ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குடியானச்சி காவியம்.



எப்போதாவது வந்து போகும் அயலான் எனத் தெரிந்திருந்த
ஊர் நாய்கள்
நாலைந்து கூடிக்கொண்டு
ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்ததில்,
நெடுந்தூக்கத்திலிருந்த இரவு குலைந்து போயிருந்தது.

ஊரடங்கிய யாமத்தில் வழிந்தோடிய
குடுகுடுப்பையின் மிடுக்கொலி,
வெள்ளாமை நினைப்பில்
தூங்கிப் போனவளின்
காதுகளில் நுழைந்து
உசுப்பி விட்டுக் கரைந்து போனது.

சீ நாயே தூரப் போவென
அதட்டிக் கொண்டே
வந்தவனை விட்டு
நாய்களும் விலகிப் போவதாய்த் தெரியவில்லை.
தெரு முகனைக்கு வந்துவிட்ட
யாமத்துக் குறிகாரன்
குடுகுடுப்பையை ஊரதிர
உலுக்கி உலுக்கி அடித்தான்.

திறந்தே கிடந்த கதவை
மெதுவாய்ச் சாத்தி வைத்து
கதவிடுக்கின் ஓரத்தில்
தலை சாய்த்துக் காது கொடுத்து
குறிகாரன் மொழி கேட்க
செவக்கி உட்கார்ந்திருந்தாள் குடியானச்சி.

காடு வெளஞ்சிருக்கு;
வீடு நெறஞ்சிருக்கு.
மக்களப் பெத்த மகராசிக்கு
மனசுல கொறயில்ல.
சாமி காக்காட்டியும்
பூமி காப்பாத்தும்.
செத்துப் போன பெண்புள்ள
சாமியாட்டம் துணையிருக்கா;
மவராசனா ஓம்புள்ள இருந்தாலும்
ஒன்னோட மருவாதய
விட்டுத் தர மாட்ட.
ஆக்கித்தான் போடுவ
அடுத்த வசுறு பசியாத்த.
ஒன்னோட கை நனைக்க
ஒரு வாசலும் மிதிக்க மாட்ட.
ஒக்காந்து சோறு திங்க
ஓம்புள்ள அழைச்சாலும்
ஒரு போதும் போக மாட்ட.

காடு கழனி வெள்ளாமைன்னு
ஆடு மாடு கோழியின்னு
மனுச மக்க புள்ளைகன்னு
ஒன்னோட சீவனெல்லாம்
ஒழச்சுத்தான் வாழுமம்மா.
மழ தண்ணி கொறஞ்சாலும்
மனச மட்டும் விட்றாத;
நெலத்த சும்மா போட்றாத.

சொன்னதுல்ல பொய்யிருந்தா
நாளைக்கி வருகையில
நாலு சொல்லு நீ கேளு.
குறியளந்து சொன்னதெல்லாம்
மனச நெறச்சிருந்தா
மறக்காம நெல்லளந்து போடுதாயி.

வாசல் தெளிக்கும்
சாணித் தண்ணியைப் போல,
வாசலெங்கும்
ஈரம் கோதிக் கிடந்தன
குடுகுடுப்பைக்காரனின்
யாமத்துச் சொற்கள்.

குடியானச்சியின் மனக்குறியை அச்சு பிசகாமல் இந்த முறையும்
அப்படியே
சொல்லிப் போனான்.

மறுநாள் காலையில்
வீடு வீடாய்க்
குறிக்கூலி வாங்கியாந்தவன்
தோள் பை கனக்காது
கிடந்ததைப் பார்த்துப் பதைபதைத்தவள்,
மரக்கால் நிறைய நிறைய
நெல்லளந்து போட்டாள்.

சுருக்குப் பைக்குள்ளிருந்து
எருச் சாம்பல் துண்ணூறை
வெறும் மரக்காலில்
கை நிறைய அள்ளிப் போட்டவன்,
ஒனக்கு மட்டும்
எப்புடி தாயி இந்த மனசு என்று
கண்களில் நீர் கசியக்
கேட்டே விட்டான்.

சொல்லளந்து போட்டவனுக்கும் நெல்லளந்து போடுறது தானப்பா
சம்சாரிக வாழ்க்க.
குடியானச்சியின் சொற்கள்
குடுகுடுப்பைக்குள்
தாயொலியாய்
இசைத்துக் கிடந்தன.

நெல்லுக்குள்ளும் சொல்லுக்குள்ளும் நிறைந்திருந்து
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
குடியானச்சி,
தரிசாய்க் கிடக்கும்
நிலத்தை நினைத்தழுது
மனதை விட்டிருப்பாள்.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக