செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

முல்லைக்குத் தேர் ஈந்ததைத் திரும்ப எழுதுதல்: மகாராசன்

வெக்கையில் காய்ந்தும் விரிப்போடியும் கிடந்த நிலமெல்லாம், குளிரக் குளிரப் பெய்த மழையால் பசப்புமேனிப் பூப்பெய்திக் கிடந்தது. காடெல்லாம் கம்மென்று மணத்துப் பரவியது. கடுக்கை, தோன்றி, இல், எள், துவரை, அவரை, குல்லை, முல்லைச் செடிகொடிகள் சூல்பிடித்து ஈனுகையில், வனத்தில் வானம் முட்ட எழுந்திருந்த மரங்களின் நிழல், வெயில் முகத்தான் பார்த்திடாதபடி மறைத்துக்கொண்டிருந்தது.

காட்டு வனத்தாள் நாள்தோறும் வகைவகையாய் ஈன்று கொண்டிருந்தாள். பிள்ளைத் தாய்ச்சியாய்த் தனித்திருந்த காட்டுவனத்தாள் சில்லெனக் கோதி இருந்தாள். சிலிர்த்திருக்கும் புற்கள், பூத்துக் குலுங்கும் செடிகள், காய்த்துத் தொங்கும் மரங்கள் தோரணங்களாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன.

சலசலவெனக் கேட்கும் காட்டாறும், பூச்சிகளும் பறவைகளும் இசைக் கோலத்தை வனத்தின் பக்கமெங்கும் வரைந்து கொண்டிருந்தன.

கோல், கொடி, கோட்டை, அரண், வாயில் என நாட்டுக்குள் அரசாளும்
மன்னவனாக இருந்தாலும், சூரியன் கூட உள்புக முடியாத பச்சை மரகதக் கோட்டையாம் காட்டுக்குள் நுழைந்து விட்டால் அவனும் ஒரு பிள்ளைதான் வனத்தாளுக்கு.

வளமேறிய காட்டின் அழகையெல்லாம் அவ்வப்போது பார்த்துவிட்டுத்தான் வருவான் அவன். போரும் பகையுமாய்க் கிடந்ததால், கொஞ்ச நாளாய்க் காட்டுக்குள் போய்வர முடியாமல் போயிற்று.

போர்க் காயங்கள் ஆறிக்கொண்டிருந்த நிலையில், மனதில் உரசிய சிராய்ப்புக் காயங்கள் மட்டும் இன்னும் ஆறிய பாடில்லை. கோட்டைக்குள்ளிருக்கும் பொழுதுகள் புழுத்துப்போயின.

எங்காவது போய் வரவேண்டும் என உள்மனம் கெஞ்சிக்கொண்டே இருந்தது. பிள்ளைகள் இருவரையும் அழைத்துப்போகலாம் என நினைத்தவன், சட்டென்று கிளம்பி முற்றத்துக்கு வந்தான்.

வயதொத்த பிள்ளைகளோடு பாண்டியம் விளையாடிக் கொண்டிருந்தனர். சில்லுகளைக் கட்டங்களில் போட்டு நொண்டி அடித்துத் தாண்டி விளையாடிய மகள்களின் குதூகலத்தைக் குலைத்துப்போட மனமில்லாமல் தேர் அருகே வந்து நின்றான்.

கொள்ளு தின்று முடித்திருந்த குதிரைகளை இழுத்து வந்து தேரில் பூட்டிக்கொண்டிருந்தான். தேர்ப்பாகன் பதைபதைத்து அருகே ஓடிவந்தான். தான் மட்டுமே தேரில் போய் வருகிறேன் ஓய்வெடு என்று பாகனிடம் சொல்லிவிட்டு, எட்டியிருக்கும் காடு நோக்கிப் புறப்பட்டான்.

வெளியூர் போயிருந்த தன் மகன், வீடு நோக்கி வருகையில் மனதெல்லாம் பூரிப்பாகி உச்சி முகரும் தாய்ச்சிகள் போலவே, காட்டுக்குள் நுழைந்த அவனுக்கு வனத்தாய்ச்சியின் காட்டு மணம் நாசிக்குள் நுழைந்து மனதை முத்தமிட்டு வந்தது.

வெக்கையில் காய்ந்து காயம்பட்டுக் கிடந்த காட்டுக்கு, மழையாள் வந்து மருந்திட்டுப் போயிருக்கிறாள். காட்டின் காயங்கள் ஆறிப்போனதும், பசுந்தோல் படர்ந்து விரிந்ததும், செடிகொடிகளும் பூக்களுமாகப் பயிர்க்கால்கள் முளைத்து எழுந்ததும் பார்த்த அவனின் மனக்காயங்களும் மெல்ல ஆறத் தொடங்கின.

வெறுங்கால்களில் நடக்கையில் பாசிப்புற்களின் ஈரக் கோதல் பாதங்களைச் சிலிர்க்கச் செய்தன. வனப் பூக்களின் மணத்தையெல்லாம் மூச்சிழுத்து மனக்காயத்திற்குத் தடவிக் கொடுத்தான். ஒவ்வொரு பூஞ்செடிகளின் இலைகளையும் இதழ்களையும் தடவித் தடவி அழகையெல்லாம் கண்ணுக்குள் சொருகி மனதுக்குள் நீவிக்கொண்டிருந்தான். வெகுநாளைக்குப் பிறகு இன்று புதிதாய்ப் பிறந்தது போலவும் உணர்ந்தான். அவனது மனமும் உடலும் அறிவும் சிலிர்ப்படைந்திருந்தன.

உச்சிப்பொழுது மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் நினைப்பும் வந்துவிட்டது. வந்த தடம் பிடித்து அதன் வழியே திரும்பிக் கொண்டிருந்தான். எல்லாச் செடிகொடிகளும் துணையாகவும் இணையாவும் பிணையாகவும் இருந்து கொண்டிருந்த தோழமை அழகை மனதால் அள்ளிப் பருகியபடி காட்டிலிருந்து காலாற நடந்தபடி தேர் அருகே வந்து சேர்ந்தான்.

நிறுத்தியிருந்த தேரின் அருகே ஒரு முல்லைக் கொடியானது, பற்றிப் படர்வதற்குப் பற்றுக் கம்பு இல்லாது காற்றில் அல்லாடிக் கொண்டிந்தது.

காட்டின் அடையாளமும் காதல் இருந்தலின் அடையாளமும் இந்த முல்லைதானே.

முல்லை அல்லாடுவது இவன் மனம் அல்லாடுவது போலவே இருந்தது. அது அல்லாடாமல் தாங்கி நிற்க ஏதாவது செய்திட வேண்டும் என நினைத்தான். அது பற்றிப் படர்வதற்குக் காய்ந்து முறிந்து போன சிறு சிறு சுள்ளிகளைக் கொண்டும் குச்சிகளைக் கொண்டும் பந்தல் போன்ற படர் அமைத்தான். அந்தப் படரில் கொடியை ஏறவிட்டான். இனி முல்லை அல்லாடாது. அதுபற்றிப் படர்ந்து சிம்படித்துப் பூத்துக் குலுங்கும் என்ற குதூகலப் பூ அவன் மனதுக்குள்ளும் மணத்தது.

தேர் மேல் ஏறிப் புறப்பட நினைத்தவன், முல்லைப் படரைத் திரும்பப் பார்த்தான். முல்லைக் கொடிக்கு அவன் அமைத்திருந்த அந்தப் பந்தல் படரே தேர் போன்ற தோற்றத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது.

ஓட்டி வந்த அவனது தேர் உயிரில்லாமல் இருப்பதையும், அவன் அமைத்திருந்த  பந்தல் படர் உயிர் படர்ந்து சிரித்திருப்பதையும் பார்த்த அவன், ஓட்டி வந்த தேரை இழுத்து வந்து, படர் அருகே நிறுத்தியும் விட்டான்.

இந்தத் தேரும் இந்த முல்லைக்கொடியால் படர்ந்து உயிர்பெறட்டும் என உள்ளுக்குள் நினைத்தபடி, குதிரைகளை அவிழ்த்துக்கொண்டு காலாற ஊர்நோக்கி நடந்து வந்தான்.

வருகின்ற வழியிலெல்லாம் படர்வதற்கு அல்லாடும் முல்லைக்கொடிகள் கண்ணில் படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். எது எது அப்படிக் கண்ணில் படுகிறதோ அவற்றுக்கெல்லாம் படர் அமைக்கச் சொல்லவேண்டும் என்று குறித்தபடி அரண்மனை வந்து சேர்ந்தான்.

தேரில்லாமல் வெறும் குதிரைகளுடன் மட்டுமே திரும்பிவந்த அப்பனிடம் மகள்கள் இருவரும் அக்கறையாய் ஓடிப்போய் என்ன ஏதுவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இருவரையும் கக்கத்தில் அணைத்தபடி முல்லைக்கொடித் தேர்ப் படரைப் பற்றி கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்பனின் தேரையும் முல்லையின் தேரையும், அப்பனின் தேரானது முல்லைக்குத் தேரானதையும் பார்க்க வேண்டும் என மகள்கள் இருவரும் அப்பனிடம் இரவு முழுக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலை விடிவதற்குள் கண்கள் விழித்துக் கிடந்தனர் மகள்கள்.
மகள்களை இன்னொரு தேரில் அழைத்துக்கொண்டு போனான்.

முல்லைப் படரையும் தேரில் படர்ந்திருந்த முல்லைக் கொடியையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே  முல்லையோடு எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்தத் தேரையும் இங்கு நிறுத்திவிட்டுப் போவோமா எனப் பிள்ளைகள் கேட்க, இப்போதைக்கு இதற்கு இது போதும் மகள்களே! இன்னொரு தேரும் இதற்கு வேண்டாம் மகள்களே! இதையும் கொடுத்துவிட்டால் தேர்ப்பாகன் நமை வைதுவிடுவான் என மெல்லச் சிரித்துக்கொண்டான்.

முல்லை அல்லாடாமல் தேர் அமைத்த அப்பனின் அந்த அக்கறை உணர்வு அன்றிலிருந்து மகள்களுக்கும் வந்துவிட்டது. காட்டில் மட்டுமல்ல, அரண்மனை வீட்டு முற்றத்திலும் ஒரு முல்லைச் செடியை நட்டுவைத்து, அம்முல்லைக் கொடி சிம்படித்துப் படர முயலும்போது குச்சிகளால் படர் அமைத்தனர் பெண் பிள்ளைகள். அந்தப் படரும் பார்ப்பதற்குத் தேர் போலவே இருந்தது. முல்லைக்கு அப்பன் மட்டுமல்ல; பிள்ளைகளும் தேர் ஈந்தனர்.

அன்றிலிருந்து, முல்லைகள் படர்ந்த அந்தக்காடும், காட்டின் மகுடமான அந்தப் பறம்புமலையும் பெண்பிள்ளைகளின் தோழிகளாயிற்று. விழிகள் பார்த்த பறம்புமலை, பெண் பிள்ளைகளின் மொழியிலும் பரவிக் கிடந்தது.

முந்நூறு ஊர்கள் சூழ்ந்திருந்த பறம்புமலை நாட்டின் இயற்கை வளங்கள் மீது பேரரசுகளின் கண்கள் குறி பார்த்துக்கொண்டே இருந்தன.

தங்களுக்குள் மோதிக்கொண்ட பேரரசுகள் பறம்புமலைநாட்டின் மீது போர்தொடுக்கும்போது மட்டும் கூட்டாகச் சேர்ந்து கொண்டன. ஈழத்தில் கொத்துக்கொத்தாய்க் கொன்றழிக்கக் கூட்டுச் சேர்ந்தாற்போல், பறம்புமலை வளங்களைச் சூறையாட மூவேந்தப் படைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து பறம்புமலையைத் தாக்க முனைந்தன.

தன் குடிகளையும் நிலத்தையும் பறம்புமலையையும் காக்கத் தம்மால் முடிந்தளவு போராடிப் பார்த்தான் பறம்புமலைத் தலைமகன். ஆனாலும், போர்க்களத்தில் தானும் ஒரு வீரனாகவே மடிந்துபோனான் அவன். பறம்புமலையும் இப்போது பேரரசுகளின் கையில்.

அப்பனை இழந்த பெண் பிள்ளைகள் அநாதைகளாகவும் அகதிகளாகவும் தனித்து நின்று அழுது கொண்டிருந்தனர்.

பற்றுக்கோடு இல்லாது அல்லாடிய முல்லைக்குத் தேர் ஈந்த அப்பன் கொல்லப்பட்டான். அம்முல்லைக்குத் தேர் ஈந்த அந்தப் பெண் பிள்ளைகள் அரவணைப்பார் எவருமின்றி அகதிகளாக நின்று கொண்டிருந்தனர். முல்லைக்குத் துணை நின்றவர்களுக்கு இப்போது யாருமே துணையில்லை.

அப்பனை இழந்து, மக்களை இழந்து, நாடிழந்து அகதியாய் அழுது தவித்தனர் பெண் பிள்ளைகள்.

போன மாத நிறைமதி நாளில் நாங்கள் தந்தையுடன் மகிழ்ந்திருந்தோம். இந்த மாத நிறைமதி நாளில் எம் குன்றையும் பிறர் கைப்பற்றிக்கொண்டனர். எம் தந்தை எங்களுடன் இல்லை. என்ன செய்வோம்? என அழுத பெண் பிள்ளைகளின் நினைப்பில் அப்பனும் பறம்புமலையும்தான் திரும்பத் திரும்ப வருகின்றன.

*
“அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்
எந்தையும் உடையேம்;
எம்குன்றும் பிறர் கொளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர்
எம்குன்றும் கொண்டார்!
யாம் எந்தையும் இலமே?”

முல்லைக்குத் தேர் ஈந்த பாரி மகள்களான அங்கவையும் சங்கவையும் பாடிய இந்தப் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கிறது.

அங்கவையும் சங்கவையும் பாடிய அந்தப் பறம்புமலை வெறும் மலையல்ல. பல்லுயிர்களின் தாய்மடி. இயற்கையின் வரம். பழந்தமிழர் வரலாற்றின் தொன்மை. பாரி, அங்கவை, சங்கவை மட்டுமல்ல; பல்லாயிரம் மக்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் ஆத்மா.

அந்தப் பறம்புமலையைத் தான், முதலாளிகளும் அரசியல்வாதிகளும் சுரண்டல்வாதிகளும் இப்போது சிதைக்கவும் அழிக்கவும் சுரண்டவும் தொடங்கி இருக்கிறார்கள்.

பறம்புமலை பாரிக்கு மட்டுமல்ல;
அங்கவை சங்கவைக்கு மட்டும் உரியதல்ல; அது நமக்கும் உரியது; தமிழர்க்கு உரியது.

*
பறம்புமலை மீட்போம்.
இயற்கை வளம் காப்போம்.
பறம்புமலைப் பாதுகாப்பு இயக்கத்தோடு துணை நிற்போம்.

*
ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
04.08.2020

2 கருத்துகள்:

  1. அங்கவை சங்கவை போல பாரியின் மற்றொரு புதல்வியான பறம்பு மலையைக் காக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா30/11/23, PM 4:34

    சிறப்பு

    பதிலளிநீக்கு