வெள்ளி, 12 ஜூலை, 2024

சொற்களில் முளைத்த நிலம் - கவிஞர் கூடல் தாரிக்


'முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே' என்பார் தொல்காப்பியர். அந்தவகையில், நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன ஏர் மகாராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைத் தொகுப்பு. தொகுப்பெங்கும் அபூர்வமான சொல்லாடல்கள் இத்தொகுப்பின் கூடுதல் பலம்.

இயற்கைச் சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என, நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது. நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத்தொகுப்பினை உயிர்ப்பு மிக்கதாக்குகின்றது.

ஊரில் விளைச்சல் இல்லாத தருணத்திலும் குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளந்து கொடுத்து, 
"சொல்லளந்து போட்டவனுக்கு
 நெல்லளந்து போடுவதுதான்
 சம்சாரிகள் வாழ்க்கை" 
எனச் சொல்லுகிறாள் குடியானப்பெண். இது அவளின் குரல் மட்டுமல்ல, உழுகுடி மக்களின் குரலும் ஆகும்.
இப்படியான ஈகைக்குணம் பொருந்திய மக்கள் நிலமிழந்து போனபிறகு, பிறரிடம் கையேந்தும் நிலையைச் சொல்பவர்,
"உக்கிப்போனது நிலம்" 
என்றே சொல்கின்றார். மற்றுமொரு கவிதையில் மனிதர்கள் இல்லாத நிலத்தை,
"நாதியற்றுக் கிடந்தாள் நிலத்தாள்"
என்னும் சொற்றொடரில்
குறிப்பிடுகின்றார்.

நிலத்தை உயிர்ப்பு மிக்க ஒன்றாகவும் தாயாகவும் பார்க்கும் மனநிலை நிலத்தோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு வரும்.

அமெரிக்கச் செவ்விந்தியப் பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரான சுகுவாமிஷ் பழங்குடியினர் தங்களின் நிலத்தை வெள்ளையர்களுக்கு விற்ற சமயத்தில், அந்த இனத்தின் தலைவன் சியாட்டல், 'இந்த நிலம் எனது தாய். இந்த நிலத்தின் மீது நீங்கள் உமிழாதீர்கள். அது என் தாயின் மீது உமிழ்வதற்குச் சமம்' எனக்கடிதம் எழுதினான். நிலத்தோடு தன்னை இரண்டறப் பிணைத்துக்கொண்ட வாழ்வுதானே அவனை அவ்வாறு எழுத வைத்தது.

தொகுப்பின் மற்றுமொரு கவிதையில் நீரைவிட்டு துள்ளிக்குதித்து வெளியேறும் மீன்கள் வாய் திறந்து மாண்டுபோயின என்கின்றார். 

இந்த நீள்கவிதையை ஆழ்ந்து வாசித்தால், நீர் என்பது நிலம் என்பதும், மீன்கள் என்பது நிலம் விட்டு வெளியேறிய மக்கள் என்பதையும் உணர இயல்கின்றது.

சூறைக்காற்றில் முறிந்து விழுந்த பெருமரத்திலிருந்த கூடும் நாசமாகிப்போனதால் துயரம் அடைந்த பெண்பறவை துவண்டு போனதாக இன்னொரு கவிதையில் குறிப்பிடுகின்றார்.

சூறைக்காற்றுதான் அதிகார வர்க்கம். கூடுதான் நிலம். பெண் பறவை என்பது நிலத்தின் பலவீனமான மனிதனின் குறியீடாகத்தானே இருக்க முடியும்!

நிலத்தையே முதன்மையாகக்கொண்ட தொகுப்பு என்பதால் என்னவோ ''வெளிச்சப்பூவை அப்பிக்கொண்டு
ஒயில் முகம் காட்டுகிறது 
நஞ்சை நிலம்''
என்கின்றார்.
"உயிர்த்தலை 
அடைகாத்துப் படுத்திருக்கிறது 
நிலத்தில் கவிழ்ந்திருந்த வானம்"
எனவும் சொல்கின்றார்.

முளைகட்டிய விதைச்சொற்கள் கூட உழவு நிலத்தின் ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்தவையாகத்தான் அவருக்குத் தோன்றுகிறது.

தொகுப்பில் காணப்படும் மழைக்கவிதைகள் மழையைக் கொண்டாடுகின்றன. நிலத்தைச் செழிப்பு மிக்கதாக மாற்றிய காரணத்தினாலேயே மழையைப் போற்றுகின்றன. 

விசும்பின் துளிவீழாவிட்டால் பசும்புல் தலைகாண்பது அரிது என வள்ளுவரின் வழிநின்று மழையைக் கொண்டாடக்கூடியவை அவை. 

'நீர் முலைத்தாய்ச்சி' எனவும் 'நிலத்துக்கு அணிவிக்கப்பட்ட நீர் மாலை' என்றும் மழைகுறித்த அவரின் வர்ணனைகள் நீள்கின்றன. நிலத்தையும் அதன் விளைச்சலையும் நேசிக்கத் தெரிந்தவர்களால் மழையை நேசிக்காமல் இருக்கமுடியாதுதானே!

வெறும் வலியை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நல்ல படைப்புக்குரிய தன்மை அல்ல. வாசிக்கும் வாசகனுக்கு நம்பிக்கையையும் அது விதைக்க வேண்டும் என்பர். அந்த வகையில் நிலத்திலிருந்தே நம்பிக்கையை விதைக்கின்றார். மண் தனது உதடுகளால் துளைகள் இல்லாத வேர்ப்புல்லாங்குழலை இசைக்கின்றது. அதிலிருந்து வெளிவரும் இசை, பூக்களாக உருமாறிப் பூத்துச் சிரிக்கின்றன என்கின்றார். அந்தப்பூக்கள் வெறும் பூக்கள் மட்டுமல்ல; மகாராசன் தனது படைப்பின்வழி மலர்த்தித் தரும் நம்பிக்கை என்றால் அது மிகையில்லை.

கட்டுரையாளர்:
கவிஞர் கூடல் தாரிக்
கம்பம்.
**
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக