புதன், 15 மார்ச், 2023

அறிஞர் அண்ணாவின் கபோதிபுரக் காதல் : அம்சம் மகாராசன்

புதுப்பொலிவுடன் உலகம் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறது. விழித்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிழைத்துக்கொள்வதற்காகத் தந்திர வித்தைகளை நடத்துகின்றன. 

சுதந்திரப்போக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதார்த்தம். இதில் மனிதர்கள் மட்டும் தன் இனத்தைச் சீரழிக்கும் இழி செயல்களைச் செய்து, அதற்குப் பெயர் பெண்மை, தாய்மை என்று மேலோட்டமான புனிதத்தன்மையைக்  கற்பித்துள்ளனர். 

மனம் பொருந்தாத துணைவனுடன் வாழவும் முடியாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்த காதலனை மறக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டு, ரசமற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மீது இயல்பாக இரக்கம்தானே வரவேண்டும். இல்லையென்றால், பெண் பெருமை கொள்ளும்படியான வேறு வாழ்க்கையைக் காண்பிக்க வேண்டும். 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காமவெறி பிடித்த சில மனித ஜென்மங்களால் பெண் சீரழிக்கப்படுகிறாள். வெளியில் தெரிந்தால் உலகம் பாதிப்புக்குள்ளான பெண்ணைத்தானே தூற்றும் என்னும் சமூக பழக்க வழக்கத்தால், அதை மறைத்து வாழ முற்படும் பெண்ணின் நிலை அடுத்தடுத்து சறுக்கு மரமாகிறது என்பதையே இக்குறுநாவல் எடுத்துரைக்கின்றது.

பிறர்மனை நோக்கும் காமக் கூட்டம் தன் குடும்பத்தையும் அழித்து, பாழாய்ப் போன ஊருக்குப் பயந்து பயந்து வாழும் பெண்களின் குடும்பத்தையும் கெடுப்பதில்  படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண் என்ற வேறுபாடில்லாமல் வாழும் ஈனப் பிறவிகளைச் சாடுவதற்காகவும், அத்தகையவர்கள் திருந்துவதற்காகவும், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட குறுநாவல்தான் கபோதிபுரக் காதல். 1968 இல் திராவிடப் பண்ணை வெளியிட்ட இந்நூலை, தற்போது ஆதி பதிப்பகம் மீள்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

இக்குறுநாவல் வெறும் 64 பக்கங்கள்தான். ஆனால், பல கோடி செலவில் வெளியாகும் திரைப்படங்கள் ஊட்டமுடியாத - உணர்த்த முடியாததை எழுத்தில் அறிய வைத்திருக்கிறது. 

கணவன் வீராச்சாமிக்குப் பயந்து பயந்து குடும்பக் கடமையாற்றுபவர் வேதவல்லி. தான் பெற்ற பெண் பிள்ளையின் உணர்வைப்  புரிந்துகொண்டாலும், கணவனிடமும் சொல்லாது, பிள்ளையிடமும் எதுவும் காட்டிக்கொள்ளாத அடக்கக் குணம் கொண்டவள். இருப்பினும், பல்வேறு தொழில்கள் செய்து, எல்லாவற்றிலும் நட்டமும் கடனும் பட்டதால் ஏழ்மை நிலைக்கு வந்துவிடுகிறது அவர்களது குடும்பம். இதனால், 16 வயது மகள் சாரதா என்ற ராதாவை ஜமீன்தார் போன்ற பணக்காரத் தோரணையிலிருக்கும் மாரியப்பப் பிள்ளைக்கு 3 ஆவது மனைவியாகத் திருமணம் செய்துகொடுக்க முற்படுகிறது. இதற்கு  முன்பே  ராதா, ஜமீன்தார் பேரன் பரந்தாமன் மீது காதல் வயப்பட்டிருந்தவள். பரந்தாமனும் அவளை மனதுக்குள் நினைத்திருந்தவன். தற்போது 60 வயது நிரம்பிய ஜமீன்தார் மாரியப்பப் பிள்ளைக்கு 16 வயது மட்டுமே எட்டிய மிக அழகு வாய்ந்த பதுமைப் போன்ற பெண்ணான ராதா மனைவியாகிறாள். 

ராதாவின் மனமோ கிழவனோடு மணவாழ்வில் ஒட்டவில்லை. அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்த உலகில், பரந்தாமனின் சந்திப்பில் தன்னை மறந்த ஒரு நொடியில் ஏதேதோ மாற்றங்கள் தம் வாழ்வில் ஏற்பட்டு விடுகின்றன.  சமயம் பார்த்த கணக்குப் பிள்ளை கருப்பையா, ராதா வாழ்க்கையில் காம வேட்டையாடிச் சீரழிகிறான். வெளியில் தெரிந்தால் ஊர் என்ன பேசும் என்று பயந்து பயந்து ராதா வாழ்ந்து கொண்டிருக்கையில், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், நகரத்திலிருந்து வருகிறவர்கள், சாமியார்கள் என்று பலரையும் நம்பினாள். நாளும் நல்ல காரியங்களைக் கற்றுத்தருவார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு அதிர்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. நன்றாகப் பேசிச் சிரித்துக்கொண்டே தன் இனத்தை வேட்டையாடும்  இழிசெயலைச் செய்யும் மனிதர்களிடம் அவள் அகப்பட்டுக்கொண்டாள். 

அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்வைப்  பதிவு செய்து மிரட்டி சுகபோக வாழ்வு வாழும் மனிதர்களால் நிம்மதியை இழக்கிறாள். பணம், பொருள், உறவு எல்லாம் இழக்கிறாள். இறுதியில் தாலி கட்டியவனையும் இழக்கிறாள். 

நல்லவர்களால் உலகம் இன்று நிலைத்திருக்கிறது என்பது போல, ராதா மீதான காதலைச் சுமந்தலைந்த பரந்தாமன் அம்மை நோயால் கண்பார்வையை இழக்கிறான். கண்ணில்லா கபோதியான பின்பு, ராதாவைச் சந்திக்கிறான். 

சமூகம், திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக்கொள்ளும். தாங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும். ராதா போன்ற பெண்கள், கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும். முன்சென்றால் ஓடிவிடும். சமூகப் பழக்கவழக்கம் என்னும் கொடுமையை எதிர்த்தால்தான் கண்ணுள்ள  கபோதிகள் முன் வாழ முடியும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் அறிஞர் அண்ணா.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால், காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான்; எதுவுஞ்செய்வான்; எவர்க்கும் அஞ்சான்; எதையும் கருதான். 

ஆம்! இன்னமும்,மாடமாளிகை, கூடகோபுரங்களை விட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். எதையும் இழப்பான். காதலை இழக்கத்துணியான். இப்படியாக, ராதாவுக்கு மறுவாழ்வைக் கொடுத்து காதலையும் வாழ்விக்கச் செய்கிறான் பரந்தாமன். இவ்வாறு, கபோதிபுரக் காதலை நிலைநாட்டுகிறார் அறிஞர் அண்ணா.

அறியாத வயதுகளில் புரியாத மனதுடன் அல்லல்படும் பெண்ணின் வேதனையைச் சமூக சீர்த்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும்  நின்று எழுதிய பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். இக் குறுநாவலை அழகுடன் வடிவமைத்துப் பதிப்பித்திருக்கும் ஆதி பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

*

கபோதிபுரக் காதல் (குறுநாவல்),

அறிஞர் அண்ணா, 

முதல் பதிப்பு : டிசம்பர் 2022, 

பக்கங்கள்: 64,

விலை: ரூ 80/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், சென்னை.

பேச: 99948 80005



3 கருத்துகள்:

  1. பெயரில்லா15/3/23, 6:30 PM

    அருமையான விமர்சனம். பெண்களைக் காமப் பொருளாகவே பார்க்கும் இழி மனிதருக்குச் சவுக்கடியாய் வெளிவந்திருக்கிறது புதினம். அதனை அருமையான புரிதலோடு விமர்சனம் செய்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள் அம்சம் மகாராசன். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா15/3/23, 6:30 PM

    செ.முத்தரசப்பன்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா15/3/23, 11:00 PM

    கண்ணியமாகப் பெண்ணியம் காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அண்ணாவின் படைப்பு உள்ளது. அக்கருத்தை வலிமை சேர்க்கும் விதமாக அழகிய விமர்சனத்தை நல்கிய அம்மா அம்சம் மகாராஜன்
    அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு