ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தேர்தல் பணி அனுபவங்கள்: மகாராசன்


இந்திய ஒன்றியத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல் பணியில், வாக்குச் சாவடித் தலைமை தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்று, மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் பணி செய்து முடித்திருக்கிறேன். கடந்த காலத் தேர்தல் ஏற்பாடுகளைப்போல, தேர்தலுக்குரிய பொருட்களையும் படிவங்களையும் சாக்கு மூட்டைகளில் கொண்டுவந்து குப்பைகளைப் போலக் கொட்டிவிட்டுப் போகாமல், தேர்தல் பொருட்களை அதற்கென்ற பெட்டிகளிலும், படிவங்களைக் கற்றைகளாகவும் (Booklets), தனித்தனியாக அச்சிட்ட உறைகளாகவும் ஒப்படைத்திருந்தமை புதுமையான நல்ல வழிமுறை. இந்தமுறை பாதியளவு பணிப் பளுவையும் பரபரப்பையும் குறைத்திருந்தது.

பெரும்பாலான அரசுப் பணியாளர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி என்றாலே மிகுந்த மன நெருக்கடியோடுதான் ஏற்றுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் முறை குறித்து எமக்கு மாற்றுக் கருத்துகள் நிறைய இருப்பினும், மக்களின் மனநிலை, தேர்தல் கள நிலவரம், தேர்தல் நடக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டுமென, அரசுப் பணிக்கென்று வந்த காலத்திலிருந்து பல தேர்தல் பணிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்திருக்கிறேன். இந்தத் தேர்தல் களமும் பணியும் பல்வேறு படிப்பினைகளைத் தந்திருக்கின்றன.
இளைய தலைமுறையினர் உட்பட பல தரப்பினரும் மாற்றத்தை உள்ளூர விரும்புவது தெரிந்தது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி இயக்கப்படுகின்றன? வாக்குப் பதிவுச் சின்னங்களின் எல்லாப் பொத்தான்களும் சரியாக வேலை செய்கின்றனவா? வாக்களித்த சின்னங்கள் ஒளிர்திரையில் அச்சாகி விழுகின்றனவா? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும் என்பதற்கான மாதிரி வாக்குப் பதிவு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு நடத்திக் காட்டுவது? வாக்குச் சாவடித் தேர்தல் நடைமுறைகள் என்னென்ன? வாக்குச் சாவடித் தேர்தல் அதிகாரிகளின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன? வாக்களிக்கும் வாக்காளர்களின் உரிமைகளும் நடைமுறைகளும் என்ன? இப்படிப் பலவகையான தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிதலும் புரிதலும் இளைய தலைமுறையும், தேர்தல் அரசியல் களத்தில் பணியாற்றும் புதியவர்களும் தெரிந்து கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவ்வாறு தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புவோருக்கு வழிகாட்டவும் விளக்கப்படுத்தவும் தயாராகவே இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் தென்படுகிற அரசியல் விழிப்புணர்வு, ஒவ்வொரு வாக்குச் சாவடி வரையிலும் வந்து சேர வேண்டும். குறிப்பாக, வாக்குச் சாவடி முகவர்களை ஒவ்வொரு கட்சியும் நியமித்து, அதற்கான களப்பணிகளை முன்கூட்டியே பல கட்சிகளும் செய்து முடித்து விடுகின்றன. அதன் அறுவடையை வாக்குச் சாவடிக்குள் நியமிக்கப்படும் முகவர்கள் மூலமாகவே செய்து கொள்கின்றன.

புதியதாகக் களம் காணும் கட்சிகள் பலவற்றுக்கும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் முகவர்களே நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்டிருக்கும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள்கூட ஏதாவது ஒரு பெரிய கட்சிக்கான வேலைகளைச் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஓர் அரசியல் கட்சி வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் அரசியலைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல; அந்தந்த வாக்குச் சாவடி அளவில் தேர்தல் பணியாற்றும் முகவர்களை நியமிக்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தியாக வேண்டும். இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே தேர்தல் முறையில் நடைபெறும் வெற்றியை எதிர்கொள்ள முடியும்.

வாக்குச் சாவடி அளவில் நடைபெறும் தேர்தல் குறித்து இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. வாய்ப்புகள் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

தேர்தல் பணிச் சான்று மூலமாக, தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்கும் முறை இருந்தமையால், அஞ்சல் வாக்கு செலுத்த வேண்டியதில்லை. பெரும்பாலும் நான் வாக்களிப்பதில்லை. இந்தமுறைதான் வாக்களித்திட வேண்டுமென முன்வந்தேன். ஆகையால், தமிழர் நிலத்துக்கும் இனத்துக்குமான குரலை ஓங்கி ஒலித்தவர்களுக்கு எமது வாக்கைப் பதிவு செய்தாயிற்று. எம் குடும்பத்தார்கள் அனைவரது வாக்கும் அவர்களுக்கே இந்தமுறை விழுந்திருக்கிறது. முதல்முறையாக வாக்களித்த எம் மகளின் வாக்கும், அவரது தோழிகள் பலரது வாக்கும் அவர்களுக்கே கிடைத்திருக்கின்றன.

காலம் களத்தைத் தீர்மானிக்கட்டும்.

ஏர் மகாராசன்
21.04.2024.

2 கருத்துகள்:

  1. தனியாக பெட்டி, Bag கொடுத்தது நன்றாக இருந்தது. வாக்களித்த இரகசியத்தை வெளிப்படுத்தி விட்டீர்களே😀

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர் நலத்தைப் பேசியவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன். தமிழர் நலம் பேசும் கட்சி எதுவென்று நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு