ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

நீர் அறுவடைப் பண்பாடும் பள்ளு இலக்கியச் சித்திரமும் : மகாராசன்.


தென்மேற்குப் பருவ காலத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வந்திருக்கிறது. ஆடி மாதக் காலங்களில்  தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன. அதனையே ஆற்றுப்பெருக்கு எனக் குறித்திருக்கின்றனர். ஆற்றுப் பெருக்கு வரும் மாதத்தையே ஆடிப்பெருக்கு என்றழைத்திருக்கின்றனர்.

மழைநீரையும் ஆற்று நீரையும் நீர் ஆதார நிலைகளுக்குக் கொண்டு சேர்த்து, முதலில் நீரை அறுவடை செய்து, அறுவடை செய்த நீரைக்கொண்டு வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தயாராகி இருக்கின்றன  நீர்ச் சமூகம் உள்ளிட்ட உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும்.

குடி மராமத்துப் பணிகளில் நீர்ச் சமூகத்தின் பெருந்துணையோடு வேளாண் உற்பத்தியின் தலைக் குடியும், அதற்குத் துணையான 18 குடிகளும் கூடி உழைத்ததால் / கூடிச் செயலாற்றியதால் / உழைத்து முடித்ததால் நீரை அறுவடை செய்வதற்கும், பயிர் விளைவிப்புக்கான உற்பத்திச் செயல்பாட்டின் முன் தயாரிப்புமாக  ஆற்று நீரை வரவேற்க உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும் ஆற்றங்கரைகளில் களிப்புடன் கூடி இருக்கின்றனர்.
நீர் அறுவடைக்கான அந்தக் கூடுகையே ஆற்றுப் பெருக்கும் ஆடிப்பெருக்குமான உற்பத்திப் பண்பாடாய் நிகழ்த்து வடிவம் பெற்றிருக்கின்றது.

நிலம், நீர், உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப்பண்பு போன்றவற்றால் உடலியல் திறனாலும் உளவியல் ஈடுபாட்டாலும், உணவு உற்பத்திப் பண்பாட்டாலும் தமக்கென வாழ்வியல் பண்புகளை வகுத்துக் கொண்ட வேளாண்குடிகள், நீர்ச் சமூகத்தின் பேருதவியோடு தமது உற்பத்திச் செயல்பாடுகளுள் ஒன்றாக நீரை அறுவடை செய்வதும் நிகழ்ந்திருக்கிறது. அந்தவகையில், நீர் அறுவடைக் களிப்பின் வெளிப்பாடுதான் ஆடிப்பெருக்கின்  கூடுகை அமைந்திருக்கின்றது.

ஆடி மாதத்து ஆற்றுப் பெருக்கை வைத்தே உழவர்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடிப் பட்டம் தேடி விதைக்க, ஆற்றின் புது வெள்ளத்தை வேளாண் குடிகள் மகிழ்வுடன் அறுவடை செய்து வரவேற்கும் பண்பாட்டியல் நிகழ்வுதான் ஆடிப் பெருக்கின் கூடுகை. வேளாண்மை சார்ந்த பண்பாட்டுக் கூடல் விழாவாகத்தான் ஆடிப் பெருக்கு இருந்திருக்கின்றது.

நீர் அறுவடைப் பண்பாட்டைத் தம்மகத்தே கொண்டிருக்கும் வேளாண் உழவுத்தொழில் மரபினரைக் குறித்த பள்ளு இலக்கியங்கள் நீர் அறுவடை நிகழ்வுகள் பற்றி நிறையவே பதிவு செய்திருக்கின்றன.

தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றான முக்கூடல் பள்ளு இலக்கியமானது நீர் அறுவடைச் செயல்பாட்டு நிகழ்வைக் காட்சியாக விவரிக்கும் பகுதிகள், நீர் அறுவடைப் பண்பாட்டுக்கான மிக முக்கியமான இலக்கியச் சான்றுகளாகும்.

மழைமேகம் சூழ்ந்து மழைக் குறி தென்பட்டது. எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின. குடி மராமத்து செய்து நீர்நிலைகளைத் தயார் நிலையில் வைத்திருந்த வேளாண் உழவுக்குடிகள், மழைக்கான அறிகுறிகள் தென்பட்டதும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வரவேற்ற நிகழ்வை,
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
     மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே!
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே
     கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே!
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே
     மழை தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே!
போற்றுதிரு மால்அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச்
    சேரிப் புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே!
என, முக்கூடல் பள்ளு நூல் பதிவு செய்திருக்கிறது.

மழைக் குறி பற்றிய இந்தப்  பாடல், நீர் அறுவடைக்கு தயாரான நிகழ்வைச் சுட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.
தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு, மழைக்குறி கண்ட பள்ளர்கள் யாவரும் துள்ளி ஆடியிருக்கின்றார்கள்  என்பதனையே அப்பாடல்  விவரித்திருக்கின்றது.

மழைநீரைப் பாதுகாக்கப் புறப்படத் தயாராகும் அவர்கள், மழையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தயாரானதைப் பற்றிக் கூறும்போது,
இக்கரைக் காலிற்பொருநை அக்கரைக் காலின்
     மழைக்கு ஏமமென்றுஞ் சாமமென்றும் நாமல்லோ போவோம்!
தக்க தோணியைத்துறையிற் சிக்கெனக் கட்டும்;
     படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும்.
பக்கமே யூசிக்காம்பு சுழுக்கு வாய்க்கிடும்
     சீலைப் பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும்.
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில்
     பள்ளர் முழுதுங் குரவையிட்ட எழுதின மாடீர்.
என்கிறது பள்ளுப் பாடல்.

அதாவது, மழை நீரைப் பாதுகாத்துக்கொள்ள ஆற்று வாய்க்காலுக்குச் சாமம் என்றும் ஏமம் என்றும் பார்க்காமல் நாமல்லவோ செல்கிறாம். துறையைக் கடக்க உதவும் தோணியைக் கட்டி வையுங்கள். மழையில் நனையாமல் செல்ல தாழங்குடை கொங்காணி ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.  ஊசிக் காம்பில் சீலைத்துணி சுற்றிப் பந்தம் செய்து எண்ணெய் ஊற்றி எரிய விடத் தயாராகப் பொருள்களை வைத்திக்கொள்ளுங்கள் என, மழைப் பாதுகாப்பையும் மழைக்குப் பாதுகாப்பையும் பற்றி எடுத்துரைத்துள்ளது அப்பாடல்.
கரு உண்டானால் குழந்தை பிறக்காமல் போகாது. அதுபோலத்தான், கடலில் மேய்ந்த மேகங்கள் காற்றில் உந்தப்பட்டுக் காலூன்றிப் பெய்தன.

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு! செங்கண்
மால்ஆசூர் நன்னாட்டில் மழையுமந்த வண்ணமன்றோ!
வேலா வலயம் முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில்
காலான தூன்றி யந்தக் காலமுறை காட்டியதே.
என, காலூன்றி மழை பெய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது.

மழையை இந்திரன் என்பதாக உருவகம் செய்து, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபடும் வழக்கம் தமிழ் மரபில் இருந்திருக்கின்றது. பண்டைக் காலத்தில் இந்திர விழா மழைவேண்டி நடத்தப்பட்ட வழிபாடாகச் சிலப்பதிகாரம் குறித்திருக்கின்றது. அந்தவகையில், மழைத் தெய்வமாகக் கருதப்படும் இந்திரன் ஆணையின் பேரில்தான் மழை பொழிவதாக வேளாண் மக்கள் கருதினர்.

இந்திரன் ஆணையின் பேரில் மேகங்கள் சென்றன. கடலில் படிந்து நீரை அள்ளிக்கொண்டன; வானவில் தோன்றியது; மேகம் கரிய உருவம் கொண்டது; பொன்னிறத்தில் மின்னல்கள்மின்னின; மேகம் நீரைச் சுமந்து உலாவிக் கருத்து மழையாகப் பொழிந்தன. மழையில் குளிர்ந்து, மழைக்குப் பின்பு வானம் வெளிறியது என்பதை,
காவுக் கிறைவனாகும் இந்திரன் ஏவற்பணி கொண்டெழுந்த கார்
      கடலிற் படிந்து; திருவிற் கொட்டி; அடல்முக் கூடல் அரியுமாய்
பூவுக் குயர்ந்த கலை மின்னோடு மேவிக் கமலத் தயனுமாய்ப்
      புனலைத் தரித்து; வரையிலேறிக் கனலைத் தரித்த சிவனுமாய்த்
தாவிப் பறந்து; பணிகள் பதுங்கக் கோவித்தெழுந்த கருடனும்
      தானேயாகி உலகுக் குரிமை ஊனேயாகி உயிருமாய்க்
கோவிற் பெரிய வட மலேந்திரன் மாவிற் கறுத்துப் பொழிந்தபின்
      குளிருகின்றது; கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே.
என்கிறது பள்ளுப் பாடல்.

மழையானது எல்லா நிலத்திலும் பெய்திருக்கிறது. குறிஞ்சி நிலத்திலும் ஆற்று வெள்ளம் வந்தது.  வான அரசன் வள்ளலாகிப் பொழிய, மலை மன்னன் பரிசு பெற, மழை வெள்ளம் முழங்கிக் கொண்டு பாய்ந்தது.
யானைகள் நீராடின; பன்றிகள் உருண்டன; வெள்ளம் சந்தன மரத்தை உருட்டிக்கொண்டு வந்தது; மூங்கில் மரங்கள் சாய்ந்தன; குளவிப் பூச்சிகள் அலைந்தன; தேன் கூடுகள் கலைந்தன; காட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன; குறவர் ஊரில் வெள்ளம் புகுந்தது. தினை உதிரவும் பாலை நிலத்தை மாற்றவும் குறிஞ்சி நிலத்தில் ஆற்று வெள்ளம் வந்ததாகப் பள்ளுப்பாடல் கூறும்போது,
வானக் குருசில் வள்ளலாய் வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய்
      வழங்கு மாறும் புறப்பட்டே புனல்முழங்கு மாறுந் திறப்பட்டே
தானக் களிறு படிந்திடக் கொலை ஏனக் களிறு மடிந்திடத்
      தழையின் ஆரம் உந்தியும் பசுங் கழையின் ஆரம் சிந்தியும்
கானக் குளவி அலையவே மதுபானக் குளவி கலையவே
      காட்டுச் சாதி வேரிற்போய்க் குறமோட்டுச் சாதி ஊரிற்போய்ச்
சேனைப் புரவி அழகனார் மருகோனைப் பரவி அழகுபூந்
      தினையை வனத்தில் உதிர்த்துப் பாலையனைய வனத்தை எதிர்ந்ததே.
எனப் பதிகின்றது.

குறிஞ்சியை அடுத்த முல்லை நிலத்திலும் மழைநீர் ஆற்று வெள்ளம் பாய்ந்தோடியதைப் பள்ளுப்பாடல் எடுத்துரைத்துள்ளது.
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும்
      இருப்பை ஈந்து கள்ளியுங் கரைப் பொருப்பை ஈர்ந்து தள்ளியும்,
முதிரும் பாறு முறையிடக் கழுகுதிரும் பாறு சிறையிட
      முள்வேலெயினக் கிடைஎழப் பதி வெள்வேலெயினப் படைஎழப்
பிதிருங் காளை விழியுடன் குடல் அதிருங் காளை மொழியுடன்
      பெரு மறத்திய ரல்லவே எனுங் கருமறத்தியர் செல்லவே
கதிருங் காலும் போலவே சென்றுதிரங் காலுஞ் சூலவேற்
      கன்னி முலையிற் சுரந்தபால் எனமுன்னி முலையிற் பரந்ததே.
என்கிறது அப்பாடல்.

பாலை, மரவம், மூங்கில், குரவம், இரும்பை, ஈந்து மரங்களை ஆறு அடித்துக்கொண்டு வந்தது. பழைய பாறையிட்ட சிறைக்கு இடையில் வந்தது. எயினர் இட்ட வேல், முள், வேலிகளை அடித்துக்கொண்டு வந்தது. காளையரோடு பேசிக்கொண்டு கருமறத்தியர் சென்று அந்த முல்லை நிலத்தில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் நீராடினர் என்பதாக அப்பாடல் குறிப்பிடுகின்றது.
மலையில் மின்னலிட்டுக்கொண்டு வந்த ஆறு, வாய்கால் வழியே ஓடி வயலில் பாய்ந்து மருத நில வளத்தையும், நானில வளத்தையும் உண்டாக்கிற்று. குறிஞ்சியிலும் முல்லையிலும் பெருக்கெடுத்து வந்திட்ட ஆறுகள் மருத நிலத்திற்கு நீர் வளத்தை அள்ளித் தந்திருக்கின்றன. அதனை,
முந்நீ ரடுங்கணையார் முக்கூடல் மால்வரையின்
மின்னீர் வரக்கான் விளங்கிநின்ற வாறேயோ
நன்னீர் மருதமென நால்வளமுண் டாயதுவே
உன்னீர் அவைகண்டு உவந்துமெல்லச் சொல்லீரே
என்கிறது பள்ளுப்பாடல்.

முல்லை நிலத்தில் வெள்ளம் உருட்டிக்கொண்டு வந்தது. முல்லை நிலத்திலிருந்த முல்லை, கடுக்கை, தோன்றி, எண்ணெய் தரும் இல், எள், துவரை, அவரை, குல்லை ஆகிய செடியினங்களை அடித்துக்கொண்டு வெள்ளம் வந்து மருத நிலத்தின் குளத்தில் பாய்ந்திருக்கிறது. இதனை,
முல்லைக் கோடி யடுக்கையின்-மலி
கொல்லைக் கோடி கடுக்கையின் முட்டித் தோன்றி மவ்வலை-மது
      கொட்டித் தோன்றி வெவ்வலை இல்லைச் சாடி எண்ணெயும்-அயல்
எல்லைச் சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும்-உறை
      கொள்ளும் அவரை எவரையும் தொல்லைப் பாடு பண்ணியும்-துறு
கல்லைப் பாடு நண்ணியும் தொடுத்துப் பூவை நெற்றியைத்-தொட
      மடுத்துப் பூவை எற்றியே குல்லைத் தானந் தேக்கி-மாலுக்
கெல்லைத் தான மாக்கிமால் கொள்ளுங் கயத்தை நிகர்த்து-மருதந்
      துள்ளுங் கயத்தில் பாய்ந்ததே.
எனப் புலப்படுத்தி இருக்கிறது பள்ளுப் பாடல்.

மருத மரம் செழிக்க, நீர் நிலையில் தாமரை மலர, எருமை குளிக்க, புழுதி குளிர, கரும்பு செழிக்க, வாழை அடுக்கடுக்காய் வளம் பெற, முதலை மேய; தவள வாரணம் (அன்னப்பறவை) நீந்த மருத நிலத்தைச் செழிப்பாக்கி இருக்கின்றன ஆறுகள். அதனை,
பாயும் மருதஞ் செழிக்கவே-பணைதோயும் மருதந் தளிர்க்கவே
      பகட்டுக் கமலை வட்டத்தில்-புனல் தகட்டுக் கமலக் குட்டத்தில்
போயும் எருமை பதறவே-உர மீயும் எருமை சிதறவே
      புழுதிச் சாலை நனைத்துமே-குளிர் கொழுதிச் சாலை யனைத்துமே
சாயும் உரலுங் கரும்புந்தான்-அதில் பாயும் முரலுஞ் சுரும்புந்தான்
      சரிய முதலை முடுக்கியும்-வாழைப் பெரியமுதலை அடுக்கியும்
காயுந் தவள வாரணம்-எதிர் ஆயுந் தவள வாரணம்
      கழனிக் குடிலைத் தொகுத்து-நெய்தலந் துழனிக் குடிலிற் புகுந்ததே.
எனச் சொல்கிறது அப்பாடல்.

முல்லை நிலத்தைச் செழிக்கச் செய்த ஆறு மருத நிலத்தில் பாய்ந்து செழிப்பாக்கிய பின்னர் நெய்தல் நிலத்தில் பாய்ந்திருக்கிறது. நெய்தல் நிலத்தில் பாய்ந்த வெள்ளம், நெய்தல் மலர்களைக் கசக்கிற்று. புள்ளினங்கள் பறந்தோடின; வெள்ளம் பட்டினத்தில் நுழைந்ததால் மக்களால் நிலைகொள்ள முடியவில்லை. வெள்ளம் சோலையை விட்டு வந்து உப்பளத்தில் ஓடிற்று. கடலில் நுழைந்து தன் கடமையை நிறைவேற்றின ஆறுகள். இதை,
புகுந்த நெய்தலை மயக்கியே-மலர் மிகுந்த நெய்தலைக் கயக்கியே
      புடையிற் புளினஞ் சரியவே-அதன் இடையிற் புளினம் இரியவே
பகுந்து நுழையப் பட்டினம்-திரைமுகந்து நுழையப் பட்டினம்
      படைத்தி டாமை நிகழவே-நிலைகிடைத்தி டாமை யிகலவே
உகுந்த தண்டலை நீக்கியே-புனல் வகுந்து தண்டலை தாக்கியே
      உப்பளத் தாரை யோட்டியும்-புனல் அப்பளத்தாரை யீட்டியும்
தகுந்த டங்கடல் இறைவனைத்-தொழ மகிழ்ந்தி டுங்கடன் முறையினிற்
      சார்ந்து சுறவு நேர்ந்து-குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே.
என்கிறது அப்பாடல்.

ஆற்று வெள்ளம் கடலில் புகுந்தது. கடல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு ஆறு உள்ளே நுழைந்தபோது மூக்கன், சாளை, எண்ணெய்மீன், பசலி, திருக்கை, கசலி, கெளுத்தி, பண்ணாங்கு, பாசிமீன், மகரம், சள்ளை, மத்தி, உல்லம், பொத்திமீன், மடந்தை, கடந்தை, செம்பொன் நொறுக்கி, மலங்கு, பஞ்சலை, கருங்கண்ணி முதலான மீன்கள் ஆற்று மணலில் புதைந்து ஒளிந்து கொண்டன என்பதை,
உதைத்து விசைகொண் டெதிர்த்துக் கடலின் உதரங் கீறி யதிரும்நீர்
     உதயவரைக்கும் பொதிய வரைக்கும் ஒத்துப் போகும்படி முற்றும்போய்
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன்
     பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங் கும்பழம் பாசிமீன்
வதைக்கும் மகரங் குதிக்குஞ் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன்
  மடந்தைகடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும்பஞ்சலை கருங்கண்ணி
புதைத்து மணலில் ஒதுக்கிக் கடலைப் பொருநம் அழகர் கருணைபோல்
     பொருநை யாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே.
என்கிறது பாடல்.

ஆற்று மணலில் புதைந்திருந்த பரவை, குரவை, வாளை, கோளை, தேளிமீன், மயிந்தி, உழுவை, அயிந்தி, கூனி, மணலி, ஆரால், ஓராமீன், அயிரை, கெண்டை, கெளிறு, வரால் ஆகிய மீன்கள் அணையிலும், வாய்க்காலிலும், குளத்திலும், வயலிலும் வந்து பாய்ந்ததை,
வற்றா மடுவிற் பரவை குரவை வாளை கோளை தேளிமீன்
     மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன்
பற்றா அயிரை கெண்டை கெளிறு பருவ ராலும் அணையிலே
     பாயக் காலிற் பாயக் குளத்தில் பாய வயலிற் பாயவே
என்கிறது அப் பள்ளுப்பாடல்.
இவ்வாறாக, நீர் அறுவடை நிகழ்வைக் காட்சிகளாய் விவரித்த பகுதிகள், நீர் அறுவடைப் பண்பாட்டிற்கான உயிர்ப்பான சான்றுகளாகும்.

ஆக, வேளாண் குடியும் வேளாண் தொழில் சார்ந்த குடிகள் என 18 குடிகள் ஒன்றாகக் கூடிய நிகழ்வு என்பதாலே ஆற்றுப் பெருக்கை ஆடி 18ஆம் பெருக்கு என்றும் குறித்துள்ளனர்.

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு உயிராக இருக்கும் நீர் ஆதார நிலைகள் மீதான நீர் மேலாண்மைத் தொழிலும் அறிவும் உழைப்புமே வேளாண்மை உழவுத் தொழிலுக்கு அடிப்படையாகும்.
நீர் மேலாண்மையும் பயிர் வேளாண்மையும் ஒருங்கே பிணைந்திருக்கும் அறிவையும், உழைப்பையும், ஈகைப் பண்பையும் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், வேளாண்மை உழவுத்தொழில் மரபினரின் ஒரு பிரிவினரே நீர் மேலாண்மைச் சமூகமாகவும் இருந்திருக்கின்றனர். ஆகையினால், ஆற்றுப் பெருக்கும் ஆடிப் பெருக்கும் நீர் அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடே எனலாம்.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
02.08.2020

4 கருத்துகள்: