வெள்ளி, 28 ஜூலை, 2023

கழுவேற்றப்படும் நிலமும் விவசாயிகளும் - மகாராசன்


உழந்தும் உழவே 
தலையெனப் பாடியும்,
வாடிய பயிரைக் 
கண்டபோதெல்லாம் வாடியும்
அறமும் உயிர் நேயமும்
பெருகப் பெருக விளைந்திருந்த
தமிழ் நிலம்
கூனிக் குறுகிக் கிடக்கிறது.

உடல் நோகவும்
உயிர் கரையவுமான 
உழைப்பின் பெரும்பாட்டு
உணர்வுப் பெருக்கில்
தளைத்து வளர்ந்த
பிள்ளைப் பயிர்களை,
ஆளாக்கிக் கிடந்த
உழவு மேனி ஆன்மாக்களின்
வேரறுத்தும் கழுத்தறுத்தும் தளையறுத்தும் 
கழுவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் 
ஏகப் பெருமுதலைகளின்
வைப்பாள்கள்.

கரி தோண்டவும்
எரிநெய் உறிஞ்சவும்
விளை நிலத்தை
துடிதுடிக்கக் கொல்லும்
துயர்க் காலத்தில்,
நிலத்தை நம்பிக் கிடந்த
சம்சாரிகளின் வாழ்வை
பெருங்களவாணிகள் சூறையாடி சுரண்டல் தீயில் வீசியெறிகிறார்கள்.

பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப் பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்திப் பாழ்படுத்தும்
படுபாதகப் பாவங்கள் 
நாளொரு நாளும்
நீர் பாயும் ஊரிலும்
திமிர்க் கோலத்தில்
தலைவிரித்தாடுகின்றன.

வக்கிரமும் வன்மமும் காழ்ப்பும்
பழிவாங்கும் பகையுணர்ச்சியும்
திமிரும் ஆணவமும் கூடிய கொலைவெறியில்
நிலத்தை அம்மணமாக்கும் 
இழி வேலை அழிச்சாட்டியத்தைத்
தீவிரப்படுத்துகிறது அதிகாரம்.

அதிகாரத்தின் எந்திரக் கைகளால்
பயிர்களையெல்லாம்
வாரிச்சுருட்டிச் சாகடித்து 
நிலத்தைக் கையகப்படுத்துவது,
உழவரையும் நிலத்தையும் மட்டுமல்ல;
எதிர்காலத் தலைமுறையையும்
பசித் துயரில் சாகடிக்கத்தான்.

உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே 
நிலத்தை இழந்து 
பயிர்கள் சாகும் 
வலியும் வேதனையும் புரியும்.

நிலமும் அற்று
வெள்ளாமை பார்க்க 
ஆளரவம் அற்றுப்போன பின்னே,
பசியெடுத்து அம்மணமாகும்போது
இந்த வலியும் வேதனையும் மற்றவருக்கும் வரும்.
அந்தக் காலம் 
விரைவில் தெரியும்.

வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்.

அழிச்சாட்டிய அதிகாரம் 
நாசமாய்ப் போகட்டும்.
இந்த அதிகாரத்தின் ஆணவம் அழிந்து போகட்டும்.

ஏர் மகாராசன் ,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
28.07.2023

வியாழன், 27 ஜூலை, 2023

அதிகாரத்தின் அட்டூழியம் - மகாராசன்

உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இதன் வலியும் வேதனையும் புரியும்...!

இந்த வலியும் வேதனையும் உண்ணக்கூடியவர்களுக்கும் வரும் காலம் விரைவில் தெரியும்..

பயிர்களையெல்லாம் சாகடித்து நிலத்தைக் கையகப்படுத்துகிறோமே என்கிற, 
குறைந்தபட்ச அறிவும் அறமும் 
குற்ற உணர்வும் அற்றுப்போய்
நிலத்தை அம்மணப்படுத்துவதுதான் அதிகாரத் திமிரின் அட்டூழியம்.

இந்த அதிகாரத்தின் ஆணவம் 
அழிந்து போகட்டும்.

ஏர் மகாராசன்.

அதிகாரத்தின் அழிச்சாட்டியம் - மகாராசன்


உழந்தும் உழவே தலையென,
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதான அறமும் உயிர் நேயமும்
பெருகப் பெருக விளைந்த 
தமிழ் நிலத்தில்,
உழவர் உழைப்பின் 
உடல் நோகவும் உயிர் கரையவும்
உணர்வுப் பெருக்கில் 
தளைத்து வளர்ந்து,
பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப் பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்திப் பாழ்படுத்தும்
படுபாதகப் பாவத்தை,
வக்கிரமும் வன்மமும் காழ்ப்பும்
பழிவாங்கும் பகையுணர்ச்சியும்
திமிரும் ஆணவமும் கூடிய கொலைவெறியர்களால் மட்டும்தான் செய்ய முடியும்.

அந்தப் படுபாதகக் கொலைவெறியர்கள்தான்
அதிகாரத்தைப் போர்த்திக் கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள்.

வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்.

அழிச்சாட்டிய அதிகாரம் 
நாசமாய்ப் போகட்டும்.

ஏர் மகாராசன்
27.07.2023

நன்றி:
ஓவியம்: ம.இராமமூர்த்தி

செவ்வாய், 11 ஜூலை, 2023

காலத்தில் கரைதல் - மகாராசன்


வெளிரிய வானத்தில் 
வலி நோகச் சிறகடித்துப் பறந்து திரிந்து 
இளைப்பாறவும் களைப்பாறவும்
உச்சிக் கிளை தேடியபடி
இறகுகள் துவள
வட்டமடித்துக் கொண்டிருந்தது
வனப் பறவை.

வெறுமை ததும்பிய 

வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில் 

ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தது

யாருமற்ற தனிமை.


வலசைத் தடங்களின் கதைகளில்

கண்ணீர் மேவி

தூர்ந்து கிடந்தன

திக்குகளின் பாதைகள்.


உதிர்ந்து விழும் சருகின்

காம்பைக் கவ்வியபடி 

சிறகைத் துறந்து

மிதந்தலைந்து வந்த இறகாய்

மண்ணை நீவி

தன்னைத் தொலைத்துக் கொண்டது 

மனப் பறவை.


மிச்சமிருந்த கனவையும்

மெல்லக் கவ்விக் கொண்டு

உயரப் பறந்தது வாழ்க்கை.


காலத்தில் கரைதலும்

வாழ்வின் நிமித்தம் ஆனது.

*

ஏர் மகாராசன்

10 .07.2023

ஞாயிறு, 2 ஜூலை, 2023

மாமன்னனும் மகாராசனும் : மகாராசன்


தோழர் மாரி செல்வராசு அவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும் முன்பாகவே, அவரது எழுத்துகளும் பேச்சுகளும் எமக்கு அறிமுகம் ஆகியிருந்தன. தமது படைப்புகளின் வழியும் பேச்சுகளின் வழியும் மானுட சமத்துவத்துக்கான வேட்கையை உள்ளீடாகப் புலப்படுத்திக்கொண்டிருக்கும் மாரி செல்வராசு அவர்களின் பேச்சுக்கும் படைப்புக்கும் எதிரான சாதிய வன்மங்களையெல்லாம் எதிர்கொண்டு, தமது குரலை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

உயர்த்திக் கொண்ட சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும் அதன் கோரத்தையும், அவற்றைக் காலங்காலமாக எதிர்கொண்டு வருகிற ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களின் வலியையும், பொது சமூகப் பார்வைக்கும் உரையாடலுக்கும் திரைப்படத்தின் வாயிலாகக் கடத்தியிருக்கிறது மாமன்னன். 

மானுட சமத்துவத்திற்கான வேட்கையையும், அதை அடைவதற்கான தேடலையும் விதைத்திருக்கிறது மாமன்னன்  திரைப்படம். இப்படம் முன்வைத்திருக்கும் வழிமுறைகளிலும் தீர்வுகளிலும் முடிவுகளிலும் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஓர் கலைப் படைப்பாக முழுமை அடைந்திருக்க வேண்டிய இப்படம், அது முழுமை பெறுவதற்குள்ளாகவே வழக்கமான தமிழ்த் திரைப்படங்களின் சாயல்களைப் போர்த்திக் கொண்டிருப்பதில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆயினும், அதிகாரத்தோடு பிணைந்திருக்கிற சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நூற்றாண்டுகால வலியையும் வேட்கையையும் பொது சமூகத்தின் சுய பரிசீலனைக்கு உட்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க கலைப் படைப்பாகவும் உருப்பெற்றிருக்கிறது மாமன்னன் திரைப்படம். 

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சுய மரியாதைக் குரலுக்கான நியாயங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் வலியுறுத்தியிருக்கிறது. படம் குறித்தான நிறை குறைகள் நிறையவே இருப்பினும், மனித சமத்துவக் குரலை உரக்கப் பேசியிருக்கும் இந்தப் படத்தை வரவேற்பதும் ஆதரிப்பதும் நமது சமூகக் கடமையாகும். மாரி செல்வராசு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

*

மாமன்னன், மண்ணுவாக ஆக்கப்பட்டதன் - இருந்துவிட்டதன் பின்புலத்தைப் படம் ஓரிடத்தில் பதிவு செய்திருக்கும். மண்ணுகள் மாமன்னன்களாக ஆக வேண்டியதன் அவசியத்தைப் படம் வலியுறுத்தும். மாமன்னன், அதிவீரா, லீலா போன்ற பெயர்கள் கதை மாந்தர்களின் பெயர்களாக வருகின்றன. இந்தப் பெயர்கள் எல்லாம் எதிர் அதிகார மரபின் கலைப் படைப்பில் புழங்குவன. மாரி செல்வராசுவும் எதிர் அதிகார மரபைச் சார்ந்தவர்தான்.

மகாராசன் என்பதற்கு மாமன்னன் என்பது பொருள். மகாராசன் எனும் எனது பெயரும் மாமன்னன் என்பதே.

சாதிய மேட்டிமையின் தாட்டியத்திற்கு, கலை வடிவிலான எதிர் அதிகார மரபைக் காண்பித்திருக்கும் மாமன்னன் படத்தைப் போலவே, நான் பிறந்த போதே எதிர் அதிகார மரபை  எமக்குள் விதைத்திருக்கிறார் எனது அப்பா நாராயணன். 

மாமன்னன் படம் பார்த்த பிறகு, எனது அப்பாவின் எதிர் அதிகாரச் செயல்பாடுகள்தான் எனது நினைவுகளில் வந்து வந்து போயின. எனது அப்பாவைக் குறித்து நான் எழுதியிருந்த நினைவுக் குறிப்பை இவ்விடத்தில் பகிர்வதும்கூடப் பொருத்தமாய்த்தான் இருக்கும் எனக் கருதுகிறேன்.அது வருமாறு:

பஞ்சமும் வறுமையும் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு முன்பாகப் பிறந்திருந்த அண்ணன்களையும் அக்காக்களையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழலில், என் அம்மாவுக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன்.

மூன்று பெண் பிள்ளைகள் எஞ்சியிருந்தாலும், ஆணொன்று வேண்டுமென வரமிருந்தும் தவமிருந்தும் என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வார். இந்தப் பிள்ளையாவது உசுரோட நெலைச்சு நிக்கனும்னா, மூக்குத்தி குத்தி பிச்சைன்னு பேரு வைங்கன்னு ஊரே சொல்லுச்சாம்.

பேருக்கும் உசுருக்கும் என்ன தொடுப்பு இருக்கு? பேருக்கும் மானத்துக்கும் தானே தொடுப்பு இருக்குன்னு நெனச்சிருக்காரு அப்பா. பெயரில் என்ன இருக்குன்னு சாதி சனமே கேட்டப்போ, ஒரு மனுசரோட அவமானத்துக்கும் மரியாதைக்கும் அந்த மனுசரோட பேருங்கூடத்தான் காரணமா இருக்கும்னு சொல்லி, எனக்கு மகாராசன் என்றே பெயர் வைத்தவர் என் அப்பா தான்.

வீரக்குடும்பன் என்கிற என் தாத்தாவின் பெயரை மறக்கடித்து, பம்பையன் என்றே பட்டப்பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறது சாதியச் சமூகம். தன்னோட பெயரை இந்தச் சமூகம் உச்சரிக்க மறுத்ததால், வேறொரு பெயராலேயே வாழ்ந்து மடிந்து போன தாத்தாவின் சோகங்கள் அப்பாவுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ, பிச்சை என்ற பெயரை மறுத்து, மகாராசன் எனப் பெயர் வைத்திருக்கிறார் அப்பா.

உயர்த்திக் கொண்ட மேட்டிமைச் சமூகப் பெயர் வழக்குகள் சமூக மதிப்பையும், உழைக்கும் எளிய மக்களின் பெயர் வழக்குகள் சமூக இழிவையும் தரும்படியாக இருந்த ஒரு சமூக அமைப்பில், எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு மகாராசன் எனப் பெயர் வைத்திருப்பதை எதிர் அதிகார மரபின் தன்மான அடையாளமாகத் தான் பார்க்கிறேன்.

இது போன்ற எதிர் அதிகார மரபின் விதைகளை என்னுள் விதைத்திருக்கிறார் என் அப்பா. என் வாழ்விலும் எழுத்திலும் புலப்படுகிற எதிர் அதிகார மரபை முதலில் என் அப்பாவிடமிருந்தே பெற்றிருக்கிறேன்.

என்னுள் விரிந்திருக்கும் ஆளுமைகளுக்குத் தன்மான நீர் பாய்ச்சி வளப்படுத்திய என் அப்பா தான் என் முதல் ஆசானாய், முன் மாதிரி நாயகராய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்.

நினைவுகளில் வாழ்கிற அவரது வாழ்க்கைப் பாடுகளே எனது முதல் பாடங்கள்.

மகாராசன் எனும் மாமன்னனாகிய எமது எழுத்துச் செயல்பாடுகளும் எதிர் அதிகார மரபின் விளைச்சல்கள்தான்.  மானுட சமத்துவத்துக்கான இந்த மரபு இன்னும் நீளும்; இன்னும் ஆழ உழுதிடும்.

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

02.07.2023