உள் ஒதுக்கீடு வேறு; இனவாரிச் சுழற்சி முறை வேறு என்பதை, இன்னும் இந்தச் சமூகம் விளங்கிக் கொள்ளவே இல்லை.
*
அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழங்குவதும், கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதும் சமூக நீதிதான்.
அதேபோல, இசுலாமியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதும், கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதும் சமூகநீதிதான்.
இன்னும் சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய இதர சமூகங்களுக்கும் உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழக இடஒதுக்கீட்டுப் பிரிவில் பி.சி பட்டியலும், எஸ்.சி பட்டியலும் உள்ஒதுக்கீடு கொண்ட பட்டியல்களாக இருக்கின்றன. ஆனால், இரண்டு பிரிவுகளிலும் பின்பற்றப்படுகிற இன வாரிச் சுழற்சிமுறைதான் வேறுவேறாக இருக்கின்றன.
அதாவது, ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்பும்போது இனவாரிச் சுழற்சிமுறை (Roster system) என்கிற முறை பின்பற்றப்படும்.
இந்த இனவாரிச் சுழற்சிமுறை பி.சி பட்டியலுக்கு ஒரு மாதிரியாகவும், எஸ்.சி பட்டியலுக்கு வேறு ஒரு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிறது.
100 புள்ளிகள் கொண்ட சுழற்சிமுறைதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்புவது வழக்கம்.
அதாவது, இப்போது ஐந்து பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது என்று சொன்னால், முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு இப்படித்தான் தேர்வு நடைபெறும். இந்த முறைதான் இனவாரிச் சுழற்சிமுறை எனப்படுகிறது.
பி.சியில் இருந்து பி.சி.எம் உள்ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. பி.சி இடஒதுக்கீட்டில் இனவாரிச் சுழற்சிமுறை ஒன்று இருக்கிறது. அதில் பி.சி - பொது (BC - GT) என்றுதான் இருக்கிறது. பி.சி.எம் என்ற உள்ஒதுக்கீட்டுப் பிரிவினர், பி.சி ஒதுக்கீட்டுக்குள் பங்கு கோர முடியாது. அதேவேளையில், பி.சி - பொது எனும் சுழற்சி முறையில் பி.சி பிரிவினரும் பி.சி.எம் பிரிவினரும் பங்குபெறலாம்.
எனினும், பி.சி - பொது என்ற இனவாரிச் சுழற்சி இடத்தில் பி.சி.எம் என்ற உள்ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடமாக மாற்றி அமைக்கவில்லை. ஏனெனில், அவ்வாறு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த பி.சி பிரிவினருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே, பி.சி - பொது என்ற இனவாரிச் சுழற்சிமுறையே அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆனால், எஸ்.சி பொதுப் பிரிவிலிருந்து எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கிய பிறகு, மீதமுள்ள 15% எஸ்.சி - பொதுவிலும் எஸ்.சி.ஏ பிரிவினருக்கு இடமளிக்கப்படுகிறது. இது போக, இனவாரிச் சுழற்சிமுறையில் இதுவரை இருந்து வந்த எஸ்.சி - பொது (SC - GT) எனும் இனச் சுழற்சிமுறையில் எஸ்.சி இதரப் பிரிவினரும், எஸ்.சி.ஏ பிரிவினரும் பங்குபெறலாம் என்றிருக்க வேண்டும். ஆனால், எஸ்.சி - பொது என்ற இடத்தில் உள்ள இனவாரிச் சுழற்சிமுறை இடத்தில் எஸ்.சி.ஏ பிரிவைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது அவர்களுக்கான சமூக நீதிதான். அந்த நீதி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கியதுபோக, எஸ்.சி - பொதுப் பிரிவிலும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவினர் பங்கு பெறுவதுமான இடமளிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, இனச் சுழற்சிமுறையில் எஸ்.சி - பொது இருந்த இடத்தில், எஸ்.சி.ஏ பிரிவைக் கொண்டு வைத்திருப்பதும்தான், எஸ்.சி பொதுப் பிரிவில் இருக்கும் இதர சாதிகளுக்கான அநீதியாக இருக்கிறது.
இனவாரிச் சுழற்சிமுறையில் முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு. இப்படித்தான் இனவாரிச் சுழற்சிமுறையில் இடஒதுக்கிட்டுத் தேர்வு முறை நடைபெறும்.
இனவாரிச் சுழற்சிமுறையில், பொதுப்பிரிவினருக்கு அடுத்த இடம் எஸ்.சி எனும் பட்டியல் பிரிவினர் தான் வர வேண்டும். அதில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகப்பிரிவினர் உள்ளிட்ட 77 சாதிகளும் போட்டியிடலாம்.
எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் இடம் பெற்ற 77 சாதிகளுக்கான அந்த வாய்ப்பை, எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான வாய்ப்பாக மாற்றி அமைத்திருப்பதுதான், எஸ்.சி பிரிவில் இருக்கும் பிற சாதியினருக்கான அநீதியாக இருக்கிறது.
எஸ்.சி பிரிவில் எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, இனவாரிச் சுழற்சிமுறையில் எஸ்.சி - பொது என்று இருந்த இடத்தில், எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான இடமாக மாற்றி அமைத்த காலத்திலிருந்துதான், எஸ்.சி - பொது எனும் இனச்சுழற்சிமுறையில் பணிவாய்ப்பு அடைந்து கொண்டிருந்த இதர சாதியினர், எஸ்.சி இடஒதுக்கீட்டில் பணிவாய்ப்பு பெறுவதில் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர்.
எஸ்.சி எனும் இடஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இனவாரிச் சுழற்சிமுறையால் எஸ்.சி இடஒதுக்கீட்டில் கூட பயன்பெற முடியாமல் போயிருக்கும் சூழலில்தான், எஸ்.சி பிரிவில் இருக்கும் குறிப்பிட்ட சாதியினர் அந்தப் பிரிவிலிருந்து வேறுபட்டியலுக்கு மாறவேண்டும்; மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள்.
எஸ்.சி பிரிவில் தங்களுக்கான இடம் மறுக்கப்படுவதாலேதான், தங்களை எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அதேவேளையில், எஸ்.சி பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் பின்பற்றப்படும்
இனவாரிச் சுழற்சிமுறை அமைப்பை எதிர்கவும் வேண்டும். அதுவே, எஸ்.சி பிரிவில் இருக்கும் எல்லாச் சாதியினருக்குமான நீதியாக இருக்கும்.
இட ஒதுக்கீட்டைக் குறித்தும், உள் இட ஒதுக்கீட்டைக் குறித்தும், இனவாரிச் சுழற்சி முறை குறித்தும் தமிழ்ச் சமூகம் இன்னும் விளங்கிக்கொள்ளவே இல்லை.
எஸ்சி பிரிவில் இருக்கும் இதர சாதியினருக்கான நீதியைக் கோருவதைக் கூட சமூக அநீதியாகப் பார்க்கப்படும்; சாதிவெறியாகக் கருதப்படும் என்பதுதான் வேதனை.
ஏர் மகாராசன்
28/8/2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக