புதன், 17 ஏப்ரல், 2024

நானும் என் எழுத்துலகமும்: அங்கவை யாழிசை


புத்தகங்கள், புத்தக வாசிப்பு போன்றவை எனக்கு என்றும் புதிதல்ல. அவையெல்லாம் நான் பிறந்ததில் இருந்தே பார்த்தவைதான். இன்னும் சொல்லப்போனால் என் அப்பா அம்மாவுடன் சேர்ந்து என்னை இன்னும் வளர்ப்பவைதான்.

என் அப்பா பேசுவைதையும், எழுதுவதையும் எப்பொழுதுமே பார்த்து வளர்ந்த எனக்கு, அதையெல்லாம் உள்வாங்கி என்னுடைய நடையில் பிரதிபலிப்பது வழக்கம். என் அப்பா மகாராசன் அவர்களைப் போலவே நான் இருப்பதாகப் பலர் கூறக்கேட்கும்போது மிகப் பெருமிதமாக இருக்கும். உருவத்தோற்றத்தில் மட்டும் அல்லாமல், அவரைப் போன்று எழுத்தாளுமையும் பேச்சாற்றலும் எனக்கும் உண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

என் சிறுவயது முதலே எனது அப்பாவைப் பார்த்தே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். எந்தவொரு பயமோ தயக்கமோ இன்றி, எதுவொன்றைக் குறித்தும் என்னால் பேசவோ எழுதவோ முடியும் எனும் நிலைக்கு எனது அம்மாவும் அப்பாவும்தான் வளர்த்து ஆளாக்கியுள்ளனர். எனது குடும்பச் சூழலும், வீட்டில் இருக்கும் செம்பச்சை நூலகமும் எனது எழுத்துலகப் பயணத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் பலவற்றைப் பரிசாகக் கொடுத்து அறிமுகப்படுத்துவார் என் அப்பா.

எழுத்துலகுக்கான கதவு எனக்குப் புதிதல்ல என்றாலும், அதனூடான பயணம் புதிதானது. வாசிப்புலகு எனக்கு மிக வசீகரமானது. சிறு சிறு புத்தகங்களையும் படைப்புகளையும் சிறு வயது முதலே நான் படித்ததுண்டு. ஆனால், வாசிப்பின் மீதான ஓர் நாட்டத்தை எனக்களித்த புத்தகம், நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வாசித்த 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' என்ற புத்தகம்தான். அந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் வந்தது. அந்த வயதில் நான் படித்த புத்தகங்கள் மற்றும் படைப்புகள் அனைத்தும் சிறு படைப்புகளே என்றாலும் பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியவையாகும்.

எந்தச் சூழலாக இருந்தாலும் தன் சுயத்தையும், தன்னுள் இருக்கும் குழந்தையையும் இழக்கக் கூடாது. தன் வீட்டின் மீது குண்டுமழை பொழிந்தபோது நாட்குறிப்பு எழுதுவாள் ஸ்லெட்டா. வாழ்வைப் பதிவு செய்வதில் அவளுக்கு இருந்த திடம், என்னையும் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள் என்றது ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு.

யார் நம்மைத் தூற்றினாலும் ஏசினாலும் அவர்களுக்கான சிறந்த பதிலடியாக அமைவது, நாம் படித்து நம் தரத்தை உயர்த்திக் கொள்வதே; நம் படிப்பும் பட்டறிவும்தான் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்திய மற்றொரு புத்தகம் 'உனக்குப் படிக்கத் தெரியாது' எனும் உன்னதமான புத்தகம் ஆகும்.

வாழ்வில் நீ எதை இழந்தாலும் பெறுவதற்கு உலகம் உண்டு என்பதை உணர்த்திய இன்னொரு புத்தகம் 'ஹெலன் கெல்லர்' புத்தகமாகும்.

பின்நாட்களில், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் படிப்பின் மீதான - வாசிப்பின் மீதான ஓர் மோகத்தை எனக்களித்தது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆகும். அதன் மூலம் வரலாற்றுப் புனைவுகளின் மீது மிகுந்த வாசிப்பு ஈடுபாடு உண்டானது. அதைத் தொடர்ந்து 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு', 'வேள்பாரி' என்று விரிவடைந்தது. 

எந்தப் புத்தகமானாலும், எப்படிப்பட்ட புத்தகமானாலும், புத்தக வாசிப்பின் முதன்மை நோக்கமாக நான் கருதுவது, அந்த வாசிப்பின் மூலமாக நாம் என்ன பெறுகிறோம் என்பதுதான். 

