ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

நீர் மேலாண்மை: நீர் அறுவடைப் பண்பாடு: ஆடிப் பெருக்கும் ஆற்றுப் பெருக்கும் :- மகாராசன்

ஆடி மாதத்தின் 18ஆம் நாளினை ஆடிப் பெருக்கு எனக் குறிக்கும் வழக்கமும், ஆடிப் பெருக்கு நாளில் ஆற்றுநிலைகளில் கூடும் பழக்கமும் தமிழர் பண்பாட்டு மரபில் இன்னும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்றன. ஆடி மாதத்துக்கும் ஆற்றுநிலைகளுக்கும் தமிழர் பண்பாட்டு வழக்கத்துக்குமான உறவாடல் பின்புலம் என்ன?

ஆடி 18ஆம் நாளில் ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இது, வெறுமனே வேடிக்கை கூடிய களிப்பும் மகிழ்வுமான கூடல் நிகழ்வு மட்டும் அல்ல. நீரை மய்யப்படுத்தியும் நீரைக்கொண்டும் உணவு உற்பத்தி மேற்கொண்டவர்கள், தமது உழைப்புச் செயல்பாடுகளால் நீர் அறுவடையைத் துய்த்து, உணவு உற்பத்திச் செயல்பாடுகளைக் கூட்டுக் களிப்புடன் தொடங்கிய உற்பத்திப் பண்பாட்டின் உயிர்ப்பே ஆடிப் பெருக்கிலும் ஆற்றுப் பெருக்கிலும் கலந்திருக்கிறது. 

உணவு உற்பத்தியின் உழைப்பில் ஈடுபட்ட தலைக்குடியோடு சேர்ந்து, அதற்குத் துணையாகக் கூட்டுழைப்பிலும் துணை உற்பத்தியிலும் ஈடுபட்டிருந்த 18 குடிகளும்தான் அந்த உற்பத்திப் பண்பாட்டைப் புலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால்தான், இந்தக் கூடலும் களிப்பும் ஆடி 18ஆம் நாளில் நடந்திருக்கிறது. 

உணவு உற்பத்திப் பண்பாட்டின் அங்கமாய்த் திகழ்ந்த ஆடிப் பெருக்கிலும் ஆற்றுப் பெருக்கிலும் உழைப்பு தோய்ந்த குடிகளின் அறிவும் அறமும் கலந்தேதான் இருக்கின்றது. நீரும் நிலமும் மனித உழைப்பும் அறிவுமாய்க் கலந்திருக்கும் இந்தப் பண்பாடு, வெறும் நீர் வழிபாட்டுச் சடங்காக மட்டுமல்ல; கூட்டுழைப்பின் அறுவடைத் துய்ப்பும், உற்பத்திக்கான முன் தயாரிப்புமான உற்பத்திச் செய்கையின் நிகழ்த்து வடிவமாகவும் இருந்திருக்கிறது. இதன் வரலாறும் வழக்காறும் வேளாண்மையோடும் வேளாண் குடிகளோடும்தான் உறவுடையதாய் இருந்து வந்திருக்கிறது.

உணவைத்தேடி அலைந்து திரிந்த மனிதர்களின் அலைகுடி வாழ்க்கையிலிருந்து, நிலைகுடி வாழ்வியலுக்கு மாற்றியதில் நிலத்திற்கும் நீருக்கும் முக்கியப் பங்குண்டு. தமிழரின் வாழ்வியலைப் புதிய திசைவெளிகளில் பரிணமிக்கச் செய்ததும் நிலமும் நீரும்தான். 

நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைய உயிரை உருவாக்க முடியும் என்று கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும். 

ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள். அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் என்று படர்ந்து விரிந்தது. தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு. வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில தமிழ்ச் சிந்தனையை நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது. 

மனித சமூகத்தின் உயிர்வாழ்த் தேவையான உணவுப் பொருட்களை மனித சமூகமே உற்பத்தி செய்துகொள்வதான செயல்பாடுகளை வேளாண்மை எனும் சொல்லால் தமிழர் மரபில் குறிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மை எனும் தொழிலைக் காலங்காலமாய் மேற்கொண்டுவந்த வேளாண் தொழில் மரபினரை வேளாண்மை எனும் சொல்லின் வேர்ச்சொல்லைக் கொண்டு (வேள் - நிலம். வேள்+ஆள் >நிலத்தை உழவால் ஆள்தல்) வேளாள்+அர்> வேளாளர் எனக் குறிக்கப்பட்டனர். இது, நிலத்தில் வேளாண்மை செய்யும் தொழில் பிரிவினர் அனைவரையும் குறிக்கும் தொழிற்பெயராகவே காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்திருக்கிறது.

வேளாளர் என்பது ஒரு சாதிப் பெயர் அல்ல; அது வேளாண்மை செய்யும் தொழிலால் குறிக்கப்படும் தொழிற்பெயர். வேளாண்மையோடு உறவும் அறிவும் உழைப்பும் கொண்டிருக்கும் யாவரையும் குறிக்கும் தொழிற்பெயர்தான் வேளாளர்.
மனிதர்கள் தங்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் போதுதான் மனிதர்களின் வாழ்வு உயிர்ப்படைகின்றது. அவ்வகையில், உருவாகி வந்திருக்கிற தமிழ்த் தேசிய இனமும் தமக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடுத்திக் கொண்டதனால்தான் உயிர்ப்பாய் இருந்திருக்க முடிகிறது. இத்தகைய தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்தி அரங்காய்த் திகழ்ந்ததும் திகழ்வதும் வேளாண்மை தான்.

வேளாண்மைதான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது. இதன் காரணத்தால்தான்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்கிறார் வள்ளுவர். மேலும், உழவரது சிறப்பையும் உழவையும் குறித்து உழவு எனும் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கிய நெடுமரபில் வேளாண்மையின் சிறப்புகளும் அதன் முதன்மைத்துவமும் வேளாண் குடிகளின் சிறப்புகளும் அதிகளவில் விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நிலத்தில் வேளாண்மையும் அதனோடு தொடர்புடைய ஏனைய தொழில்களும் வணிகமும் நடைபெற்றே வந்திருக்கின்றன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் போன்ற நிலங்களில் அதிகளவிலும், பாலையில் குறைந்தளவுமாக நடந்த வேளாண்மை உற்பத்தியும் அது சார்ந்த துணை உற்பத்தியும் தொழிலும் வணிகமும்தான் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் பிரிவினரை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் திரள் கூட்டங்களே சாதிகளாய் வடிவம் கொண்டிருக்கின்றன.

குழுக்களாய், இனக்குழுக்களாய் இருந்த காலத்தில் அவரவர் தொழில் சார்ந்து அடையாளப்பட்டு வந்தவையும் வராதவையும் கூட, தேசிய இன உற்பத்தியில் தொழில் சார்ந்து திரண்டிருக்கிற போதும் சாதியாய் உருமாறிக் கொண்டன. ஆனாலும், தேசிய இனத்தின் அங்கமாகவே தம்மை இணைத்துக் கொண்டுள்ளன.
பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய இனம், வேளாண் தொழில் உற்பத்திச் சாதிகளையும், அதற்குத் துணையாகவும் இணையாகவும் உற்பத்தி மற்றும் வணிகச் சாதிகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது. அவ்வகையில்தான், வேளாண்மை மேற்கொண்ட முதன்மை மற்றும் துணைமைச் சாதிகள் இருந்துள்ளன.

வேளாண் தொழிலை முதன்மையாக மேற்கொண்டதால், உழவர் வேளாளர் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வேளாளரின் உழவுத் தொழிலுக்குத் துணை செய்யும் குடிகளாக வண்ணார், மயிர்வினைஞர், செம்மான், குயவர், கொத்தர், கொல்லர், கன்னார், தட்டார், தச்சர், கல்தச்சர், செக்கார், கூத்தர், கைக் கோளர், பூக்காரர், கிணைப்பறையர், பாணர், வள்ளுவர், மருத்துவர் ஆகிய பதினெண் குடிகளும் வேளாண் குடியோடு சேர்ந்து வேளாண் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்தியதாகப் பாவாணர் விளக்கப்படுத்துகிறார்.

மருதம் தவிர, மற்ற நிலங்களின் உற்பத்திப் பொருட்களும் மருதம் உட்பட அனைத்து நிலத்திற்கும் தேவைப்பட்டிருக்கும் காரணத்தால், மற்ற நிலத்தாரும் அந்நிலங்கள் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் தொடர்ந்து உறவு மேற்கொண்டு வரவும் செய்துள்ளனர். எனினும், பெருவாரியான உணவு உற்பத்தி வேளாண் உற்பத்தியாகவே இருந்திருக்கிறது. அவ் உற்பத்தி குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூன்று நிலங்களிலேதான் சிறப்பாய் நடந்தேறியிருக்கிறது.

இயற்கையின் கடல் மற்றும் இதர நிலப் பகுதிகளைக் காட்டிலும் நிலைத்த வாழ்வுக்கான இயற்கை நில அமைப்பு, உற்பத்திக்கான பெருநிலப்பரப்பு, கூட்டு உழைப்புக்கான மனிதப் பெருந்திரள், நிலம் - உழைப்பு  போன்றவற்றின் விளை பயனாய் அமைந்த உபரிச்செல்வப் பெருக்கம் போன்றவற்றால் அமைந்துபோன வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரம், பண்பாடு, நாகரிகம், மொழி, கலை, இலக்கியம், அறிவுப் புலப்பாடு, கல்வி, அறம், சமூக உறவுகள், பண்டமாற்றுமுறை, சமூகக் கட்டமைப்பு போன்ற இன்னபிற யாவும் பெருகி வளா்ந்தமைக்கான வாய்ப்புகளும் வசதிகளும் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம்தான் அதிக அளவில் காணப்பட்டன. இவ்வாறான சமவெளிப் பகுதிகளையும், மக்களையும் செழிப்பும் வளமும் நிறைந்ததாய் உருவாக்கியதில் பெரும்பங்கு வகிப்பன நீர் ஆதாரங்கள்தான். அதிலும் குறிப்பாக, இயற்கையின் ஒப்பற்ற கொடைகளுள் ஒன்றான ஆறுகள்தான்.

மலைகளில் அரும்பி, காடுகளில் நுழைந்து  சமவெளிகளில் முகம் காட்டுகிற ஆறுகள் யாவும், விரிந்து கிடக்கும் பெரும்பகுதிச் சமவெளிகளைச் செழிப்பாக்குவதையே கடமையாகக் கொண்டிருக்கின்றன. இன்னொரு வகையில்  சொல்வதானால் சமவெளிப் பகுதிகளில் கிளைபரப்பும் ஆறுகளை அந்நிலப் பரப்பில் வாழ்ந்த மனிதக் குழுக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டன.
பருவங்களுக்கு ஏற்றாற்போன்று பெய்திட்ட மழையும், அதை உள்வாங்கிப் பெருக்கெடுத்த ஆறுகளும் சமவெளி நிலப் பரப்பைச் செழிக்கச் செய்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. இதனாலேயே ஆறுகள் பரந்த சமவெளிப் பரப்பில் நிலைகொண்டிருந்த அத்தனை மனிதக் குழுக்களும் மற்ற நிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த மனிதக் குழுக்களைக் காட்டிலும் உயா்த்திக்கொண்டன அல்லது உயா்த்திக் கொண்டதாக நினைத்துக்கொண்டன.

சிறு மற்றும் குறுங்குழுக்கள் பெருங்குழுக்களாகவும், பெருங்குழுக்கள் இனக்குழுக்களாகவும், இனக்குழுக்கள் இனங்களாகவும் உருவெடுத்து, பல்வேறு சமவெளிப் பகுதிகள் சார்ந்த பெருஞ்சமூகங்களாய் வடிவமைத்துக் கொண்டன.  இதனால்தான் ஆற்றங்கரைச் சமவெளிகளை நாகரிகம் செழித்த நிலப்பகுதிகளாக வரலாற்றில் குறிக்கப்படுகின்றன.

ஒரு சமூகத்தை வளப்படுத்தியதில் வேளாண்மைத் தொழிலுக்கும் அதன் உற்பத்திக்கும் மிகப்பெரிய பங்கு இருப்பதைப்போலவே, வேளாண்மை எனும் உற்பத்தித் தொழிலுக்கும் மிக முக்கியமான ஆதாரம் நீராகும். நீர் ஆதாரங்கள் இல்லாமல் வேளாண்மைத் தொழில் நடைபெறவே முடியாது; நடைபெற்றிருக்கவும் முடியாது. அதாவது, நிலமும் நீரும்தான் வேளாண்மையின் ஆதாரங்கள் ஆகும்.
நிலம் எனும் ஆதாரத்தில் உழைப்பையும் அறிவையும் செலுத்தி வேளாண்மை எனும் உற்பத்தி செய்ததைப் போல, அதற்கும் நிகரான அல்லது அதற்கும் மேலான உழைப்பையும் அறிவையும் செலுத்தி நீர் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய நீர் ஆதாரங்களே வேளாண்மையின் உயிர் ஆதாரங்களாக இருந்திருக்கின்றன; இருக்கின்றன. 

 அடையாறு, அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, பவானி ஆறு - காவிரியின் துணையாறு, சிற்றாறு,சின்னாறு,செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு ,கபினி ஆறு, கடனாறு - தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு, குதிரையாறு - அமராவதியின் துணையாறு, நங்காஞ்சி ஆறு - குடகனாற்றின் துணையாறு, கெடிமலம், கோமுகி ஆறு, கோதையாறு, மலட்டாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு, மணிமுக்தா ஆறு, மோயாறு, முல்லை ஆறு, நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு, பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா ஆறு, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு, உப்பாறு, வைகை ஆறு, வராக ஆறு, வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு, சனத்குமார ஆறு- காவிரியின் துணையாறு, மார்கண்ட ஆறு- தென்பெண்னையாற்றின் துணையாறு, பாம்பாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, வாணியாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னையாற்றின் துணையாறு என்று தமிழகம் முழுவதும் நரம்பு மண்டலம்போல ஆறுகள் இருந்தன. 

எனினும், இந்த ஆறுகள் யாவும் எல்லாப் பருவங்களிலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தவையல்ல. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஆறுகள் நீர்புரண்டு கிடந்தன. 

மற்ற  நிலப்பரப்பிலும் நாடுகளிலும்  வற்றாத ஆறுகள் நிறைய இருந்தன. ஆண்டின் எல்லாப் பருவங்களிலும்  நீரை வார்த்த ஆறுகள் இருந்தன. இவற்றோடு, எல்லாப் பருவத்திலும்மிதமான மழையைத் தந்து கொண்டிருந்த இயற்கை வளங்களும் இருந்தன. 
தமிழகத்தின் பருவ நிலைமையோ இயற்கைவள அமைப்போ அப்படியில்லை. எல்லாப் பருவத்திலும் பெய்கின்ற மழையோ ஆறுகளின் பெருக்கோ தமிழ் நிலத்தில் வாய்க்கவில்லை. ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே பெய்யும் மழையை வைத்துதான் வேளாண்மை செய்துகொள்ள வேண்டிய நிலை தமிழகத்தில் இருந்திருக்கிறது. 

தமிழ்ச் சமூக  வாழ்விலும் வளர்ச்சியிலும் வேளாண்மைக்கு மிக முக்கிய இடமிருந்ததைப் போலவே, வேளாண்மைத் தொழிலுக்கும் மட்டுமல்ல; மக்களின் அன்றாடப் பிற தேவைகளுக்கும் நீர் ஆதார அமைப்புகள் மிக முக்கியத் தேவையாக இருந்திருக்கின்றன. இதனால் மழைபெய்யும் காலங்களில் மழை நீரையும் ஆற்று நீரையும் பல்வேறு நீர் ஆதார அமைப்புகளின் மூலம் நீரைச் செமித்து வைத்துக்கொள்ள வேண்டி இருந்திருக்கின்றது.

மழைப் பொழிவில் வழிகின்ற வழிநீரையும், மழைப் பொழிவுக்குப் பின்பாகத் தன்போக்கில் செல்லும் ஆற்றுநீரையும் பயன்பாடு கருதியும் வேளாண்மை கருதியும்  தேக்கி வைத்து, திசை திருப்பி, முறைப்படுத்தி, பயன்படுத்தியும் வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். 

அதாவது, இயற்கையாகத் தன்போக்கில் ஓடிய ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்ததன் அடுத்த கட்டமாக, பல்வேறு நீர் ஆதார அமைப்புகளை உருவாக்கி அவற்றில் ஆற்று நீரையும், மழை நீரையும் தேக்கி வைத்துப் பயன்படுத்தும்  நீர்ப் பயன்பாட்டு நுட்ப முறைகளைப் பண்டைத் தமிழர்கள் கண்டடைந்திருக்கின்றனர். 

இத்தகைய நீர் ஆதார அமைப்புகளை உருவாக்கி, நீரைச் சேமித்து, முறைப்படுத்தி வழங்கி, முறையாகப் பயன்படுத்தி, முறையாகப் பராமரித்து, மனிதத் தேவைக்கும் வேளாண்மைத் தேவைக்கும் நீர் ஆதார அமைப்புகளை ஒழுங்காற்றிய அறிவும் உழைப்பும் நுட்பமும் அறமும் சேர்ந்த மனித ஆளுமைதான் நீர் மேலாண்மை எனும் அறிவாகவும் நுட்பமாகவும் உழைப்பாகவும் வெளிப்பட்டு வந்திருக்கின்றன. 

நீரைச் சேமிக்கவும், அதைப் பகிர்ந்து கொள்ளவும், அதைப் பாதுகாக்கவுமான ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன்மூலம் தண்ணீரைப் பாதுகாத்தல், வறட்சியைத் தடுத்தல்,
 வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச் சூழலைப்  பாதுகாத்தல் போன்றவையும் நடந்திருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு நீர் ஆதார அமைப்புகள் இயற்கையாகவும் இருந்திருக்கின்றன; புதியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு:

அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்; அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது; ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு; ஆறு (River) - பெருகி ஓடும் நீர்த் தடம்; இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்; உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு; ஊருணி (Drinking water tank) -மக்கள் பருகும் நீர் நிலை; ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர்த் தேக்கம்; ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்; கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு; கடல் (Sea) -சமுத்திரம்; கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கிய பெயர்.

கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்துத் திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

கால் (Channel) - நீரோடும் வழி; கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீர் செல்லும் வழி; குட்டம் (Large Pond) - பெருங் குட்டை; குட்டை (Small Pond) - சிறிய குட்டம் - மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை; குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை; குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்; குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

குமிழி ஊற்று (Artesian fountain) - அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று; குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை; கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு; கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்; வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு; சிறை அல்லது நீர்த்தேக்கம் (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை; சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை; சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்; தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்; தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்; திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்; தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்; நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு; நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம் - ஆவி என்றும் கூறப்படும்.

பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு; பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு; பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை; மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு; மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்; வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்; வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்; முள்ளம் - ஏரி பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும் நீர்தேங்கும் அமைப்பு. 

இவைபோன்ற நீர் ஆதார அமைப்புகளைப்போல வேறு பலவும் தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. மேற்குறித்த நீர் ஆதார அமைப்புகள் மறைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவான / உருவாக்கப்பட்ட நீர் ஆதார அமைப்புகளைப் பயன்படுத்தவும் பராமரிக்கவும் நீர் மேலாண்மைச் சமூகத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். வேளாண்மைத் தொழிலோடு பிணைந்திருந்த வேளாண் உழவுத்தொழில் மரபினரின் ஒரு பகுதியினரே நீர் மேலாண்மையை ஒரு தொழிலாகவும் செய்து வந்திருக்கின்றனர். அதாவது, வேளாண்மை உழவுத் தொழிலின் மிக முக்கியமான அங்கமாகவும் ஆதாரமாகவும்தான் நீர் மேலாண்மையும் இருந்திருக்கிறது.

வேளாண்மையோடும் அதன் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்த நீர்ச் சமூகமும் ஒன்று இருந்திருக்கிது. இந்த நீர்ச் சமூகம்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்திருக்கிறது. மழை பொழிந்து ஓடும் நீரை நீர் ஆதார அமைப்புகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, அதைச் சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் நீர்ச் சமூகத்தின் பணியாக இருந்திருக்கிறது. இது, மிகச் சாதாரண பணியும் அல்ல. அதற்கு நிறையத் தொழில்நுட்ப அறிவும் உழைப்பும் தேவை. அவையெல்லாம் அந்த நீர்ச் சமூகத்திடம்தான் நிரம்பிக் கிடந்தன.

நீர் மேலாண்மையைத் திறம்பட மேற்கொண்டிருந்த நீர்ச் சமூகம் பல பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது.
ஆற்று நீரை அடுத்ததடுத்த ஏரி எனும் நீர்நிலைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, பங்கிட்டுக்கொடுக்கும் பொறுப்பை ஆண்ட நீர் மேலாண்மைத் தொழில் பிரிவினர் ‘நீராணிக்கர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர். ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்த்து, அந்த நீரைக் கட்டிவைத்துக் காத்ததால் அவர்களுக்கு ‘நீர்க்கட்டியார்’ என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பும் கொண்டவர்கள்.

ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள கோடைக் காலங்களில் ஏரி நிலத்தில் தற்காலிகமாக பயிர் செய்வது என, ஏரி நிலைக்குள் நடந்த எந்தவொரு நிகழ்வும் நீர்க்கட்டியார் அனுமதி இருந்தாக வேண்டும்.

ஏரி நீரின் பாதுகாப்பு  அதன் கரையில்தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, ஏரிப் பாசனம் பெறும் வயல்வெளிகளையும் மக்கள் வாழிடங்களையும் அழித்துவிடும். ஆகையால்தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அத்தகைய ஏரியின் கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நீர் ஆதார அமைப்புகளின் கரை வேலைகளைப் பார்த்ததால் ‘கரையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் ஏரிக்கரைக்கு முழுப்பொறுப்பும் ஆவர்.

ஒரு சமூகத்தின் பொருளாதார வளம் வேளாண்மையோடு தொடர்புடையது. ஏரிகள் வேளாண் பாசனத்திற்காகவே உருவாக்கப்பட்டவை. எதிரிகளால் வேளாண் பொருளாதாரச் சீர்குலைவுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. எதிரிகளிடமிருந்து ஏரிகளையும் இதர நீர்நிலைகளையும் காத்த காரணத்தால் ‘குளத்துக் காப்பாளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். 
நீர் நிலைகளுக்குள் தேவையின்றி வளர்ந்த செடிகொடிகள், பாசிகள் போன்றவற்றை அழித்துத் தூய்மைப்படுத்தி, வயல் பள்ளங்களில் வேளாண்மைக்கு நீர் திறந்துவிட்டதனால் ‘குளத்துப் பள்ளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். 

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் வெட்டிக் கொண்டு வந்தமையால் ‘நீர் வெட்டியார்’ எனவும், நீரை வயல்கள் வரை கொண்டு வந்து பாய்ச்சியதால் ‘நீர்ப் பாய்ச்சியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வயல்களுக்கான நீரைக் கண்காணித்தவர்கள்.

நீர் ஆதார அமைப்புகளிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்காக அவற்றில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். வேளாண் பாசனத்திற்காக இந்த மடைகளைத் திறந்து விடுவதால் ‘மடையர்கள்’ எனவும் ‘மடைக் குடும்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  மதகுகள் வழியாக  வேண்டிய அளவு நீரை வெளியேற்ற முடியும்; நீரைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், மடை என்பது அப்படியல்ல. மடையைத் திறந்து விட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மடைகள் அமைக்கப்பட்ட நீர்நிலைகளில் மடைகளைக் கையாண்டதால்தான் ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்டுள்ளனர்.

ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வருகின்ற மழை நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறும் சகதிகளையும் சேர்த்தே கொண்டு வரும். இவை அதிகம் சேர்ந்தால் நீர்நிலைகள் தூர்ந்து போகும் வாய்ப்புண்டு. இதனால் மடைகளும் மதகுகளும் அடைத்துக் கொள்ளும். இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ‘குமிழி’ எனும் ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான் இது. 

குமிழியானது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து சற்றேறக் குறைய 300அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைக்கப்பட்டிருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போதுதான் இந்தக் குமிழியைத் திறந்து விடுவர். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். இதனால் ஏரியின் தளத்தில் சேர்ந்த வண்டல் மண்  வெளியேற்றப்படுவதால் அதன் பாசனப் பயிர்களுக்கும் நல்ல உரம் கிடைத்து விடுகிறது. நீர்நிலைகளில் பயன்படுத்திய தூர்வாரும் தொழிநுட்பம்தான் இது. நீர் நிலைகளில் குமிழிகள் அமைத்துத் தூர்வாரி, வயல் பள்ளங்களில் நீர் பகிர்ந்ததால் ‘குமிழிப் பள்ளர்கள்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த நீர்ச் சமூகத்திடம் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் நுட்பமும் அறிவும் மட்டுமல்ல; அத்தகைய நீர் ஆதாரங்களைப் புதியதாக உருவாக்கும் அறிவும் நுட்பமும் உழைப்பும் கூடவே இருந்திருக்கிறது. 

மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம், பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மழைநீர் வரத்து போன்றவற்றைக் கணக்கில் கொண்டே நீர்நிலைகளின் கொள்ளளவை நிர்ணயித்திருக்கிறார்கள். விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கும், மக்களின் இதரத் தேவைகளுக்கும்   நீர் திறந்துவிட வேண்டியதின் அளவு,
அதற்கேற்ப மதகுகளையும் மடைகளையும் அமைத்தல், அவற்றிலிருந்து  நீர் வெளிவருவது எவ்வளவு? எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும்? போன்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுத்தான் நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள். 

இப்படியாக, நீர் நிலைகளை உருவாக்கியதிலும், நீர் நிலைகளை மேலாண்மை செய்ததிலும் நீர்ச் சமூகத்தின் அறிவும் உழைப்பும் மாட்டும் இருந்திருக்கவில்லை. கூடவே, நீர்ச் சமூகத்தின் தியாகமும் உள்ளடங்கி இருக்கின்றது.

மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போதும், நீர்நிலைகளில் நீர் நிறைந்திருக்கும் போதும், கரைகள் உடையக்கூடிய அபாயங்கள் இருக்கும்போதும், நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும்போதும், மதகுகள் / மடைகள் வழியாக நீரைத் திறந்துவிடும்போதும் உயிரைப் பணையம் வைத்து அவற்றைச் செய்திடவும் வேண்டும்.

 நீர் நிரம்பி இருக்கும் நீர்நிலைக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையைத் திறக்கும்போது உயிர்போகவும் கூடும். அந்தத் தியாகத்தையும் நீர்ச் சமூகமே செய்திருக்கின்றது. அவ்வாறு உயிர்நீத்த நீர்ச் சமூகத்தவரின் உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நீர்நிலைக் கரைகளில் நடுகல் நட்டு வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம் செய்த நீர்ச் சமூகத்தவரின் குடும்பங்களுக்கு நிலக்கொடைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மழைக் காலங்களில் நிரம்பி இருக்கும் நீர்நிலைகள் கோடையில்   வற்றிப் போகக் கூடும். நீர் வற்றிய காலங்களில் மட்டுமே நீர் நிலைகளைத் தூர் வாரியும், ஆழப்படுத்தியும், கரைகளைப் பலப்படுத்தியும், நீர்வரத்துப் பகுதிகளைத் தூர்வாரியும் பராமரிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனைக் ‘குடி மராமத்து’ என்பர். 

அதாவது, நீர் ஆதார நிலைகளை வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படுத்தும் உழவுக்குடிகளும், வேளாண்மைத் தொழிலுக்குத் துணையாக இருக்கும் இதரக் குடிகளும், நீர்நிலைகளைப் பிற தேவையின்பொருட்டுப் பயன்படுத்தும் மற்ற குடிகளும் நீர்ச் சமூகத்துடன் சேர்ந்து நீர்நிலைகளை பாதுகாத்துப் பரமாரித்துக் கொள்ளும் முறையே குடி மராமத்து ஆகும். 

இப்பணிகள்  மழை இல்லாத கோடை காலத்திற்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. மழைக் காலத்தை எதிர்நோக்கியும் நீர்வரத்தை எதிபார்த்தபடியும் நீர்நிலைகள் யாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்த புனரமைப்புப் பணிகளால், நீரை அறுவடை செய்யக் காத்திருப்பர் குடிகள் யாவரும்.

தென்மேற்குப் பருவ காலத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வந்திருக்கிறது. ஆடி மாதக் காலங்களில்  தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன. அதனையே ஆற்றுப்பெருக்கு எனக் குறித்திருக்கின்றனர். ஆற்றுப் பெருக்கு வரும் மாதத்தையே ஆடிப்பெருக்கு என்றழைத்திருக்கின்றனர். 

மழைநீரையும் ஆற்று நீரையும் நீர் ஆதார நிலைகளுக்குக் கொண்டு சேர்த்து, முதலில் நீரை அறுவடை செய்து, அறுவடை செய்த நீரைக்கொண்டு வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தயாராகி இருக்கின்றன  நீர்ச் சமூகம் உள்ளிட்ட உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும்.

குடி மராமத்துப் பணிகளில் நீர்ச் சமூகத்தின் பெருந்துணையோடு வேளாண் உற்பத்தியின் தலைக் குடியும், அதற்குத் துணையான 18 குடிகளும் கூடி உழைத்ததால் / கூடிச் செயலாற்றியதால் / உழைத்து முடித்ததால் நீரை அறுவடை செய்வதற்கும், பயிர் விளைவிப்புக்கான உற்பத்திச் செயல்பாட்டின் முன் தயாரிப்புமாக  ஆற்று நீரை வரவேற்க உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும் ஆற்றங்கரைகளில் களிப்புடன் கூடி இருக்கின்றனர். 
நீர் அறுவடைக்கான அந்தக் கூடுகையே ஆற்றுப் பெருக்கும் ஆடிப்பெருக்குமான உற்பத்திப் பண்பாடாய் நிகழ்த்து வடிவம் பெற்றிருக்கின்றது.

நிலம், நீர், உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப்பண்பு போன்றவற்றால் உடலியல் திறனாலும் உளவியல் ஈடுபாட்டாலும், உணவு உற்பத்திப் பண்பாட்டாலும் தமக்கென வாழ்வியல் பண்புகளை வகுத்துக் கொண்ட வேளாண்குடிகள், நீர்ச் சமூகத்தின் பேருதவியோடு தமது உற்பத்திச் செயல்பாடுகளுள் ஒன்றாக நீரை அறுவடை செய்வதும் நிகழ்ந்திருக்கிறது. அந்தவகையில், நீர் அறுவடைக் களிப்பின் வெளிப்பாடுதான் ஆடிப்பெருக்கின்  கூடுகை அமைந்திருக்கின்றது.

ஆடி மாதத்து ஆற்றுப் பெருக்கை வைத்தே உழவர்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடிப் பட்டம் தேடி விதைக்க, ஆற்றின் புது வெள்ளத்தை வேளாண் குடிகள் மகிழ்வுடன் அறுவடை செய்து வரவேற்கும் பண்பாட்டியல் நிகழ்வுதான் ஆடிப் பெருக்கின் கூடுகை. வேளாண்மை சார்ந்த பண்பாட்டுக் கூடல் விழாவாகத்தான் ஆடிப் பெருக்கு இருந்திருக்கின்றது. 

வேளாண் குடியும் வேளாண் தொழில் சார்ந்த குடிகள் என 18 குடிகள் ஒன்றாகக் கூடிய நிகழ்வு என்பதாலே ஆற்றுப் பெருக்கை ஆடி 18ஆம் பெருக்கு என்றும் குறித்துள்ளனர். 

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு உயிராக இருக்கும் நீர் ஆதார நிலைகள் மீதான நீர் மேலாண்மைத் தொழிலும் அறிவும் உழைப்புமே வேளாண்மை உழவுத் தொழிலுக்கு அடிப்படையாகும். நீர் மேலாண்மையும் பயிர் வேளாண்மையும் ஒருங்கே பிணைந்திருக்கும் அறிவையும், உழைப்பையும், ஈகைப் பண்பையும் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், வேளாண்மை உழவுத்தொழில் மரபினரின் ஒரு பிரிவினரே நீர் மேலாண்மைச் சமூகமாகவும் இருந்திருக்கின்றனர். 

அத்தகைய நீர் மேலண்மைச் சமூகத்தைக் குறித்து ஆராய்ந்த ஆய்வறிஞரின் கருத்து குறிப்பிடத்தக்கது. அது வருமாறு:

மழைநீர் சேகரிப்பு என்பது இந்தியாவில் மிக பழமையானது.கி.மு.4500 ஆம் ஆண்டு வாக்கில் தார் மற்றும் ராஜஸ்தான் பாலைவனங்களில் உருவாக்கப்பட்ட மகத்தான நீர்தேக்க திட்டங்களே மழை நீரை தேக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பசுமை பிரதேசங்களை ஒட்டியே பல எளிய வடிவிலான நீர்தேக்க திட்டங்கள் வளர்ந்து வந்து உள்ளன.

ஓடி வரும் வெள்ளத்தைத் தேக்கி வைத்துப் பரமாரிப்பதோடு, புயல், மழை, வெள்ளம், நிலத்தடி நீரோட்டம், நிலத்துக்கு அடியில் இருக்கும் ஆறுகள் ஆகியவற்றை அறிந்து அதை வெகு சிறப்பாகப் பயன்படுத்திய 'பள்ளர்கள்' (நீர் மேலாளர்கள்) பல ஆயிரம் வருடங்களாக மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்து உள்ளனர். (ஆற்றுக் காலாட்டியார், மடை வாரியார், நீராணிக்கர், நீர்கட்டியார் என்று பல்வேறு பள்ளர் பிரிவுகள் வழக்கில் இருந்து உள்ளனர்.)

 நீர் மேலாண்மை என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகப் பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும் கலாச்சார வடிவமும் ஆகும். இந்தத் தொழில் நுட்பம் இல்லை எனில், இந்தியா என்ற பிரதேசம் இருந்திருக்காது. இந்தியாவின் நீர் மேலாண்மை வேத காலத்துக்கும் முந்தியது. காரணம், தார் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நீர்த் தேக்கத் திட்டங்கள் எல்லாம் ஹரப்பா நாகரிகத்திற்கும் (கி.மு.2600) முந்தியது.
வீட்டுக் கூரை, வெட்ட வெளி, கிணற்றுப் பாசனம், ஆற்று வெள்ளம் என வியக்கத்தக்க வகையில் பாசனத்துக்கும் புழக்கத்துமான நீரைப் பரமாரித்து வந்துள்ளனர். நீர் மேலாண்மையாளர்களான பள்ளர்களே இந்தப் பெருமைக்கும் புகழுக்கும் உடையவர்கள். 

பள்ளர்கள் தாங்கள் வாழும் இடத்திற்குத் தகுந்தாற்போல தமது திறமைகளைப் பயன்படுத்துகின்றனர். பள்ளர்கள் உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் படித்து இந்த நீர் மேலாண்மை நுட்பத்தைக் கற்கவில்லை. தலைமுறை தலைமுறையாக நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்தைக் கற்றும், அதை செழுமைப்படுத்தியும், தாங்கள் கற்றதைத் தங்கள் தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். 

வரலாற்றில் எப்போதெல்லாம் தண்ணீருக்கான தேவையும், அந்தத் தண்ணீருக்கான வாழ்வாதாரமும் இக்கட்டான சூழலில் மக்களின் வாழ்வைப் பாதித்து உள்ளதோ, அப்போதெல்லாம் பள்ளர்களின் புத்திக் கூர்மையும், அவர்களின் புதிது புதிதான நீர் மேலாண்மை உத்திகளும்தான் மக்களைக் காத்து உள்ளது என்பதை நுணுக்கி ஆராய்ந்தால் அறியலாம்.

மக்களுக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதும், அதற்கான சிந்திக்கும் திறனும், இந்தச் சமூகத்திற்கு கொடையை அளித்த மதிப்பு மிக்க இந்தப் பள்ளர் சமூகம் போற்றுதலுக்கு உரியவர்கள்.
இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நீர் மேலாண்மைத் தொழில் நுட்பம் என்பது வரலாற்றுக்கும் முந்திய இந்தியாவில் இருந்து வந்ததன் தொடர்ச்சி ஆகும். இந்தத் தொழில் நுட்பங்கள்தான் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் பல மாகாணங்கள் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்தை அந்த இடத்திற்குத் தகுந்தவாறு அமைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் அறியலாம்.

ஆற்று வெள்ளம், மழை பொய்த்து போகும் காலம்,  ஆற்றில் இருந்து நீரைச் சேகரித்தல், நிலத்தடி ஊற்று நீரைச் சேகரித்தல், நீராவி ஆகாத அளவுக்குக் கிணறு வெட்டி அதை தினசரி உபயோகத்துக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்துதல். இப்படியாக மழை நீரைச் சேகரித்து அதை முறையாகப் பராமரிக்க நினைக்கும் எவரும் மதிப்புமிக்க  'பள்ளர்' சமூகத்தின் நீர் மேலாண்மைக் கலையையும் வழிமுறைகளையே மதித்தும் பின்பற்றவும் வேண்டும் என, இந்தியாவில் நீர் மேலாண்மை குறித்து ஆராய்ந்த இராகேசு செகாவத், தமிழ்ச் சமூகத்தில் இருந்த நீர் மேலாண்மைச் சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டைத் தந்திருக்கிறார்.

(Rain water Harvesting India – Rakesh Shegahwath:
Why discuss Rainwater Harvesting in India?
In India, rainwater harvesting is an ancient tradition. From as far back as 4500 BC, the simplest of earthworks in Thar Desert and Rajasthan, would harvest water from the falling rain. These simplest forms of rainwater harvesting would evolve in accordance to the eco-regions within India’s borders. Using rivers, floods, monsoon, underground rivers, surface water and the earth itself, the ancient cast of pallar (water managers) have been respected for thousands of years. Rainwater harvesting in India is more than an age old tradition that varies from region to region, rainwater harvesting is an integral part of Indian identity and cultural history, that without, India would never have been.
Vedic culture did not create rainwater harvesting as it was already being done (although rudimentary still quite effective) in the Thar and Rajasthan deserts long before the Harappan civilization in 2600 BC.
Whether they are harvesting rain from their rooftops, or courtyards, open community lands from artificial wells, monsoon run-off from the water of swollen streams or stored in various bodies or even harvest water from flooded rivers. Rainwater harvesting managers, called “pallar” are an officially recognized cast in India that deserves respect and honor. Usually “pallar” inherit their skills, and perform their service usually in accordance to region. 
The pallar are not trained in great universities from around the world, much less any inside of India, the pallar learn their abilities from one generation to the next and the most important part of engineering itself, experience. Years of careful observation on a day to day basis, when water needs effect everyday life, and even survival, their creative minds invent solutions that bridge the frontier of time and technology. Ingenuity and creativity in such largely diverse scales are responsible for the plethora of innovative ideas that come from this humble Indian cast.
Prehistoric India brought rainwater harvesting solutions as modern day India also does. These solutions which are diverse and innovative bring new insight into the world of rainwater harvest the world over. Insights that should be studied, and understood, not merely as a science but as cultural identity and a way of thinking that’s roots can be traced to antiquity. As India has so many different regions, it also confronts many different solutions for such a basic and essential human need as a single drop of water. 
Flood water, post-monsoon drought, underground river collectors, surface water aqueducts, and even evaporation proof community wells for drinking as well as irrigation and other methods of rainwater harvesting; the ancient art of Indian pallar is a tradition that should be respected and understood by anyone interested in better and more ecological ways to use the sky-gift of natural rain.
Source: http://www.rain-barrel.net/rainwater-harvesting-india.html).

நிலத்தையும் நீரையும் வெகுகாலமாகத் திறம்பட மேலாண்மை செய்துவந்த வேளாந்தொழில் மரபினரான அந்தச் சமூகத்திடமிருந்துதான் நிலமும் நீரும் பறிக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் தொழில் மரபினராக மதிக்கப்பட்டு வந்த அந்தச் சமூகம்தான் அதிகாரத்தாலும் சூழ்ச்சியாலும் வஞ்சிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 

அந்தச் சமூகம் ஒடுக்கப்பட்டதால்தான் நீர் ஆதார நிலைகளும் அழிவுக்கும் சிதைவுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகி வீழ்ந்து கிடக்கின்றன. அதனால்தான், ஆடிமாதத்தில் வேடிக்கை மட்டுமே பார்க்கும் கேளிக்கைக் கூடலாகவும், ஆன்மீகமயமாக்கி வெறும் சடங்காய்க் கூடுவதுமாக ஒருபுறம் ஆக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், ஆறுகளும் விளை நிலங்களும் பாழ் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. 

ஒரு சமூகம் வஞ்சிக்கப்பட்டால், நீரும் நிலமும் சேர்ந்தே வஞ்சிக்கப்படும் என்பதையே வரலாறு உணர்த்தி நிற்கிறது.

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
இரண்டாம் பதிப்பு 2022,
விலை: உரூ 250/-
யாப்பு வெளியீடு, சென்னை.
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506
*
ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

5 கருத்துகள்:

  1. சிறப்புமிக்க விரிவான பதிவு. வாசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி தோழர்!

    பதிலளிநீக்கு
  2. விரிவான வரலாற்று பதிவு.நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஒரு சமூகம் வஞ்சிக்கப்பட்டால், நீரும் நிலமும் சேர்ந்தே வஞ்சிக்கப்படும் என்பதையே வரலாறு உணர்த்தி நிற்கிறது.💪💪💪

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு அண்ணா.

    பதிலளிநீக்கு