புதன், 14 அக்டோபர், 2020

பட்டியல் மாற்றக் கோரிக்கை சுயமரியாதைக் கோரிக்கையே! : மகாராசன்

எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் வேளாண் மரபின் சமூகப் பிரிவான தேவேந்திர குல வேளாளர்கள், தங்களை எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றி வேறு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையைப் பலகாலமாக முன்வைத்திருந்தாலும், அண்மைக்காலத்தில் அந்தக் கோரிக்கை மிகத்தீவிரமான வடிவத்தைப் பெற்று வருகின்றது. 

அம்மக்களின் பட்டியல் மாற்ற/வெளியேற்றக் கோரிக்கை பலதரப்பினரின் பேசுபொருளாக ஆகிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், அம்மக்களின் பட்டியல் மாற்றக் கோரிக்கையானது ஆரிய முகாம்களின் அரசியல் கோரிக்கை போலப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

அண்மையில், பட்டியல் மாற்றக் கோரிக்கையைச் சுயமரியாதைக் கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்; அதனோடு பகுத்தறிவு மற்றும் சமத்துவம் சார்ந்த கோரிக்கையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனப் பேராசிரியர் டி.தர்மராஜ் அவர்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதிய தமிழக மனித உரிமைகள் கழகத் தலைவர் தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் ஒரு கருத்தைச் சுட்டி இருக்கிறார். 

அந்தக் கருத்தும் எமது மறுப்பும் வருமாறு:

அரங்க குணசேகரன் கருத்து:

/மோடி அமித்சா ஆதரவோடு மோகன்பகவத் ஆசியோடு டாக்டர் கிருட்டிணசாமி இந்துமதச் சாக்கடையில் முக்கி எடுத்தாவது பள்ளர்களை தேவ இந்திரர்களாக மாற்றிவிடுவார்! கவலையே படாதீர்கள் வருங்காலக் காவிப் பள்ளர்களே!/

எமது மறுப்பு:

பட்டியல் மாற்றக் கோரிக்கை மோடி, அமித்சா, மருத்துவர் கிருசுண சாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட கோரிக்கை அல்ல. பொத்தாம் பொதுவாக அப்படிச் சுருக்கிப் பார்ப்பது நேர்மையல்ல.

ஒரு நூற்றாண்டு காலமாக அந்தச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கையே அது. 

மோடி வகையறாக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அந்த மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நியாயமற்றது என்றாகிவிடாது. இது அம்மக்களின் சுயமரியாதைக் கோரிக்கை. 

தமிழ்த் தேசிய, இடதுசாரிய, திராவிட முகாம்கள் அந்த சுயமரியாதைக் கோரிக்கையை ஆதரிக்காததன் விளைவாக, அதை ஆரிய முகாம்கள் தமது சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அம்மக்களின் சுயமரியாதைக் கோரிக்கையை மற்றவர்கள் முன்னெடுக்கிறபோது அந்த முகாமை நோக்கி அம்மக்கள் அணிதிரளுவார்கள். அவர்களைப் பொறுத்தளவில் அவர்களது சுயமரியாதை அங்கீகரிக்கப்பட வேண்டும் அவ்வளவே.

அந்தச் சமூகத்தின் ஒரு சில அரசியல் கட்சித் தலைமைகள் ஆரிய முகாமில் இருப்பதாலேயே அந்தச் சமூகத்தினர் அனைவரும் காவிக் கும்பலாகச் சித்தரிக்கும் தங்களது கருத்து ஏற்புடையது அல்ல; உண்மையும் அல்ல. 

திரு எல்.முருகன் பாசகவின் தலைவர் என்ற நிலையில் இருக்கும்போது, அருந்ததிய மக்கள் அனைவருமே காவிக் கும்பல் எனச் சுட்டுவீர்களா? அவ்வாறு சுட்டுவதும் அடையாளப்படுத்துவதும் நேர்மையும் உண்மையும் அல்ல.

அதேபோல, ஆதிதிராவிடச் சமூகத் தலைவர்கள் ஒரு சிலர் பாசகவில் அய்க்கியம் காட்டிக் கொண்டிருக்கும் சூழலில், ஆதிதிராவிடர்கள் அனைவரும் காவிக்கும்பல் எனச் சுட்டுவீர்களா? அவ்வாறு சுட்டக் கூடாது; சுட்டவும் முடியாது.

இந்நிலையில், தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை ஆரிய முகாம்கள் ஆதரிப்பதாலோ அல்லது அந்தச் சமூகத்தின் ஒருசில தலைவர்கள் அந்த முகாமில் இருப்பதாலோ அந்த மக்கள் அனைவரும் ஆரியக் காவிக் கும்பலாக மாறுகிறார்கள்; மாறப்போகிறார்கள் எனக் கருதுவதும் கருத்துரைப்பதும் சரியல்ல; அதுவே உண்மையும் அல்ல.

அந்த மக்களின் கோரிக்கையை அவர்களின் சுயமரியாதைக் கோரிக்கையாக, அந்த மக்களின் சனநாயகக் கோரிக்கையாகப் பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும், சமூக இயக்கங்களும் ஆதரிக்கவே செய்கின்றன.

ஆரிய முகாம்களைச் சாராத மற்ற அரசியல் முகாம்களும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்ற நிலையில், பட்டியல் மாற்றக் கோரிக்கையை, அதை முன்னெடுக்கும் சமூகத்தினரை ஆரிய முகாமைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்துவது சமூகக் கண்ணோட்டக் குறைபாடு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களின் சனநாயகக் குரலுக்கும் எதிரானதும் ஆகும்.

ஏர் மகாராசன்

13.10.2020.

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக