு மறதி’ எனும் கட்டுரையில் மிக விரிவாகவே அதன் காரணத்தை முன்வைத்திருக்கிறார்.

திராவிட இயக்கம் குறித்த மறுவாசிப்புத் தேவை :

அயோத்திதாசர் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்தும் மறுவாசிப்பு செய்வதற்கான மூன்று நோக்கங்கள் இருப்பதாகக் கருதுகிறார் டி.தருமராசு. அதாவது, “அட்டவணைச் சாதிகள் என்றும் தலித் என்றும் சொல்லப்படும் வகைப்பாடுகளின் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை இருந்தது இல்லை.  காலனியச் சொல்லாடலின் ஒரு அங்கமாக உருவாகி வந்த இந்த வகை, அம்பேத்கரின் புண்ணியத்தில் சுதந்திர இந்தியாவில் மேலும் மேலும் உறுதிப்படுத்தப்பட்ட இந்த வகை எனக்குத் தனிப்பட்ட வகையில் பெரும் சுமையாகவே இருந்தது. இதிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்கு அயோத்திதாசரின் யோசனைகள் துணை செய்ய முடியும் என்பது ஒரு கருதுகோள்.

இரண்டாவதாக, திராவிடம் இயக்கம் வெற்றி பெற்ற மதமதப்பில் பிறந்து வளர்ந்த (அதாவது, 1967க்குப் பின் பிறந்தவர்கள்) எனக்கு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது மாபெரும் சவாலாக இருந்தது.  ஜனநாயக அரசியலமைப்பை மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன என்றாலும் திராவிட இயக்கங்கள் தங்களது ஆதாரமான கருத்தியல் நிலைப்பாடுகளை இழந்து விட்டன என்பதே உண்மை.  இந்த உண்மை என்னிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியபடியே இருந்தது.
ஒரு விடுதலை இயக்கம், அரசியல் அதிகாரத்தை கையிலெடுக்கையில், கருத்தியல் நேர்மையைக் கை நழுவ விடுவது ஏன் என்பதை நான் விளங்கிக் கொள்ள விரும்பினேன்.  அதிகாரம், கருத்தியல் நேர்மை, வெகுஜன இயக்கம் போன்ற விஷயங்களை நாம் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும் எனக்குப் பட்டது. அந்த வகையில், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப சமத்துவம், பகுத்தறிவு, கடவுள் மறுப்பு போன்றவற்றை இன்னும் வலிமையாகக் கருக்கொள்வது எப்படி என்பதும் எனது கேள்வியாக இருந்தது.  இந்த முயற்சிக்கும் அயோத்திதாசர் பயனுள்ளவராக இருப்பார் என்று எனக்குப் பட்டது.

அதே போல, சாதி குறித்து நிலவும் எந்தவொரு அறிவியல் உண்மையிலும் எனக்கு சம்மதம் இருக்கவில்லை. அவற்றிற்கு எதிரான வலுவான ஒரு பாடு அனுபவங்கள் என்னிடம் இருந்தன. சாதி தொடர்பான எல்லா வியாக்கியானங்களும் இறுதியிலும் இறுதியாய், சுத்தம் - அசுத்தம் அல்லது பார்ப்பார் - பறையர் என்று சுருங்கிப் போவதில் நான் நிஜமாகவே அதிருப்தி கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, ‘பிராமண எதிர்ப்பு’ என்ற ஒற்றைத் திட்டம் சாதி எதிர்ப்பாக நிலைநிறுத்தப்படுவது குறித்தும் எனக்கு உடன்பாடு இல்லை.  இந்த உரையாடலுக்கும் அயோத்திதாசர் மிக முக்கியமான தரவாக இருக்க முடியும் என்பது இன்னொரு கருதுகோள்” (பக். 11, 12) என்கிறார்.

அதாவது, திராவிட இயக்க அரசியல் கருத்தியலின் போதாமைகள், அயோத்திதாசரின் அரசியல் கருத்தியலின் தேவைகள் குறித்ததே மேற்குறித்த கருதுகோள்களின் சாரம். இன்னும் குறிப்பாக, அயோத்திதாசரின் சமூக, அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம், மொழி, வரலாறு, பண்பாடு பற்றிய சிந்தனைகள் இன்றைய காலகட்டத்துச் சமூக அரசியல் சூழலிலும் பேசு பொருளாக ஆக்கப்பட வேண்டியவை என்பதைதான் டி.தருமராசின் கருதுகோள்கள் வலியுறுத்துகின்றன.

திராவிட இயக்க அரசியல் கருத்தியலின் போதாமையை / இடைவெளியை / விடுபடல்களை / குறைபாடுகளை அயோத்திதாசரின் கருத்தியல்களைக்கொண்டு முழுமையாக்கவோ செழுமைப்படுத்தவோ திராவிடக் கருத்தியலாளர்கள் முனைந்திருக்கலாம் அல்லது முயலலாம்.
ஆனால், பிராமண மேலாதிக்க எதிர்ப்பு, பிராமணர் அல்லாதவர் அரசியல், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய எடுத்துரைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சமூக விடுதலை, தமிழர் அடையாள அரசியல், வழிபாடு உள்ளிட்ட சமய அடையாளங்கள், பண்பாட்டு வழக்காறுகள், சமூக வரலாறு பற்றிய கண்ணோட்டங்கள் போன்ற யாவற்றிலும் அயோத்திதாசரின் கருத்தியல் நிலைப்பாடு ஒன்றாக இருக்கிறது; திராவிட இயக்க அரசியல் கருத்தியல்வாதிகளின் நிலைப்பாடும் புலப்பாடும் வேறொன்றாக இருக்கின்றன.

இந்நிலையில், அயோத்திதாசரைக் குறித்த திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு மறதிக்கான காரணியாக டி.தருமராசு முன்வைக்கும் வாதம் சாதிப் பின்புலத்தையே அடையாளப்படுத்துகிறது.

“பெரியாருக்கும் அயோத்திதாசருக்கும் தொடர்புகள் இருந்திருக்க முடியுமா? தொடர்புகள் இல்லையென்றாலும் அயோத்திதாசரைப் பற்றி அவருக்குத் தெரியாதிருக்க நியாமிருக்கிறதா? அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றால், அயோத்திதாசர் முன்வைத்த சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிடன், பிராமண எதிர்ப்பு போன்ற பல விஷயங்களை பெரியாரும் பேசியதன் பின்புலத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? அயோத்திதாசர் பற்றி அவர் அறிந்திருந்தார் என்றால், அயோத்திதாசரின் சிந்தனைகளை  உள்வாங்கியிருந்தார் என்றால், தனது எழுத்திலும் பேச்சிலும் ஒரு முறையேனும் குறிப்பிடாமல் விட்டது ஏன்? ஒரு சிறு மேற்கோள் அளவில்கூட குறிப்பிடப்படும் தகுதியை அயோத்திதாசர் பெற்றிருக்கவில்லையா?

பெரியார் மட்டுமல்ல, அவரோடு கூட செயல்பட்ட திராவிட இயக்க செயல்வீரர்களும், அவரைப் பின்பற்றிய திராவிட இயக்கத்தின் தம்பிகளும் கூட அயோத்திதாசர் குறித்தும், தமிழ் பெளத்த செயல்பாடுகள் குறித்தும் மெளனம் சாதிப்பதன் யதார்த்தம் என்ன? உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாமல் இருந்ததா அல்லது பிறர் தெரிந்து கொள்ளாமலிருக்க மெளனம் காத்தார்களா அல்லது அயோத்திதாசர் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற உண்மை அவர்களது வாய்களையும், கைகளையும் கட்டிப்போட்டதா?”(பக். 95, 96)  என, திராவிட இயக்கத்தின் மீதான குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவுமே முன்வைக்கிறார் டி.தருமராசு.

பிராமண எதிர்ப்பு, பிராமணர் அல்லாதவர் நலன், பகுத்தறிவு, சமூக விடுதலை போன்றவை குறித்த கருத்தியல் நிலைப்பாடுகளில், அயோத்திதாசரின் அரசியல் முன்னெடுப்புக்கும் திராவிட இயக்க அரசியல் முன்னெடுப்புக்கும் ஒருமித்த நிலைப்பாடு இருப்பதுபோலத் தோன்றினாலும், அவையிரண்டும் வேறுவேறான அடையாள அரசியலையே உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அயோத்திதாசரைத் திராவிட இயக்கங்கள் பேசு பொருளாக்காமல் இருந்ததன் பின்புலம் சாதிதான் என அடையாளப்படுத்துவது முழுமையான வாதமாக அமையாது. எனினும், திராவிட அரசியல் கருத்தியலின் தோழமைக் கருத்தியலாகக்கூட அயோத்திதாசரது அரசியல் கருத்தியல் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அயோத்திதாசரது அரசியல் கருத்தியல் / அறிவுச் செயல்பாடுகள் தோழமைச் செயல்பாடுகளாகக்கூட திராவிட இயக்கங்கள் அணுக முடியாது போனமைக்குக் காரணம், அயோத்திதாசர் முன்னெடுத்த அடையாள அரசியலே பின்புலமாகும்.

அயோத்திதாசரைக் குறித்தும், அவரது அறிவுச் செயல்பாடுகள், அவற்றின் கருத்தியல் புலப்பாடுகள் போன்றவை குறித்த அறிமுகமும் விவாதங்களும் திராவிட இயக்கத்தினருக்குக் கிடைத்திருக்கின்றன. திராவிட இயக்கத்தின் அமைப்பாக்க வளர்ச்சிக்கும் கருத்தியல் முன்னெடுப்புக்கும்கூட அயோத்திதாசர் தோற்றுவித்த இயக்கமும் அவரது அறிவுச் செயல்பாடுகளும் பக்கத்துணையாய் இருந்திருக்கின்றன. இதைக்குறித்து ஆராய்ந்த ஞான.அலாய்சியசின் கருத்துகள் முக்கியமானவை எனக்கருதும் டி.தருமராசு, அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்.

“அயோத்திதாசரின் மறைவுக்குப் பின்னர், தமிழ் பெளத்த இயக்கத்தை வழி நடத்தியவர்களில் முக்கியமானவர்களாக லட்சுமி நரசு, அப்பாதுரையார் போன்றவர்களைச் சொல்லலாம். ‘தமிழன்’ பத்திரிக்கையை நடத்துவதையும், பெளத்த சங்கங்களைக் கட்டுவதிலும், பெளத்த மாநாடுகளை நடத்துவதையும் இவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.

1928ஆம் வருடம் தென்னிந்திய பெளத்த சங்கத்தின் பொது மாநாடு ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டின் தலைவராக லட்சுமி நரசு செயல்பட்டு வந்தார். மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாகவும், சிறப்புப் பேச்சாளராகவும் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஈ.வே.ரா. பெரியார் அவர்களில் ஒருவர். இந்த மாநாட்டின் மூலம் பெரியாரும் அப்பாதுரையாரும் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்து, பின் இறுதி வரை நண்பர்களாக இருந்தனர். அப்பாதுரையாரின் நட்பு பெரியாரைப் பல முறை கோலார் தங்கச் சுரங்கத்திற்கு அழைத்து வந்தது.
பெரியார் ஒவ்வொரு முறை கோலாருக்கு வரும் பொழுதும் பெளத்தம் தொடர்பான புத்தகங்களைத் தேடித் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அயோத்திதாசரின் எழுத்துக்கள் மீது அவர் அதிகமான ஆர்வத்தைக் காட்டினார். கோலாருக்குப் பெரியார் வந்தார் என்றால், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு என்று பல விஷயங்களைப் பற்றி பல பேருடன் விவாதித்துக் கொண்டேயிருப்பார். அப்படியான விவாதங்களில் தமிழ் இலக்கியம், வரலாறு, பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு மீதான விமர்சனப் பார்வைகளுக்காக ‘தான் அயோத்திதாசருக்கு கடமைப்பட்டிருப்பதாய்’ பலமுறை நேரடிப் பேச்சில் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவங்களையெல்லாம் அப்பாதுரையாரின் வழி வந்த பலர் இன்றும் ஞாபகத்தில் வைத்துச் சொல்கிறார்கள்.

அப்பாதுரையாருக்கும் பெரியாருக்குமான நட்பு பின்னாட்களில் இரு பத்திரிக்கைகளுக்கு இடையிலான நட்பாகவும் மலர்ந்தது. 1925இல் குடிஅரசு இதழ் தொடங்கப் பெற்றதற்கு மறு வருடம், 1926இல் அப்பாதுரையார் ‘தமிழன்’ பத்திரிக்கையை மறுபடியும் கொண்டுவரத் தொடங்கினார். இவ்விரு பத்திரிக்கைகளும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன. அவற்றின் பார்வைகள் ஏறக்குறை ஒன்றே போல் இருந்தன. இரண்டு இதழ்களிலும் ஒரே மாதிரியான நபர்களே எழுதினார்கள். சுயமரியாதை இயக்க வெளியீடுகள் பற்றிய விளம்பரம் ‘தமிழனிலும்’ தமிழ் பெளத்த வெளியீடுகள் பற்றிய விளம்பரம் ‘குடி அரசிலும்’ வெளிவந்தன. குடி அரசு சமதர்மத்தை வலியுறுத்தியது. தமிழன் பெளத்த தர்மத்தைப் பேசியது.

சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக மாறி அரசியல் தளங்களில் செயல்படத் தொடங்கிய பொழுது, வட தமிழகப் பகுதிகளில், தமிழ் பெளத்த இயக்கத் தலைவர்களும், செயல் வீரர்களுமே முதன்மை உறுப்பினர்களாக விளங்கினர். திருப்பத்தூரைச் சார்ந்த டி.எச். அனுமந்து, கோலாரைச் சார்ந்த ஜி. அன்னபூரணி, செங்கல்பட்டைச் சார்ந்த சி.கே. குப்புசாமி இவர்களுள் சிலர். இதற்குப் பின்பு, பெளத்த கூட்டங்களுக்கும் திராவிட இயக்கக் கூட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லாமல் போயிற்று.

1932இல் சுயமரியாதை இயக்கப் பொது மாநாட்டை கோலாரிலுள்ள பெளத்த சங்கக் கிளைகளே முன்னெடுத்து நடத்தின. புதிய தலைவராக பெரியார் உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அப்பாதுரையாரும் அவருடைய ஆதரவாளர்களும் பெரியாருக்கு உற்ற துணையாய் இருந்து பணியாற்றினர். செங்கல்பட்டு, ஆற்காடு, சென்னைப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்களில் கூட்டம் நடைபெறும் பொழுதெல்லாம் அப்பாதுரையாரும், பிறரும் பெரியாரை ‘இவர் நம்ம ஆளு’ என்று சொல்லி அறிமுகம் செய்வது வழக்கம்.

மேற்கூறிய சம்பவங்களையெல்லாம் விவரிக்கிற அலாய்சியஸ் தனது அபிப்பிராயமாக முன்வைக்கிற ஒரு கருத்தும் மிக முக்கியமானது. அதாவது, அவரது அனுமானத்தின் படி திராவிட இயக்கத்தின் ஆணி வேராகத் தமிழ் பெளத்த இயக்கங்களே அமைந்துள்ளன. கருத்துருவ அளவில் மட்டுமல்லாது இயக்கமாகக் கட்டுவதிலும் பெளத்த சங்கங்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்துள்ளது.

அலாய்சியஸின் அனுமானத்திலிருந்தும், காட்டுகிற சான்றுகளிலிருந்தும் நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக விளங்குகின்றன. ஒன்று, ஈ.வே.ரா. பெரியாருக்கு அயோத்திதாசரைப் பற்றியும், அவரது கோட்பாடுகளைப் பற்றியும், பெளத்த சங்கங்களைப் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அயோத்திதாசரோடு இல்லையென்றாலும் அவரது வழித் தோன்றால்களோடு பெரியாருக்கு நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.

இரண்டாவது, பரவலாகக் கருதுவது போல் திராவிட இயக்கம் சுயம்புவானதோ, தனியொரு மனிதரின் மூளையில் உதித்ததோ அல்ல. வரலாற்றில் காணப்படும் வேறெந்தவொரு விடுதலை இயக்கத்தினையும் போல் திராவிட இயக்கத்திற்கும் முன்னோடி இயக்கங்கள் இருந்தன. அவற்றைத் தின்று செரித்தே திராவிட இயக்கம் வளர்ந்து வந்திருக்கிறது. அவ்வாறு செரிக்கப்பட்டதில் தமிழ் பெளத்த இயக்கம் முதன்மையானது”(பக்.96-98) என டி.தருமராசு முன்வைத்திருக்கும் கருத்துகள், திராவிட இயக்கத்தின் அறிவுச் செயல்பாடுகள் மீதான மறுவாசிப்பைக் கோருவதாகவே அமைந்திருக்கின்றன.

அயோத்திதாசரைத் திராவிட இயக்கங்கள் மிக நன்றாகவே அறிந்தும் தெளிந்தும் வைத்திருக்கின்றன. அயோத்திதாசர் மிகத்தெளிவாகவே முன்வைத்திருந்த அடையாள அரசியல்தான், திராவிட இயக்கத்தின் கருத்தியலுக்கும் அயோத்திதாசரது கருத்தியலுக்கும் இடைவெளியை அதிகப்படுத்தி வைத்திருக்கிறது.

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் :

திராவிடர் / திராவிடம் போன்ற அரசியல் சொல்லாடல்களை அயோத்திதாசர் தமது அறிவுச் செயல்பாடுகளில் முன்வைத்திருந்தாலும், திராவிட இயக்கத்தினர் முன்னெடுத்திருக்கும் அடையாள அரசியலில் இருந்து முற்றிலும் வேறான அடையாள அரசியலையே கொண்டிருந்திருக்கிறது தெளிவாகிறது. அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியல் குறித்து டி.தருமராசு எடுத்துரைக்கும் பகுதிகள் முக்கியமானவை.

“திராவிடர்’ என்ற சொற்பிரயோகம் அயோத்திதாசரின் காலத்தில் இருந்ததா என்று பலரும் ஆச்சரியப்படலாம். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1881இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியின் போது ‘ஆதித்தமிழன்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்தினாரோ அதே பொருளிலேயே ‘திராவிடன்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்.

‘திராவிட மகாஜன சபை’ என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோருக்கான சபையாகவே தோற்றம் பெற்றது. இந்நாட்டில் பூர்வீகக் குடிகளாகவும், மண்ணின் மைந்தர்களாகவும், ஆதித் தமிழர்களாகவும் விளங்கிய பழங்குடிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுமே ‘திராவிடன்’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்பட்டனர். பின்னாட்களில், தமிழன் என்பதற்கும். திராவிடன் என்பதற்கும் பல்வேறு திரித்தல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன என்றாலும், அத்தகைய திரிபடைந்த அர்த்தங்களே இன்றைக்கும் வழக்கில் உள்ளன என்றாலும், அயோத்திதாசர் அவற்றை முற்றிலும் மாறான பொருளிலேயே பயன்படுத்தினார் என்பது முக்கியம்”.(பக். 49)

“1880களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் புதிய தளமொன்றில் அவர் இயங்கத் தலைப்பட்டதை நமக்குச் சுட்டுகின்றன. வர்ணாசிரம அடக்குமுறையையும், சாதிய காழ்ப்புணர்வையும் மறுக்கும் வழிமுறையென அத்வைத கோட்பாடுகளை முன்மொழிந்த அவர் அதனிலிருந்து முற்றிலும்  மாறுபட்டு, தம்மையும் தமது சமூகத்தையும் ‘இந்துக்கள் அல்ல’ என்று அறிவித்ததுடன் ‘ஆதித்தமிழர்’ என்ற மொழி அடையாளமே பிரதான அடையாளம் என்று அறைகூவியது தலைகீழான மாற்றம் என்று கூட சொல்லமுடியும்.

‘ஆதித்தமிழர்’ என்ற அடையாளத்தை எந்தவொரு அரசியல் லாபத்துக்காகவும் அவர் முன்மொழியவில்லை. அதே நேரம், அதிர்ச்சியை உண்டாக்குவது மட்டுமே அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை, ‘ஆதித்தமிழர்’ என்ற அடையாளம் அவருக்குள் ஆழமாகவே செயல்பட்டு வந்தது. இதனாலேயே இந்த நாட்டின் பழங்குடியின மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தமிழ் பேசும் மக்களின் மூதாதையர்கள் என்ற சிந்தனையை அவர் தொடர்ந்து வளர்த்து வந்தார். அக்கோட்பாட்டை வலுப்படுத்தும் பல்வேறு சான்றுகளையும் அவர் தேடத் தொடங்கினார்.

தொல்தமிழர் அல்லது தமிழ் மூதாதையர் அல்லது ஆதித் தமிழர் என்ற சிந்தனையின் அடுத்த நிலையாக 1886இல் அயோத்திதாசர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை இரண்டு செய்திகளை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

ஒன்று, பழங்குடியின மக்களும் தாழ்த்தப்பட்டவர்களுமான ஆதித் தமிழர்களே இந்நாட்டின் முதல் குடிமக்கள், அதாவது பூர்வகுடிகள் அல்லது மண்ணின் மைந்தர்கள்; இரண்டு, இம்மண்ணின் மைந்தர்களான அவர்கள் இந்துக்கள் அல்லர்”(பக். 47) என, டி.தருமராசு விவரித்த மேற்குறித்த பகுதிகள், அயோத்திதாசரின் அடையாள அரசியலைத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

அயோத்திதாசர் காலத்தில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்துப் பிராமணர் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த பிராமணர் அல்லாதார் இயக்கமானது, பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும், அதிகாரத்தில் பங்கு கோருவதாகவும் மட்டுமே இருந்ததே தவிர, பிராமணர் அல்லாதவர்களால்  பிராமணர் அல்லாதவர்களிடம் கடைபிடிக்கப்பட்டு வந்த  சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவது குறித்தோ, சாதி ரீதியாக வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்தப்பட்ட பிராமணர் அல்லாதவர்களின் மேலாதிக்கத்தைக் களைவது குறித்தோ வேறெதுவும் வலியுறுத்தவில்லை.

ஆகையால்தான், பிராமணர் அல்லாதார் இயக்கம் என்பது பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கம் என்கிற வகையில் அதிலிருந்து விலகியே நின்றிருக்கிறார் அயோத்திதாசர்.
பிராமணர் அல்லாதார் இயக்கம் குறித்த அயோத்திதாசரது நிலைப்பாடு பின்வருமாறு:

“பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்கள் ஆகும்.
சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களையும், அப் பிராமணர் என்போர்களே ஏற்படுத்தி, அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே ஆவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக்கொண்டே (நன் பிராமன்ஸ்) என்று சங்கம் கூடி இருக்கின்றனரா அன்றேல், சாதி ஆசாரங்களையும் சமய ஆச்சாரங்களையும் ஒழித்து (நன் பிராமன்ஸ்) non-brahmin என்ற சங்கம் கூடி இருக்கின்றனரா விளங்கவில்லை.

அங்கனம் சாதி ஆசாரங்களையும் சமய ஆச்சாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாய் இருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்து உழைப்பதற்கு அனந்தம் பேர் காத்திருக்கின்றார்கள்.
பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு நன் பிராமன்ஸ் எனக்கூறுவது வீணேயாகும்”
(தமிழன் 3:14, செப் 15, 1909) என்கிறார் அயோத்திதாசர்.

அதாவது, சாதி சமய ஏற்றத்தாழ்வுகளை ஏதோ ஒருவகையில் கடைபிடித்துக்கொண்டு, இன்னொரு சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத் திரள்வதென்பது உண்மையான பிராமணிய எதிர்ப்பு அல்ல; அது பிராமணியச் சார்பு நிலையே. பிராமணர் அல்லாதவர்கள் அனைவரும் சாதி பேதமற்று அணிதிரள்வதே உண்மையான பிராமணிய எதிர்ப்பு என்பதுதான் அயோத்திதாசர் முன்வைத்திருந்த அரசியல் நிலைப்பாடாகும்.

தமிழ்ச் சூழலில் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாகி வந்த பிராமணர் அல்லாதார் இயக்கமானது தமிழர்களின் அரசியல் சமூக நலனைக் குவிமயப்படுத்துவதற்குப் பதிலாக, தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளடக்கிய மக்களின் அரசியல் சமூக நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே திராவிடர் / திராவிடம் என்பதான அரசியல் திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

சேலம் செவ்வாப்பேட்டையில் பெரியார் பேசியதாகக் குடியரசு (29.01.1944) இதழில்  பதிவாகியிருக்கும் செய்தி, திராவிடம் என்பதை வலியுறுத்தியதின் தேவையைத் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது வருமாறு:

“திராவிடச் சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது ‘தமிழர்’ என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர்.

இனி, எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனெனச் சொல்லிக் கொள்ள ஒப்புக் கொள்கிறேன். ஆனால், எல்லாக் கன்னடியரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தெலுங்கர்களும் அப்படியே.
திராவிடச் சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும். எனவே, இத்தகைய கேவல நிலையொழிய, ஜஸ்ட்டிஸ் கட்சி திராவிடக் கட்சியாக மாற வேண்டும். சேலத்தில் நடைபெற இருக்கும் மாகாண மாநாட்டில் இதையே முதல் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டும்” என்பதாகத்தான் திராவிட இயக்கத்தின் திராவிடம் / திராவிடர் என்பதான அடையாள அரசியல் மடைமாற்றங்கள் நடந்தேறியுள்ளன.

திராவிட இயக்கம் முன்னெடுத்திருந்த திராவிட அரசியலானது, தமிழர் எனும் அடையாளம் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றாகவும், தமிழர் அல்லாதவர்களை உள்ளடக்கியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அதற்கும் முந்திய காலத்திலேயே திராவிடம் / திராவிடர் எனும் அரசியலை முன்னெடுத்திருந்த அயோத்திதாசர் தமிழர் எனும் அடையாளத்தையே முன்வத்திருக்கிறார்.

“சாதிபேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வகுடிகள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரி நின்றவர்கள் ஆதலின் தென்னாட்டுள் தமிழர் என்றும், வடநாட்டார் திராவிடர் என்றும், திராவிட பெளத்தாள் என்றும் வழங்கி வந்ததுமன்றி, இலங்கா தீவத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும் சரித்திரங்களிலும் இப் பூர்வக்குடிகளைத் திராவிட பெளத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக் கொண்டும் வருகின்றார்கள்”
(தமிழன் 2:21, நவ 4, 1908.) என அயோத்திதாசர் தரும் திராவிட அடையாளம் என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை, அதிலும் குறிப்பாகச் சாதிபேதமற்ற தமிழர்களையே அடையாளப்படுத்தியிருப்பது முக்கியமான ஒன்றாகும்.

பூர்வத் தமிழர் / பூர்வக் குடிகள் /  சுதேசியர்கள் என்போரின் அடையாளங்கள் பற்றிய அடையாள அரசியல் அயோத்திதாசரின் கருத்தாடல்கள் பலவற்றிலும் வெளிப்பட்டிருக்கிறது.

“சுதேசிகள் என்பது தேசத்திற்கு சுதந்திரம் உள்ளவர்கள், தேசப் பூர்வக்குடிகள், தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்கள், இவர்களையே சுய தேச வாசர்கள் என்றும் கூறப்படும். மற்ற காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே. அதாவது, அவர்கள் அந்நிய தேச வாசிகளே ஆவர்.

குடியேறி நெடுங்காலம் ஆகிவிட்டபடியால் அவர்களையும் சுதேசிகள் என்று அழைக்கலாம் என்றாலோ, அவர்களுக்குப் பின் காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறி நூறு வருடத்திற்கு மேலாகக் காலங்கழிப்பவர்களையும் சுதேசிகள் என்றே கூறத் தகும். அங்கனம் அவர்களை நீக்கி ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இருப்பவர்களாகிய எங்களை மட்டிலும் சுதேசிகள் என்று எண்ண வேண்டும், மற்றவர்களைச் சுதேசிகள் என்று அழைக்கலாகாது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆதலின், இத்தேசப் பூர்வக் குடிகளும், இத்தேசத்தைச் சீர்பெறச்செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வக் குடிகள் என்றும், சுய தேசவாசிகள் என்றும் சுதேசிகள் என்றும் கூறத் தகும்.

அவர்கள் யாரென்னில், தமிழ் பாஷையில் பிறந்து தமிழ் பாஷையில் வளர்ந்து தமிழ் பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வத் திராவிடக் குடிகளே ஆகும்.

மற்றுமிருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டகரும் பூர்வக்குடிகளேயாயினும், திராவிடர்களைப் போல் தேச விருத்தியை நாடியவர்களும், பல தேசங்களுக்கும் சென்று பொருளைச் சம்பாதித்து சுய தேசத்தைச் சீர்பெறச் செய்தவர்களும், பூர்வ சரித்திரங்களையும் ஞான நீதிகளையும் பல்லோருக்கு உணர்த்தி, சுய பாஷையில் எழுதி வைத்துள்ளவர்களும், சாதிபேதம் என்னும் கொடிய செயலைப் பூர்வத்தில் இல்லாமல் எவ்வகையாக வாழ்ந்து வந்தனரோ; நாளது வரையில் வாழ்ந்தும் வருகின்றனரோ அவர்களே யதார்த்த சுதேசிகளும் பூர்வக்குடிகளுமாவர்.

திராவிடராம் தமிழ் பாஷைக்குரியவர்களுக்குள் சாதிபேதமென்னும் நூதனக் கட்டுப்பாட்டில் அமைந்திருப்போர்களைப் பூர்வக் குடிகள் என்றாயினும், சுதேசிகள் என்றாயினும் அழைப்பதற்கோ ஏது கிடையாது. எவ்வகையில் என்பரேல், அன்னிய தேசத்திலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறிய நூதன சாதிகளையும், நூதன மதங்களையும் உண்டு செய்து கொண்டு சீவிப்போர்களுடன் உடைந்தையாகச் சேர்ந்துகொண்டு தேசத்தைப் பாழ்படுத்த ஆரம்பித்து விட்ட படியினாலேயாம்.

இத்தேசத் திராவிடர்கள் அன்னிய தேசத்தோர் சாதிக் கட்டுக்குள் அடங்கினபடியால் ஒற்றுமெய்க் கேடும், அவர்கள் மதத்தைச் சார்ந்து விட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமிகள் கொடுப்பார் என்னும் சோம்பலால் முயற்சி என்பதற்று வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தி, வியாபார விருத்திகள் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையும் சீர்கெடுத்து விட்டார்கள். இன்னும் சீர் கெடுத்தே வருகின்றார்கள். தேசத்தையும் தேச மக்களையும் எப்போது சீர்கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்களோ அச்செயல் கொண்டு அவர்களையும் சுதேசிகள் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

இத்தேசத்தின் பூர்வ சாதி பேதமற்ற நிலையைக் கருதி மக்களை மக்களாகப் பாவித்து வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும், வியாபார விருத்தியையும் சிந்தையில் ஊன்றி, சோம்பலின்றி உழைத்து, தேசத்தைச் சீர்செய்ய முயல்பவர்கள் யாரோ, அவர்களே சுதேசிகள் என்றும் சுய தேசத்தவர்கள் என்றும் பூர்வக் குடிகள் என்றும் கூறத் தகும்.

மற்றைய சாதிபேதச் செயலால் ஒற்றுமெயைக் கெடுப்போரும், சமய பேதச் செயலால் சோம்பலைப் பெருக்கித் தேசத்தைக் கெடுப்போரும் சுதேசிகள் ஆக மாட்டார்கள். அவர்கள் தங்கள் சுய நலத்தையே கருதும் அன்னிய தேசத்தோர்களே ஆவர். அவர்களுக்கு சுதேசிகள் என்னும் பெயர் பொருந்தவே பொருந்தாவாம்” (தமிழன் 2:21, நவ 4, 1908.)  என, அயோத்திதாசர் விவரிக்கும் பகுதிகள் யாவும் தமிழர் அடையாள அரசியலையே உள்ளீடாகவும் வெளிப்படையாகவும் கொண்டிருக்கின்றன.

தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு காலங்காலமாக இந்த மண்ணிலேயே உழன்று வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களே இந்நிலத்தின் பூர்வத் தமிழ்க் குடிகள். வெகுகாலத்திற்கு முன்பாகவே வந்தேறிக் குடியேறிய பிறமொழி பேசுவோர் இந்நிலத்தில் வாழ்பவர் ஆயினும், அவரெல்லாம் பூர்வத் தமிழ்க்குடிகள் அல்லர். தமிழரைப் போலவே தெலுங்கரும் கன்னடரும் மலையாளியும் மராட்டியர் உள்ளிட்ட யாவரும் அவரவர் நிலத்தின் பூர்வீகக் குடிகளே ஆவர்.

பூர்வீகத் தமிழர் / பூர்வீகத் தமிழ்க் குடிகள் என்றாலும், சாதி மத பேதமற்றவர்களாக இருப்பவர்களே உண்மையான பூர்வத் தமிழ்க் குடிகள் என்கிறார். பிறமொழி பேசுவோரையும், வந்து குடியேறிய பிற தேசத்தவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தி  ஏற்றுக்கொள்ள மறுக்கும் அயோத்திதாசர், சாதி மத பேதத்தைக் கடைபிடிக்கும் பூர்வத் தமிழ்க் குடிகளையும் தமிழராக அடையாளப்படுத்திட முடியாது; கூடாது என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

அயோத்திதாசரைப் பொறுத்தளவில், பிராமணர் அல்லாதவர் / திராவிடர் / தமிழர் என்போர் யாரெனில், சாதி மத பேதமற்ற தமிழர்களையே குறித்திருக்கிறது.

ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சி நிலவிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்நாட்டின் ஆட்சியை இந்நாட்டவரிடம் ஒப்படைக்கும் தருவாயில், அதன் பொறுப்பைப் பிராமணர் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பிராமணர் அல்லாதவர் / திராவிட இயக்கங்கள்  கோரிக்கை வைத்தன. பிராமணர்களிடமிருந்த ஆட்சி அதிகாரமானது பிராமணர் அல்லாத – தமிழர் அல்லாதவர்களுக்குக் கைமாற்றுவதில்தான்  அவ்வியக்கங்கள் முனைப்புடன் செயலாற்றி இருக்கின்றன. அதேவேளை, இந்நாட்டின் ஆட்சி அதிகாரப் பொறுப்பைப் பிராமணர் அல்லாதவர் எனும் வகையில் தமிழர் அல்லாதவர்களிடம் வழங்கிடக் கூடாது எனத் திடமாய் எதிர்த்திருக்கிறார் அயோத்திதாசர்.

“பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்கள் ஆளுகையைச் சுதேசிகளின் மீது கிருபை பாவித்து சுய ராட்சியத்தை அளிப்பது ஆயினும், இத்தேசப் பூர்வக் குடிகள் யார்? யதார்த்த சுதேசிகள் யார்? எனக் கண்டு தெளிந்து, அவர்களைச் சீர்திருத்தி, அவர்கள்பால் அளிப்பதே கிருபையாகும். அங்கனம் இராது, நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னானாள் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என்று கருதி, அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையை ஒப்படைத்துவிடுவார்களாயின் யதார்த்த சுதேசிகள் யாவரும் பாழடைந்து போவதுடன், சுதேசமும் கெட்டு சீரழிந்து போமென்பது சத்தியம்” (தமிழன் 6:21, அக் 30, 1912.) எனக் குறிப்பிடுகிறார் அயோத்திதாசர்.

வந்தேறி பிராமணர்களிடமோ அல்லது தமிழர் அல்லாத பிற வந்தேறிகளிடமோ ஆட்சி அதிகாரம் போய்ச் சேர்ந்தால், பூர்வக்குடித் தமிழர்களின் அடையாளமும் இருப்பும் வாழ்வும் பாழ்பட்டுப்போகும் என அயோத்திதாசர் அன்றைய காலகட்டத்திலேயே தீர்க்கமாய் உணர்ந்து பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அயோத்திதாசரின் தமிழ்ப் பெருங்கதையாடல் :

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் குறித்த பார்வையும் நிலைப்பாடுமானது, அக்காலத்திலும் இக்காலத்திலும் நிலவிய அல்லது நிலவுகிற எல்லா வகையான அடையாள அரசியல் பார்வையிலிருந்தும் நிலைப்பாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டே அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழ் / தமிழர் என்பதாக முன்வைக்கப்பட்ட அல்லது முன்வைக்கப்படுகிற எல்லா வகையான அடையாள அரசியல் போக்குகளிலிருந்தும், அடையாள அரசியல் முன்னெடுப்புகளிலிருந்தும் வேறுபட்ட தனித்துவ அடையாள அரசியலையே தமது அறிவுச் செயல்பாடுகளின்வழி அயோத்திதாசர் முன்னெடுத்திருக்கிறார் என்பது புலனாகிறது.

தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆசீவகம், சமணம், பவுத்தம், சைவம், வைணவம் போன்ற சமயச் செயல்பாடுகள் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், சமணம், பவுத்தம் போன்றவை தமிழரின் புறச் சமயங்கள் எனவும், சைவம், வைணவம் போன்றவையே தமிழரின் அகச் சமயங்கள் எனவும் தமிழ் மரபில் குறிக்கப்பட்டிருக்கிறது. சைவம், வைணவம் சார்ந்த பக்தி இயக்கச் செயல்பாட்டு எழுச்சியே தமிழரின் அகச் சமயங்களின் எழுச்சியாகவும், தமிழ் / தமிழர் அடையாள எழுச்சியாகவும் முன்வைக்கப்படுகிறது.

தமிழ் / தமிழர் எனும் அடையாளத்தை முன்வைத்துக் கட்டமைக்கப்பட்ட சைவ, வைணவ சமயங்களின் அடையாள அரசியலை, சாதி பேதமற்ற தமிழர்களை ஒடுக்கிய அரசியலாகவே அயோத்திதாசர் அடையாளப்படுத்துகிறார். சைவ, வைணவ சமயங்கள் சாதி பேதங்களை ஆதரிப்பன எனவும், சாதி பேதமற்ற சமயமாக இருப்பது பவுத்தமே என்பதும்தான் அயோத்திதாசரது கண்ணோட்டமாகும். ஆகையால்தான், சைவம், வைணவ சமயங்களின் அடிப்படையிலான தமிழர் அடையாள அரசியலிலிருந்து அயோத்திதாசர் முரண்பட்டு நிற்பதோடு, சாதி பேதமற்ற தமிழ்ப் பெருங்கதையாடலைத் ‘தமிழ்ப் பவுத்தம்’ எனும் தமிழர் அடையாள அரசியலாக முன்னெடுத்திருக்கிறார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் முன்னெடுத்த தமிழ்ப் பவுத்தம் சார்ந்த அறிவுச் செயல்பாடுகள், சாதி பேதமற்ற தமிழர் அடையாள அரசியலையே கட்டமைத்திருக்கிறது என்பதைத் ‘தமிழ்ப் பௌத்தப் பெருங்கதையாடல்’வழியாக டி.தருமராசு விவரிக்கும் பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வருமாறு:

“சாதிய எதிர்ப்புணர்வை தன்னுள்ளே ஆழமாகக் கொண்டிருந்த பெளத்தம் அக்கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் வேகத்தையும், அது பெரும்பான்மையான மக்களின் சமயமாக மாறுவதையும் கண்ட சைவர்களும் வைணவர்களும் பதறிப் போனதில் ஆச்சர்யமில்லை.

பெளத்தம் வளர்கிற வேகத்தையும், அதற்கான செல்வாக்கையும் கண்ட சைவ-வைணவ பக்திமான்கள் இதனை எதிர்கொள்வதெப்படி என்று யோசித்திருந்த வேளையில், தற்செயலாய்க் கண்டுபிடிக்கப்பட்டதே அவர்களது தமிழ்மொழி மீதான பற்றும், தமிழக சமயம் என்ற கோஷமும் தமிழ்நாடு என்ற தேசியமும்.

தத்தமது சாதிய நிலைப்பாடுகளை மறைக்க முடியாமல், அதனை விட்டுவிடவும் விரும்பாத சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ‘தமிழ்’ என்ற அடையாளமும், அதற்கான போராட்டம் என்ற புனைவும் பெளத்தத்தை எதிர்கொளவதற்கான தந்திரங்களாக விளங்கியிருந்தன.

அதுநாள் வரையில், பெளத்தம் பேசி வந்த சாதிக்கு எதிரான அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சைவ-வைணவக் கூட்டணி முன்வைத்த ‘அந்நிய மதத்தைப் புறக்கணித்து, தமிழர் மதத்தைத் தழுவுதல்’ என்ற தமிழ்த் தேசிய அரசியல் முன்னிலைக்கு வந்தது.
சாதிய வேறுபாடுகளற்ற, ஏற்றத் தாழ்வுகளற்ற சமூகத்தை நிர்மாணிக்கும் பண்பாட்டு அரசியலை விடவும், சைவ - வைணவம் முன்வைத்த ‘தமிழ்த் தேசிய‘ அரசியல் கவர்ச்சிகரமாகவே இருந்தது. இதனடிப்படியில், விளிம்புநிலை மனிதர்களின் சமயமாக விளங்கியிருந்த பெளத்தம் ‘அந்நிய மதம்‘ என்று முத்திரை குத்தப்பட்டது.

தமிழுக்கு எதிரான வடநாட்டினரின் சமயம் பெளத்தமென்று திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. தமிழ் மொழியை அழிக்க வந்த சத்துருவாக அது சித்தரிக்கப்பட்டது. பெளத்தத்தின் புனித மொழி தமிழ் அல்ல, பாலி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. பெளத்தர்கள் அனைவரும் வடவர்கள் என்பது போன்ற மாயை பின்னப்பட்டது.
இதற்கு மாற்றாக, தமிழ்த் தேசிய சமயமாக சைவ-வைணவக் கூட்டணி முன்வைக்கப்பட்டது. இவற்றின் சமயமொழி, தமிழ் என்று பிரகடனபடுத்தப்பட்டது. இக்கால கட்டத்தில் அவசர அவசரமாக சைவ -வைணவத் திருமறைகள் எனப் பல்வேறு நூல்கள் தமிழில் செய்யப்பட்டன. தங்களது தமிழ் மீதான பற்றுதலையும், சார்பையும் ‘பக்தி இலக்கியம்‘ என்ற பெயரில் பதிவு செய்யத் தொடங்கினார்கள்.

சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய தமிழ் பெளத்தர்களும் சமணர்களும் நாற்சந்திகளில் கூட்டம் கூட்டமாய் கழுவேற்றப்பட்டனர். ‘தமிழ் தேசியத்தை உருவாக்கப் போகின்றோம்’, ‘தமிழகத்தில் தமிழர் சமயமே இருத்தல் வேண்டும்‘. ‘தமிழ் மொழியும் வடமொழியும் எதிரெதிரானவை’ என்பவை போன்ற கற்பிதங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் கேட்கத் தொடங்கின.

சைவமும் வைணவமும் கிளப்பிய தமிழ்த் தேசியப் பெரு வெள்ளத்தில், பெளத்தத்தை ஆதரித்தவர்களும், பெளத்தர்களும் தமிழ் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட வினோதத்தை வரலாறு பக்தி இயக்க காலமென்று பதிந்து வைத்திருக்கிறது.

பெளத்தர்களின் புனித இடங்களை பறிமுதல் செய்து சைவ அல்லது வைணவத் திருவுருவங்கள் நிறுவி தமிழ்ப் படுத்தினார்கள். பெளத்தர்களது இலக்கியங்களை ‘அனல்வாதம்’ பேசி எரியூட்டினர்; ‘புனல்வாதம்’ பேசி ஆற்றில் எறிந்தனர். சூத்திர நூற்கள் அழிக்கப்பட்டன. பெளத்தர்களால் முன்னிலைப் படுத்தப்பட்ட கைவினைஞர்களும், சூத்திரதாரிகளும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வளவு அநியாயங்களும் நடைபெற்ற காலகட்டத்தை தமிழக் வரலாற்றாசிரியர்கள் ‘மறுமலர்ச்சி காலமாக’ முன்னிலைப்படுத்தினார்கள்.

வரலாற்றில் நடைபெற்றிருந்த இத்தகைய பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் எதிரான வாதமாகவே அயோத்திதாசர் தன்னுடைய ‘தமிழ் பெளத்தம்’ என்ற கருத்தாக்கத்தை முவைக்கிறார். சாதிய சனாதனத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சைவ-வைணவ-வைதீக பிராமண பிரச்சாரங்களுக்கு எதிரான கதையாடலொன்றை மெல்ல மெல்ல கட்டமைக்கத் தொடங்குகிறார். எதைக் காரணமாகச் சொல்லி பெளத்தர்களையும், பெளத்தத்தையும், பெளத்த நூற்களையும் ஏளனப்படுத்தி, குற்றம் சாட்டினார்களோ அதையே தனது ஆயுதமாகக் கொண்டு, பெளத்தத்தை மறுபடியும் தொகுக்கத் தொடங்குகிறார்.

அயோத்திதாசரின் ‘தமிழ் பெளத்தம்’ என்ற சிந்தனை அடிப்படையில் ‘தமிழ்’ மொழிக்கும் பெளத்தத்திற்குமான நெருக்கத்தை விவரிப்பதாகவே ஆரம்பிக்கிறது. பக்தி இயக்க காலகட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது போல் ‘பெளத்தர்கள்’ வடஇந்தியர்களோ, வேற்றுமொழி பேசுகிறவர்களோ இல்லை என்று மறுக்கும் அயோத்திதாசர், இன்றைக்கும் சமூகத்தின் விளிம்புகளில் வாழும்படி நிர்பந்திக்கப்பட்ட பெருவாரியான தமிழர்களே பெளத்தர்கள் என்று பிரகடனப்படுத்துகிறார்.

சாதியின் பெயரால் புறந்தள்ளப்பட்ட தமிழர்கள்; சுத்தத்தின் பெயரால் விரட்டப்பட்ட தமிழர்கள்; விலங்கிலும் கேவலமாக நடத்தப்படுகின்ற தமிழர்கள்; அடிப்படை உரிமைகள்கூட வழங்கப்படாத தமிழர்கள்; தொழிலின் அடிப்படையில் தீண்டத்தகாதவர் என அடையாளபடுத்தபப்ட்ட தமிழர்கள் என்று ஒடுக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களும் பெளத்தர்கள் என்று அறிவிக்கும் அயோத்திதாசர், சமயக் காழ்ப்புணர்வினாலேயே இம்மக்கள் அனைவரும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் பேசத் தொடங்குகிறார்.

கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் பெளத்தர்கள் இன்றளவும். வெளித்தெரியாதபடிக்குத் தங்களது பெளத்த ஞாபகங்களையும். சார்புகளையும் வழிபாடுகளையும் பாதுகாத்து வருகிறார்கள் என்று அறிவிக்கிறார்.

தீண்டத்தகாதவர்கள் அல்லது இழிசினர் என்றெல்லாம் தூற்றப்படும் பெருவாரியான ஒடுக்கப்பட்ட தமிழர்களே தமிழ் இலக்கிய, இலக்கண, கணித, சோதிட, வானியல் நூற்களைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பது போன்ற ஆதாரங்களையும் இதற்காக எடுத்துரைக்கிறார். இதன் அதிகபட்ச வெளிபாடாகவே அவரது ‘தமிழகத்தில் பெளத்தர்கள் அழிந்துவிடவில்லை; வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்’ என்ற பிரகடனம் அமைகிறது”(பக்.73-75)
“பக்தி இயக்க காலகட்டம் தொடங்கி இன்றளவும் சைவ-வைணவக் கூட்டணியினர் செய்து வரும் புரட்டுகளுக்கு எதிரான மாற்று அடையாளமொன்றை அயோத்திதாசர் தனது எழுத்துகளின் மூலம் உருவாக்குகின்றார்.

இந்த மாற்று அடையாளம், சாதீய எதிர்ப்புணர்வைத் தனது மையப்பொருளாகக் கொண்டிருக்கிறது; தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை திருத்தி எழுதும் வேட்கையை வெளிப்படுத்துகிறது; சாதியக் கட்டுமானத்தை விரும்பக்கூடிய சக்திகளின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது; எந்தெந்தக் தளங்களிலெல்லாம் பெயர்களிலெல்லாம் சாதீய மேலாண்மை செயல்படுகிறது என்பதைப் பட்டியலிடுகிறது; பெருவாரியான தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்களை புனருத்தாரணம் செய்கிறது; எவையெவை கட்டுக் கதைகள் - அவற்றின் உள்ளர்த்தம் என்ன - அவை யாருக்குப் பயன்படுகின்றன என்பதை விளக்குகிறது; தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் தளத்தை அடையாளப்படுத்துவதோடு, அதனை அழிக்க முனையும் சக்திகளையும் வெளிப்படுத்துகிறது; சில, மிகச்சிறிய குழுக்களின் சுயநலத்திற்காக வருவிக்கப்பட்ட தமிழ் - சமஸ்கிருத எதிர்மறையின் யதார்த்தத்தை விளக்குகிறது; இத்தகைய பன்முகச் செயல்பாடுகளுடைய மாற்றுத் தமிழ் அடையாளமே ‘தமிழ் பெளத்தம்’ என்றும் அழைக்கப்பட்டது”(பக். 76,77) என விவரிக்கிறார் டி.தருமராசு.

மேற்குறித்த தமிழ்ப் பவுத்த விவரிப்புகளிலிருந்து புலனாகும் அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் என்பது, சாதி பேதமற்ற சமூக சமத்துவத்தையும், சாதியின் பெயரால் பெருவாரியாக ஒடுக்கப்பட்ட தமிழர்களின் இருப்பையும் குரலையும் உள்ளடக்கிய பூர்வக்குடித் தமிழர் அனைவருக்குமான சமத்துவ அரசியலையே வெளிப்படுத்தி இருக்கிறது எனத் தெளியலாம்.

அயோத்திதாசர் தமது அறிவுச் செயல்பாடுகளின் மூலம் முன்னெடுத்திருந்த தமிழர் அடையாள அரசியலானது, திராவிட இயக்கம் முன்னெடுத்த திராவிட அடையாள அரசியலுக்கும், மற்ற அடையாள அரசியலுக்கும் எல்லா வகையிலும் நேர் எதிரான முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய அடையாள அரசியலின் முரண்பாடு காரணமாகத்தான், திராவிட இயக்கங்களும் மற்ற அடையாள அரசியலை முன்னெடுத்த இயக்கங்களும் அவற்றின் மூல கர்த்தாக்களும் வழித்தோன்றல்களும் அயோத்திதாசரைப் பேசு பொருளாக்க மறுத்திருக்கின்றனர்.

ஆக, அயோத்திதாசரை ஒரு நூற்றாண்டு காலம் பேசு பொருளாக முன்னெடுக்காமைக்குக் காரணம், அயோத்திதாசரின் சாதிப் பின்புலம் மட்டுமல்ல; அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலை மறுத்ததும் ஒரு காரணமாகும் எனலாம்.
அயோத்திதாசரின் தமிழ்ப் பெருங்கதையாடல் எல்லா வகையான வேடதாரிக் கதையாடல்களையும் தலைகீழாக்கும் பண்பை அடிநாதமாகக் கொண்டிருந்த ஒரே காரணத்தால்தான், அவரது அறிவுச் செயல்பாடுகள் மற்றவர்களால் பேசு பொருளாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அயோத்திதாசர் முன்னெடுத்த தமிழர் வரைவியலின் முன்மாதிரிகள் :

அயோத்திதாசர் முன்னெடுத்த அறிவுச் செயல்பாடுகள் யாவும் தமிழ், தமிழர், அதிலும் குறிப்பாக, சாதியால்  ஒடுக்கப்பட்ட பெருவாரியான தமிழர்களைப் பற்றியதாகவே இருந்த காரணத்தால், அவர்களின் பூர்வீக வரலாற்றைச் செவ்வியல் மரபுகளில் மட்டும் தேடிக் கொண்டிராமல், பெருவாரியான தமிழர்களின் வழக்காற்று மரபுகளில் / வாய்மொழி மரபுகளில் / பண்பாட்டு மரபுகளில் / நாட்டுப்புற மரபுகளில் காணலாகும் அறிவுச் செயல்பாடுகளைக் கண்டறிந்து, தமிழர் மரபின் அறிவு வரைவியலையும் தமிழர் வரலாற்று வரைவியலையும் உருவாக்கித் தந்திருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தின் மொழி, இனம், நிலம், தொழில், வாழ்வியல், பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட அறிவுச் செயல்பாடுகள் போன்ற யாவற்றைக் குறித்துமான முழுமையான தமிழர் வரைவியலுக்கான முன்மாதிரிகள் அயோத்திதாசரின்  அறிவுச் செயல்பாடுகளில் நிறைந்து கிடக்கின்றன.

அயோத்திதாசரின் தமிழர் வரைவியல் முன்மாதிரிகள், தமிழர் சமூக வரலாற்றைக் கீழிருந்து கட்டியெழுப்பும் நோக்கத்தையும் முறையியலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதாக டி.தருமராசு அடையாளப்படுத்துகிறார். இதைக் குறித்து அவர் கூறுவதாவது:

“அயோத்திதாசரைப் பொறுத்த வரையில் ‘புராணம்’ என்பதற்கு வரலாறு என்றும் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் என்றும் பொருள். இன்றைய காலகட்டதில் நாம் பயன்படுத்துவது போன்ற தொன்மங்கள், புனைவுகள், பழங்கதைகள் என்ற பொருளில் அவர் ‘புராணம்‘ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அதனால் இன்று நாம் கற்பிப்பது போன்று வரலாறும் புராணமும் எதிரும் புதிருமானவை என்று யோசித்தால், அயோத்திதாசரின் நோக்கத்தைத் தவறவிட்டு விடுகிறோம். கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைக்கும்பொழுது அவற்றை பெளத்த மரபு ‘புராணங்கள்’ என்று அழைத்தது என்பதையே அவர் தனது வரையறையாகக் கொள்கிறார்.

புராணங்களையும் வரலாற்றையும் வேறுபடுத்தாத அயோத்திதாசர், புராணங்களிலிருந்து பொய்க்கைதைகளை வேறுபடுத்திக் காட்டுவதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரைப் பொறுத்த வரையில் புராணம் – வரலாறு என்ற எதிர்மறை இல்லையே தவிர மெய்க்கதை – பொய்க்கதை என்ற பாகுபாடு மிக அதிகமாகச் செயல்படுகிறது.

விளக்கெண்ணெயும், விளக்கும் கண்டுபிடித்த வரலாற்றைச் சொல்லும் கார்த்துல தீப விழா புராணம் அவரைப் பொறுத்த வரையில் மெய்க்கதை. அதே கார்த்திகை தீப விழாவிற்கு சைவ சமயம் சொல்லும் ‘சிவன் சோதியாய் மலையில் இறங்கினார்’ என்ற விபரம் பொய்க்கதையும், கட்டுக் கதையும் ஆகும். முதல் வகை விளக்கம் விளக்கின் வரலாற்றைச் சொல்கிறது. ஆனால், சிவன் சோதியான கதை கடவுள் பெயரில் உண்பவர்களின் வயிற்றை நிரப்புகிறது. இது போலவே, தீபவதி ஸ்நானத்திற்கான விளக்கம் மெய்க்கதை, மாவலி வதம் பொய்க்கதை.

புராணங்களை ‘வரலாறு’ என்று விளங்கிக் கொள்ளும் அயோத்திதாசர், தனது ‘பெளத்த பெருங்கதையாடலை’ மாற்றுப் புராணங்கள் என்று சொன்னால் நாம் மாற்று வரலாறு என்றே அர்த்தப்படுத்த வேண்டும். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகள் கழித்து, ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைப் பாதையில் மாற்று வரலாறுகளை உருவாக்குதல் மிகச் சரியான போராட்டக் கருவியாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கையில், அடித்தள மக்கள் வரலாறு என்று நாம் பேசுவதை எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் அயோத்திதாசர் செய்திருக்கிறார் என்பதே அவரது பலம்.
தமிழ் பெளத்தத்தின் விரிந்த பரப்பை, ஒரு மாயக்காரனின் கைலாவகத்தோடு எழுத்தில் பதிவு செய்கிற அயோத்திதாசர். ஒடுக்கப்பட்டோரின் பண்பாடு வரலாற்றையே திருத்தி எழுதுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். வெளிப்பார்வைக்கு பெளத்த சமயத்தை அளவுக்கதிகமாக புகழ்வதாகவும், விரைந்து முடிவுகளுக்கு வருவதாகவும் தோன்றினாலும், அவற்றின் பின்னால் மறைந்திருக்கக்கூடிய பண்பாட்டு அரசியல் அவர் கட்டமைக்கும் வரலாற்றை நியாயப்படுத்தவே செய்கிறது.

தமிழ் பெளத்தர்களின் பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய முற்படும் அயோத்திதாசர், நாம் ஏற்கனவே பார்த்தது போல் நாட்டுப்புற பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும், தெய்வங்களையும், நம்பிக்கைகளையுமே தனது முதன்மை ஆதாரங்களாய்க் கருதுகிறார்.

வாய்மொழி சமூகத்துப் பண்பாட்டுக் கூறுகளான நாட்டுப்புற வழக்காறுகள் மீதான அக்கறை தமிழகத்தைப் பொறுத்த வரையில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வலுப்பெறுகின்றது. அதற்கு முன்பு வரையிலும் மரபான வரலாற்று வரைவியலே நிலவி வந்தது.

ஆனால் இதில் விதிவிலக்காக அயோத்திதாசரிடம் மட்டுமே வாய்மொழிப் பண்பாட்டுக் கூறுகள் மீதான அக்கறையும், மரியாதையும் வெளிபடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வரலாற்றை எழுத வேண்டும் என்ற நோக்கமே அவரை நாட்டுப்புற வழகாறுகள் பக்கமாகத் திருப்பி விட்டிருக்க வேண்டும்”(பக்.91-93).

“நம்பிக்கைகள், கதைகள், புராணங்கள், பூஜைகள், சடங்குகள், கோவில்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், திருவிழாக்கள் என இவை அனைத்தையும் இணைத்தே நாம் ‘பண்பாடு’ என்று சொல்லிக் கொள்கிறோம். இந்தப் பண்பாடே பல சமயங்களில் நம்மைத் தீர்மானிக்கும் வேலையைச் செய்கிறது. எனவே, அன்றாட வாழ்க்கை என்றும், பண்பாட்டு நிகழ்வுகள் என்றும், சமயச் செயல்பாடுகள் என்றும் சொல்லப்படுபவை அனைத்தும் ஒரே விஷயங்கள் தாம். சமயம் தொடர்பான அயோத்திதாசரின் இரண்டாவது வகை எழுத்துகள் இவை போன்ற பண்பாட்டுக் கூறுகள் பற்றியவையே.

சமயத்திற்கும் வாழ்க்கைக்குமான நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தும் உச்சகட்ட உதாரணம் திருவிழா அல்லது பண்டிகை. ‘திருவிழா’ என்றும் ‘பண்டியல்’ என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இத்தகைய நிகழ்வுகள் குறித்த அயோத்திதாசரின் எழுத்துகள் நமக்கு ஏராளமாய்க் கிடைத்துள்ளன. அம்மனுக்கு எடுக்கப்படும் ஊர்த்திருவிழா, கார்த்திகைத் தீபத் திருவிழா. தீபாவளி, சங்கராந்தி, காமன் பண்டிகை போன்றவைகள் குறித்த நீண்ட கட்டுரைகள் ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைந்துள்ளன”(பக். 80)

“மரபாகச் சொல்லப்பட்டு வரும் விளக்கங்களை முற்றிலும் மறுப்பதாக அமைகின்றன அயோத்திதாசரின் விளக்கங்கள். ஏறக்குறைய அவரது எல்லா விளக்கங்களும் ஏற்கனவே சொல்லப்பட்டு வருபவைகளுக்கு தலைகீழாக அமைந்துள்ளன. இத்தலைகீழ் விளக்கங்களை பொத்தாம் பொதுவாய் சொல்லிப் போகாமல் ஆதாரபூர்வமாய் நிறுவவும் செய்கின்றார். பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூற்கள், நிகண்டுகள், பழமொழிகள், பழஞ்சொற்கள் என ஒரு பரந்த தளத்திலிருந்து தனது வாதத்திற்கான ஆதாரங்களை அவர் எடுத்து வருகின்றார்.

வெவ்வேறு தரப்புகளிலிருந்து இவ்வாறு அவர் ஆதாரங்களை முன்வைக்கும் செயல்பாடு இன்றைய தமிழ்ச் சூழலில் காணப்படாத ஒன்று. மேலும் இவ்வாறு முன் வைக்கப்படும் ஆதாரங்களுக்கிடையேயும் அதைச் சார்ந்த தனது விளக்கங்களுக்கிடையேயும் அறுபட்டுவிடாத தர்க்கமொன்றையும் தனது கட்டுரைகளில் கட்டமைத்துக் கொள்கிறார். ஆதாரங்கள், விளக்கங்கள், தர்க்கம் என்ற மூன்றும் பின்னிப் பிணைந்ததாகவே அவரது கட்டுரைகள் அமைந்துள்ளன”(பக். 80,81) என்கிறார் டி.தருமராசு.

பொதுவாக, இங்கிருக்கும் ஒவ்வோர் பண்பாட்டு அசைவுகளுக்கும், ஆரிய பிராமண வைதீகப் பண்பாட்டு மரபுகளுக்கும் நேர் எதிரான முரணும் பகையும் காலங்காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது. ஆரிய பிராமணியத்தோடும் அதன் வைதீக மரபுகளோடும் எவ்வகையிலும் உறவும் ஈடுபாடும் இல்லாத பண்பாடுக் கூறுகளே தமிழரின் பண்பாட்டு மரபில் இருக்கின்றன.

தமிழர் மரபு சார்ந்தும் நாட்டுப்புற வழக்கு சார்ந்தும் நிலவுகிற பண்பாட்டு உணர்வுகளையும், அவற்றைச் சமயப் பண்பாட்டு அடையாளமாக வெளிப்படுத்துகிற மனிதர்களையும், அவர்களின் பண்பாட்டு நடத்தைகளையும், அவை சார்ந்து புலப்படுத்தப்படும் அறிவுச் செயல்பாடுகளையும் பிராமணியத்திலிருந்து பிரித்தறிந்து, பிராமணியமயமாக்கலிலிருந்து தமிழ் / தமிழர் மரபுகளை மீட்டெடுக்கும் நோக்கிலேயே அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

பிராமணிய மரபுகளிலிருந்து தமிழர் மரபுகளை வேறுபடுத்திப் பார்க்கும் கற்கை நெறிகளையும் அயோத்திதாசரே முன்வைத்திருக்கிறார். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலேயே பிராமணிய மரபு வடிவங்களைப் போலவே, இங்குள்ள தமிழர் மரபு வடிவங்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பதும் அணுகுவதும் விமர்சிப்பதும்தான் பிராமண எதிர்ப்பு / பகுத்தறிவுவாதம் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பிராமணிய வைதீகத்தின் எதிர் மரபாகிய தமிழரின்  மரபுகளையெல்லாம் பிராமணிய வைதீகச் சாயம் பூசி, அவற்றையெல்லாம் பிராமணிய வைதீகத்தின் பக்கம் தள்ளிவிடுகிற / அதுவாகக் கூட்டியும் காட்டியும் செய்கிற போக்கைத்தான் கொச்சைப் பொருள்முதல்வாதப் பகுத்தறிவு வாதங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அதாவது, இங்குள்ள தமிழரின் மரபுகளை ஆரிய வைதீக பிராமணியம் தன்வயப்படுத்தியும் சமக்கிருதமயப்படுத்தியும் வருகின்ற சூழல் ஒருபுறம் இருக்க, தமிழர் மரபுகளையெல்லாம் பிராமணிய மரபுகளைப் போல பகுத்தறிவு அற்றவை; ஆபாசம் நிறைந்தவை; பிற்போக்கானவை; இழிவானவை; வெறுக்கத்தக்கவை எனக் கொச்சையாக எடுத்துரைத்தும் அடையாளப்படுத்தியும் வருவதன் மூலம், அவற்றையும் ஆரிய பிராமணிய வைதீகச் சாயம் பூசுவதும் மறுபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னதை ஆன்மீகம் எனும் பேரில் ஆரியம் செய்கிறது. பின்னதைப் பகுத்தறிவு எனும் பேரில் நடக்கிறது.
இவ்விரண்டு போக்குகளுமே தமிழர்  மரபுகளுக்கு ஆரிய பிராமணிய வைதீகச் சாயம் பூசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. மேற்குறித்த இருவகைப் போக்குகளிலிருந்தும் வேறுபட்டதான அறிவுக் கண்ணோட்டமே அயோத்திதாசருடையதாகும். அது, பிராமணியத்தை எதிர்க்கும் தமிழர் மரபுகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கம் கொண்டதாகும்.

அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகளும் அவற்றின் அடையாள அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் செயல்பாடுகளுக்கு உகந்த கருத்தியல் உருக்களையும் முன்மாதிரிகளையும் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியலின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்திருக்கும் அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகளே தமிழ்த் தேசியத்தின் முழுமையான அரசியலாகக் கொள்வதிலும் போதாமைகள் இருக்க வாய்ப்புண்டு. அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகளையும் மறு வாசிப்புக்கு உட்படுத்துவதும் வேண்டும். அயோத்திதாசரைப் பேசு பொருளாக முன்னெடுப்பதன் மூலமே அயோத்திதாசரை மறுவாசிப்பு செய்திட முடியும். அயோத்திதாசரைப் பேசு பொருளாக்கி மறுவாசிப்பு செய்யும்போதே தமிழ்த் தேசிய அரசியலும் முழுமைபெற இயலும்.

அந்தவகையில், அயோத்திதாசரது தமிழர் அடையாள அரசியலை ‘நான் பூர்வ பௌத்தன்’ எனும் அத்தியாயத்தில் பேசு பொருளாக்கியதோடு, ‘இது பௌத்த நிலம்’, ‘பூர்வ பௌத்தனின் கல்லறை’ ஆகிய அத்தியாயங்களின் வழியாக அயோத்திதாசரை மறுவாசிப்புக்கும் உள்ளாக்கிப் பேசு பொருளாக வெளிவந்திருக்கிறது டி.தருமராசின் ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ எனும் நூல்.

ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பிராமணிய எதிர்ப்பை மய்யப்படுத்தி நிலவுகிற திராவிட அரசியலைக் காட்டிலும், அயோத்திதாசரது அறிவுச் செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டியதன் அரசியல் சமூகத் தேவை என்ன?

“பார்ப்பனர் எதிர்ப்பில் அயோத்திதாசரும் பெரியாரும் எதிரெதிர் புள்ளிகளில் தான் நிற்கிறார்கள். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, சமகாலத்தை மட்டுமே மையமிட்டது. இன்றைக்கு அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் அதிகாரங்களையும் வளங்களையும் கேள்வி கேட்பது அவரது வேலையாக இருந்தது. இந்த சமகால விமர்சனத்திற்காக, அவர்கள் வரலாறு நெடுகிலும் எத்தனை கீழ்த்தரமானக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்று வாதிட்டார்.

அதாவது, பெரியாரைப் பொறுத்தவரையில் வரலாறு ஆற்றொழுக்கு போன்றது. நேர்கோட்டில் இயங்குவது. ஒரே முரண்பாட்டைக் கொண்டது. கடவுளைக் காட்டி வரலாறு நெடுகிலும் இந்த பிராமணர்களை நம் மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதே இந்த விமர்சனம். இதனால், சமகாலத்தில் அப்பிராமணர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிறார் பெரியார். தண்டனை என்றால், அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைமாற்றுவது. திராவிட இயக்கம் மூலம் அது சாத்தியமானது என்பதே திராவிடர்களின் வெற்றி வரலாறு.

ஆனால், அப்படி அதிகாரம் கைமாறிவிட்டதா என்ற கேள்வியிலிருந்து தான் நாம் ஆரம்பிக்கிறோம். அதிகாரம் கைமாறவில்லை. இன்னமும் பிராமணர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழல் ஏன் ஏற்பட்டது என்றே நாம் கேட்க ஆரம்பிக்கிறோம். இவ்வளவு காட்டமான எதிர்ப்பின் பின்னும் அந்த சமூகம் அதிகாரத்திலேயே அமர்ந்திருப்பதன் சூட்சுமம் என்ன என்று கேட்கிறோம்.

இப்பொழுதே, பெரியாரின் அணுகுமுறை சரியானது தானா என்று நாம் மறுவிசாரணை செய்ய ஆரம்பிக்கிறோம். சமகால பிராமண மேலாண்மையை அழிப்பதற்காக, வரலாற்றை நாம் கற்பனை செய்த முறை தவறோ என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கிறோம். வரலாறு எப்படி இவ்வளவு துல்லியமாக நேர்க்கோட்டில் பயணிக்க முடியும் என்று கேட்கிறோம்? வரலாறு நெடுகிலும் ஒரு சமூகக் குழு ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படி ஏமாற்றி வந்திருக்க முடியும் என்று கேட்கிறோம்? அந்த சமூகம் அப்படியென்ன அதிமனித சமூகமா என்று வினா எழுப்புகிறோம்? இப்பொழுதே பெரியார் பிராமணர்கள் குறித்து வரைந்த சித்திரம் தவறானது என்று நமக்கு விளங்குகிறது. பிராமண வல்லாண்மையை நிரூபிக்க வேண்டி நம்மையெல்லாம் கோழைகளாகவும் முட்டாளாகவும் சித்தரித்ததை எதிர்க்கிறோம்.

இப்பொழுதே, அயோத்திதாசர் நமக்குத் துணை செய்ய ஆரம்பிகிக்கிறார். பிராமணர்களின் மேலாண்மை ஒரு சூழ்ச்சியின் மூலம் நடந்தது என்பதை அவர் விவரிக்கிறார். அவர் சொல்லும் வரலாறு, நேர்க்கோட்டில் இல்லாது, பல கோணல் மாணல்களுடன் இருக்கிறது. அந்த வரலாற்றில் நாமே அறிவாளிகளாக இருக்கிறோம். அம்பேத்கர் கருதுவது போல ஆணாதிக்கப் பாலுணர்வு தான் சாதித் தோற்றத்தின் அடிப்படை என்று அயோத்திதாசர் கருதவில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்க முடியும் என்று அவர் கருதுகிறார். சொல்லப்போனால், அயோத்திதாசரின் வரலாறு இன்னமும் கூடுதல் அறிவியல்பூர்வத்துடன் உள்ளது.

பெரியாரின் காலம் ஒரு அருமையான சந்தர்ப்பமாக இருந்தது. அதாவது, நவீன இந்தியாவை வடிவமைக்கு தருணம் ஒரு நல்ல சந்தர்ப்பம். அப்பொழுது தான் இந்த தேசத்தின் அடையாளத்தை நாம் முன்மொழியத் தொடங்குகிறோம். பெரியாருக்கும் முன்னால் காலனிய சிந்தனையாளர்களே நவீன இந்தியாவின் பாரம்பரியத்தை வடிவமைத்தவர்கள். அவர்களது பிராமணச் சித்திரத்தையே பெரியார் சுவீகாரம் செய்து கொள்கிறார். சமஸ்கிருத மொழி, பிராமணக் கலை வடிவங்கள் என்று இங்கிருக்கும் அத்தனையும் பிராமணமயமானது என்று நம்ப வைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அதைப் பெரியாரும் நம்பினார்.

அந்த நேரத்தில் அதை எதிர்த்துக் குரல எழுப்பும் வாய்ப்பை நாம் தவறவிட்டு விட்டோம். அதனால் இங்கிருக்கிற அனைத்தும் பிராமணர்களுடையது என்று தொடர்ந்து நம்பப்படுகிறது. தமிழகம் அவர்களைப் புறக்கணித்தாலும் இந்தியா அவர்களைப் பாதுகாக்கும் அமைப்பாகத் தொடர முடிகிறது.

அயோத்திதாசரிடம் இதற்கு மாற்றான, அதாவது அபிராமணிய, அகாலனிய சிந்தனையொன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அது, வரலாற்றின் படிப்பினைகளிலிருந்து புதிய தேசத்தைக் கற்பனை செய்யச் சொல்கிறது. அது, எல்லா அதிகார, வள மையங்களையும் எல்லோருக்கும் சரிசமமாகத் திறந்து விடச் சொல்கிறது” (டி.தருமராஜ் ஆய்வுகள் வாசகர் வட்ட முகநூல் பதிவு 11.06.2020) என, அயோத்திதாசரைப் பேசு பொருளாக்குவதன் சமூகத் தேவையை டி.தருமராசு எடுத்துரைக்கிறார்.

நூலாசிரியர் டி.தருமராசு குறிப்பிட்டதைப்போல, தமிழ்ச் சமூக விடுதலைக்கான புதிய அரசியல் பாதைக்கான அறிவுலகம் அயோத்திதாசரிடமே இருக்கிறது. எந்தவோர் அரசியலாக இருந்தாலும், ஒவ்வோர் அரசியலும் சமூகத் தேவை கருதி சுய பரிசீலனையும் மறு பரிசீலனையுமான மறுவாசிப்பை நிகழ்த்தும்போதே அதன் நேர்மையான அரசியல் பலப்படும்.
தமிழ்த் தேசிய அரசியலாக இருந்தாலும், திராவிட அரசியலாக இருந்தாலும், பிராமணிய எதிர்ப்பு அரசியலாக இருந்தாலும், அவையாவும் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அத்தகைய மறு வாசிப்புக்கு அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகளே பெருந்துணை புரியும்.

இந்நிலையில்தான், அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் உள்நுழையவுமான அறிவுலகத் திறவு நூலாக வெளிவந்திருக்கிறது டி.தருமராசின் ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ எனும் நூல். இதைத் தமிழ்ச் சமூகம் பேசு பொருளாக்குவதே நேர்மையான அறிவுச் செயல்பாடாகும்.

பார்வை நூல்கள் :

1. அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை, டி.தர்மராஜ், கிழக்கு வெளியீடு, 2019, முதல் பதிப்பு.
2. நான் ஏன் தலித்தும் அல்ல, டி.தருமராஜ், கிழக்கு வெளியீடு, 2016, முதல் பதிப்பு.
3. அயோத்திதாசர் சிந்தனைகள், 3 தொகுதிகள், ஞான.அலாய்சியஸ் (தொ.ஆ), நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியீடு, 2011, இரண்டாம் பதிப்பு.
4. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 2, வே.ஆனைமுத்து (ப.ஆ), பெரியார் ஈ.வெ.இராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியீடு, 2009, இரண்டாம் பதிப்பு.
5. பெரியார் சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.ராஜதுரை வ.கீதா, விடியல் பதிப்பகம், 1996, முதல் பதிப்பு.
6. மண்ணுரிமை, முதற்பகுதி, குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, 2000, முதல் பதிப்பு.
7. திராவிடத்தால் வீழ்ந்தோம், குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, 1994, முதல் பதிப்பு.
8. தமிழின மீட்சி: ஒரு வரலாற்றுப் பார்வை, குணா, பஃறுளி பதிப்பகம், 1992, இரண்டாம் பதிப்பு.
9. அடித்தள மக்கள் வரலாறு, ஆ.சிவசுப்பிரமணியன், என்சிபிஎச் வெளியீடு, 2018, இரண்டாம் பதிப்பு.
10. திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா, பெ.மணியரசன், பன்மை வெளி வெளியீடு, 2016, முதல் பதிப்பு.
11. கலகக்காரர் தோழர் பெரியார், மு.இராமசுவாமி, ருத்ரா பதிப்பகம், 2004, முதல் பதிப்பு.
12. பெரியார் இன்றும் என்றும்: பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், விடியல் பதிப்பகம், 2019, ஏழாம் பதிப்பு.

வலைத்தளக் கட்டுரைகள் :

1.   https://www.bbc.com/tamil/india-39766644
2. https://tamil.oneindia.com/books/literature/nhm-dravida-iyakka-varalaru/chapter-2.html
3 https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
4. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
5. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
6. http://www.puthiyathalaimurai.com/newsview/47925/Pandit-C-Ayodhya-Dasar---Ravikumar
7. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக