அண்மையில், மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் ஏகனாத மடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழங்காலத் தமிழ் எழுத்துமுறையான தமிழியில் 'ஏகன் ஆதன் கோட்டம்' எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டும், பிற்காலப் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வட்டெழுத்து முறையிலான தமிழ்க் கல்வெட்டும் தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளன. தமிழி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் உள்ள ஆதன் எனும் பெயர் பழங்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த தமிழ்க்குடியைச் சார்ந்த ஓர் ஆளுமையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆதன் எனும் பெயர் பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பழந்தமிழரின் திணை மரபை ஆவணப்படுத்தியிருக்கும் சங்ககால இலக்கியங்களுள் ஒன்று ஐங்குறுநூறு என்னும் தொகை நூலாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார் ஆவார். இவர் பாடிய பாடல்களுள் முதலாவதாக அமைந்திருப்பது
வேட்கைப் பத்து ஆகும்.இதில் உள்ள பத்துப் பாடல்களும் 'வாழி ஆதன் வாழி அவனி' என்று தொடங்குகின்றன. இது தன் நாட்டு அரசனை வாழ்த்தும் பகுதி.
அடுத்த இரண்டாவது அடியில் தலைவி தன் விருப்பத்தைத் (வேட்கையைத்) தெரிவிக்கிறாள். இவற்றுள் பொதுநல வேட்கையும் தன்னல வேட்கையும் புலப்படுத்தப்படுகிறது. அவ்வேட்கை வருமாறு:
பொதுநல வேட்கை:
• நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
• விளைக வயலை! வருக இரவலர்!
• பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
• பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
• பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
• வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!
• அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
• அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
• நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
• மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
தன்னல வேட்கை :
• ஊரன் வாழ்க! பாணன் வாழ்க!
• ஊரன் கேணமை வழிவழி சிறக்க!
• ஊரன் என்மனை வாழ்க்கை பொலிக!
• ஊரன் மார்பு பழவயல் போல் எனக்குப் பயன்படட்டும்.
• ஊரன் தேர் வாயில் கடையில் நிற்கட்டும்.
• ஊரன் என்னைத் திருமணம் செய்துகொள்ளட்டும்! என் தந்தையும் என்னை அவனுக்குக் கொடுக்கட்டும்!
• ஊரன் அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் செல்லட்டும்!
• ஊரன் செய்த செய்த சூளுரை(சத்தியம்) பலிக்கட்டும்!
• ஊரனோடு எனக்குள்ள நட்பை ஊரெல்லாம் பேசட்டும்!
• ஊரன் என்னைக் கொண்டு செல்லட்டும்!
என, ஐங்குறுநூற்று மருதத்திணை ஆதன் என்பாரை முதன்மைப்படுத்தி இருக்கிறது. அப்பாடல்கள் புலப்படுத்திய பொதுநல வேட்கையையும், கிண்ணிமங்கலத்தில் 'ஏகன் ஆதன் கோட்டம்' காலங்காலமாய் இன்றுவரையிலும் முன்னெடுத்து வந்திருக்கிற பொதுநல வேட்கையையும் இணைவுபடுத்திப் பார்க்கும்போது, மருதத்திணை ஆதனுக்கும் கிண்ணிமங்கல ஆதனுக்கும் ஏதோ ஒருவகையில் பண்பாட்டு வரலாற்றுத் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கிறது.
தொல்லியல் தரவுகளையும் இலக்கியத் தரவுகளையும் வரலாற்றுத் தரவுகளையும் பண்பாட்டு வழக்காற்றுத் தரவுகளையும் இணைவித்து ஒருங்கே ஆய்வு செய்கிறபோதுதான் ஆதனைப் பற்றியும் ஆதன் கோட்டத்தைப் பற்றியும் இன்னும் நிறைய வரலாற்றுப் பக்கங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது; தமிழரின் வரலாறு முழுமையாகவும் வாய்ப்பிருக்கிறது.
ஏர் மகாராசன்
08.07.2020.
ஒளிப்படக் குறிப்புகள்:
*பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துத் தமிழ்க் கல்வெட்டு.
*ஏகன் ஆதன் கோட்டம் எனப் பொறிக்கப்பட்ட பழங்காலத் தமிழிக் கல்வெட்டு.
*வட்டெழுத்துக் கல்வெட்டு.
ஒளிப்படங்கள் உதவி:
இரா.சிவக்குமார், ஊடகவியலாளர்.
மிக மிக. அருமையான வரலாற்று பதிவு வாழ்த்துகள்.!
பதிலளிநீக்குசிறப்பான ஆய்வு
பதிலளிநீக்கு