வெள்ளி, 24 மார்ச், 2023

ஆரிய மரபின் நால் வருணப் பகுப்பு வேறு; தமிழ் மரபின் தொழில்குலப் பகுப்பு வேறு - மகாராசன்


ஆரிய வைதீக மரபினரின் நால் வருணக் கருத்தாக்கம் குறித்து விவரிக்கும் பாவாணர், ‘மக்களை நால் வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும், சத்திரியனுக்குச் செந்நிறமும், வைசியனுக்குப் பொன் நிறமும், சூத்திரனுக்குக் கருநிறமும் சார்த்திக் கூறி, நால் வரணப் பாகுபாட்டை ஏற்படுத்தி, பிராமணர் கல்வித் தொழிலையும், பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழில்களையும் வழிவழி செய்து வர வேண்டுமென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவர் என்றும், சூத்திரன் மேல் மூவர்க்கும், வைசியன் மேல் இருவர்க்கும், சத்திரியன் பிராமணருக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்றும், இது இறைவன் ஏற்பாடு என்றும், மேல் வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளர் என்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலும் கேட்கக் கூடாது என்றும், பிராமணனைக் காணின் மற்ற மூவரும் தத்தம் தாழ்வு நிலைக்குத் தக்கவாறு ஒதுங்கி நிற்க வேண்டுமென்றும் இறைவன் கட்டளை இட்டது போல் கற்பித்து விட்டனர். 

இச்சட்ட திட்டம் வடநாட்டில் விரைந்து முழுவதும், தென்னாட்டில் படிப்படியாகப் பேரளவும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. இங்ஙனம், இயற்கையாகத் தொழில் பற்றியிருந்த குலப் பாகுபாடு, நிறம் பற்றி மாற்றியமைக்கப்பட்டது’ என்கிறார்.

மேலும், ‘நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான 'விராட்' என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்னும் 'புருட சூத்தம்' இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்தில் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம்பொருள் கருத்தும் பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே. 

முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும், ஏனை மூன்றும் ஒன்றினொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும் இருப்பதுபோல், நால்வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரின் ஒருவர் தாழ்ந்தவரும், மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டியவருமாவர் என்பதும், நால் உறுப்பும் ஒரே ஆள் வடிவான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால் வரணமும் இறைவன் படைப்பு என்பதும் கருத்தாம். 

இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த் தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடையும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும் வேண்டும் என்பது உட்கருத்தாம். 

இனி, போருக்கு வேண்டும் தோள் வலிமை மறக் குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடியினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல் வலிமை பாட்டாளி மக்கட்கும் இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன்மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே உண்டென்பதும், ஆதலால் நால் வரணத்தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டும் என்பதும், நச்சுத் தன்மையான சூழ்ச்சிக் கருத்தாம்’ என்கிறார் பாவாணர். 

பிறப்பின் அடிப்படையிலான குலப் பாகுபாடுகளைத் தமிழர் மரபு ஏற்றதில்லை; ஏற்பதில்லை என்பதை,

     பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

     செய்தொழில் வேற்றுமை யான்

என, திருக்குறள் தெளிவுபடச் சுட்டியிருப்பதும் நோக்கத்தக்கது ஆகும். 

செய்த தொழிலாலும், செய்கின்ற தொழிலாலும்தான் தமிழர் மரபில் தொழில் குலங்கள் உருவாகி இருக்கின்றன. இந்நிலையில், வேளாளன், வணிகன், அரசன், அந்தணன் என்பதே இயற்கையான வரலாற்று முறைப்பட்ட நால் வகுப்பு வரிசை எனும் வகையில் பாவாணர் விளக்கப்படுத்தும் கீழ்வரும் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

‘எல்லார் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையாத உணவை விளைவிப்பதனாலும், நிலையாகக் குடியிருந்து விளைவில் ஆறில் ஒரு பங்கைக் கடமையாக விறுத்து அரசை நிலை நிறுத்துவதனாலும், போர்க்காலத்தில் படைஞனாகிப் பொருது வெற்றி உண்டாக்குவதனாலும், இரப்போர்க்கு ஈந்து துறப்போர்க்குத் துணையாய் இருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும் தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளர் எல்லாம் உழவனுக்குப் பக்கத்துணைவராகவே கருதப்பட்டனர். 

வெளிநாட்டு அரும்பொருள்களை எல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக்கு அவ்வப்போது பண உதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன், உழவனுக்கு அடுத்தபடியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரர்களாலும் பகைவராலும் அதிகாரிகளாலும் கடு விலங்குகளாலும் உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமல் காக்கும் அரசன், பணி வகையில் வணிகனுக்கு அடுத்தபடியாகவும், அதிகார வகையில் கண்கண்ட கடவுளாகவும் கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரிபவனும், ஆக்க வழிப்பாற்றல் உள்ளவனுமான அந்தணன், இறைவனுக்கு அடுத்தபடி தெய்வத்தன்மை உள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம், உழவு, வாணிகம், காவல், கல்வி என்னும் நால்தொழிலே தலைமையாகக் கொள்ளப்பட்டு எல்லாக் கைத்தொழில்களும் உழவுள் அடக்கப்பட்டன’ எனக்கூறும் பாவாணர், ‘நாகரிகம் முதிர்ந்து அறிவு வளர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் தமிழ்ப் பொருள் இலக்கண நூலார் கிளவித் தலைவரைத் தொழில் அடிப்படையில் நாற்பாலாக வகுக்கும்போது அறிவாற்றல், அதிகாரம், செல்வம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு கொடுத்து அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தலைகீழாக மாற்றி விட்டனர்’ என்கிறார். 

ஆயினும், ஆரிய வைதீகத்தின் நால் வருணப் பகுப்பிற்கும், தமிழரின் நால்வகைத் தொழில் பகுப்பிற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. தமிழரின் நால்வகைத் தொழில் பாகுபாடும், தொழில் குலங்களும் கற்பிதங்களாக உருவாக்கப்படவில்லை. சமூக வளர்ச்சிக் கட்டங்களில் நிலவிவந்த - சமூகத் தொழில் உற்பத்திக் கட்டங்களில் உருவான தொழில் அமைவுகளின் அடிப்படையில்தான் தொழில் குலங்களும் - தொழில் பாகுபாடும் உருவாகி இருக்கின்றன. 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக