ஞாயிறு, 19 மார்ச், 2023

புதிய பாடத்திட்டம்: மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடுகிறதா? : மகாராசன்.


அண்மையில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான +2 மற்றும் +1 அரசுப் பொதுத் தேர்வுகளில் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை; தேர்வெழுத வரவில்லை என்கிற தகவல் தற்போது சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாகி இருக்கின்றது. 

மிகப்பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. மாணவர்களின் சமூகப் பொருளாதார மற்றும் குடும்ப நிலைமைகள், குடும்ப வருவாய்க்காகப் பொருளாதார உழைப்பில் ஈடுபடுதல், குடும்ப உறுப்பினர்களின் அறியாமைச் சூழல், பெற்றோர்களை இழந்திருத்தல், மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கம், சமூகக் குற்றவாளிகளுடன் சேர்க்கை, செல்பேசிப் பயன்பாடுகள், சமூக ஊடகங்களில் அதிகப்படியான புழக்கம், நுகர்வு வெறிக் கலாச்சாரம், லும்பன்கள் எனப்படும் உதிரிக் கலாச்சார மனப்போக்கு, அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு என, பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகம் மையமிட்டவை.   

இவை போன்றோ அல்லது இன்னும் பிறவோ நிறைய இருப்பினும், எல்லாத் தரப்பினராலும் கவனிக்கத் தவறுகிற அல்லது கவனிக்க வேண்டிய கல்விசார்ந்த காரணிகளும் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களைக் கல்விச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கும் கல்விசார் அகக் காரணிதான் என்ன?

பொதுவாக, கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் அடைவுகளைப் பெற வைப்பதற்கான கற்பித்தல்- கற்றல் செயல்பாடுகள்தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத் தான் கல்விசார் கலைத்திட்டமானது / கல்வித் திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு உகந்த, பெருவாரி மாணவர்களைப் பங்கேற்கிற வகையில்தான் கடந்த காலத்தியக் கல்வித்திட்டங்கள் அமைந்திருந்தன.

ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாக, அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் விதமாக அமைந்திருந்தன. குறிப்பாக, கல்வி கற்கும் மாணவர்களை மூன்று வகைப்பட்ட தன்மையில் வகைப்படுத்துவர் கல்வி உளவியலாளர்கள். அதாவது, மீத்திறன் மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என மூன்று வகைப்பட்ட மாணவர் தரப்பினர் கல்விச் சூழலுக்குள் இருப்பர். 

மேற்குறித்த மூன்று தரப்பினரையும் மனதில் வைத்துக்கொண்டு தான் - அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறுதான் கல்வித்திட்டப் பாடப்பொருண்மைகள், கற்பித்தல் பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு பாடத்திலும் குறைவான அளவுக்கே பாடப்பொருண்மைகள் வைக்கப்பட்டு, கற்றல் பயிற்சிகள் நிறைய அளிக்கப்பட்டன. இதனால், மீத்திறன் மாணவர்களும், சராசரி மாணவர்களும், மெல்லக் கற்போரும் கற்றல் அடைவுகளின் குறைந்தபட்ச எல்லைகளைக் கடந்து உயர்கல்விக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, மூவகைப்பட்ட மாணவத் தரப்பினரையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா? எனச் சந்தேகிக்கப்பட வைத்திருக்கிறது. புதிய பாடத்திட்டம் எனும் பெயரில் மிக அதிகப்படியான பாடப் பொருண்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருப்பதாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கருதும்படி ஆகியிருக்கிறது. சின்னஞ்சிறு குருவி தலையில் பூசணிக்காயைச் சுமக்க வைத்திருப்பதைப் போலத்தான் மாணவர்கள் உணர்கிறார்கள். அதேபோல, பத்து வண்டிகளில் ஏற்றும் பாரத்தை, ஒரே வண்டியில் ஏற்றி வைத்து, அந்த வண்டியை இழுத்துச் செல்லமுடியாமல் முக்கித் தவிக்கும் வண்டி மாட்டின் பரிதாப நிலையில்தான் ஒவ்வொரு ஆசிரியரும் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பாடத்திட்டத்தை நவீனப்படுத்துவதையும் தரவேற்றம் செய்வதையும் குறையாகவோ அல்லது குற்றமாகவோ கருத வேண்டியதில்லை. அதேவேளை, அது யாருக்கானது? என்ன தரமுடையது? என்ன பலமுடையது? என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது? எல்லோருக்குமான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே ஒரு தலைமுறைக்கான பாடத்திட்டம்/கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஆனால், புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.

அதாவது, இப்போதைய புதிய பாடத்திட்டப் பொருண்மைகளும், அதையொட்டிய தேர்வு முறைகளும் மீத்திறன் மிக்க மாணவர்கள் மட்டுமே அதிகப்படியாகப் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. சராசரி மாணவர்கள்கூட திக்கித் திணறிக் கற்கும் சூழலில்தான் இருக்கின்றனர். மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டப் பொருண்மைக்குள்ளும் தேர்வு முறைகளுக்குள்ளும் நுழைந்து நுழைந்து பார்த்தாலும் நுழையவே முடியாமல் அல்லல்படுகின்றனர். எதைப் எதைப் படித்தால் குறைந்தளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணாவது பெறலாம் என்கிற நிலைமைகள் இப்போது இல்லை. 

கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் வைத்திருக்க வேண்டிய பாடப் பொருண்மைகளை, பள்ளி மாணவர்களின் பாடப் பொருண்மைகளாக அதிகளவில் வைத்திருப்பதைப் பார்க்கும் மெல்லக் கற்கும் மாணவர்கள் ஒருவிதத் தயக்கத்தோடுதான் பள்ளி வகுப்புகளில் சேர்கின்றனர்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதை எதைப் படிக்க வேண்டும்? புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே அவர்களால் தேர்ச்சி பெறமுடியும்; இல்லையெனில் தோல்விதான் என்கிற நிலைமையை அவர்கள் அறிகிறபோது, மெல்ல மெல்ல அதிலிருந்து அந்நியப்படத் தொடங்குகிறார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களை, குறைந்தளவு மதிப்பெண் எடுத்தாவது தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. பாடங்கள் முழுவதையும் படிக்க வைத்தால்தான் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பாடங்கள் முழுவதையும் படிக்க வைக்க முடியாத சூழல்தான் ஆசிரியர்கள் முன்னிருக்கும் சவால்.

மெல்லக் கற்கும் மாணவர்கள், தம்மால் பாடங்கள் முழுமையையும் முற்றும் முழுதாகப் படிக்க முடியாது; இயலாது எனத் தெரிந்த பின்னரும், அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பல்வேறு பாடங்களில் நேரப் போகும் தோல்விகளை எதிர்கொள்வதற்கு அம்மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால், பள்ளிக்கும் வருவதில்லை; வகுப்புக்கும் வருவதில்லை; தேர்வுக்கும் வருவதில்லை எனத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர் அல்லது அந்நியப்படுத்திக்கொள்ள முனைந்து விட்டனர்.

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 9ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறித் தேறிய மாணவர்கள், 11ஆம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் இருக்கின்ற பாடநூல்களின் கனம், பாடப்பொருண்மை, கற்றல் கற்பித்தல் நெருக்கடிகள், குறைந்தளவுத் தேர்ச்சிகூடப் பெறுவதற்கு வழியின்மை போன்றவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட மெல்லக் கற்கும் மாணவர்களுக்குக் கல்வியிலும் கற்றலிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது.

புதிய கல்விச் சூழலில், மெல்லக் கற்கும் மாணவர்களின் இத்தகையத் தனிமைப்படுத்தலுக்கும் அந்நியப்படுத்தலுக்கும் மாணவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது; கூடாது. மாறாக, புதிய பாடத்திட்டக் கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் நோக்கிலேயே அமைந்திருப்பதனால்தான், மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் பங்கேற்புகள் குறைவாகவும் தனிமைப்பட்டும் அந்நியப்பட்டும் விலக்கி வைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால்தான், அதிகளவிலான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. ஒருகாலத்தில், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியை வைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையைப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் கையாளப்படும் சூழலில் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டியது கட்டாயமாகும்.

அதாவது, மீத்திறன் மாணவர்களுக்கு மட்டுமே உரியதாகப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்படாமல், மெல்லக் கற்கும் மாணவர்களையும் உள்ளடக்கியப் பாடத்திட்டப் பொருண்மைகளும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் கல்வித்துறை உடனடியாகச் செய்திடல் வேண்டும். இத்தகையச் சீரமைப்பில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்திரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும்.

கல்வித்திட்டச் சீரமைப்பின் முதற்கட்டமாக, எல்லா வகுப்புகளிலும் எல்லாப் பாடங்களிலும் பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய பிறகு, மறுபடியும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில் நிறைய உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையை இரத்து செய்து, 12ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வாக நடத்திட கல்வித்துறை நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். தேர்வு முறைகளில் வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) என்கிற ஒரு நடைமுறை இருந்து வந்தது. அந்த நடைமுறை புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின்போது நீக்கப்பட்டது. இதனால், ஒரு பாடத்தில் எங்கிருந்து கேள்வி கேட்பார்கள்? எத்தனை மதிப்பெண்கள் எந்தெந்தப் பாடங்களில் கேட்பார்கள்? எதைப் படிக்க வேண்டும்? புத்தகப் பயிற்சி வினாக்களில் (Book back Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? புத்தக உள்நிலையிலிருந்து (Interior Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? என்கிற வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) ஆசிரியருக்கும் மாணவருக்கும் தெரிந்தால் மட்டுமே அதற்கேற்றவாறு மூவகைப்பட்ட மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க முடியும். 

குறிப்பாக, மெல்லக் கற்கும் மாணவரையும் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில், தேர்ச்சி பெற இயலாத அல்லது தேர்ச்சி பெற வைக்க முடியாத சூழல் இருப்பதால் தான், அதிகளவு இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகையால், புதிய பாடத்திட்டத் தேர்வுமுறைகளில் உடனடியாக வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இம்முறை நடைமுறைக்கு வரும்போது மெல்லக் கற்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதற்கான வாய்ப்புகளும், அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் ஏற்படும். 

இவற்றோடு, ஆசிரியர்களைச் சமூகமும் கல்வித்துறையும் மாணவர்களும் அவமதிப்புக்கும் பாதிப்புக்கும் உள்ளாக்காத வகையில் அவர்களுக்கு முழுமையான பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். 

அலுவல் காரணங்களுக்காகவும் தரவுகள் பதிவேற்றங்களுக்காகவும் வெகு தீவிரமாகப் புழக்கத்திலிருக்கும் செல்பேசிப் பயன்பாடுகளை பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பதை உடனடியாகத் தடைசெய்திடல் வேண்டும். கற்றல் கற்பித்தல் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம்திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவுமான கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஓரளவுக்கேனும் கல்வித்துறை சீரமைய வாய்ப்பிருக்கிறது.

(கல்விச் சூழல் குறித்து இன்னும் நிறைய நிறையப் பேசவும் எழுதவும் உரையாடவும் செய்திட வேண்டும். கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும் எழுதவும் உரையாடவும் வேண்டிய நேரமிது. செய்திடுவோம். 

இக்கட்டுரைகூட, மெல்லக் கற்கும் மாணவர்களின் அந்நியப்படுதலை மட்டுமே முதன்மைப்படுத்தி உள்ளது. இன்னமும் இதைப்போன்ற கல்விசார் பிரச்சினைகள் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைத்தல் நன்றாம்.)

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.




6 கருத்துகள்:

  1. பெயரில்லா19/3/23, 8:50 PM

    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  2. செ.முத்தரசப்பன்20/3/23, 9:43 PM

    அருமையான, ஆழமான அலசல் ஐயா. பாடப்பொருண்மைகளின் கனம் குறித்த கருத்தாடல் உடனடித் தேவையாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா13/5/23, 9:05 AM

    Nice article

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா13/8/23, 7:38 AM

    ஐயா, கடந்த பொது தேர்வில் 50ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்வை நிராகரித்து இருப்பதற்கு குறிப்பான காரங்கள் நம்மை ஆளுகின்றவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மாணவர்கள் இழுத்து விட்டார்கள் கற்றுக் கல்விக்கான வேலையை நேர்மையான முறையில் கொடுப்ப்பதற்கான தகுதியை ஆளும் அதிகார வர்க்கம் இழந்து விட்டது என்ன கற்றாலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் இழந்து விட்டார்கள் நம்பிக்கையை அளிக்க வேண்டியது ஆளும் அதிகார வர்க்கத்தின் பொறுப்பாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா13/8/23, 7:48 AM

      முற்றிலும் உண்மை சார்
      எந்த அதிகார வர்க்கம் இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்தது?இதற்கு முன் ஆண்ட வர்க்கமா?

      நீக்கு