தமிழர் வரலாற்றைக் கலைப் படைப்பாக்கும் பெருமுயற்சியில் யாத்திசை திரைப்படமானது முன்களத்திற்கு வந்திருக்கிறது.
யா எனில் தெற்கு என்பது பொருள். யாத்திசை எனில், தென்திசை என்பது பொருள். தமிழ் நிலத்தின் தென்திசையில் நிகழ்ந்த அதிகார முரண்களைப் பேச வந்திருக்கிறது யாத்திசை எனும் திரைப்படம்.
அதிகாரத்தை நுகரத் துடிக்கும் ஒரு தரப்புக்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் இன்னொரு தரப்புக்குமான பகையும் போரும் வெற்றியும் தோல்வியும்தான் யாத்திசை படத்தின் திரைகதைக்கருவும் களமும் ஆகும்.
கி.பி ஏழாம் நூற்றாண்டில் நிகழ்வதாகக் காட்சி மொழியில் விரியும் கதையானது, பாண்டிய மரபின் இரணதீர பாண்டியருக்கும், சோழ நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதான எயினக் குடிக்குமான அதிகாரச் சண்டையை வரலாற்றுப் புனைவாக விவரித்திருக்கிறது.
பாண்டியர்கள் சோழநாட்டைக் கைப்பற்றியபோது, சோழ நிலத்திலிருந்த எயினக் குடிகள் பாலைநிலத்திற்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். பாலை நிலத்தில் வேட்டைச் சமூக வாழ்வியல் நெருக்கடிக்குள் உழன்று தவிக்கும் எயினர்கள், மீளவும் தங்கள் நிலத்தையும் அதிகாரத்தையும் அடையத் துடிக்கிறார்கள். தமது வருங்காலத் தலைமுறை இந்த வாழ்வை அனுபவிக்கக் கூடாது எனக் கருதும் எயினக் குடியின் கொதி என்பான், தமது குடிகளை இரணதீரப் பாண்டியனுக்கு எதிராகப் போர் செய்திடத் தயார்படுத்துகிறான். அந்தவாறே, சோழ நிலத்திலிருக்கும் பாண்டியரின் கோட்டையைக் கைப்பற்றுகின்றன எயினப் படைகள். இந்நிலையில், பதுங்கியிருக்கும் சோழர்களின் படை உதவியைப் பெறமுடியாத நிலையில், பெரும்பள்ளிகளின் பெருந் துணையோடு பாண்டியப் படைகளின் சுற்றிவளைப்பில் சிக்குண்டு போகிறது கொதியும் எயினப் படைகளும்.
இரு தரப்பும் போர்க்கள உயிர்ப்பலியை விரும்பாத நிலையில், இரணதீரப் பாண்டியனும் கொதியும் தனியர்களாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். தனியர்களாகச் சண்டையிடுவோரில் எவர் வெல்கிறார் என்பதே திரைப்படத்தின் உச்சமும் முடிவும். களத்தில் எயினக் குடியின் கொதியைத் தோற்கடித்துக் கொன்று விடுகிறான்; பாண்டிய அதிகாரத்தை நிலைநிறுத்துகிறான் இரணதீரப் பாண்டியன் என்பதாகப் படம் நிறைவடைகிறது.
படத்தில் வரும் கதைமாந்தர்கள், நடிப்புப் புலப்பாடுகள், போர்க்களக் காட்சிகள், களப்பலிகள், போர்ச் சடங்குகள், அதிகாரக் கட்டுமானங்கள், காட்சிப்படுத்திய விதங்கள், பின்னணி இசை, நடனங்கள், கதைக் களங்கள், கதைத் தொடர்ச்சி, உரையாடல்கள் யாவும் திரைமொழியில் ஒருவகையான புதிய புதிய அனுபவங்களைத் தந்திருக்கின்றன. வழக்கமான வணிகத் திரைப்படப் பாணியிலிருந்து விலகிய ஒரு புதிய திரைப்பாணியை யாத்திசை காட்டியிருக்கிறது. இதுபோன்ற கலைப்படைப்பாக்க முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை; பாராட்டப்படவேண்டியவை.
வரலாற்று நிகழ்வைப் பேசியிருப்பதில் நிறைய திரிபுகளும் விடுபடல்களும் குறைகளும் இருப்பினும், பாண்டிய நிலப்பரப்பையும், பாண்டியர்களின் வரலாற்றையும், சிறு சிறு குடிகளின் வரலாற்று இருப்பையும் திரைக்கலைக்குள் கொண்டுவந்திருக்கும் யாத்திசை திரைப்படத்தைத் தமிழர்கள் வரவேற்றுப் போற்றிட வேண்டும்; துணை நிற்க வேண்டும்.
ஏனெனில், தமிழர் மரபின் பாண்டிய வரலாற்றை உள்ளபடித் தேடிப்பார்க்கும் தூண்டலை இப்படம் தந்திருக்கிறது என்பது மட்டுமல்ல; தமிழர் வரலாற்று நுண் உணர்வுகளையும் இப்படம் தந்திருக்கிறது. ஆகையாலே, யாத்திசை தமிழர் மரபின் ஆகச் சிறந்த கலைப் படைப்பாகவே மிளிர்கிறது. அதேவேளை, இந்தப் படத்தை முன்வைத்த வரலாற்றுத் தரவுகள் குறித்த விமர்சனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வரலாற்று நிகழ்வுகளைப் புனைவாக்கும்போது, குறிப்பாகக் காட்சி மொழியில் புனைவாக்கும்போது வரலாற்றுத் திரிபுகள் நேர்ந்திடக்கூடாது. மொழி, நாகரிகம், வாழ்வியல், கலையறிவு, நாகரிகம், போர்நிகழ்வுகள், பண்பாடு போன்ற தனித்துவங்களைத் தரவிறக்கம் செய்திடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது கலைப்படைப்பாளர்கள் கவனிக்க வேண்டிய கூறுகள்.
கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தமிழர் வாழ்வியலும், உடல், உடைத் தோற்றப் புலப்பாடுகளும், போர்நெறிகளும் மிக வளர்ச்சி அடைந்த நாகரிக அடையாளங்களைக் கொண்டிருப்பவை. கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகான காலத்திலேயே நாகரிக வாழ்வியலும் தமிழர் அடையாளத் தோற்றப்பாடுகளும் பண்பட்ட நாகரிகத் தோற்றத்தைக் கொண்டிருந்தவை என இலக்கிய இலக்கணச் சான்றுகள் நிறையக் காட்டுகின்றன. ஆகையால், தமிழரின் உடலியல், உடை, முகத் தோற்றப்பாடுகள் குறித்து இனிவரும் கலைப்படைப்புகளில் கவனம் கொள்ள வேண்டும்.
படத்தில் வரும் பழந்தமிழ் வழக்குகள் திரைமொழியில் தனித்துவ முயற்சி. பழந்தமிழ் வழக்குகளைத் திரை உரையாடலுக்குள் கொண்டுவந்தமைக்குப் பாராட்டுகள். அதேவேளை, இது வலிந்து புனைந்ததாகவே படுகிறது. தமிழரின் மொழி வழக்கு இரண்டு தன்மைகளைக் கொண்டிருப்பதாகும். அன்றாட வாழ்வியலின் பேச்சு வழக்கு ஒன்று. பேச்சு மொழிவழக்கு என்பதும் மொழியின் ஒரு தனித்த அடையாளம். அதேபோல, எழுத்து வழக்கு என்பதும் இன்னொரு வகை.
பேச்சின் கூறுகளை எழுத்தாக்கும்போது அது எழுத்து வழக்கு எனும் தனித்த வழக்கைப் பெற்று விடுகிறது. பேசும்போது எழுத்து வழக்காகவோ, எழுதும்போது பேச்சு வழக்காகவோ புழங்குவது தமிழர் வழக்கல்ல. இதைத்தான் நாடக வழக்கு(எழுத்து மரபு) எனவும், உலகியல் வழக்கு(பேச்சு மரபு) எனவும் இலக்கண நூல்கள் வேறுபடுத்திச் சுட்டுகின்றன. அதாவது, பேச்சு வழக்கை இயல்பு வழக்கு எனவும், எழுத்து வழக்கைச் செய்யுள் வழக்கு எனவும் சுட்டுவர்.
படத்தில் இயல்பு வழக்கான பேச்சு வழக்கையே பயன்படுத்தியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டுக் காலத்திலேயே புழங்கிய திருந்திய பேச்சு வழக்குகள் இப்போதும்கூட புரியக்கூடியவைதான். படத்தில் வரும் பழங்காலப் பேச்சுகளுக்கு சங்ககாலத்தில் நிலவிய எழுத்து வழக்குகளைப் பயன்படுத்தியிருப்பதில் நிறையக் கால இடைவெளியும், புரிந்துகொள்வதில் இடைவெளியும் ஏற்படுகின்றன.
படத்தில், பாலைநிலக் குடியாக எயினர்கள் காட்டப்படுகிறார்கள். பெரும்பள்ளிகள் பாண்டியர்களின் துணைப்படையினராகக் காட்டப்படுகிறார்கள். பாண்டிய மரபின் இரணதீரப் பாண்டியனுக்கு மட்டும் குடி அடையாளம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும், பாண்டியர்கள், பெரும்பள்ளிகள், எயினர்கள் போன்றோரின் அடையாள நுண் அரசியலை உள்பொதிந்தே வைத்திருக்கிறது யாத்திசை. அதாவது, தமிழரின் மூன்று பெரும் சமூகங்களைக் குறியீடுகளாக அடையாளப்படுத்தியிருக்கிறது.
தமிழர் வரலாற்றைக் குறித்தும், யாத்திசை குறித்தும் நிறைப் பேச இருக்கிறது. அதேவேளை, நிறையவும் பேசவைத்திருக்கிறது யாத்திசை.
பழங்கால வரலாற்று நிகழ்வுக்குள் திரைப் புனைவின் வழியாக அழைத்துச் சென்றிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது யாத்திசை. யாத்திசைப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
அன்பு நண்பர் இயக்குநர் தரணி ராசேந்திரன் அவர்களுக்கும், படக் குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்.
ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
04.05.2023