செவ்வாய், 31 ஜூலை, 2018

மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலைக் குறித்து :- அரங்க மல்லிகா


மேலை இலக்கியத்திறனாய்வு இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக்கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக் களம் விசாலமாகியுள்ளது. அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என்ற கோட்பாடுகளை, இலக்கியத்திறனாய்வை இந்தியச் சூழலில் பல்வேறு மொழிசார்ந்த பண்பாட்டுத் தகவமைப்புகளினூடே பொருத்திப்பார்க்கும் சூழலால் பண்பாட்டுத் தகர்ப்பு நிகழ்ந்திருக்கிறது. இலக்கியக்களத்தில் நடைபெற்றிருக்கிற நவீனப்புரட்சி யுகங்கள்தோறும் புனிதங்களின் மீது கட்டப்பட்டுள்ள கருவிகளற்ற வன்முறையை விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றது. இதனால் இதுவரையில் எழுதப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட யாவும் கலை இலக்கிய ஊடகத்தைப் புரட்டிப் போட்டுள்ளன. குறிப்பாக, பின்காலனித்துவ இலக்கியங்கள் விடுதலை சார்ந்த சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தும் களமாகியுள்ளன. படைப்புகள், அடிமைப்பட்ட சமுதாயத்தை, அடிமையானதன் வரலாற்றை மீளாய்வு செய்வதற்கான தேடல்களை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்த ஆய்வு வளர்ந்து வருகிறது. விடுதலை அரசியல், ஆணின் இயங்குதளத்தைக் கட்டுடைக்கின்றது. இது இயக்கமாக வேண்டிய ஒரு நெருக்கடியை இலக்கியங்கள் புனருற்பத்திச் செற்கின்றன.  எழுதப்பட்டவை விவாதக்களமாகின்றன. மொழி அதன் உந்துசக்தி. ஒருவரோடு ஒருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமாகி, மொழி தனது இருப்பை அர்த்தப்படுத்துகின்றது.  மனிதப் பரிணாமம் மொழியின் மூலமாகப் பெரிய வீச்சை அடைந்துள்ளது. ஓர் ஆணிண் பார்வையில் அடைபடும் எதார்த்தங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் வேறான அடையாளத்தை அர்த்தப்படுத்துகிறது. ஆணின் அன்பு என்பது அதிகாரம், பரிவு, கொடுத்தல் தன்மையுடையதாகவும், பெண்ணின் அன்பு தாய்மை, அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் பண்புசார்ந்ததாகவும் தீர்மானிக்கப்பட்டு மொழி அதற்குரிய ஓடுகளமாக அமைந்திருக்கிறது.
மொழி, மனிதனின் இருப்பையும் அடையாளத்தையும் உற்பத்தி செய்கிறது. மனித இயக்கம் உடலியங்கியலை உள்ளீடாகக் கொண்டது. இது பொருள்சார்புடையது. குடும்பம் இதன் மையம். இது ஆணின் எல்லைக்குரியதாக இருக்கிறது. இதில் பெண்ணின் சுவாசம் கட்டுக்குரியதாகிறது. தொல் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு உழைப்போடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. பின்னர் வீடும், உழைப்பும் பிரிக்கப்பட்டு எவ்வித அறிவிப்புமின்றி அவர்களின் உழைப்பை ஆண்கள் நிர்வகிக்கத் தொடங்கினர். தொழில்மயம், நவீனகால விஞ்ஞானம் ஆகிய யாவும் பெண்ணின் பங்கு நிலைப் பரிணாமத்தைக் குறைத்தே மதிப்பிட்டன.
ஆண்வழிச் சமூக முறைமையில் காணலாகும் பெண்மீதான அதிகாரத்திற்கும் பிற செயல்களுக்கும் ஆண்களே காரணம் எனப் பெண்மையச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். பெண்ணுக்கும் ஆணுக்குமான பால் வேறு பிரிவினையே உண்மையான வர்க்கப் பிரிவினை; இதன் காரணமாகத்தான் பெண்ணின் அந்தரங்கம் பகிரங்கமானது. பெண்ணின் உடல் பாலியல் இருப்பு ஆணதிகாரத்திற்கு எதிரானதாக நிறுத்தப்பட்டது. ஒருபால் சேர்க்கை ஆதரிக்கப்பட்டது. பெண் உடல் கவர்ச்சிக்குரியதான சந்தைக் கலாச்சாரம் எதிர்க்கப்பட்டது. இலக்கியத்தில் மொழி பாகுபடுத்தப்பட்டு ஆண்மொழி, பெண்மொழி என அறியும் முயற்சி வளர்ந்தது. எனினும் பெண்மொழியை அறிமுகப்படுத்துவதில் ஆண் படைப்பாளர்களின் எதிர்க்குரலைத் தவிர்க்க முடியவில்லை.
பெண்ணியம், பெண்ணை மையமிட்ட ஆய்வு பெண்மைநிலை ஆய்வாகவும், பெண் உடலரசியல் ஆய்வாகவும் (பெண் மையம்), அந்தரங்கத்தை அரசியல்படுத்தும் பெண்நிலை ஆய்வாகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவ்வாறல்லாமல், பெண் பற்றி எழுதியிருக்கக் கூடிய எல்லாவற்றையும் பெண்ணியமாகப் பார்க்கும் பார்வை வளர்ந்து வருகிறது. ஏனென்றால் காலந்தோறும் பெண்மைநிலை சார்ந்த புனைவுகள், ஆண்களுக்குக் கிளர்ச்சியூட்டுவன. பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் காமத்தின் உச்சம் தொடுவன. காமத் தனிவிற்குப்பிறகு பெண்உடல் தீட்டு எனக் குப்பைத் தொட்டியாய் ஒதுக்கப்படுவது உண்டு. இந்தப் போக்கு மகாராசனின் “பெண்மொழி இயங்கியல்” என்ற நூலில் இல்லை. பெண்ணை, பெண்ணின் வலியை வரலாற்று நோக்கோடும், பெண் நோக்கோடும் ஆராய்ந்து, மூன்றாம் நபராக, நடுநிலை ஆய்வாளராக, பெண்ணியத்தை உட்செரித்துக் கொண்டிருப்பதை நூல் முழுக்க உணரமுடிகிறது. 
இந்நூல் பெண் உடலரசியலை மையமிட்டது. சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை மிக நேர்த்தியாகப் பெண் உடலரசியல் / பெண்மொழி ஆய்வுக்குட்பட்டிருக்கிறது. பெண் உடல் தீட்டானது, பெண் தீட்டானவள் என்ற இந்து மதக் கற்பிதத்தை இரண்டு பெண் கவிஞர்கள் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். பெண்ணின் உடலனுபவத்தைக் கலைத்துப்போடுவது பெண்மொழி என்ற புரிதல் தொடர்கிறது. உடலனுபவக் கலைப்போடு மனதைப் பகுத்தறிவோடு கலைக்க வேண்டிய தேவையையும் பெண்மொழி முன்வைக்க வேண்டும். இதை ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கைக் கவிதைகளில் காணமுடிகின்றது.  ஆவுடையக்காள், பெண்ணும் ஆணும் கடவுளாய் வாழ்வதை அறியாதவரே தீட்டை நடைமுறைப்படுத்துவார்கள் எனச் சாடுகிறார்.
தீட்டென்று மூன்று நாள் வீட்டை விட்டு  விலக்கி 
திரிந்து விட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து
நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி 
நடுவீட்டில் வந்திருப்பாய் நான்சுகி என்றுரைத்து 
தீட்டென்றும் பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க
தேகமேல் முழுகிவிட்டால் தீட்டோடிப் போமோ
ஆசாரமாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி
அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டு போச்சோ?
என்ற பாடல்,  பெண், ஆண் ஆகிய இருவரும் மனத்தில் அழுக்கில்லாத மனிதத்தை முன்னிறுத்துகிற கலகக் கலாச்சார உணர்ச்சி உள்ளடக்கிய உயிரினமாகப் பார்க்கப்பட வேண்டிய தேவையை முன்மொழிகிறது.
இப்படிப்பட்ட புரிதலை உள்ளடக்கிய பெண்ணிய ஆய்வுகள் வரவேண்டிய தேவையை மகாராசனின் ‘பெண்மொழி இயங்கியல்’ நூல் பிரகடனப்படுத்துகிறது. பாலியல் என்பது இயக்கம். சுலாமித் ஃபயர்ஸ்டோன் தனது பாலியல் இயங்கியல் என்ற நூலில் பெண் பாலியக்கம் அரசியலானது எனத் தெளிவுபடுத்துகிறார். மனித இயக்கம் உயிரியல் பாங்கில் அமைந்த உள்ளுணர்வின் வெளிப்பாடான பாலியலை மையமாகக் கொண்டது. சமூக-பண்பாட்டு ஒழுக்கவியலைத் தீர்மானித்த ஆணின் ஒழுக்க வரையறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண் பெண் வேறுபாடு ஓர்மை மன நிலையோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தன்னிலை கட்டமைக்கப்படுகிறது.  இது ஆணுக்கும் பெண்ணுக்குமான விருப்பம், இலட்சியம் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது. பெண்கள் பாலியல் உந்துதலாகப் பார்க்கப்படுவது ஊடகவெளியில் உச்சம் பெற்றுள்ளது. ஆண்கள் இந்த உச்சத்தை மடைமாற்றுச் செய்துகொள்ள முனைகிறார்கள். ழாக் லக்கான் , மார்க்யூஸ்  மற்றும் வில்ஹெம் ரீச்  போன்ற உள, பின் நவீனத்துவப் பெண்ணியலாளர்கள் பாலியல் இயக்கம் எவ்வித அமுக்கத்திற்குள்ளாகாமல் இயல்பாக நடைபெறும்போது, பெண் ஒடுக்குமுறை நிகழாது எனக் கூறுகின்றனர்.
பெண் ஒடுக்குமுறை நிகழும் இடம் குடும்பம். இதை, அரசின் அமைப்பும் கருத்தியலும் வார்க்கப்படுகின்ற ஓர் ஆலைதான் குடும்பம் என ரெய்ச் கூறுகிறார். இதை, குழந்தைப் பருவத்திலே தொடங்கிவிடுவதாகக் குற்றம் சாட்டுகிறார். எனவே, பெண் சுதந்திரமானவளாக இயங்க, பாலியல் உந்துதல்கள் சுதந்திரமாக வெளிப்படவேண்டும் என்றும் கூறுகிறார். இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள்  உத்தரநல்லூர் நங்கைக் கவிதையில் வெளிப்பட்டுள்ளன.
ஓரினம் இயற்கையானதாகவும் நிரந்தரமானதாகவும் சார்பானதாகவும் இருப்பது இயல்பானதல்ல என்ற விளக்கத்தை உள்ளடக்கிய ‘பாலினம்’ என்ற கருத்தியல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசப்படுகின்றது; எழுதப்படுகின்றது. இச்சூழலில் பெண்ணும் ஆணும் சமம் என்ற புரிதலை உலகளாவியதாக்க வேண்டிய தேவையை விசாலப்படுத்தியுள்ளது மகாராசனின் இந்நூல்.
பாலியம், சமத்துவமின்மை, பால்வேறுபாடு, அதிகார வேறுபாடு, சார்புநிலை சார்ந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் பார்வையோடு விளிம்பு நிலையிலுள்ள தலித்துகள், திருநங்கைகள் ஆகியோரின் பாலிய இயக்கம் பேசப்பட வேண்டியதன் அவசியத்தை நவீனத் தமிழ்க் கவிதைகள் கவனப்படுத்துகின்றன. ஆண் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்தி ஆண் சமூகத்தையும் குறிப்பாக, பேதமையோடு வாழும் பெண் சமூகத்தையும் வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் பிற்காலத்தில் ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கை ஆகியோர் பெண்நிலைக் கலக அரசியலை, பெண்ணிய அரசியலைக் கவனப்படுத்தியுள்ளது அவதானிக்கத்தக்கது.
20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகம் ஆகும் பெண் கவிஞர்கள் ஔவையாரை, வெள்ளிவீதியாரைத் தங்கள் கவிதைக்குள் சுவாசித்துள்ளனர். சங்க இலககியத்தை நவீனக் கவிதைக் களத்திற்கு நகர்த்தியுள்ளனர்; அழகியலை நவீனப்படுத்தியுள்ளனர். தூய்மை இல்லாத துணி தூமை என அழைக்கப்படுவது கிராமியச் சொலவடை என்றாலும்,  தூய்மை என்ற கருத்தாக்கத்தின் மீதான இந்துத்துவ எதிர் மனோபாவம் கலகமாகியிருப்பதை  வெள்ளிவீதியார், ஔவை, உத்தரநல்லூர் நங்கை, ஆவுடையக்காள், ஆகியோரின் கவிதைகளிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.
தமிழில் நவீன இலக்கிய உலகில் குறிப்பிட்ட நான்கு பெண் கவிஞர்களின் கவிதைகள் மட்டும்தான் பெண் வெளியை, பெண்மொழியைப் பேசுவன என்ற புரிதலில் அறிவு ஜீவிகள்(?) கிடைக்கின்ற கருத்தரங்க மேடைகளிளெல்லாம் அவர்களின் விளம்பரதாரர்களாகின்றனர். மாறாக, உத்தரநல்லூர் நங்கை, ஆவுடையக்காள் கவிதைகள் முந்தைய காலகட்ட பெண் கலகக் காரர்களாகிறார்கள் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுவதன் மூலம் மகாராசனின் நூலகத் தேடலை உணரமுடிகிறது, தேடல் தொலைந்து போனதில் இல்லை; தொலைவில் என்பதை அவரின் முயற்சி அறிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதிய எதிர்ப்புச் சிந்தனையோடு பகுத்தறிவை எடுத்து இயம்பிய உத்தரநல்லூர் நங்கை மறைக்கப்பட்டிருக்கிறார் என்ற புதுத்தகவலை மகாராசன் முதன் முதலாகப் பதிவு செய்கிறார்.  “பாய்ச்சலூர் பதிகம்” என்ற பதிகத்தில் ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் உத்திரநல்லூர் நங்கைக்கும் வேதம் ஓதிச் செல்லும் பார்ப்பன இளைஞனுக்கும் உறவு ஏற்படுகின்றது. சாதிக்கலப்பு நிகழஇருப்பதைச் சமூகத்தார் எதிர்க்கின்றனர். அவர்களின் உறவு குறித்து
மகங்கொண்ட தேகந்தன்னில் மற்றொரு சுத்தம் காணீர்
அகங்கொண்டு புறமும்கண்டு அவனுக்கே தாரமானேன்
சுகங்கண்டு துக்கங்கண்டு சுக்கில வழியே சென்று
பகங்கொண்ட தேனோ என்னில் பாய்ச்சலூர் கிராமத்தாரே
என்று வினவுகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மொத்த அனுபவத்தையும் இணைத்த நிலையில் அவரின் எதிர்ப்புக் குரல் இருப்பதாக மகாராசன் சுட்டிக்காட்டுகிறார்.
குலங்குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணுநூலும்
சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்பதுண்டோ?
நலந்தரு நான்கு வேதம் நான் முகம் படைத்ததுண்டோ?
பலந்தரு பொருளுமுண்டோ பாய்ச்சலூர் பதிகத்தாரே.
என்றும், சாதியத்தை வேதங்கள் காப்பாற்றுவதைச் சாடுகிறார்.
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்தவர்க்கு அதுவுங்கள் இதுவுங்கள்ளே
ஒருகுழை உயர்ந்த தேனோ ஒரு குழை தாழ்ந்த தேனோ
பறையனைப் பழிப்பதேனோ?
என்ற பகுத்தறிவுக் கேள்வி உத்தரநல்லூர் நங்கையின் அறிவின் முதிர்ச்சி என உணர்வதைக் காட்டிலும் பெண் ஒடுக்குமுறை என்பது தலித் பெண் ஒடுக்குமுறையோடு கண்டிப்பாக எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியத்தை 16-ஆம் நூற்றாண்டிலே ஏற்படுத்தியிருக்கிறார். மனித உரிமை என்பது தலித்துகளின் உரிமை  என வலியுறுத்தும் காலம் இது. இதற்கான விவாதங்கள் அரசியலாகி வருகின்றன. பெண்ணியம் பேசுபவர்கள் அம்பேத்கரின் தீண்டாமை பற்றிய கட்டுரை, சாதிகளின் தோற்றம் பற்றிய கட்டுரைகளை எல்லாம் வாசிக்க வேண்டிய தேவையை நங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 
வேதாந்தங்கள் குறித்த ஆவுடையக்காள் கவிதைகள் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன எனக் கூறுகிறார்.
  ஜாதிவர்ண குலகோத்திர ஆசிர மாதிகள் பொய்யடா
ஜாதிவர்ணாசிரமம் போச்சே ; வேதசாஸ்திரம் வெறும் பேச்சே.
சாதிய வர்க்கப் பிரிவினைக்கு வேதங்கள் சாத்திரங்கள்தான் ஆதாரம். அவை களையப்படவேண்டும் எனத் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார். பெண்ணின் முலை, தூய்மைத் துணி, பட்டாம்பூச்சியாய்ப் பறக்கும் யோனி, அலாதி உடல், அடர்மயிர்க்காட்டில் வழியும் காமம் என்பனவாக, பெண் மொழிப் பதிவை உணர்த்தியுள்ள பெண்கவிஞர்கள், பெண் சார்பு எழுத்தாளர்கள் உடலின் வினைகளை உடல்சார்ந்த சமூக மூடக்கட்டுகளைக் கட்டவிழ்க்கும் ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கை ஆகியோரையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இவர்கள் கவிதையிலிருந்து அறியலாம் எனப் பெண் பார்வையில் ஆணாக இருந்து அலசியிருக்கிறார் மகாராசன். காமம் பெண்ணுக்கு நிறைவேறப்படாதபோது அது கடவுள்பால் மடைமாற்றுச் செய்யப்பட்டிருப்பதை ஆண்டாள், காரைக்கால் அம்மையார் கவிதைகள் இயம்புகின்றன. சாதி எதிர்ப்பும், பெண் அடிமை ஒழிப்பும் பெண்மொழிக் களத்தை விரிவுபடுத்தியிருப்பதை ஓர் ஆண், படைப்பாளனாகவும், விமரிசனனாகவும் நின்று பெண்மொழியை உட்செரித்துக் கொண்டிருப்பது பெண்ணிய ஆய்வுலகில் ஒரு மைல் கல்லாகும்.
ஆண் ஆய்வாளர்கள் பெண்ணியத்தை ஆய்வாகத் தந்துள்ளனர்; கட்டுரைகள் எழுதியுள்ளனர். பெண்ணியத்தை, தலித்தியத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். ஆனால், பெண்மீதான இவர்களின் பார்வை கேள்விக்குட்படுகிறது. பெண்ணியத்தைப் பலவிருதுகளுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் ஜெயகாந்தன் பெண்ணீயம் எனச் சாடுவதை மறந்துவிட முடியாது. இத்தகையச் சூழலில் பெண்ணியம் பெண்ணீயமாக அறிவுக்கிறுக்கர்களால் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ச் சூழலில், பெண் மொழியின் மையச்சரடைப் பிடித்திருக்கிறார் மகாராசன்.
பெண்ணிய ஆய்வுகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆய்வாக இது இருக்கிறது. இவர், சங்க இலக்கியப் பெண்கவிஞர்களின் கவிதையோடு நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகளையும் ஒப்பிட்டு, ஆண் அதிகாரப் பாலியல் செயல்பாடுகளில் பெண் உடல் நுகர்பொருளாகியிருக்கும் உலகமயச் சூழலை மொழி நேர்த்தியோடும், கருத்துத் தெளிவோடும் அறிவியல் பார்வை, சமூக அக்கறை யாவும் மகாராசனின் வாசிப்பு அரசியலை முன்மொழிகின்றன. பெண் விடுதலையை ஆண் நல்கிடஇயலாது. உணர்ந்து கொள்ள இயலும், ஆனால் உணர்த்துவது கடினம். அப்படியே பெண் விடுதலையை ஆண் பேசுவது என்பதும் உண்மையாக இருக்காது என்ற விவாதம் பொய்யாகிறது மகாராசனின் பெண்ணிய வாசிப்பில். இதுவரையில் எழுந்துள்ள ஆய்வுகள் யாவும் மேல்கட்டுமானத்திலிருந்து எழுதப்பட்டிருக்க, மகாராசனின் ‘பெண்மொழி இயங்கியல்’ என்னும் இந்நூல் மற்றும் ‘கீழிருந்து எழுகின்ற வரலாறு’ ஆகிய நூல்கள் கீழ்க்கட்டுமானத்திலிருந்துதான் விடுதலை பிறக்க வேண்டும் என்ற தத்துவத்தைச் சொல்கின்றன. ‘அரவாணிகள்: உடலியல் உளவியல் வாழ்வியல்’ என்ற இவரது தொகுப்பு நூல் விளிம்புநிலையில் வாழும் திருநங்கைகளின் வாழ்வியற் பதிவாகும்.மேலும் இவரது தொகுப்பில் வெளிவந்துள்ள ‘ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்’ என்ற நூல், ‘ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்’ என்ற நூலும்  ‘மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்’ என்ற நூலும் விடுதலை வேட்கையையும் சமூகம் பற்றிய தெளிவான பார்வையையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இவர் மாணவப் பருவத்திலேயே ‘ஏர்’ என்ற பத்திரிகை நடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
மகாராசனின் முகவரியைத் தமிழ்த் தேசியவாதியாகவும் பெண்ணியவாதியாகவும் தமிழ்மொழிப் புலமையாளராகவும் அடையாளப்படுத்தலாம். இன்றைய ஆய்வாளர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தனது எல்லையைச் சுருக்கிக் கொண்டு அதற்கான தேடல் முயற்சியில் சுருங்கிப்போன காய்களைப்போல இருக்கும் சூழலில், தமிழில் அதிகமான நூல்களைக் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு கிடக்கும் மனித மீட்பாளரைப்போல, பழைய கட்டிட நூலகங்களில் செல்லரித்துப் போயிருக்கும் நூல்களைத் தூசுடன் சுவாசித்துக் கொண்டு வாசித்து வாசித்து, தெளிந்த மொழிநடைக்கு உரிமையாளராக மிடுக்குடன் நடக்கிறார் மகாராசன். ஆய்வுக் களத்தில் நிமிர்ந்த ஞானச் செருக்குடன் நடைபோட என் மூலாதாரத்திலிருந்து வார்த்தைகளைக் குவித்து வாழ்த்துகின்றேன். என் சிந்தனையை உரசிப்பார்க்க இந்நூல் சவாலாக அமைந்திருந்தது என்று கூறுவதைவிட அவரது மொழியாளுகையில் தெளித்த சிந்தனைகளோடு பயணிக்கிறேன் என்ற பெருமிதத்துடன் அவரது தமிழ்ப்பணி, பெண் விடுதலைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுடன்
முனைவர் அரங்க மல்லிகா
பேராசிரியர், தமிழ்த்துறை,
எத்திராஜ் கல்லூரி, சென்னை

தீரும் பக்கங்கள்; தீராத காயங்கள்: மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலை முன்வைத்து :- கவிதாசரண்


மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூல் என் கைக்கு வந்தபோது இவ்வளவு கனக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வியப்போடும் களிப்போடும் அடுத்த இரண்டு நாட்களில் எனக்குக் கிடைத்த நேரத்தில் படித்து முடித்தேன். கடந்த பதினெட்டு மாதங்களில் நான் சுவைத்துப் படித்த நெடிய நூல் இது ஒன்றுதான். மகாராசனுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் அச்சாக்கம் இது.  பட்டத்தை விடவும் நூலின் பரிமாணம் அளப்பரியது.
மகாராசன் இதற்கு முன்பே எழுத்தோடு இரண்டறக் கலந்தவர். அவர் பெயரில் ஐந்து நூல்கள் வந்துள்ளன. அரியதொரு சிற்றிதழுக்கு ஆசிரியராகவும் அறியப்பட்டவர். இது அவரது ஆறாவது நூல் என்றாலும் ஒருவகையில் எனக்கு இதுவே முதன்மையானதாகவும் முழுமை பெறுவதாகவும் படுகிறது. ஒரு ஆய்வேட்டை என்ன மாதிரியில் உருவாக்க வேண்டுமோ அதற்கேற்பவும் மேலதிகமாகவும் தன் உழைப்பைச் சிந்தி வளர்த்தெடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நூலின் பல தலைப்புகளும் உள் தலைப்புகளும் அவரது தீவிர ஆளுமைகளையும் மீட்சியற்ற ஈடுபாடுகளையும் தாங்கி நிற்பவை.  அவரின் இரண்டொரு நூல்களை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் இதில்தான் அவர் உழைப்பும் திளைப்பும் முழுமையடைகின்றன.  அண்மைக்காலங்களில் ஆய்வேடுகள் பல இத்தனை கரிசனத்தோடு உருவாக்கப்படுவதில்லை. மகாராசன் அந்தவகையிலும் தன் அர்ப்பணிப்பை இதில் நிறுவியிருக்கிறார்.
நூலின் ஒரு பக்கத்தில் ‘பெண்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதிலும் சகல ஆண்களும் தங்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர் ’ என்றொரு வாக்கியம் வருகிறது. இதனைக் கேள்விக்குட்படுத்தும் கலகக் குரலாகத்தான் இந்தப் ‘பெண்மொழி ’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் - இந்தியாவில் மட்டுமே இன்னொரு அய்க்கியமும் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. சொல்லப்போனால் இது ஒன்றும் ஒரு சொல்லில் முடிந்துவிடும் அய்க்கியமல்ல. யுகம் யுகமாய் மரபு ரீதியான சட்டகத்தில் இந்திய மனம் ஒவ்வொன்றிலும் வலிந்து பொருத்தப்பட்ட அய்க்கியம். அதாவது, ‘தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரைகுத்தி அவர்களை ஒடுக்குவதில் பிற மக்கள் அனைவரும் தங்களுக்குள் கேள்விக்கப்பாற்பட்ட அய்க்கியத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இந்த இரண்டு அய்க்கியங்களையும் உடைத்தெறியும் போராளியாகத் திகழ வேண்டியவர் மகாராசன். அவர்தான் இந்த முதல் ஆவணக் குரலை வலிய மொழியில் எழுப்பியிருக்கிறார். இது எனக்குப் பெருமைக்குரிய அம்சமாகப்படுகிறது. இனி தொடர்ந்து வரும் அவரது அடுத்தடுத்த எழுத்தூற்றங்களில் தலித் மக்களுக்கெதிரான அய்க்கியத்தையும் அவர் கடும் பகடிக்குள்ளாக்கி உடைத்தெறியத் துணை புரிவார் என்று நம்பலாம்.  இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; தீராத என் ஆசையும் கூட.
இவ்வளவு நீண்ட பக்கங்களை மகாராசன் ஒரே மூச்சில் எழுதினாற்போல அத்தனை சீராகவும் கூராகவும் உருவாக்கியிருப்பதை மொழியருமை தெரிந்த ஒவ்வொரு வாசகரும் உய்த்துணரலாம். வழுக்கும் கண்ணாடித் தளத்தில் தங்குதடையில்லாமல் நழுவிப்போகும் புதிய நெய்யூற்றைப் போல இந்நூலின் மொழிக்கட்டுமானம் நம்மை மெய் மறக்கச் செய்கிறது.
நூல் உருவாக்கத்தில் மகாராசனின் பங்களிப்பு ஒன்றும் அற்ப சொற்பமானதல்ல. அவர் ஒரு வாக்கியத்தை எழுதுகிறார். தொடர்ந்து ஒரு மேற்கோள் வருகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் கருத்தோட்டம் தொடர்கிறது. இந்த மூன்று பகுதிகளும் கொஞ்சம்கூட அந்நியம் கலவாமல் ஒரே அலைவரிசையாக, ஒரே எண்ணப் பிரவாகமாக இழைந்திருப்பதைச் சொல்லாய்வில் அக்கறை கொண்டவர்கள் உணராமல் தப்ப முடியாது.  உண்மையில் அவர் எந்தக் கருத்தைத் திரட்டித் தரவும் சொற்களுக்காக ஒரு நொடி கூடத் தயங்கி நின்றதாக நமக்கெந்த சாட்சியமும் இல்லை.  மொழி மீது அவருக்குள்ள அண்மையும் இழைவும் அப்படிப்பட்டதாய் இருக்கிறது. நம்மில் சிலருக்கு எதிர் பாராதவோர் அதிர்வோட்டத்தைச் சுட்ட சொல்லற்றுப் போகலாம். பீறிடும் ஒலிக்குறியோடு நாம் இதைக் கடந்து சென்று விடலாம். ஆனால் மகாராசனுக்கு இது போன்றதொரு சிக்கல் எழவே இல்லை. எத்தனை உள்முகமான கருத்துருவையும் தெள்ளத்தெளிந்த சொற்கோலத்தில் அதிர்ச்சி மதிப்பீடுகளைத் தள்ளி வைத்து விளக்கிச் சொல்லிவிடும் மொழிப்புலமை அவரை சிம்மாசனப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இவர் மொழியை ஆள்கிறாரா அல்லது மொழியாகவே மாறிவிடுகிறாரா என்றொரு
ஐயம் தன்னிச்சையாகச் சுரக்கிறது. நாம் சர்க்கரையின் இனிப்பில் மயங்கி இடைவிடாமல் புகழ்ந்து கொண்டே வரும்போது சட்டென்று நாமே சர்க்கரையாகி விட்டால் எப்படியிருக்கும்!  மகாராசன் அப்படி நெகிழக்கூடியவர்தான் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் என்னால் அறிய முடிந்தது. மொழிமீது மோகம் கொண்டு ஒரு மனிதன் மொழியாகவே மாறிவிடும்போது அவன் மொழியின் நிகழ்மரபின் நீட்சியாகவும் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் நேரும். ஒரு வகையில் கலாச்சார ரீதியாக அவன் எந்தப்பிறவியிலிருந்து துண்டித்தெழ முயல்கிறானோ அந்தப் பிறவியாகவே மூழ்கிப் போய்விடுகிற சோகம் அது. மகாராசனின் பன்முக வாசிப்புவெளியும் மேற்கோள் தொகுப்பும் இவ்விதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்குமோ என்று படுகிறது.
தமிழின் ஆகப் பெரும் அறிவுச் செல்வங்கள் அனைத்தும் ஜைனர்களும் பௌத்தர்களும் வழங்கிய கொடை என்பதை நாம் அறிவோம்.  அவ்விருமதங்களையும் வெற்றிகொண்டு மேலேறி வந்த சைவ - வைணவ மதங்கள் நமக்குப் புதிதாக வழங்கிய கலாச்சாரப் பெருமிதங்கள்தாம் நம்மை இன்று சிக்கெனப் பற்றிக் கொண்ட சமூக மனிதர்களாக அமுக்கி வைத்திருக்கிறது.  மனித சமத்துவத்தைச் சாதியச் சழக்குகளால் வேரறுத்துக் கலைத்துக் குலைப்பதை ஏதோ தெய்வசங்கல்பமாகவும் மூத்தோர் வேதவாக்காகவும் ஏற்றுச் செயல்படும் கலாச்சாரச் சீரழிவின் முடிவற்ற மீட்டுருவாக்கம் அது.  உலக மக்களில் 99.9 சதவீதம் பேர் கேள்விகளற்ற வெள்ளெழுத்துப் பாமரர்களாகவே வாழ்ந்து நிறைவதில் அமைதியடைகிறார்கள்.  அவர்களையும் அவர்களது துயரங்களையும் முதலீடுகளாக்கிக் கொண்டு நிச்சயமற்ற நம்பிக்கைகளுக்கான பொய்ப்புனைவுகளையும் மூடத்தனங்களையும் யுகங்களுக்கு அப்பாலும் வெற்றிகொள்ளும்படியான நிர்கலாச்சாரக் கட்டமைப்பு கொண்ட வாழ்க்கை அது.  இன்றைக்கு நாமே அதன் சாட்சியாகவும் இருக்கிறோம். வாழ்க்கை என்பது கடின உழைப்பைக் கோருவது என பொய்க்கலப்பற்றுப் போதித்தவை ஜைனமும் பௌத்தமும். அவற்றுக்கு மாறாக ‘கடவுள் பெயரைச் சொல், கைலாசத்திற்கே செல் ’  என்று புரட்டு பேசியவை சைவ - வைணவ மதங்கள்.  இவ்வுண்மைகளை யார் மறந்தாலும் சமத்துவம் கோரும் கலகச்சிந்தனையாளர்கள் புறக்கணிக்கக்கூடாத ஒன்று. மகாராசன் அப்படிப்பட்ட ஒரு கலகக்காரராகப் புத்துயிர்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.
இந்நிலையில் மகாராசனின் ஆழ்ந்த மொழிப்புலமைக்கும் சமூக அக்கறைக்கும் ஒட்டுமொத்த நூலும் சாட்சியமாகியிருக்கும் அதே வேளையில், நூலின் அங்கொன்றும் இங்கொன்றுமான இரண்டொரு பக்கங்களில் ஒற்றைவரிக் குறிப்புகளாக சில சொல்லி மேற்செல்கிறார். அதாவது பௌத்தமும் ஜைனமும் சமூகத்தில் சில தோல்விகளைச் சந்தித்ததாகவும் சைவமும் வைணவமும் அத்தோல்விகளை ஈடுசெய்ததாகவும் சொல்லிச் செல்கிறார்.  மகாராசன் என்ன சொல்கிறார் என்பதை நான் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.  அவருக்கு இது அர்த்தமுள்ள விளக்கமாக இருக்கலாம். உண்மைகளைப் பொருத்திப்பார்த்துப் புரிந்து கொள்வதில் எனக்குச் சில போதாமைகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம்.  ஆனால் எதிர்ச்சிந்தனை அல்லது மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு ஓர் அடிப்படை அலகு வேண்டுமானால் அதனை ஒரு குறியீடாகவேனும் வழங்கும் தகுதி அவைதிக  மதங்களுக்கே உண்டு என்பதை நாம் அடி நாதமாகக் கொள்ள வேண்டும்.  இதை மீறி நாம் சமத்துவத்துக்கான புதிய மரபுகளை ஈன்றெடுக்க முடிந்தால் மிகவும் நல்லது.  ஆனால் சைவமும் வைணவமும் ஒரு நாளும் நமக்கு உதவியாய் இருக்கப் போவதில்லை. அவைதிக மதங்களிலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றே கொள்வோம். ‘ நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் ’ என்று கூக்குரல் இடவேனும் அங்கே தங்களுக்கு உரிமை உண்டு. வைதீக மதங்கள் அதற்கு வாய்ப்பு வழங்குவதே இல்லை. ஆகவே நாம் எதனைக் கழித்துக்கட்ட வேண்டும் என்பதிலும் எதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலும் கவனம் கொள்வது நம்மைவிடவும் நம் உயிரைவிடவும் கூட இன்றியமையா அம்சங்கள்.
இந்த ஆய்வேட்டில் நாம் சொல்லிக் கொள்ள வேறெந்தக் குறிப்புகளும் இல்லை.  வேண்டுமானால் நம் ஆசைக்காக இரண்டொரு எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம்.
குறிப்பாக, இங்கு எடுத்தாளப்பட்ட பெண்கவிஞர்களின் குறிப்பிட்ட கவிதையொன்றையேனும் எடுத்துக் கொண்டு அதை அலசி ஆய்வதன் மூலம் அவர்களது மொழிதலின் எதிர் மரபை இன்னும் கூர்மைப்படுத்திக்காட்டலாம். இதன் மூலம் அவரவர் மொழியாளுமையையும் ஒப்பு நோக்கலையும் வாசகர்களுக்கான அதிர்வலைகளாகப் பெருக்கிக் காட்டியிருக்கலாம். உதாரணமாக ஆண்டாள், ஆவுடையக்காள் போன்றவர்களின் ஒப்புமையும் வேற்றுமையும் பெண்மொழியின் கூறுகளைத் துல்லியப்படுத்த உதவலாம்.  இந்த முறைமையை மேற்கொள்வதில் சில பக்கங்கள் கூடலாம். ஆயினும் ஆய்வாளரின் சமூகச் சிந்தனை ஒருபடி மேலேறி நிற்கும்.
இது நம் ஆசைதான். மற்றபடி இந்த நூல் ஓர் அரியமுயற்சி. முனைவர் பட்டம் மகாராசனுக்கு அளித்த மேலான வெற்றி.

அன்புடன்
கவிதாசரண்
ஆசிரியர், கவிதாசரண் இதழ்.

வெள்ளி, 13 ஜூலை, 2018

புதிய தமிழ்ப் பாடத்திட்டம்: கற்றல் கற்பித்தல் சார்ந்த எதிர்பார்ப்புகள் :- மகாராசன்

புதியதாக வடிவமைக்கப்பட்ட 11 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக முதுகலை ஆசிரியர்களுக்கான கருத்து வளப்பயிற்சி முகாம் மூன்று நாட்களாகத் தேனியில் நடைபெற்று வந்தது. இந்த மூன்று நாட்களும் கருத்தாளராகப் பங்கேற்று, புதிய பாடத்திட்டத்தின் நோக்கம் உள்ளடக்கம் குறித்து மிக விரிவாக ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று நாட்களும் ஊக்கத்தோடும் தேடலோடும் பல பொருண்மைகள் குறித்துப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

புதிய பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் அதன் தரத்தையும் நோக்கத்தையும் உணர்ந்தும் புரிந்தும் முழுமையாகவே ஏற்றுக் கொண்டு வரவேற்கிறார்கள். அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும் தயாராகவே இருக்கிறார்கள். அதே வேளையில், புதிய பாடத்திட்டத்தைக் கற்றல் கற்பித்தல் நிலையில் இருக்கக் கூடிய இடர்ப்பாடுகளையும் அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளையும் குறித்து நிறையப் பேசினார்கள். தங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினார்கள். அவை வருமாறு:

1. பாடப்பொருண்மை 10 இல் இருந்து 7 அல் 8 ஆகக் குறைத்தல்.
2. தமிழ்ப் பாடத்திற்கும் வாரத்திற்கு 7 பாடவேளைகள் வழங்குதல்.
3. கற்றல் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கும் அடைவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் வினாத்தாள் வினாப் பகுப்பு முறையை மீண்டும் கொண்டு வருதல்.
4. திருக்குறள் பாக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
5. கற்றலுக்கு உகந்த வகுப்பறை மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
6. தேர்ச்சி விழுக்காடு தொடர்பான நெருக்கடிகளைக் கைவிடுதல்.
7. பருவ முறைத் தேர்வுகளைக் கொண்டு வருதல்.
8. ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்தல்.
9. கற்றல் கற்பித்தல் தவிர, இதரப் பணிகளுக்கு ஆசிரியர்களைப் பணிப்பதைக் கைவிடுதல்.
10. 11 ஆம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வைக் கைவிடுதல்.
11. தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் பொருண்மை அளவுகளைக் குறைத்தல்.
12. தாள் ஒன்று, தாள் இரண்டு என்கிற பழைய முறைகளையே கொண்டு வருதல் - தமிழில் கற்றல் அடைவுகளை இலகுவாக்கவும் மொழியாளுமைத் திறன்கள் வளரவும் வாய்ப்பு ஏற்படும். ஆகவே, தாள் ஒன்று என்கிற நிலை மாற்றி, தாள் ஒன்று இரண்டு எனக் கொண்டு வருதல்.
13. 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி மதிப்பெண் குறைவிருந்தாலும், மாணவர் கட்டாயத் தேர்ச்சியாகி 12 ஆம் வகுப்பிற்கு அனுமதிக்கும் போக்கைக் கைவிடுதல்.
14. அரையாண்டுத் தேர்வுக்கே முழுப் பாடப்பகுதிகளையும் வைக்காமல், முழு ஆண்டுத் தேர்வுக்கே முழுமையான பாடப் பகுதிகள் என வரையறுக்க வேண்டும்.
15. உயர் கல்வியையும் தமிழில் படிக்கின்ற வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.
16. தமிழ் வழியில் பயின்றோருக்கே அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
17. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை திணிக்கப்படுவதைக் கைவிட வேண்டும்.
18. மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைக் கைவிட வேண்டும்.
19. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயில்வோருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் தனிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
20. புதிய பாடத்திட்டம் தொடர்பாக மாணவர் ஆசிரியர் பெற்றோர் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

மேற்குறித்த கோரிக்கைகளைப் பள்ளிக்கல்வித் துறை கவனத்துடன் நிறைவேற்ற ஆவன செய்திட வேண்டும். இக்கோரிக்கைகள் ஆசிரியர் தொடர்பானது மட்டுமல்ல; இளம் தலைமுறை தொடர்பானது.

தமிழில் மரபும் நவீனமும் : புதிய தமிழ்ப் பாடத்தை முன்வைத்து :- மகாராசன்

தமிழ்ப் பாடத்திட்ட உருவாக்கத்திற்குப் பின்னுள்ள உயரிய நோக்கும் இலக்கும் ஒவ்வொரு பாடப்பகுதியிலும் பொதிந்து கிடக்கின்றன. தமிழின் மரபை நவீன காலத்திற்கும், நவீனத்தின் பன்முகத்தை மரபோடும் இணைத்திருக்கும் பாங்கு மிகப் பொருத்தமாய் வடிவமைந்திருக்கிறது.

இதுவரையிலும் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த அல்லது படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இனி மொழிப் பாடத்தைத் தமிழில் கற்பிக்கக் கூடிய அல்லது தமிழில் படிக்கக் கூடிய புதிய கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது புதிய பாடத்திட்டம்.

தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாக மட்டுமே சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்னும் கூடுதலாக அறிவியல் தமிழாகவும் ஊடகத் தமிழாகவும் விரிவுபடுத்தி, தமிழை அய்ந் தமிழாகச் செழுமைப்படுத்தி வளப்படுத்தியிருக்கிறது புதிய பாடத்திட்டம்.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, ஊடகம், பண்பாடு, கல்வி என விரிவு பெறுகிற உயர் கல்வியின் அறிவெல்லாம் தமிழின் மரபிலும் காணக் கிடைக்கிறது என்பதை உரத்துச் சொல்கின்ற பாடப் பகுதிகள் நிறைய உள்ளன. அது மட்டுமல்லாமல் மரபிலிருந்து இன்று வரைக்குமான தமிழின் கவிதை மற்றும் புனைவுகளின் வழியாகத் தமிழை நவீனத்திலும் மரபிலும் இரு வேறு தன்மைகளிலும் உயிர்ப்புடன் காண முடிகின்றது.

தமிழால் முடியுமா? என்பதற்கு, தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர் பாடத்திட்டக் குழுவினர். தமிழ்ப் பாடப்பகுதிகளின் பொருண்மைகள் யாவும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற எல்லைகளைக் கொண்டிருப்பது சிறப்பாக இருகிறது.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாடப்பகுதிகளைப் படிக்கப் போகிற இளம் தலைமுறையால் தமிழும் தமிழ் இனமும் தமிழ்நாடும் தலை நிமிரும் என்கிற நம்பிக்கையைப் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கியுள்ளன.

தமிழ்ப் பாடப் பகுதிகள் ஈழத்தின் வலி மிகுந்த பக்கங்களையும் அதனதன் குரல் வழியாகவும் பதிவு செய்துள்ளன. ஈழப் படைப்பாளிகள் பலரின் படைப்புகள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களைக் குறித்த பதிவுகள் கவிதைகள் வழியாகவும் கட்டுரைகள், கதைகள் வழியாகவும் பதிவாகியுள்ளன.

தமிழின் இருப்பையும் அதன் அடையாளத்தையும் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாக உயர்வான இடத்திற்குக் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்கு உரியது.

தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும், வரவேற்க வேண்டிய மற்றும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெருமுயற்சியை நாம் கொண்டாடத்தான் வேண்டும். ஆம், கல்வியாய்ப் பரிணமித்திருக்கும் தமிழைக் கொண்டாடத்தான் வேண்டும். பாடத்திட்டக் குழுவினருக்கும் இதனை ஒருங்கிணைத்த திருமிகு உதயச்சந்திரன் அவர்களுக்கும் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் அனைவருக்கும்.

வியாழன், 12 ஜூலை, 2018

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை : த. சத்தியராசு

“எந்த ஒரு படைப்பாளியும், ஒருபடைப்பில் அடைய வேண்டிய உச்சநிலையை நோக்கிய தேடலில்ஈடுபடாமல் இருக்க இயலாது.அத்தகைய அவர்களின் தேடல்கள்,பிற படைப்பாளியைப் பற்றிக்கூறுகிற கூற்றுக்கள், இலக்கியம்பற்றிய ஆழமான கணிப்புக்களாகஅமைந்து கிடக்கின்றன” என்றுக.பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார். அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறது. இருப்பினும் சிற்சில முரண்களும், பிழைகளும் இல்லாமல் இல்லை. இது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறது. தொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும். அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.

சொல் நிலம் – உருவாக்கம்

பண்டித, எளிய நடைகளில் இருப்பது, உவமை மிகுதியாக இடம்பெறுவது, இருண்மை நிலையில் இருப்பது, தொன்மம், புராணத்தொடர்பு, சமகாலம் – அரசியல் முறை, சமூகம், வாழ்க்கைமுறை எனப் பல்வேறு முகங்களைக் காட்டுவதுதான் கவிதை எனப் பெரும்பான்மையானோர் கருதுவர். அப்படிப்பட்ட ஓர் இலக்கியப் பிரதியாகத்தான் சொல் நிலமும் அமைந்திருக்கிறது.

     இப்பிரதி தொல்காப்பியம், சங்கப்பனுவல்கள் போன்ற வாசிப்புத் தளத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் உருவாகியிருக்கலாம். இதனை இக்கவிதைப் பிரதியும், கவிஞருடனான உரையாடலும் உணர்த்தின.

மதிப்பீட்டு முகங்கள்

ஒரு பனுவலின் மதிப்பீடானது அதனை வாசிக்கும் வாசகனின் வாசிப்புக்கு ஏற்ப மாறுபடும். ஒரு கவிதையின் தன்மை நுகர்வோருக்கு, அவர்தம் புலன்வழிக் கிடைக்கும் காட்சிகள் படிமங்களாக விரியும். “கவிதைகளில் அறிவுப்பூர்வமானஎண்ணங்களைச் சிந்தனைஅலைகளாக வெளிப்படுத்துதல்ஒரு முறை. இதற்கு மாறாக,கண்ணால் கண்டும், காதால்கேட்டும், நாவால் சுவைத்தும்,மூக்கால் முகர்ந்தும், உடலால்தீண்டியும் அனுபவிக்கப்படும்ஐம்புல உணர்வுகளை உள்ளத்தேஎழுப்புதல் அல்லது உணரச்செய்தல் மற்றொரு முறை.புலனுணர்வுகளுக்குவிருந்தளிக்கும் முறையில்கவிதையைப் படைக்கும்இத்தன்மையையே புலனுகர்வுத்தன்மை (Sensuousness) என்கிறோம்”(பா.ஆனந்தகுமார்,2003:33). இப்படிப்பட்ட அடையாளம் சொல் நிலம் தொகுப்பில் காணப்படுகிறது.   

குணம் என்பதை ‘நற்கருத்து, சொற்சுருக்கம், வடிவமைப்பு, எடுத்துரைப்பியல், நடையழகு’ போன்ற கவித்திறன்களை உள்ளடக்கியவை என்பதாகப் புரிந்துகொள்ளலாம். குற்றம் ‘சொற்பிழை, கருத்துப்பிழை, மொழிப்பிழை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், குணம் மிகுதியாக அமைந்திருப்பதையே சிறந்த கவிதை என்பர்.

     “நல்ல கவிதை என்பதுகுற்றங்கள் (Dosha) இல்லாதது,குணங்கள் (Guna) நிறைந்தது;அணிகள் அமைந்தது (Alankara) என்று வாமனர் கருதுகிறார்.குணங்களைச் சேர்த்து குற்றங்கள்இல்லாமல் செய்யுளையாப்பதற்காக, கவிஞன்இரண்டையும் நன்றாகஅறிந்திருக்க வேண்டும் என்கிறார்வாமனர். இவை தவிர வெளிப்படப்புலப்படாது மறைந்திருக்கும்குற்றங்கள் (சூட்சும தோஷங்கள்)பற்றிய அறிவும் கவிஞனுக்குவேண்டும் என்று வற்புறுத்துகிறார்வாமனர்” (கி.இராசா, 2016:99). இக்கருத்தின் அடிப்படையில் இக்கவிதைத் தொகுப்பை அணுகிப் பார்க்கும்பொழுது குணம் – குற்றம் ஆகிய இரண்டு தன்மைகளையும் இனங்காண முடிகின்றது. இவ்வகையில் இந்தத் தொகுப்பை, கவித்திறம் (குணம்), போலி(குற்றம்) என்ற இருவகைகளில் மதிப்பிடலாம்.

கவித்திறம் (குணம்)

மேலே சுட்டிக்காட்டிய குணத்தின் வரையறைகள் இங்கு மதிப்பீட்டுத் தன்மைகளாக அமையவில்லை. மாறாக, கவித்திறம் சார்ந்து கவிஞனின் படைப்பாளுமையை, சமுதாயச் சிக்கலை எடுத்துரைக்கும் முறை, நடை, மனிதம், கவிதை – விளக்கம், மொழித்தூய்மை காத்தல், தலைப்பிடல், பாலுணர்வுக் கருத்தாக்கம், ஒரு சொல் பலபொருள், வரலாற்றுணர்வு எனும் வகைகளில் இங்கு இனம் காணப்படுகின்றன.

சமுதாயச் சிக்கலை எடுத்துரைக்கும் முறை

இக்கவிதைகள் முழுமையும் மனிதன், மனிதப்பண்பு, அடக்குமுறை, உலகத்தின் சுருக்கம் என அமைந்துள்ளன. இப்பார்வை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைச் சிந்தனை உள்ளோரிடத்து மட்டுமே கூடுதலாக அமைந்திருக்கும். அதனை, கெடுநகர் எனும் தலைப்பில் எழுதப்பெற்ற கவிதையின் சில வரிகள் சுட்டிக்காட்டும். அவ்வரிகள் வருமாறு:

           கொளுத்தவர் வலுக்கவும்

இளைத்தவர் இறக்கவுமான

நிகழ்வெளியாய்ச்

சுருங்கிப் போனது

உலகம்

     இவ்வரிகள் உலகத்தில் பொருளாதாரம் ஒரு பகுதியினருக்கு மட்டுமே சேருகிறது என்கின்றன. இதனால் உலகம் நிகழ்வெளியாய்ச் சுருங்கிப் போய்விட்டது என்கிறார் கவிஞர். பல்லாயிரம் ஆண்டு வரலாறு தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்டு. இச்சமுதாயத்திற்காக எழுதப்பெற்ற இலக்கியங்கள் இக்கவிஞரின் பார்வையோடு ஒத்தன. இது இக்கவிஞரையும் அவ்வரிசையிலே சிந்திக்க வைத்திருக்கிறது. அவ்வாறெனில் இன்னும் சமுதாயத்தில் சிக்கல் தீரவில்லை எனலாம். தீர்வை நோக்கிய நகர்வு கவிதைகளில் அமைந்திருக்கலாம்.

நடை

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு நடையைக் கையாள்வர். அது அக்கவிஞரை அடையாளப்படுத்தும். அழகிய நடை, சாதாரண நடை, கடின நடை என நடைகள் இருப்பதாக கி.இராசா (2016:98) குறிப்பிடுகிறார். இந்த மூன்று நடைகளையும் இக்கவிஞர் ஆண்டிருக்கிறார் என்பதை அறியமுடிகின்றது. வட்டார வழக்குகளை மிகுதியாக யாரும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், இக்கவிதைக்குள் சில இடங்களில் வட்டார வழக்கை அறிய முடிகின்றது. சான்றாக,



ஒனக்காகத் தானப்பா

உசுர வச்சுருக்கேன்னு

சொல்லும் போதெல்லாம்,

ஓயாம

இதயே சொல்லாதவென

ஓங்கி நான் கத்தும் போது,

பொசுக்கென அழுது

பொலபொலன்னு

சிந்தும் கண்ணீரெல்லாம்

பொய்யென நினைத்தது

விடலை மனம்       (அம்மா)

எனும் வரிகளைக் காட்டலாம். இவ்வரிகள் அனைத்தும் சிவகங்கை வட்டார மொழியை எடுத்துக்காட்டுவன. இதில்தான் கவிஞரின் முகமும் புதைந்திருக்கிறது. இதுதான் யார்? எங்கிருந்து? கவிதைகள் எழுதுகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டிவிடும் தன்மையுடையது. இது நீரோட்டமான நடையையும் வெளிக்காட்டுகிறது. இவ்வழக்காற்று மொழிகளில்தான் ஒரு மொழிக்கான அடையாளத்தைக் காணமுடிகின்றது. அத்தகு நிலையில் அக்கவிதைத் தொகுப்புக்கான சிறப்பும் கூடுகிறது. ஆங்காங்கு முரண் நடையையும் கவிதைக்குள் காணமுடிகின்றது.

     மனித

     நிழல் போர்த்திய

     நாடுதான்

     வெயிலில்

     வெந்து சாகிறது.



     எட்டிய

     காட்டுக்குள்ளிருக்கும்

     மரங்களும்

     பூக்களும்

     இப்போது

     சிரித்துக் கொண்டிருக்கின்றன       (நிழல் வானம்)

இக்விதை வரிகளில் காணலாகும் நிழல் = வெயில், சிரிப்பு = சிரிப்பின்மை; காடு = நாடு, மரம், பூ= மனிதர் ஆகியன முரண் கருத்துக்களைத் தாங்கியவை. அதாவது,

     நிழல் + சிரிப்பு = காடு è மரம், பூ

வெயில் + சிரிப்பின்மை = நாடு è மனிதர்

எனும் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதைக் கூறலாம். இவ்வாறு அணுகிப் பார்க்கக் கூடிய தன்மைகள் மிகுதி.

மனிதம்

மனிதனின் நற்பண்பைக் குறிப்பது மனிதம். இதை மனிதர்களிடத்தில் தேடிப் பார்க்கின்ற கவிதைகளையும் காணமுடிகின்றது. தமிழகச் சூழல்கள் மட்டுமின்றி உலகச் சூழல்களே மனிதம் இன்றிக் காணப்படுகின்றன என்பதைப் பல கவிதைகள் வெளிப்படுத்தியுள்ளன.  சான்றாக,

     சுள்ளி அடுக்குகளாய்

பெருங்குழிக்குள்

     மனிதங்களை அடுக்கிச்

     சாவை மூட்டிச் சென்றது

கடல்.                 (அலை நிலத்துஅழுகை)

விழுந்திருக்கும் துணியில்

விழுந்த காசுகள்

சிதறிய கோலங்களாய்க்

கிடந்ததில் தெரிந்தன

மனித முகங்கள்

குழல் தடவிய விரல்கள்

காசு முகங்களைத்

தடவுகையில் தெரிந்தன

மனிதர்களின் நிறங்கள்      (அகக்கண்ணர்கள்)

அதிகாரம்

இந்த முறையும்

மனிதத்தைத்

தின்று விட்டது           (இதுவும் ஓர்ஆணவப் படுகொலை)

     இக்கவிதை வரிகள் பல்வேறு சூழல்களில் மனிதத்தைத் தேடும் தன்மையை வெளிக்காட்டுகின்றன. இப்படிப்பட்ட முரண்சிந்தையோடு மனிதன் வாழ்வதற்கு, அவன் போர்த்திக் கொண்ட சமயம், சாதி, இனம் தன்மைகளைக் காரணம் காட்டலாமா? காட்டலாம். இவை மூன்றும் மனித சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு நடத்தேறி வருகின்றன. இதனை வரலாற்றுப் படிப்பினைகள் நமக்குக் காட்டிக் கொண்டேதான் இருக்கின்றன. அத்தகு நீ்ட்சியில் இக்கவிஞரும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கவிதை – விளக்கம்

கவிதையின் வடிவம் என்ன? எளிமை, கடினம், இருண்மை, உவமை எனப் பல வடிவங்களைக் காட்டுவர். கவிதைக்கான பண்பு என்ன என்றால் விளங்கக் கூடாத தன்மையில் அமைந்திருத்தல், எளிதில் புரிதலைத் தருவது, வட்டார வழக்கில் அமைந்திருப்பது எனக் காட்டுவர். இப்படிப் பல்வேறு கருத்தியல்கள் இன்று நிலவுகின்றன. இக்கவிதைத் தொகுப்புக்குள் கவிதைக்கான விளக்கங்கள் சில முன்வைக்கப் பெற்றுள்ளன. அவை வருமாறு:

           நனவிலும் கனவிலும்

           பாடாய்ப் படுத்தும்

           நினைவுகள்

           இப்படியான

           கவிதைகளில் தானே

           செழித்து நிற்கின்றன. (கூதிர்காலம்)

            கவித்தனம் காட்டவே

           எழுதி எழுதித் தீர்கின்றன

           சொற்கள்                 (மனங்கொத்தி)

மொழித்தூய்மை காத்தல்

இலக்கியப் புலவனாக இருந்தாலும், இலக்கணப் புலவனாக இருந்தாலும் காலந்தோறும் மொழித்திருத்தத்தையும் மொழித்தூய்மை காத்தலையும் செய்து வந்திருக்கின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. அதனால்தான் நமக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில்,

     “வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ

     யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”  (தொல்.சொல்.401)

     “சிதைந்தன வரினு மியைந்தனவரையார்”  (தொல்.சொல்.402)

     “கடிசொல் இல்லை காலத்துப்படினே”   (தொல்.சொல்.452)

என்ற கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கவிதைத் தொகுப்பும் அமைந்துள்ளது. குருதி என்பது தூய சொல். அது ரத்தம் எனது வழங்கப்பட்டது. அதனை இக்கவிஞர் ‘அரத்தம்’ (ப.51) என்ற சொல்லாடலால் தூய்மைப்படுத்துகிறார். தேவநேயப் பாவாணர் கூறுவார் பிற மொழியாளர்களின் பெயர்களைக்கூட தமிழ் படுத்துங்கள் என்று. அவரே சேக்ஸ்பியர் என்பதைச் சேக்சுபியர், செகப்பியர் என்றெல்லாம் மாற்றி அழைத்திருக்கிறார். இது ஒரு மொழியைக் கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கான வழிமுறையாகும். அதனை இக்கவிஞரும் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை,

     “ஆனந்த ராசுக்கு

     என் அழுகைத் தமிழ்

அஞ்சலி ஆகட்டும்” (அழுகைத்தமிழ்)

எனும் கவிதைவரிகள் அறிவுறுத்தும். இதன் முதல்வரியில்‘ஆனந்த ராசு’ எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ‘ஆனந்த ராஜ்’ என்று அமைதல் வேண்டும். இப்பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது ராசுவாக மாறுகிறது. தமிழ் தவிர்த்த பிற இந்திய மொழிகளில் ‘ச’ ஒலிப்போடு தொடர்புடைய ச2, ஜ1, ஜ2, ஸ, ஸ1, ஷ, க்ஷ ஆகிய எழுத்துக்கள் உண்டு. அவ்வெழுத்துக்களின் வரிவடிவமும் தனித்தனி. ஆனால், தமிழ்மொழியைக் கட்டமைத்த இலக்கண அறிஞர்கள் நேர்த்தியுடன்தான் செயல்பட்டனர் எனக் கருத இடம் தருகின்றது. இதனை,

     பச்சை   – pacchai – c

     மஞ்சள் – manjal – j

     வம்சம்  – vamsam – s

     சட்டம்  – cattam – ca

     சக்கரம்  – chakkaram – ch

எனவரும் சான்றுகள் காட்டும். இதில் ‘ச’ ஒலிப்பு அதனுடன் தொடர்புடைய பிற ஒலிப்புடன்தான் ஒலிக்கப்படுகிறது. இது கற்றலுக்கான எளியமுறை. இதை ஒப்புக்கொண்டு பிறமொழி ஒலிப்பு வடிவத்தை நீக்கி, தூய்மையைக் காத்துள்ளது எனலாம். அவ்வகையில் இக்கவிஞரும் மொழித்தூய்மை காப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் எனலாம்.

தலைப்பிடல்

இத்தொகுப்புநூல் ‘சொல் நிலம்’ எனும் பெயரைத் தாங்கி, 52 உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. கவிதை நூலின் தலைப்பைத் தெரிவு செய்வதிலும், உட்தலைப்பிடலிலும் மெனக்கெட்டுள்ளார் என்பதை முதல்கவிதையின் தலைப்பான‘கருச்சொல்’ காட்டும். இது கவிதையின் முழுச்சாரத்தையும் உள்வாங்கித் தரப்பெற்றுள்ளது என்பது அக்கவிதையை வாசிப்போருக்குப் புலப்படும். இப்படி, ‘கெடுநகர், ஆயுட்காலம், நிழல் வனம், உறவுக் கூடு, துயர்ப் படலம், ஆழி முகம், செந்நெல் மனிதர்கள், பாழ் மனம்’ போன்ற உட்தலைப்புகளை அமைத்துள்ளார். இவரின் உட்தலைப்பிடல் முறையைப் பின்வரும் கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.

கருத்தைக் கொண்டு தலைப்பிடல்(கருச்சொல், கெடுநகர் போல்வன).அடிச்சொற்கள் தலைப்பாதல்(கருச்சொல், கெடுநகர், பாழ்நிலம் போல்வன).கவிதைவரிச் சொல்லைத் தலைப்பாகத் தருதல்(உறவுக்கூடு, செந்நெல் மனிதர்கள் போல்வன).முதல் கருத்தின் முடிவுச் சொல்லும், இறுதிக் கருத்தின் முதற்சொல்லும் தலைப்பாகுதல்(பாழ்மனம், வலித்தடம் போல்வன).ஒருவரிச் சொற்கள் தலைப்பாதல்(அகக் கண்ணர்கள், கார்காலச் சொற்கள் போல்வன).கவிதைவரிச் சொல்லும் கருத்தும் தலைப்பாதல் (செல்லாக் காசுகளின் ஒப்பாரி, உயிர்க்கூடு போல்வன).வெளிப்பாட்டுத் திறன் தலைப்பாதல் (முரண் செய்யுள்).

பாலுணர்வுக் கருத்தாக்கம்

பிராய்டு கூறுவார் ஒருவரின் ஆழ்மனப் பதிவுகள் ஏதாவதொரு சூழலில் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்பட்ட வரிகள் நிரம்ப உண்டு. அவற்றுள்,

           ஈசல் வயிற்றுப்

           பால் கவுச்சியில்

           கசிந்து கிடந்தது

           நிலத்தாளின் முலைப்பால்    (ஈசப்பால்)

எனும் கவிதை வரிகள் கவிஞரின் உள்ளத்து ஆழ்மனப் பதிவை வெளிக்காட்டுகின்றன. ஓர் ஆணுக்குப் பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு அமையும். அந்த ஈர்ப்பு காமம் சார்ந்து அமையும். அதனையே மேற்கண்ட வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வரிகளில் காணப்படும் ‘பால் கவுச்சியில், முலைப்பால்’ என்ற சொல்லாடல்கள் ஓர் ஆணிடத்துப் புதைந்திருக்கும் காம உணர்ச்சி சொல்லாடல்களின் மூலம் வெளியேறும் தன்மையைக் காட்டுகின்றன. “மனித உள்ளத்தின்வாழ்க்கைமுறையைப்பகுத்துக்கூறும் ஓர் அறிவியலேஉளவியல். ஒருவனது உள்ளம்அவனுடைய செயல்களின் மூலம்உணர்ச்சிகளைவெளிப்படுத்துகிறது. எனவேசெயலை அறிந்து ஆராய்வதன்வழிஉள்ளத்தை நேரடியாக அறியமுடியும். மேலும் உள்ளத்தைநேரடியாக அறிவதற்குஉபகரணங்கள் மூலம் கணிக்கமுடியும். இங்ஙனமே இலக்கியங்கள்கவிஞனின் உள்ளத்துள் சென்றுஉணர்வாக்கப்பட்டுப் பின்னர்உணர்ச்சியாக மாற்றம்செய்யப்படுகிறது” (பா. கவிதா, ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கம் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து), 2017:11) இதனைக் காலந்தோறும் எழுதப்பெற்ற இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டும். அதிலும் குறிப்பாக ஆண் கவிஞர்களின் பாடல்களில் இதனை மிகுதியாகக் காணமுடியும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களை வாசிப்போர் இதனை நன்கு உணர்வர்.

ஒருசொல் பலபொருள்

கவிதை, வாசிக்கும் வாசகனுக்கு ஏற்பப் புதியப் புதிய விளக்கங்களைத் தரவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கவிதை காலம் கடந்தும் பேசப்படும். அப்படியொரு தன்மை இத்தொகுப்புநூலுக்கு உண்டு.

     வடுக்களோடும் வலிகளோடும்

     வயிற்றுப் பாட்டோடும்

     நெருப்பையும் சுமந்து

     சாம்பலாகிப் போனார்கள்

     வெண்மணி வயலின்

     செந்நெல் மனிதர்கள் (செந்நெல்மனிதர்கள்)

எனும் வரிகள் உழவரின் வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுகின்றன. இக்கவிதை வரிகளின் இறுதிவரி கவனிக்கத்தக்கது. அவ்வரியின்‘செந்நெல்’ எனும் சொல் ‘சிறந்த, நல்ல, முற்றிய’ எனும் பொருண்மைகளைத் தந்தாலும், உழைக்கும் வர்க்கத்தினருக்குக் குரல் கொடுத்து வரும் கம்யூனிசத்தை முக்கியமாகப் பதிவுசெய்கிறது. ஆக, ஒருபுறம் உழவரின் வாழ்க்கையையும் மறுபுறம் கம்யூனிசக் கொள்கையாளரின் வாழ்க்கையையும் அவ்வரிகள் வெளிக்காட்டுகின்றன. இக்கவிதையில் இடம்பெற்ற ‘வெண்மணி’ எனும் சொல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி ஊரின் வரலாற்று நிகழ்வையும் நிறுத்திச் செல்கின்றது. அதனைப் பின்வரும் கருத்து தெளிவுறுத்தும்.

தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. (தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் முன்னர் இருந்தது.)  தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி. இப்பூமியில் எங்கு சுற்றினும் பச்சை பசேலேன பசுமை போர்த்திய நெற்பயிர்கள். சில்லென்று வீசும் காற்று, தென்னந்தோப்பு, கரும்புத் தோட்டம் என மனம் வருடிச் செல்லும் இயற்கை சூழல். இங்கு பலதரப்பட்ட நிலமில்லா மக்களும், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் நல்ல வாழ்க்கை முறையை அடைய முயற்சி செய்தும் அதை நிலக்கிழார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வேருன்றி மரமாக வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற கூலித் தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கினார்கள். ஐயா, ஆண்டை என்றுதான் அழைக்க வேண்டும். குறைந்த கூலி, அதுவும் அணாவாக கிடையாது (ஒரு படி நெல்லும் கேப்பை கூழும்தான்) சம்பளம்.

பண்னையார்கள் தொழிலாளர்களிடம் இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். வயலில் நடவு நடும் பெண், ஒருமாதம் முன் பிறந்த தன் பச்சைக் குழந்தையை அங்குள்ள மரத்தில்,  சேலையை கட்டி கிடத்திவிட்டு வேலைசெய்வார். அந்த குழந்தை பசியில் அழுதால் கூட வேலையை முடிக்காமல் பால் கொடுக்கச் செல்லக் கூடாது. மீறினால் வேலை கிடையாது அன்று. சில நேரங்களில் பால் கொடுக்கும் தாயின் மார்பில் எட்டி உதைவிட்டுவிட்டு செல்வர். அங்குள்ள பெண்களை தவறாக அணுகிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

எதிர்த்தால் கட்டி வைத்து அடித்து உதைதான். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். ஒரு பண்ணையாரிடம் முறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் செல்ல முடியாதபடி பண்ணையார்கள் தங்களுக்குள் நல்ல பிணைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். சாணிப்பால், சவுக்கடி இவையெல்லாம் சர்வசாதாரணமான தண்டனைகள் அங்கே.

இந்த நிலையில்தான் 1960களில் இந்திய – சீனப் போரால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது கீழவெண்மணி கிராமத்தையும் விட்டுவிடவில்லை. பஞ்சத்தால் குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். ஆனாலும் பயனில்லை. இவர்களுக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ். இதில் இணைந்து தங்களுக்கு கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். இவர்களுக்கு போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் நிலக்கிழார்கள்.

தொழிலாளர்கள் கூடுதலாக கேட்கும் அரை படி நெல்லை தருவதற்கு மனமில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. ஆனாலும் நேற்று வரை நமக்கு கீழ் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தவர்கள்,  நமக்கு எதிரே அமர்ந்து நம்மிடமே பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற பெருங்கோபம் சம்பந்தப்பட்ட பண்ணையார்களிடம் கனன்று வந்தது. ‘எங்களுக்கு எதிராக சங்கம் ஆரம்பிக்கிறீங்களா..?’ என்று கீழவெண்மணியை சேர்ந்த முத்துகுமார், கணபதி இருவரை கட்டிவைத்து அடித்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கீழவெண்மணியில் கலவரம் மூண்டது.

1968 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க, கீழவெண்மணி மக்களுக்கோ அன்று இருண்ட நாளாக அமைந்தது.

‘தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?’ என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. ‘ஐயோ, அம்மா ஆ…ஆ….எரியுதே!’ என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள் என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

மறுநாள் தினசரிகளில் கிழவெண்மனி படுகொலை சம்பவம்தான் தலைப்புச்செய்தி. நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவானது. தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். சீன வானொலிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன இச்செய்தி. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. முதல் வழக்கில் தொழிலாளர்கள் 120 பேரின் மீதும் இரண்டாவது வழக்கில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு சரியான தண்டனை கிடைத்ததா…? இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருடைய ஆதரவாளர்கள் 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை

மேற்முறையீட்டுக்காக வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அப்பாவி தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இது மட்டும்தானா…? இல்லை, இன்னும் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொழிலாளர்களுக்கு.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்கள் அனைவரும் பணக்காரர்கள். கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” -இதுதான் தீர்ப்பு. ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களை, அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொண்றவர்களுக்கு தீர்ப்பு விடுதலை. இதுதான் அன்றைக்கு தொழிலாளர்களின் நிலை (விகடன், 25.12.2015).

இக்கருத்தியல் அடிப்படையில் நோக்கும்பொழுது அக்கவிதை ஒருசொல் பலபொருளில் கம்யூனிசக் கொள்கையை வெளிப்படுத்தி நிற்பதாகக் கொண்டாலும் நாகை மாவட்டம் கீழவெண்மணியில் விவசாயிகளை (தேவேந்திரகுல வேளாளர்களை) நெருப்புக்கு இரையாக்கிப் படுகொலை செய்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தைத் தோலுரித்துக் காட்டும் வரலாற்றுக் கவிதையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).

வரலாற்றுணர்வு

கவிதை வெறுமனே சமகாலப் பிரச்சினையை மட்டும் பேசிவிட்டுச் செல்லக் கூடாது. அதில் வரலாறு சார்ந்த கருத்துக்கும் இடம் வேண்டும். அதிலும் அந்தக் கருத்துப் பொருத்தப்பாட்டோடு அமைதல் வேண்டும். அப்படிப்பட்ட தன்மையையும் இதனுள் காணமுடிகின்றது. சான்றாக ‘செந்நெல் மனிதர்கள்’ எனும் தலைப்பில் எழுதப்பெற்ற கவிதையில்,

     அரைப்படி நெல்மணி

     கூடக் கேட்டாரென

     நெருப்பின் ஒரு துளி விதையைக்

குடிசைக்குள்

எரிந்துவிட்டுப் போனர்கள்(செந்நெல் மனிதர்கள்)

எனும் வரிகள் ஒரு காலக்கட்டத்தில் உழைக்கும் வர்க்கம் எங்களின் உழைப்பிற்கு இவ்வூதியம் போதாது எனக் கேட்டதற்காக அவர்கள் பட்ட துயரங்களை இன்றும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இக்காட்சிப் படிமங்கள் காலந்தோறும் உழைக்கும் வர்க்கத்தினரைச் சுரண்டித் தின்பதைக் காட்டுகின்றன. இதனை மேற்காண் கருத்தியல் தெளிவுறுத்தும்.

     இவ்வளவு சிறப்புகளைக் கவிஞர் கொண்டிருந்தாலும், சிலவிடங்களில் மொழியமைப்பில் சறுக்கலைக் கண்டுள்ளார்.

போலி

இரண்டு பிழைவாதங்கள் தென்பட்டன. ஒன்று: போலி வலியுறுதல். மற்றொன்று: சொற்றொடர் அமைப்புக் கருத்துப்பிழையும் மொழிப்பிழையும்.

போலி வலியுறுதல்

தமிழ் மொழியமைப்பில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துக்கள் இன்றும் சிக்கலுக்குள்ளாகின்றன. ஏனென்றால் இவ்விரு எழுத்துக்களும் அ+இ, அ+ய்=ஐ; அ+உ, அ+வ்=ஔ எனத் தோன்றியதாக ஆய்வாளர்களும் இலக்கணப் புலவர்களும் கருதுவர். தொல்காப்பியரும் அதற்கு உட்பட்டவர்தான் என்பதை,

     அகர இகர மைகார மாகும்(தொல்.எழுத்.54)

     அகர உகர மௌகார மாகும்(தொல்.எழுத்.55)

என்ற இரண்டு நூற்பாக்கள் சுட்டிக்காட்டும். அப்படியென்றால் அவ்விரு எழுத்துக்களும் போலி எழுத்துக்கள்தானே. இவ்வெண்ணம் இந்தக் கவிஞருக்கும் இருக்கும் போலும். அதனால்தான் ‘அய்ம்பூத, அய்ம்புலன்கள் (ப.11), அய்க்கியமாகி (ப.40)’ ஆகிய சொல்லாடல்களைக் கையாண்டிருக்கிறார். இங்குத் தொல்காப்பியரின் கருத்தை இவர் உணராதிருந்திருக்கிறார் என்றே தோன்றுகின்றது.

     எழுத்துச் சீர்திருத்தத்தைக் காலந்தோறும் அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வெழுத்துச் சீர்திருத்ததில் ஐ, ஔ ஆகியனவும் அடங்கும். அவ்வடிப்படையில் நோக்கும்பொழுது போலி எழுத்தாக எண்ணி அவர் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தில் கவிஞர்க்கு உடன்பாடாய் இருத்தல் வேண்டும். ஐ, ஔ தேவையில்லை என்றார் பெரியார் (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).அதனால் கவிஞர் ஐ, ஔ ஆகிய எழுத்துக்களை அய், அவ் என எழுத முனைந்திருக்கிறார்.

இருப்பினும் அவ்விரு எழுத்துக்களும் அவ்வொலியமைப்பில் ஒலிக்கப்பட்டாலும், அவை, தனித்த எழுத்துக்களாக உணரத்தக்கன என்பதைத் தொல்காப்பியர்,

     “எழுத்தெனப்படுப

     அகரமுத

     னகர விறுவாய் முப்பஃ தென்ப

     சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே”  (தொல்.எழுத்.1)

“ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னு மப்பா லேழு

மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப” (தொல்.எழுத்.4)

“ஔகார விறுவாய்ப்

பன்னீ ரெழுத்து முயிரெனமொழிப” (தொல்.எழுத்.8)

எனும் நூற்பாக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது இவ்வெழுத்து வடிவங்களை நான் கொண்டு வரவில்லை, எனக்கு முன்பு வாழ்ந்த இலக்கணப் புலவர்கள் கொண்டு வந்தது என்பதை ‘மொழிப, என்ப’ என்ற சொல்லாட்சிகளில் விளக்கியுள்ளமையாகும். இதன் வடிவ வளர்ச்சியை ஏற்றுக்கொள்வது சாலச் சிறந்தது. அப்படியிருக்க, இன்றைய ‘ஜ, ஷ, ஸ, க்ஷ’ ஆகிய எழுத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்ற எண்ணம் மேலுறும். அவ்விரு எழுத்துக்களை இவ்வெழுத்துக்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது. ஏனெனில், தமிழ்மொழி இயல்பான, எளிமையான மொழி. அதனால் பண்டைய இலக்கணப்புலவர்கள் க, ச, ட, த, ப எழுத்துக்களை வருக்கங்களாக அமைக்காமல், அதற்குள் அவ்வருக்கங்களை அடைத்துவிட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே அவ்வாறு பயன்படுத்தும் முறையை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

சொற்றொடர் அமைப்புக் கருத்துப்பிழையும் மொழிப்பிழையும்

     இன்றைய வழக்கில் “தான்” என்ற ஒட்டைப் பயன்படுத்துவதைப் பெரும்பான்மையான எழுத்துரையாளர்களிடம் காணமுடிகின்றது. இச்சொல் தனித்து நிற்கும் போதும், ஒட்டி நிற்கும் போதும் வெவ்வேறு பொருட்களைத் தரும். சான்றாக, அன்று தான், அன்றுதான் என்ற சொற்றொடரை நோக்குவோம்.

நான் அவனை அன்று தான் பார்த்தேன்.நான் அவனை அன்றுதான் பார்த்தேன்.

இவ்விரு தொடரில், முதல் தொடரை, ‘நான் அவனை அன்று நான் (தான்) பார்த்தேன்’ என்ற பொருளைத் தருகிறது. இத்தொடரில் உள்ள ‘தான்’ – யான் அல்லது நான் எனும் தொனியைத் தருகின்றது. ஆனால் இரண்டாவது தொடரில் உள்ள ‘அன்றுதான்’ என்பது ‘அன்று’ எனும் பொருண்மைத் தொனியை மட்டுமே தருகிறது. இவ்விரு உணர்தலைப் பெறுவோர் இங்குப் பிழையென்று நம்புவர்.

     இப்பிழையை ‘அன்று தான், அது தான் (ப.20); ஆகியிருக்கலாம் தான்(ப.26); கவிதைகளில் தானே (ப.30), படுகொலை தான் (ப.37), மாட்டீர்கள் தான் (ப.41), ஆறுகள் தான் (ப.44); மானமும் தான் (ப.48); தொலைக்கத் தானா (ப.53); கொடியது தான் (ப.54), குறுணி தான், ஊமத்தையும் தான் (ப.63), சொற்கள் தான் (ப.68) ஆகிய சொற்றொடர்களில் காணமுடிகின்றது. அப்படியொன்றும் கருத்துப்பிழை வரவில்லையே என வினவத் தோன்றும் சிலருக்கு. அவர்களின் புரிதலுக்காக, ‘கற்கள் – கற் கள், பற்கள் – பற் கள், சொற்கள் – சொற் கள்’ இச்சொற்றொடர்களைப் பொருண்மையியல் நோக்கில் வாசித்துப் பார்க்கவும்.

     சிலவிடங்களில் சரியான தொனியுடனும் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். அவ்விடங்கள் வருமாறு: நாடுதான்(ப.17), சீவகன்களும்தான் (ப.32), நாடுதானே (ப.38), அதுதான் (ப.45), என்னதான் (ப.46), எச்சம்தான்(ப.50), வாழ்க்கைதான் (ப.52), தவித்தேதான் (ப.63), குண்டர்கள்தான் (ப.83).

மொழிப்பிழைகள் குறைவு. இருப்பினும் கவனக்குறைவால் ப.76இல் ‘மு(ண்)டியடித்து’ என்பதற்குப் பதிலாக‘மு(ன்)டியடித்து’ என வந்துள்ளது. மொழிப்பிழையில் மற்றொரு பிழை புணர்ச்சிப் பிழை. அது கவனக்குறைவால் வந்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் ப.55, 79களில் ‘தொப்பூள்க் கொடி’ என்ற பிழை வந்துள்ளமையாம். தொப்புள் என்பது பேச்சுவழக்கு; கொப்பூழ் தூய வழக்கு. தொப்பூள் எனும் வழக்குத் தவறு (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).இப்பிழைகள் தவிர்க்கப்பெற்றிருந்தால் இந்நூல் இன்னும் கூடுதல் சிறப்பைப் பெற்றிருக்கும்.

கவிதைத்தொகுப்பு : சொல்நிலம், ஆசிரியர் : மகாராசன், பதிப்பாண்டு : 2007 (முதல் பதிப்பு), வெளியீடு : ஏர், 28, காந்தி நகர், செயமங்களம், பெரியகுளம். பக்கங்கள் : 88, விலை: உரூபாய் 100.

துணைநின்றவை :

ஆனந்தகுமார் பா., 2005, இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட், சென்னை.இராசா கி., 2016, ஒப்பிலக்கியம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட், சென்னை.கவிதா பா., 2017, “ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும்,” தமிழ்ச்செவ்விலக்கிய மேன்மை(மகளிர் உடலியல் – பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து, காவ்யா, சென்னை.கழகப் புலவர் குழு, 2003, நன்னூல் காண்டிகையுரை எழுத்ததிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.சுப்பிரமணியன் ச.வே. (உரை.), 2006, தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.சுப்புரெட்டியார் நா., 1982, குயில்பாட்டு ஒரு மதிப்பீடு, பாரிநிலையம், சென்னை.ஞானசம்பந்தன் அ.ச., 1916, இலக்கியக் கலை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை.பஞ்சாங்கம் க., 2011, தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, அன்னம், தஞ்சாவூர்.பொன்னையா நா. (பதி.), 1937, தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகார மூலமூம் சேனாவரையருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.…, 1937, தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமூம் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.மகாராசன், 2007, சொல்நிலம், ஏர், பெரியகுளம்.ரகுநாதன், 1980, இலக்கிய விமர்சனம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.https://www.google.co.in/amp/s/www.vikatan.com/amp/news/tamilnadu/56826-kilvenmani-massacre.htmlhttp://vaettoli.blogspot.in/2016/10/blog-post_15.html?m=1https://www.vinavu.com/2014/12/24/december-25th-venmani-martyr-day/



த.சத்தியராஜ்

தமிழ் உதவிப் பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்துர் – 28

neyakkoo27@gmail.com

நன்றி: இனம் இணைய இதழ்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்: மகாராசன்

பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Frams) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது.

அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.

அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் மற்றும் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘அரவாணிகள் கம்யூனிட்டி’ என்ற அடிப்படையில் ‘ஜமாத்’ என்று வழங்கப்படுகிறது.

ஆணின் உடல்-உணர்வுகள் பெண்ணின் உடல்-உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்/ஆண் உடல் - உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள்.

எல்லோராலும் நினைக்கிற மாதிரி ஓர் ஆணோ அல்லது பெண்ணோ ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென்று ஞானம் வந்து அரவாணியாக மாறிவிடுவதில்லை. (பெரும்பாலான அரவாணிகள் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் என்பதாலும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுதல் என்பது மிகக் குறைவு என்பதாலும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய அரவாணிகளின் மாற்றங்கள் குறித்துப் பேசப்படுகின்றன.) ஆணாகப் பிறந்த அரவாணிகள் குழந்தைப் பருவத்திலேயே பெண் சார்ந்த அடையாளங்களையே விரும்புகின்றனர். பெண்களின் விளையாட்டுக்கள் எனச் சொல்லப் படுகிறவற்றின் மீதே ஈர்ப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வருகிற கதாநாயகி போல ஆடுவதும், வீட்டில் உள்ள பெண்களில் உடைகளான பாவாடை, தாவணி உடுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் அழகு பார்த்துக் கொள்வதிலும், துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு சடை மாதிரி முடியை முடிந்து போட்டுக் கொள்வதைப் போல துண்டை எடுத்துக் கட்டிக் கொள்வதும் கண்களுக்கு மைதீட்டிக் கொள்வதும், வளையல் மாட்டிக் கொள்வதுமாகச் சின்ன வயதிலேயே இவற்றின் மீதெல்லாம் ஈர்ப்பு கொள்கிறார்கள். இம்மாதிரியான செய்கைகளின் போது வீட்டில் உள்ளவர்களோ பக்கத்து வீட்டாரோ உறவினர்களோ கண்டிக்கிறபோது அவர்களுக்குத் தெரியாமல் செய்து கொள்வதில் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பொதுவாகவே இவர்களுக்கு குழந்தைப் பருவ காலத்தில் பசங்களோடு சேருதல் என்பது பிடிக்காது, குழந்தைப் பருவத்தைத் தாண்டத் தாண்ட பெண்போல இருக்க விரும்புதல் அதிகமாகிப் போகிறது என்கிறார்கள். பெண்போல ஆடுவதும், உடை உடுத்திக் கொள்வதும், பேசுவதும் மற்றவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றினாலும், பெண்மையை உணர்கிற மாதிரியும் - தான் பெண் என்பதை யாருக்கோ உணர்த்துகிற மாதிரியும் எதிர்த்தாற் போல இருக்கும் மனம் உணர்த்திக் கொண்டே இருக்குமாம். அந்தப் பருவத்தில் இதுபோன்று இருப்பது வெட்கத்துக் குரிய விசயம் என்று நல்ல பிரஞ்ஞை இருந்ததினால் வெளியில் இதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.

பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில் - பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும், வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும், என்னமோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப் பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அந்தப் பருவத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை உணரத் தொடங்கி விடுகிறார்கள். இதைவிட முக்கியமானது ஒவ்வொரு அரவாணியும் தனக்கு முன்பாக - முன்மாதிரியாக இருக்கும் அரவாணியைப் பார்த்த பிறகுதான், அதாவது அரவாணியும் வெளியே வந்து நடமாட முடியும்; உயிர்வாழ முடியும்; பெண்ணாகவும் ஆகிக் கொள்ள முடியும்; புடவை கட்டிக் கொள்ள முடியும் என்கிற அறிவும் முழுமையான பிரஞ்ஞையும் எற்பட்ட பிறகுதான் தன்னையும் ஓர் அரவாணியாக உணரத் தொடங்குகிறார்கள். அரவாணிகளைப் பார்க்கும்போது தொடக்கத்தில் பயமும் வியப்பும் வியப்பும் ஏற்பட்டு நாளாக நாளாக அவர்களோடு பழகும் வாய்ப்புகள் கிடைத்தபிறகு - அவர்களிடம் நிறையப் பேசப் பேச சில விசயங்களை உணர்வதாகச் சொல்கிறார்கள். வெளியில் வந்துவிட்ட அரவாணிகளோடு நெருக்கத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வது தேவையெனக் கருதுகிறார்கள். இத்தகைய சூழல் அதிகமாக வாய்க்கிறபோது, ஒருவிதமான வெறி தொற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் ‘ஆம்பிளை’/ ‘ஆண்” என்கிற அடையாளத்தோடு வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிற போதுதான் அரவாணியாக உணரக் கூடியவர்கள் தங்கள் ‘இருப்பு’ குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தங்களின் அடையாளத்தை எப்படித் தொடர்வது என்று தவிப்பதாக ஆகிவிடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதெனில், இந்தப் பருவத்தில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் ஆகிக் கொள்கிறார்கள். இப்படியாகத் தனக்குள்ளே நிகழக்கூடிய மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்த பிறகு ஆண் தன்மையிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்புகின்றனர். தான் அரவாணி என்பதைத் தெரிந்து கொண்ட ஒருவர் தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திச் சொல்லிக் கொள்ள முன் வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.

படித்தவர் - நல்ல வசதியான குடும்பப் பின்னணி சார்ந்தவர் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்து தன்னை அரவாணியாக உணர்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே தான் அரவாணி என்பதைச் சொல்லிக் கொள்ள முன்வருதில்லை. தான் அரவாணி என்பது பிறருக்குத் தெரிந்து விட்டால் குடும்பத்துக்கும் சாதிக்கும் கவுரவக் குறைச்சலாக இருக்கும் என்பதால் மிகச் சிறுபான்மை அளவில்தான் அரவாணியாக வெளியே வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரவாணியாக உணரக் கூடியவர்களில் பெரும்பாலோர் வெளியே வந்து விடுகிறார்கள். இந்நிலையில் பெண்போல இருக்க விரும்பும் ஆணின் செயல்கள்யாவும் பெண்ணாக உணர்வதாக அமைகிற போதும், ஆண் உடலுக்குள் பெண்ணாகச் சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறபோதும் ஒரு முடிவெடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டிற்கு தான் அரவாணி என்பதைச் சொல்வதற்குப் பயந்து போனவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். சில சமயங்கள் அரவாணியாக உணர்ந்தவர்களை வீட்டார்களே அடித்து உதைத்து வீட்டை விட்டே துரத்தி விடுகிறார்கள். ஆக அரவாணியாக மாறிப்போனவர்களைக் குடும்பமும் கை கழுவி விடுகிறது.

ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அக்குடும்பத்தாரோடு வாழ முடியாமல் போகிற அவலங்கள் எல்லா அரவாணிகளுக்குமே நேர்ந்து வருகிற கொடுமைகள். வெளி உலகத்திற்கு ஆணாகவும் - தன்னளவில் பெண்ணாகவும் இருப்பது என்பது இரட்டை வேடம் போடுதல் என்பதை உள்ளுக்குள் உணர்ந்தவர்கள் அரவாணியாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் களோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். உடல் தோற்றத்தாலும் பெண்ணாக மாற விரும்புகிறவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெண்ணாக உணரக்கூடிய பெரும்பாலான அரவாணிகள் ஆண் அடையாளத்தை விரும்புவதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்தோ அல்லது சில சடங்கு முறைகளின் மூலமோ ஆணுறுப்பை வெட்டி எறிகிறார்கள். இதன் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் தன்மை அழிந்து போனதாக உணர்கிறார்கள்.

தன் குடும்பத்தில் பிறந்த ஒருவர் - தனக்குத் தெரிந்த ஒருவர் அரவாணியாக மாறிடக் கூடாது என்று கருதுகிறார்கள். இது அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படக்கூடியது என்று நடுநிலைத் தன்மையோடு பார்க்க முடியாமல் கலாச்சார அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஓர் அரவாணி இருந்து கொண்டிருப்பது குடும்பத்திற்கு அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் அரவாணிப் பிள்ளைகளை அங்கீகரிப்பதில்லை.

குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழல் அரவாணிகளுக்கு ஏற்படுவதால், ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழு வட்டத்தோடு தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வாழ்க்கைக்குள் உறவு முறைகளை வகுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஒவ்வொரு அரவாணியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுகிற அரவாணிகளுக்குத் தண்டனை நிரம்ப உண்டு. பெரும்பாலான குழுக்கள் அரவாணிகளை ஒரு முதலீடாகவே பயன்படுத்தி வருகின்றன.

தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்துக் கொள்வதற்கும், பிச்சை எடுத்தல் - பாலியல் தொழில் போன்றவைகளை அரவாணிகள் மேற்கொள்கின்றனர். பாலியல் தொழில் என்பது இவர்களின் விருப்பம் சார்ந்த தொழில் என்பதை விடவும், அவர்களுக்கு அம்மாதிரியான தொழில் மட்டும்தான் செய்ய முடியும் என்கிற நிலைமைகiள் இருக்கின்றபோது சமூகத்தின் பொதுப்புத்தி என்பது அரவாணிகளை பாலியல் தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்பார்வையானது, அறியாமையில் வருவதல்ல; ஏற்கெனவே நிலவுகிற கருத்தியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சியாக வருவது. இம்மாதிரியான மதிப்பீடுகள் தோன்றுவதற்கு அரவாணிகள் நடத்தை முறைகள் காரணமாகச் சொல்லப் படுகின்றன பொது இடங்களில் உலாவுகிற அரவாணிகள் பெண்போல பாவித்துக் கொண்டு - தன்னிடம் இல்லாத பெண் நளினத்தை வலிந்து வருவித்துக் கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தன்னை பெண் என்று சொல்கிறாரோ இல்லையோ - ஆனால், தன்னை ஆண் என்று சொல்லிவிடக் கூடாது என உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னை ஒரு ‘ஒம்போது’ என்று சொல்வதை கூட சோகத்திலும் சந்தோசமாய் எடுத்துக் கொள்கிறார்கள். தான் பெண் இல்லைதான்; ஆனாலும் ஆண் என்று பிறர் சொல்லவில்லையே எனச் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பெண் தன்மைக்கான அங்கீகாரமாக அதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த மாதிரி நடந்து கொள்வதால்; ஆண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஊடகமாகப் பார்க்கிறார்கள். இம்மாதிரி அணுகுவதை அரவாணிகளும் விரும்புகிறார்கள். ஏனெனில் ஒருவன் தன் கையைப் பிடிக்கிறான்; மார்பகங்களைப் பார்க்கிறான்; தன்னோடு உறவு கொள்ள விரும்புகிறான் எனில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதினால்தானே அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். ஆக, அரவாணிகளின் இம்மாதிரியான செயல் பாடுகளை ஆண் தன்மையினைத் தூக்கி எறிவதற்கான முயற்சிகளாகக் கருத முடிகிறது.

மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக் குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் சூழலில் இந்து மதம் சார்ந்த ஆண் ஆதிக்கம் பேசுகிற தொன்மங்கள் வினையாற்றுகின்றன. இந்து மதம் சிலவற்றைப் புனிதமெனவும் அப்புனிதத்திற்கு மாறாக இருக்கக்கூடிய / விலகி நிற்கக் கூடிய / எதிராக இருக்கக் கூடிய யாவும் தீட்டு என இழிவு படுத்தி வைத்திருக்கிறது. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் சமூகத்தின் பொதுக் கருத்தியல்களாகப் பரப்பப்பட்டிருக் கின்றன. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் ஒன்றுதான் ‘லிங்க மய்ய வாதம்’. தந்தை வழிச் சமூகத்தின் எச்சங்களை இக்கருத்தியல்கள் தாங்கி நிற்பதைப் பார்க்கலாம். ஆண் மேலானவன்; உயர்வானவன்; வலிமையானவன்; ஆளக் கூடியவன்; புனிதமானவன் என்பதாக லிங்க மய்ய வாதம் ஆண் தலைமையை முன்வைக்கும். அதே போல பெண்ணின் யோனி வழிப் புணர்ச்சிதான் இயற்கையானது; அதுதான் புனிதமானது என்ற கருத்தியலும் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. இக்கருத்தியல்கள் அரவாணிகளை எப்படிப் பார்க்கிறது? அரவாணிகள் ஆண்குறியோடு பிறந்திருந்தாலும் ஆண்குறி தனக்கு இருப்பதை விரும்பாதவர்கள். ஏதாவது ஒரு வகையில் ஆண் குறியை அறுத்து எறிந்து புதைத்து விடுகிறார்கள். இதுவே லிங்க மய்ய வாதத்தைத் தகர்க்கும் தன்மை கொண்டது. லிங்க மய்ய வாதத்திற்கு நேர் எதிரான கலகத்தன்மை கொண்டது. இன்னொன்று அரவாணிகளுடனான பாலியல் புணர்ச்சி என்பது யோனி வழிபட்டதல்ல. ஆக, லிங்க மய்ய வாதத்திற்குள் பெண் கீழாக வைக்கப்படுகிறாள். லிங்க மய்ய வாதத்திற்குள் வராத / எதிராக இருக்கும் அரவாணிகள் இழிவானவர்களாகக் கருத்தாக்கம் செய்கிறது. அவ்வாதம், இதன் நீட்சியாகத்தான் அரவாணிகளைக் கேவலமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்காமல் இருப்பதுமான நிகழ்வுகள் அமைகின்றன.

அரவாணிகளுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகின்றன. பெரும்பாலான அரவாணிகள் கல்வியைத் தொடர முடியாமலே போகின்றனர். வேலை தேடிச் செல்கிறபோது அவ்வேலைக்கு லாயக்கற்றவர்கள் என ஒதுக்கப் படுகின்றனர். சான்றிதழ்களில் பாலினம் எனக் குறிக்கப்பெறும் இடத்தினில் பெண் என்றோ ஆண் என்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரவாணி எனும் மூன்றாம் பாலினத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. இந்நாட்டில் பிறந்த குடிமக்கள் என்ற நிலையில் கூட அரவாணிகள் நடத்தப்படுவதில்லை. குடும்ப அட்டைகள் வாக்காளர் பதிவுகள் வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் அரவாணிகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டே வருகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற மருத்துவச் சான்றிதழ் கொடுத்தல் மிகவும் அரிதாக இருக்கிறது. ஆகவே அரவாணிகளுக்குச் சட்ட அங்கீகாரம் மிக முக்கியமானதாகப் படுகிறது.

இங்கே பெண்களுமே அரவாணிகளைக் கேவலமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பும் பகிர்தலும் குறைந்தளவேனும் கிடைக்கப் பெறும். ஆனால், அரவாணிகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் அமைவதில்லை. ஏனெனில், திருமணம் என்கிற ஒன்று இவர்களுக்கு அமைவதில்லை. பெரும்பாலான ஆண்கள் பாலியல் ஊடகமாகத்தான் அரவாணிகளைப் பார்க்கிறார்களே தவிர, அரவாணியை மனைவியாக / துணைவியாக / வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் பங்காளராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை, அரவாணிகள் திருமண உறவை விரும்பினால் கூட அவர்களை மணந்து கொள்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதற்குக் காரணம், அரவாணிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. சராசரிப் பெண்ணைப் போல தாய்மைப் பேறு அடைய முடியாது. ஏனெனில் அரவாணிகளுக்குக் கர்ப்பப்பையே கிடையாது. இந்தக் கர்ப்பப்பை தான் பெண்ணை அடிமைச் சிறையில் வைத்திருக்க உதவுகிறது.

அரவாணிகளோ கர்ப்பப்பை இல்லாமல் இருந்தும் கூட அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மனித இன மறுஉற்பத்தியை அரவாணிகள் செய்ய முடியாது என்பதனாலே அவர்கள் ஒதுக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. பெண்கள் தங்களின் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் கர்ப்பப் பைகளை அறுத்தெறியுங்கள் என்றார் பெரியார். இதைச் சமூகம் ஓரளவேணும் உணரத் தொடங்கினாலும் கூட, கர்ப்பப்பைகளே இல்லாத அரவாணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே கலகமாக அமைந்திருப்பதுதான். ஒரு பெண் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்ந்தால் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை பெண்ணாக வளர்க்காமல் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்த்தால் தன்னுடைய இருபது வயதில் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரவாணிகளின் அடிப்படையையே புரிந்து கொள்ள மறுக்கிறது சமூகம், அரவாணிகளுக்கு உழைப்பே மறுக்கப்படுகிறது; இருத்தலே கேள்விக்குள்ளாகிறது; பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அரவாணிகளைக் குறித்து தவறான கற்பிதங்களைச் சமூகம் உருவாக்கி வைத்திருந்தாலும், அதை மாற்றிட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அரவாணிகளும் மனிதர்களே என்ற பார்வை மாற்று அமைப்புகள் / இயக்கங்கள் போன்றவற்றில் வந்திருந்தாலும் அரவாணிகள் குறித்த செயல்பாடுகளைப் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களே கையாண்டு வருகின்றன. இத்தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கணக்கு காட்டுவதைத்தான் மேற்கொள்கின்றன என்ற விமர்சனங்கள் பரவலாக உண்டு. அரவாணிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எய்ட்சு தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களையும் - ஆணுறை விநியோகம் தொடர்பான காரியங்களையும் செய்து வருகின்றன. இவ்வேலைகளில் அரவாணிகளே பெரும்பாலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். இம்மாதிரியான வேலைகளும் அரவாணிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளாகி விட்டன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை / மாற்று வேலைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்படும்போதுதான் அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும். அரவாணிகளுக்குச் சொத்துரிமை வழங்குதலும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவதும் கூட அவர்களுக்கான அங்கீகாரமாக அமையும். அரவாணிகள் தனித்த பிறவிகள் அல்ல; மனிதப் பிறவிகள்தான் என்பதை உரத்துச் சொல்லும் காலம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் மனிதர்களைச் சமூகம் புரிந்து கொண்டதாகக் கருத முடியும்.

நன்றி: புதிய காற்று இதழ், ஏப் 2006.
கீற்று இணையத்தளம்