சனி, 14 ஏப்ரல், 2018

சொல் நிலம்: முற்போக்கும் நவீனத்துவத்தில் தன்னியல்பான நில மொழியழகும் :- பாரதி நிவேதன்(பா.செல்வ குமார்).

'வெயில் பொழியும்
ஒரு முகத்தைச்
சிதைக்க நினைத்துத்
தனித் தனியாகவே விழுகிறது
மழை முகம்' (ப.78)

 மகாராசன் - களமும் தர்க்கமும் நிரம்பக்கூடியவர். அரசியல் ஆய்வுகளில் அதிக அக்கறைச்  செலுத்தியவர். கவிதை ஆய்வினில் நுழைந்தபின்னர் அவரின் இலக்கிய முகமும் அவருக்கு தெரிந்தது. இதை அவரின் அருகில்  இருந்து கவனித்தவன் நான். ஆனால் அதனை எழுத்தாக முன் வைக்காமல் பேசிக்கொண்டே இருந்த மகாராசன் எழுத்தாக சிச்சிறிதாக எழுதியதும் உண்டு. தொகுப்பாகக் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. அனுபவங்கள் - அனுபவத்தையொட்டி எதிர்பார்க்கப்படும் கனவுகள் என்னும் யதார்த்த வாழ்வியலை எழுதுபவரிடம்  கச்சிதமான புனைவின் தந்திரங்களையும் இத்தொகுப்பில் அடையாளம் காணுகின்றேன்.

 தமிழிய  மார்க்சியம் என்பது இவ்வெழுத்தின் மணம். வானம்பாடியின் தொடர்ச்சியை நா.காமராசனுடனும் தேனரசனுடனும் தன் எழுத்தோட்டத்தில் எண்ணச் செய்பவர் மகாராசன். 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்' ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டாலே - பெயர்ச்சொற்கள் மூலமாகவே கவிதை என்பதை உணர்வு லயங்களின் குறியீடாக நா.காமராசனை இனம் காணமுடியும். காதலும் சமூகமும் மார்கிசியமும் காந்தியமும் கூட அதனொழுங்கில் வந்து விழும். தேனரசனோ பாறையில் பனி வழுக்கிப்போகும் உணர்வுகளைத் தரக்கூடியவர். இதற்கு எடுத்துக்காட்டு 'வெள்ளைரோஜா'.

 மகாராசன், உழைப்பாளிகளின் குரலாக யதார்த்தப் பிரச்சினைகளிலிருந்து அன்றாடம் தப்பிக்க முடியாத அபலைத்தனத்தைக் காட்சிகளில் விரித்தும் அதற்காக மொழியை வரித்தும் எழுதுகிறார். மனிதத் துயருக்கான இயற்கையின் மொழியும் கனம் பெற்றிருக்கிறது. தன் சின்னஞ்சிறிய கிராமத்தின் பாதையை உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதற்குப் படிப்பினைகளை அவரின் பயணங்களும் களங்களும் வாசிப்புகளும் சொல்லக்கூடியது எழுத்தாகியிருக்கிறது. அடர்த்தியான மொழியில் கூக்குரலை தனியழகுப்படுத்துகிறார். இந்த அடர்த்தி என்பதற்கு கவிதைகளைக் குறித்த அவரது ஆய்வும் வாசிப்பும் உதவியிருக்கிறது. தனது ஆக்கங்களுக்குள் சுற்றுச்சூழல் கவனத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறார். நிலம் வெடித்துப்போய் வெப்பத்தைக் கொள்கலனாக்கிவிட்ட இருப்பிலும் வாழ்வின் மீதான பற்றே அவரை முற்போக்கு எழுத்தாளராக அழைத்துச் செல்கிறது. நிலத்தைச் சார்ந்தே காமத்தையும் காதலையும் சொல்ல முடிகிறது. மொழியின் வனப்பு இங்கு இன்றைய கவிதையின் இயங்கு தளத்தின் மீதான சந்தேகம் கொண்ட தன்னியல்பான மொழி ஒன்றைக் கட்டமைக்கிறது. வானம்பாடிகளை மீறுவதும் நவீனத்துவத்தை உரசிச் செல்வதும் இதனால் ஆகிறது. நாட்டுப் புற வாழ்வியலின் மொழியை இயல்பு மொழிக்குள் பூட்டப்படுவதும் நடக்கிறது.

'நீங்கள்

சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளொடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம்' (39)

 யதார்த்தச் சிக்கல்களை நேரடியாகச் சொற்களை அடுக்கி, கவிதையின் குணாதிசயத்தில் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவமளிக்கும் பட்டவர்த்தனத் தன்மையிலிருந்து விலக முயற்சிச் செய்வது கவிதைத் தனத்திற்கு ஒப்புவிக்கக் கூடிய பயணம் என்று எடுத்துக் கொள்ளலாம். சொற்களால் ஆவது என்? என்ற கவனக் குவிப்பிற்கும் 'சொல் நிலம்' தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தமிழ் நில வாழ்வியலை அதன் மையத்திலிருந்து வரித்துக் கொள்வதையும் முதன்மையாக்குகிறது. நிலமிங்கு எழுந்து காலத்தைக் காட்டும் கண்ணாடியாகிறது. சொற்கள் போகும் திசைக்குத் தன்னைக் கரையவிடாமல் தன் அனுபவம் கொண்ட உழல்வையே வரித்துக் கொள்கிறது இத்தொகுப்பு. இது தொழில் முறை மற்றும் பயில் முறைக் கனவுகளைத் தவிர்த்து மனப் பிராந்தியங்களின் ஊடுருவல்களைக் கண்காணித்து  நிலம், மொழி, வாழ்வியல் என்பது பிரக்ஞைக்குரியதாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்துகிறது. இதனால் முற்போக்குக் கலைப்படைப்பின்  முத்திரையாக இருப்பதில் நம்பிக்கையும் அது அப்படித்தானா என்ற சந்தேகத்தையும் உடைக்கும் விதமாக நவீனத்துவ பாய்ச்சலையும் உள்ள கவிதைகளின் சாட்சியமாக இத்தொகுப்பு இருக்கின்றது.

 கண்கள் வாசித்து மனதில் உழன்று அசைபோட வைக்கும் நவீனத்துவமும் , உதடுகள் வழி காதுகள் வழி மனதிற்குள் சென்று சட்டென உணர்ச்சியைத் தூக்கலாக்கும் அரங்குத் தன்மை வாய்ந்த கவிதைகளுமாக இத்தொகுப்பு முதன்மையாக அடையாளப்படுகிறது. இதை இன்னும் விளக்கினால் அகக் கவிதைகள் நவீனத்துவ சாயலையும் புறக் கவிதைகள் வானம்பாடிகளின் மொழியை இன்னும் மேலதிகமாக சமைத்த ஒன்றாகவும் பார்க்கலாம்.

'கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு' (77)

 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்' என்னும் சங்க மரபை 'செம்புலம்' கவிதையில் நிறைந்து கிடக்கிறது. அசலான தமிழ் வாசிப்பை மிகக் கச்சிதமாகக் கொடுத்துவிடும் இக்கவிதையில்தான் மகாராசன் தனக்கான அடையாளத்தை நுழைந்து தேடி வந்தடைய முடியும் என நம்புகிறேன். காதலை - காமத்தை - ஈன்றலை முதல்,கரு,உரிப்பொருளென நவீன கவிதையில் இனம் பிரிக்க முடியாமல் இழைத்துத் தந்து விடுகிறது இக்கவிதை.

 துளிகள், பயணங்கள், ஆலங்கள், வன்மங்கள், உடல்கள், கண்கள், முகங்கள், விதைகள், செடிகள், கொடிகள், புற்கள், வண்டுகள், பறவைகள், வேர்கள், விரிசல்கள், கூடுகள், சொற்கள், அலைகள், மகரந்தங்கள், சீவன்கள், மனிதர்கள் என்று இக்கள் விகுதிகள் நவீனத்துவத்தின் ஒவ்வாமை வானம்பாடிகளின் தவிர்க்க முடியாமை என்பதை இத்தொகுப்பை வைத்துச் சொல்லக்கூடியதும் ஆகிறது. உடனடி வினைகளுக்கப்பால் இக்கள் விகுதிகள் கடும்பாறையாகச் சமைந்துவிடுவது இன்றைய இழப்பு  நேற்றைய விருப்பு என்பதை மகா அறிந்தவர் என்றாலும் அதனிலிருந்து அவர் விலகுவது கவிதைக்குத் தேவையானது.

 கவிதையில் சொல்லவரும் ஓர் ஓர்மைப்புள்ளியை மீண்டும் மீண்டும் விளக்கிச் செல்லும் மரபான பாண்டியத்தத்தை தாண்டுவதும் தேவையானது. இத்தொகுப்பில் மகாராசனின் தன் தந்தை தாய் உறவுகளை அதனதன் வலியுடன் மகரந்த நினைவுகளுடன் பதிவாக்கியுள்ளார். இங்கு நிறைந்திருக்கும் ஈரம் ஈழமாக இன்றைய அரசியல் பிரச்சினையாக, சமூகப்பார்வைகளாக மாறும்பொழுது அதற்கே உரிய எரிமலையாக வெடித்தெழுகிறது. அன்றாட பிரச்சினைகள், இயற்கையின் வஞ்சனை, இழப்புகள் என அவரின் சமகாலப் பார்வையை அதே உரத்த குரலாய் நாம் கடந்து போய்விடுவது நல்லது. காரணம் அது களம். அவரின் மெல்லிய மனதில் உள்ள கவிதை குணங்களைக் கடந்து போகாமல் அதோடு விடாமல் அசை போடலாம்.

'ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்' (76)

 மழைநேரத்து வ.உ.சி விடுதியின் வாசலில் மகாராசன் உட்கார்ந்தால்,   ஈசலைப் பற்றிய அருமையான பேச்சின் அடவுக்கு யாரும் சொக்கிப்போகலாம். நம்மால் இன்னொருவருக்கு அதை விளக்க முடியாது. சில அனுபவங்கள் அடவுகளின் சுவையிலேயே மினுங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறுவழியில்லை. 'ஈசப்பால்' எழுத்தின் அடவு.

'காற்றில் கரைந்து போகும்
அணுத் திரள்கள்
குழல்களில் வழிந்தோடிக்
கசிந்து கசிந்து
உயிர் மூச்சென
உள் நுழைந்து கொள்கின்றன' (28)

 எங்கோ சிக்க வைத்திடும் கவிதைகளைக் குறித்து அச்சப்படுதல் இக்கண மட்டிலோ இன்று மட்டிலோ கழிந்துவிட வேண்டும். நாளை யாரையாவது கொண்டாடும் முகமாக அல்லது தாண்டும் முகமாக அல்லது பாய்ந்து சென்று விடும் முகமாக அமைந்து விட வேண்டும். தாளாத சுமைக்கும் தஞ்சமடைந்து தூங்கிப்போவதற்கும் சிலர் இருக்கிறார்கள். இது ரகசியமில்லை..அவை புத்திசாலித்தனமில்லாதவை. வாழ்வை ஊடறுப்பதை உணர்த்துபவை. இதையெல்லாம் அமிழ்ந்ததால் எழுத வாய்த்தது. எதையும் தூக்கி நிறுத்தல்ல..வலியின் கொண்டாட்டங்களாக. உண்மையில் அதுவே ஆகக்கூடியது. இத்தகைய என்னுடைய போக்கில் இக்கவிதைகளும் உடனிருப்பதில் மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக