வெயிலில் தோய்த்த
மஞ்சளைப் பூசிக்கொண்ட பழுப்பெய்திய இலைகள்
காற்றில் நீந்தியபடி
சறுகென முத்தமிடுகின்றன
தூர் மண்ணில்.
அறுப்புக் கழனியில்
சிந்தித் தப்பிய நெல்மணிகள்
கோடை மழையொன்றில்
ஊறிக்கிடந்து
வெள்முளை காட்டிச்
சிரித்துக் கிடக்கின்றன.
வெள்முளை காட்டிச்
சிரித்துக் கிடக்கின்றன.
அலகு நோகக் கொத்தித் தின்று இரைப்பை நெப்பிய
கவுதாரிப் பறவைகள்
பனந்தூர்க் குதுவல் மறைவில்
சிறகை நீவிக்கொண்டிருக்கின்றன.
திக்குகளில் அலைந்து திரிந்து
இறக்கை வலிக்கப் பறந்து வந்த
சுள்ளான் குருவியொன்று
வெறுங்கிளையின் அம்மணத்தில் கால்விரல் கவ்வி அமர்ந்திருக்கிறது.
சுள்ளான் குருவியொன்று
வெறுங்கிளையின் அம்மணத்தில் கால்விரல் கவ்வி அமர்ந்திருக்கிறது.
இளைப்பாற இடமிருந்தும்
களைப்பாற மனமில்லாமல்
இறகுகள் துவள
சிறகை அடித்துப்
பறந்து கொண்டே இருக்கிறது
வல்லூறு ஒன்று.
வெறுமை ததும்பிய வானத்தை
வெறித்துப் பார்த்தபடி
ஆறுதலாய்க் கிடக்கிறது
தனிமைப் பொழுது.
கால்த்தடம் மறைந்த பாதையொன்று
மூதாதைகளின் பாடுகளைச் சுமந்து
நீண்டு கிடக்கிறது.
கண்ணீர் கசிய வட்டமிடும்
மனப் பறவையொன்று
தன்னைத் தொலைத்துக்கொண்டே
ஒவ்வொரு இறகாய் உதிர்த்துக்கொண்டிருக்கிறது.
வாழ்தல் நிமித்தங்களை
மென் சிரிப்புடன்
எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறது
ஊழிப் பெருங்காலம்.
ஊழிப் பெருங்காலம்.
ஏர் மகாராசன்
29.03.2023.
அருமை தோழர்! நினைவின் அடுக்குகளை கிளர்ந்து, மகிழ்வித்து மகிழும் வரிகள் தந்தமைக்கு தமிழுக்கும் உங்களுக்கும் நன்றி! சுரேசுகுமார் நாகராசன்
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா. தங்கள் பாராட்டு எம்மை வளப்படுத்தும்
நீக்கு