வரலாற்றுப் புனைவுகளில் இருந்து நம்மால் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மட்டுமே பெற முடியும் என்று புரிந்து கொண்டேன். பிறகு என் வாசிப்பின் பயணத்தில் ஓர் மாற்றம் அடைந்தது. வரலாற்றுப் புனைவுகளில் இருந்து வெளிவந்து மற்ற புத்தகங்களையும் வாசிக்கச் சொன்னார் அப்பா. வாசித்த புத்தகங்களைக் குறித்துக் கட்டுரையாக எழுதித் தரவும் சொல்வார். அப்பா கூறிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவை எனக்கு ஒரு புதிய அனுபவத்தோடு அறிவையும் புகட்டுவதாகத் தோன்றியது. வாசிப்பானது பொழுது போக்கு என்பதையும் தாண்டி, தேடல் என்று ஆனது. அந்தத் தேடலின் வாயிலாக நான் அறிந்து தெரிந்து புரிந்தவையே இந்த விமர்சனக் கட்டுரைகள் ஆகும்.

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதற்கெல்லாம் எனக்கு வயது கிடையாது. அதற்கான அறிவையும் நான் இன்னும் பெறவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், இன்று எழுத்துலகில் உயரப் பறக்கும் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் தத்தித் தத்தி தவழ்ந்தவர்கள்தான்; நான் உட்பட அப்படித் தவழ்ந்து வந்தவன்தான் என்பார் என் அப்பா. நான் எழுதுவதற்கு என் அப்பாவும் அம்மாவும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.

இந்த நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. உன் எழுத்துப் பயணத்திற்கு இது ஒரு முதற்படியாக அமையட்டும் என்று சொல்லித்தான், நான் எழுதிய ஆறு கட்டுரைகளையும் புத்தகமாக உருவாக்கத் தொடங்கினார் அப்பா.

தமிழோடு வளர்ந்ததாலோ, தமிழ் என்னை வளர்த்ததாலோ என்னவோ, என்னைச் சித்த மருத்துவத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம். தமிழ் என்னை வளர்த்ததுபோல் சித்த மருத்துவமும் என்னை வளர்த்தெடுக்கும் இந்தக் கல்விச் சூழலும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், சித்த மருத்துவமும் தமிழும் இரண்டரக் கலந்தவை. இரண்டும் எழுத்துலகத்தோடு தொடர்பு உடையவை. ஆகையால், எனது வாசிப்புலகம் இன்னும் பலவாறாக விரிவடைந்திருக்கிறது. 

முதன் முதலில் நான் எழுதத் தொடங்கியபோது, என் எழுத்துகளைச் சமூக ஊடகங்களில் அப்பா பகிரும்போதெல்லாம் அப்பா அம்மாவின் நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் பலரும் எம்மை ஊக்கப்படுத்தி வாழ்த்துவதைக் காண்பிப்பார் அப்பா. அந்தப் பாராட்டும் வாழ்த்தும் நான் அடுத்தடுத்து எழுதுவதற்கு உருதுணையாக இருந்தன. நான் எழுதிய கட்டுரைகள் தாய்வீடு, புக்டே, அறம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, குறுநூலாக வெளிவருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்நூலை யாப்பு வெளியீடு மூலமாகப் பதிப்பித்து வெளிக்கொண்டுவரும் திரு செந்தில் வரதவேல் மாமா அவர்களுக்கும், என்னை எல்லா வகையிலும் வழிநடத்தி வளர்த்தெடுக்கும் அம்மா அம்சம், அப்பா மகாராசன், தம்பி அகரன் தமிழீழன் ஆகியோருக்கும் எம் நன்றியும் அன்பும்.

மருத்துவக் கல்விப் புலத்தில் வழிநடத்தும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மீனாகுமாரி அவர்களுக்கும், முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எம் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன். 

வாழ்த்திலும் அன்பிலும் நெகிழச் செய்யும் குடும்ப மற்றும் நட்பு உறவுகள் அனைவருக்கும் என் நன்றி.

இது, எனது முதல்நூல். தங்கள் அனைவரின் வாழ்த்திலும் வழிகாட்டலிலும் நான் இன்னும் வளர்வேன். வளப்படுத்துவீர்கள் எனும் பெருநம்பிக்கை எமக்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

மிக்க அன்புடன்
அ.ம.அங்கவை யாழிசை.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக