ஒரு காலகட்டத்தியச் சமூக அமைப்பில் கட்டமைக்கப்படுகிற ஒரு பெருங்கதையாடல், அச்சமூக அமைப்பில் உள்ள எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை; எல்லோருக்கும் உகந்ததாக அல்லது சமமாகப் பாவிப்பதும் இல்லை.
பன்மைத்துவம் நிரம்பிய ஒரு சமூக அமைப்பில் ஏதோ ஒரு தரப்பையோ அல்லது ஒரு சில தரப்பினரையோ தான் அடையாளப்படுத்தும்; கண்டுகொள்ளப்படாத தரப்புகள் ஏராளமாகவும் இருக்கும். ஆயினும், அந்தப் பெருங்கதையாடல் சமூகத்தில் எப்பொழுதெல்லாம் புழங்கப்படுகிறதோ அல்லது முன்னெடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பெருங்கதையாடலுக்கு நிகரான/இணையான/எதிரான/மாற்றான கதையாடல்கள் எழுப்பப்படுவதும்; கட்டமைக்கப்படுவதும் நேர்வதுண்டு.
அதாவது, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் கதையாடல்களும், எதிர்க் கதையாடல்களும், மாற்றுக் கதையாடல்களும் பன்மைத்துவச் சமூக அமைப்பில் எல்லாக் காலங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இராமாயணப் பெருங்கதையாடலுக்கு நிகரான/எதிரான/மாற்றான/ தலைகீழ்க் கதையாடல்களும் இந்திய நிலப்பரப்பெங்கும் பல்வேறு வடிவங்களில் இன்னும்கூட வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. அதேபோலத்தான், மகாபாரதக் கதையாடல்களும், சிலப்பதிகாரக் கதையாடல்களும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன.
பன்மைத்துவச் சமூக அமைப்பில் இவ்வாறுதான் பல பெருங்கதையாடல்கள் பல்வேறு வடிவங்களில் உருவாகி வந்திருக்கின்றன.
விடுதலை சிகப்பியின் மலக்குழிக் கவிதைகூட, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் இன்னோர் எதிர்க் கதையாடலின் நீட்சிதான். பகடியால் ஒரு பெருங்கதையாடலைக் கவிதையால் எதிர்க் கதையாடலை முன்வைத்திருக்கிறார் அவர்.
ஒரு பெருங்கதையாடலை வெளிப்படுத்துவதற்கு உள்ள அத்தனை உரிமைகளும், எதிர்/மாற்றுக் கதையாடல்களை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அந்தவகையில், ஒரு கதையாடலை வெளிப்படுத்துவதற்கு யாவருக்கும் உரிமை உண்டு. சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அடிப்படை உரிமையும்கூட. அதேபோல, ஒரு கதையாடலை சட்டரீதியாக எதிர்ப்பதும்கூட சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் உரிமையும்கூட. அதாவது, கருத்துச் சுதந்திரம் இருப்பதைப்போல, அந்தக் கருத்தை எதிர்ப்பதற்கும் சட்ட வாய்ப்புகளே அதற்கான உரிமைகளை வழங்கி இருக்கின்றன.
விடுதலை சிகப்பியின் மலக்குழி பற்றிய கதையாடல் ஓர் எதிர்க்கதையாடலாக இருப்பதைப் போலவே, கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பதியப்பட்டிருக்கும் அவதூறு வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
மேட்டிமையும் அதிகாரமும் சாதிய ஏற்றத்தாழ்வும் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலை எதிர்க்கத் துணிந்திருக்கும் மலக்குழிக் கதையாடல், உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலாகும். உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலை வெளியிடுவதற்கான குறைந்தபட்ச கருத்து சுதந்திரத்தைக்கூடப் பறிப்பது சனநாயக விரோதமானதுமாகும்; கண்டிக்கத்தக்கதுமாகும்.
இந்நிலையில், அதிகாரம் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலைப் பகடியாக்கம் செய்து தலைகீழாக்கம் செய்திருக்கும் விடுதலை சிகப்பியின் கதையாடலை ஆதரிக்கிறோமோ இல்லையோ அல்லது உடன்படுகிறோமோ இல்லையோ, விடுதலை சிகப்பி போன்றோரின் அனைவரின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாக நிற்பதே சனநாயக அறமாகும்.
விடுதலை சிகப்பிக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசிய இனத்தின் - உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட தரப்பின் அனைவரது கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாகவே நாம் நிற்போம்.
மக்கள் தமிழ் ஆய்வரண்.
10.05.2023.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக