ஞாயிறு, 26 நவம்பர், 2023

புலித்தடம் பதியக் காத்திருக்கும் நிலம் - மகாராசன்

 

கடல்சூழ் வனத்தைப் போர்த்தி
விரிந்து கிடந்த நிலப்புழுதியில்
எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி
எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு
முளைத்துக் கிளைத்திருந்தது
குலக்கொடியொன்று.

ஈரநெப்பு கசிந்த மண்ணை
இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள்
ஆழஆழப் பதிந்ததில்
நிறைந்து செழித்து வளம் கொழித்தன
மனிதப் பச்சையங்கள்.

பஃறுளியும் குமரிக்கோடுமாய்
மூதாதை நிலம் பரவிக் கிடந்தது.

காலமும் கடல்கோளுமான ஊழ்வினை
உப்புநீர் தெளித்து
அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது.  
பரிணாமக் காலங்களை
உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
விழுந்த வித்துகள்
சிம்படித்துக் கிளைத்திருந்தன.  

கிளை பரப்பிச் சிலிர்த்துச்
சிரித்திருந்த பேரினத்திற்கு
தாய் மடிகள் இரண்டிருந்தன.
இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக
காலம் இசைத்த நெடும்பாடல்
உலகத்தின் காதுகளில்
நிரம்பி வழிந்திருந்தது.

பெருமரத்தின் வித்துகள்
காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன.
விழுந்த திசையின் மண்ணின் வாகும்
பருவ நேக்கும் சுழல் காலமும்
உயிர்ப் படிமலர்ச்சியாய்
வேறு வேறு முகங்களை
தந்துவிட்டுப் போயின.

பூர்வத்தின் வேர்நுனி மணத்து
தாய்நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு
பேருரு அடையாளத்தில்
மினுத்திருந்தது இவ்வினம்.

அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து
குஞ்சுகளைக் காக்க
மூர்க்கமாய்ப் போராடின
இரு தாய்க்கோழிகள்.

அறுந்துவிட்ட தொப்பூழ்க்கொடியிலிருந்து
உயிர்க்கொடிச் சிம்புகள்
அத்துப் போகாமலும் இத்துப் போகாமலும்
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

முந்நிறத்துக் கொடியாலும்
முப்புரி நூலாலும்
இறுகக் கட்டிய தொரட்டிகளால்
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு
சுருண்டு போயின வேர்கள்.

ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின்
உயிர்ச்சத்தை உறிஞ்சி
பெருவனத்தை வரைந்திருந்தது.

மறப்பாய்ச்சலில் தேர்ந்திருந்த புலிகள்
வன்னி நிலத்தில் அறம் பாடித் திரிந்தன.

கரு நாகங்களின் துரோகத்தை
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த
சிங்கக் கூர்வாளை
ஏந்திச் சிரித்தான் புத்தன்.

தப்பிப்போன புலிகளின்
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்.

ஏர் மகாராசன்
26.11.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக