ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

வேளாண் மக்கள் ஆய்வுகள் (Agrarian Studies) முன்னெடுப்பு: மகாராசன்.

நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைய உயிரை உருவாக்க முடியும் என்று கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும்.

ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள்.  அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் என்று படர்ந்து விரிந்தது.  தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு.  எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும் தொடர்புகள் உண்டு.  அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன.

வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும்.  சொல்லப்போனால், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில தமிழ்ச் சிந்தனையை நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது.  அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். 
அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது. 

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும் ஆய்வுகளும் படைப்புகளும் கலைகளும் மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது.

காலங்காலமாகவே, ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத்தொழிலும் அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர்.

எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற, சுரண்டப்படுகிற, ஒடுக்கப்படுகிற, இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள், கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள், அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை.

இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை, வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண்மை மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies)
எனும் பேரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றன. தமிழ்ச் சமூகத்தில்தான் வேளாண்மை குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கிறது.

வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies)
முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பேரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும்.

பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பேரில் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான் வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism)
எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும்.

அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies)
முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர்.

'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies)
எனும் இச்செயல்பாடுகளில் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து கொள்ளலாம்.

மக்கள் தமிழ் ஆய்வரண் உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளின் வழியே வேளாண் மக்கள் ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக இணைவோரும் இணையலாம்.

இன்றைய கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுச் சூழலில், நிலமும் நீரும் காற்றும் மட்டுமல்ல, சக மனிதருமேகூட நஞ்சு என்று கருதுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  முற்றிலும் புதிய வாழ்க்கையொன்றிற்கு வலுக்கட்டாயமாகப் பழக்கப்படுத்தப்படுகிறோம்.  இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே வேளாண் மக்கள் ஆய்வுகளின் இப்போதைய மய்யப்பொருள். 

இன்றைய சமூகம் கொண்டு வரும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது?  நமது நிலப்பரப்பை மாற்றியமைக்கப் போகிறோமா?  சமூகக் கட்டுமானங்கள் உருக்குலையத் தொடங்குகின்றனவா?  கலை வடிவங்கள் திரியத் தொடங்குகின்றனவா?  அறம், புதிய விளக்கங்களுக்கு உட்படுகிறதா?  ஒழுக்க வரையறைகளை மறுபரிசீலனை செய்கிறோமா?  அரசு, அதிகாரம், அறிவு போன்றவை எவ்வாறு உருமாற்றம் அடைகின்றன?  இத்தனைக்கும் நடுவில் பெரும்பான்மை வேளாண் மக்களின் நிலை என்னவாகப் போகிறது? என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ‘வேளாண் மக்கள் ஆய்வுகள்’ வழியாக உரையாடலைத் தொடங்க இருக்கிறது மக்கள் தமிழ் ஆய்வரண்.

இணைவோம்.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
30.06.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக