செவ்வாய், 9 மே, 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகக் குறுக்கிப் பார்த்தல் கூடாது :மகாராசன்



தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 


தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.


தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 


இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும்.  இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.


ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.


தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.


தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 


ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

09.05.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக