செவ்வாய், 31 ஜூலை, 2018

தீரும் பக்கங்கள்; தீராத காயங்கள்: மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலை முன்வைத்து :- கவிதாசரண்


மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூல் என் கைக்கு வந்தபோது இவ்வளவு கனக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வியப்போடும் களிப்போடும் அடுத்த இரண்டு நாட்களில் எனக்குக் கிடைத்த நேரத்தில் படித்து முடித்தேன். கடந்த பதினெட்டு மாதங்களில் நான் சுவைத்துப் படித்த நெடிய நூல் இது ஒன்றுதான். மகாராசனுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் அச்சாக்கம் இது.  பட்டத்தை விடவும் நூலின் பரிமாணம் அளப்பரியது.
மகாராசன் இதற்கு முன்பே எழுத்தோடு இரண்டறக் கலந்தவர். அவர் பெயரில் ஐந்து நூல்கள் வந்துள்ளன. அரியதொரு சிற்றிதழுக்கு ஆசிரியராகவும் அறியப்பட்டவர். இது அவரது ஆறாவது நூல் என்றாலும் ஒருவகையில் எனக்கு இதுவே முதன்மையானதாகவும் முழுமை பெறுவதாகவும் படுகிறது. ஒரு ஆய்வேட்டை என்ன மாதிரியில் உருவாக்க வேண்டுமோ அதற்கேற்பவும் மேலதிகமாகவும் தன் உழைப்பைச் சிந்தி வளர்த்தெடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நூலின் பல தலைப்புகளும் உள் தலைப்புகளும் அவரது தீவிர ஆளுமைகளையும் மீட்சியற்ற ஈடுபாடுகளையும் தாங்கி நிற்பவை.  அவரின் இரண்டொரு நூல்களை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் இதில்தான் அவர் உழைப்பும் திளைப்பும் முழுமையடைகின்றன.  அண்மைக்காலங்களில் ஆய்வேடுகள் பல இத்தனை கரிசனத்தோடு உருவாக்கப்படுவதில்லை. மகாராசன் அந்தவகையிலும் தன் அர்ப்பணிப்பை இதில் நிறுவியிருக்கிறார்.
நூலின் ஒரு பக்கத்தில் ‘பெண்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதிலும் சகல ஆண்களும் தங்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர் ’ என்றொரு வாக்கியம் வருகிறது. இதனைக் கேள்விக்குட்படுத்தும் கலகக் குரலாகத்தான் இந்தப் ‘பெண்மொழி ’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் - இந்தியாவில் மட்டுமே இன்னொரு அய்க்கியமும் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. சொல்லப்போனால் இது ஒன்றும் ஒரு சொல்லில் முடிந்துவிடும் அய்க்கியமல்ல. யுகம் யுகமாய் மரபு ரீதியான சட்டகத்தில் இந்திய மனம் ஒவ்வொன்றிலும் வலிந்து பொருத்தப்பட்ட அய்க்கியம். அதாவது, ‘தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரைகுத்தி அவர்களை ஒடுக்குவதில் பிற மக்கள் அனைவரும் தங்களுக்குள் கேள்விக்கப்பாற்பட்ட அய்க்கியத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இந்த இரண்டு அய்க்கியங்களையும் உடைத்தெறியும் போராளியாகத் திகழ வேண்டியவர் மகாராசன். அவர்தான் இந்த முதல் ஆவணக் குரலை வலிய மொழியில் எழுப்பியிருக்கிறார். இது எனக்குப் பெருமைக்குரிய அம்சமாகப்படுகிறது. இனி தொடர்ந்து வரும் அவரது அடுத்தடுத்த எழுத்தூற்றங்களில் தலித் மக்களுக்கெதிரான அய்க்கியத்தையும் அவர் கடும் பகடிக்குள்ளாக்கி உடைத்தெறியத் துணை புரிவார் என்று நம்பலாம்.  இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; தீராத என் ஆசையும் கூட.
இவ்வளவு நீண்ட பக்கங்களை மகாராசன் ஒரே மூச்சில் எழுதினாற்போல அத்தனை சீராகவும் கூராகவும் உருவாக்கியிருப்பதை மொழியருமை தெரிந்த ஒவ்வொரு வாசகரும் உய்த்துணரலாம். வழுக்கும் கண்ணாடித் தளத்தில் தங்குதடையில்லாமல் நழுவிப்போகும் புதிய நெய்யூற்றைப் போல இந்நூலின் மொழிக்கட்டுமானம் நம்மை மெய் மறக்கச் செய்கிறது.
நூல் உருவாக்கத்தில் மகாராசனின் பங்களிப்பு ஒன்றும் அற்ப சொற்பமானதல்ல. அவர் ஒரு வாக்கியத்தை எழுதுகிறார். தொடர்ந்து ஒரு மேற்கோள் வருகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் கருத்தோட்டம் தொடர்கிறது. இந்த மூன்று பகுதிகளும் கொஞ்சம்கூட அந்நியம் கலவாமல் ஒரே அலைவரிசையாக, ஒரே எண்ணப் பிரவாகமாக இழைந்திருப்பதைச் சொல்லாய்வில் அக்கறை கொண்டவர்கள் உணராமல் தப்ப முடியாது.  உண்மையில் அவர் எந்தக் கருத்தைத் திரட்டித் தரவும் சொற்களுக்காக ஒரு நொடி கூடத் தயங்கி நின்றதாக நமக்கெந்த சாட்சியமும் இல்லை.  மொழி மீது அவருக்குள்ள அண்மையும் இழைவும் அப்படிப்பட்டதாய் இருக்கிறது. நம்மில் சிலருக்கு எதிர் பாராதவோர் அதிர்வோட்டத்தைச் சுட்ட சொல்லற்றுப் போகலாம். பீறிடும் ஒலிக்குறியோடு நாம் இதைக் கடந்து சென்று விடலாம். ஆனால் மகாராசனுக்கு இது போன்றதொரு சிக்கல் எழவே இல்லை. எத்தனை உள்முகமான கருத்துருவையும் தெள்ளத்தெளிந்த சொற்கோலத்தில் அதிர்ச்சி மதிப்பீடுகளைத் தள்ளி வைத்து விளக்கிச் சொல்லிவிடும் மொழிப்புலமை அவரை சிம்மாசனப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இவர் மொழியை ஆள்கிறாரா அல்லது மொழியாகவே மாறிவிடுகிறாரா என்றொரு
ஐயம் தன்னிச்சையாகச் சுரக்கிறது. நாம் சர்க்கரையின் இனிப்பில் மயங்கி இடைவிடாமல் புகழ்ந்து கொண்டே வரும்போது சட்டென்று நாமே சர்க்கரையாகி விட்டால் எப்படியிருக்கும்!  மகாராசன் அப்படி நெகிழக்கூடியவர்தான் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் என்னால் அறிய முடிந்தது. மொழிமீது மோகம் கொண்டு ஒரு மனிதன் மொழியாகவே மாறிவிடும்போது அவன் மொழியின் நிகழ்மரபின் நீட்சியாகவும் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் நேரும். ஒரு வகையில் கலாச்சார ரீதியாக அவன் எந்தப்பிறவியிலிருந்து துண்டித்தெழ முயல்கிறானோ அந்தப் பிறவியாகவே மூழ்கிப் போய்விடுகிற சோகம் அது. மகாராசனின் பன்முக வாசிப்புவெளியும் மேற்கோள் தொகுப்பும் இவ்விதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்குமோ என்று படுகிறது.
தமிழின் ஆகப் பெரும் அறிவுச் செல்வங்கள் அனைத்தும் ஜைனர்களும் பௌத்தர்களும் வழங்கிய கொடை என்பதை நாம் அறிவோம்.  அவ்விருமதங்களையும் வெற்றிகொண்டு மேலேறி வந்த சைவ - வைணவ மதங்கள் நமக்குப் புதிதாக வழங்கிய கலாச்சாரப் பெருமிதங்கள்தாம் நம்மை இன்று சிக்கெனப் பற்றிக் கொண்ட சமூக மனிதர்களாக அமுக்கி வைத்திருக்கிறது.  மனித சமத்துவத்தைச் சாதியச் சழக்குகளால் வேரறுத்துக் கலைத்துக் குலைப்பதை ஏதோ தெய்வசங்கல்பமாகவும் மூத்தோர் வேதவாக்காகவும் ஏற்றுச் செயல்படும் கலாச்சாரச் சீரழிவின் முடிவற்ற மீட்டுருவாக்கம் அது.  உலக மக்களில் 99.9 சதவீதம் பேர் கேள்விகளற்ற வெள்ளெழுத்துப் பாமரர்களாகவே வாழ்ந்து நிறைவதில் அமைதியடைகிறார்கள்.  அவர்களையும் அவர்களது துயரங்களையும் முதலீடுகளாக்கிக் கொண்டு நிச்சயமற்ற நம்பிக்கைகளுக்கான பொய்ப்புனைவுகளையும் மூடத்தனங்களையும் யுகங்களுக்கு அப்பாலும் வெற்றிகொள்ளும்படியான நிர்கலாச்சாரக் கட்டமைப்பு கொண்ட வாழ்க்கை அது.  இன்றைக்கு நாமே அதன் சாட்சியாகவும் இருக்கிறோம். வாழ்க்கை என்பது கடின உழைப்பைக் கோருவது என பொய்க்கலப்பற்றுப் போதித்தவை ஜைனமும் பௌத்தமும். அவற்றுக்கு மாறாக ‘கடவுள் பெயரைச் சொல், கைலாசத்திற்கே செல் ’  என்று புரட்டு பேசியவை சைவ - வைணவ மதங்கள்.  இவ்வுண்மைகளை யார் மறந்தாலும் சமத்துவம் கோரும் கலகச்சிந்தனையாளர்கள் புறக்கணிக்கக்கூடாத ஒன்று. மகாராசன் அப்படிப்பட்ட ஒரு கலகக்காரராகப் புத்துயிர்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.
இந்நிலையில் மகாராசனின் ஆழ்ந்த மொழிப்புலமைக்கும் சமூக அக்கறைக்கும் ஒட்டுமொத்த நூலும் சாட்சியமாகியிருக்கும் அதே வேளையில், நூலின் அங்கொன்றும் இங்கொன்றுமான இரண்டொரு பக்கங்களில் ஒற்றைவரிக் குறிப்புகளாக சில சொல்லி மேற்செல்கிறார். அதாவது பௌத்தமும் ஜைனமும் சமூகத்தில் சில தோல்விகளைச் சந்தித்ததாகவும் சைவமும் வைணவமும் அத்தோல்விகளை ஈடுசெய்ததாகவும் சொல்லிச் செல்கிறார்.  மகாராசன் என்ன சொல்கிறார் என்பதை நான் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.  அவருக்கு இது அர்த்தமுள்ள விளக்கமாக இருக்கலாம். உண்மைகளைப் பொருத்திப்பார்த்துப் புரிந்து கொள்வதில் எனக்குச் சில போதாமைகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம்.  ஆனால் எதிர்ச்சிந்தனை அல்லது மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு ஓர் அடிப்படை அலகு வேண்டுமானால் அதனை ஒரு குறியீடாகவேனும் வழங்கும் தகுதி அவைதிக  மதங்களுக்கே உண்டு என்பதை நாம் அடி நாதமாகக் கொள்ள வேண்டும்.  இதை மீறி நாம் சமத்துவத்துக்கான புதிய மரபுகளை ஈன்றெடுக்க முடிந்தால் மிகவும் நல்லது.  ஆனால் சைவமும் வைணவமும் ஒரு நாளும் நமக்கு உதவியாய் இருக்கப் போவதில்லை. அவைதிக மதங்களிலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றே கொள்வோம். ‘ நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் ’ என்று கூக்குரல் இடவேனும் அங்கே தங்களுக்கு உரிமை உண்டு. வைதீக மதங்கள் அதற்கு வாய்ப்பு வழங்குவதே இல்லை. ஆகவே நாம் எதனைக் கழித்துக்கட்ட வேண்டும் என்பதிலும் எதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலும் கவனம் கொள்வது நம்மைவிடவும் நம் உயிரைவிடவும் கூட இன்றியமையா அம்சங்கள்.
இந்த ஆய்வேட்டில் நாம் சொல்லிக் கொள்ள வேறெந்தக் குறிப்புகளும் இல்லை.  வேண்டுமானால் நம் ஆசைக்காக இரண்டொரு எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம்.
குறிப்பாக, இங்கு எடுத்தாளப்பட்ட பெண்கவிஞர்களின் குறிப்பிட்ட கவிதையொன்றையேனும் எடுத்துக் கொண்டு அதை அலசி ஆய்வதன் மூலம் அவர்களது மொழிதலின் எதிர் மரபை இன்னும் கூர்மைப்படுத்திக்காட்டலாம். இதன் மூலம் அவரவர் மொழியாளுமையையும் ஒப்பு நோக்கலையும் வாசகர்களுக்கான அதிர்வலைகளாகப் பெருக்கிக் காட்டியிருக்கலாம். உதாரணமாக ஆண்டாள், ஆவுடையக்காள் போன்றவர்களின் ஒப்புமையும் வேற்றுமையும் பெண்மொழியின் கூறுகளைத் துல்லியப்படுத்த உதவலாம்.  இந்த முறைமையை மேற்கொள்வதில் சில பக்கங்கள் கூடலாம். ஆயினும் ஆய்வாளரின் சமூகச் சிந்தனை ஒருபடி மேலேறி நிற்கும்.
இது நம் ஆசைதான். மற்றபடி இந்த நூல் ஓர் அரியமுயற்சி. முனைவர் பட்டம் மகாராசனுக்கு அளித்த மேலான வெற்றி.

அன்புடன்
கவிதாசரண்
ஆசிரியர், கவிதாசரண் இதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக