வெள்ளி, 13 ஜூலை, 2018

தமிழில் மரபும் நவீனமும் : புதிய தமிழ்ப் பாடத்தை முன்வைத்து :- மகாராசன்

தமிழ்ப் பாடத்திட்ட உருவாக்கத்திற்குப் பின்னுள்ள உயரிய நோக்கும் இலக்கும் ஒவ்வொரு பாடப்பகுதியிலும் பொதிந்து கிடக்கின்றன. தமிழின் மரபை நவீன காலத்திற்கும், நவீனத்தின் பன்முகத்தை மரபோடும் இணைத்திருக்கும் பாங்கு மிகப் பொருத்தமாய் வடிவமைந்திருக்கிறது.

இதுவரையிலும் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த அல்லது படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இனி மொழிப் பாடத்தைத் தமிழில் கற்பிக்கக் கூடிய அல்லது தமிழில் படிக்கக் கூடிய புதிய கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது புதிய பாடத்திட்டம்.

தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாக மட்டுமே சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்னும் கூடுதலாக அறிவியல் தமிழாகவும் ஊடகத் தமிழாகவும் விரிவுபடுத்தி, தமிழை அய்ந் தமிழாகச் செழுமைப்படுத்தி வளப்படுத்தியிருக்கிறது புதிய பாடத்திட்டம்.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, ஊடகம், பண்பாடு, கல்வி என விரிவு பெறுகிற உயர் கல்வியின் அறிவெல்லாம் தமிழின் மரபிலும் காணக் கிடைக்கிறது என்பதை உரத்துச் சொல்கின்ற பாடப் பகுதிகள் நிறைய உள்ளன. அது மட்டுமல்லாமல் மரபிலிருந்து இன்று வரைக்குமான தமிழின் கவிதை மற்றும் புனைவுகளின் வழியாகத் தமிழை நவீனத்திலும் மரபிலும் இரு வேறு தன்மைகளிலும் உயிர்ப்புடன் காண முடிகின்றது.

தமிழால் முடியுமா? என்பதற்கு, தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர் பாடத்திட்டக் குழுவினர். தமிழ்ப் பாடப்பகுதிகளின் பொருண்மைகள் யாவும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற எல்லைகளைக் கொண்டிருப்பது சிறப்பாக இருகிறது.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாடப்பகுதிகளைப் படிக்கப் போகிற இளம் தலைமுறையால் தமிழும் தமிழ் இனமும் தமிழ்நாடும் தலை நிமிரும் என்கிற நம்பிக்கையைப் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கியுள்ளன.

தமிழ்ப் பாடப் பகுதிகள் ஈழத்தின் வலி மிகுந்த பக்கங்களையும் அதனதன் குரல் வழியாகவும் பதிவு செய்துள்ளன. ஈழப் படைப்பாளிகள் பலரின் படைப்புகள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களைக் குறித்த பதிவுகள் கவிதைகள் வழியாகவும் கட்டுரைகள், கதைகள் வழியாகவும் பதிவாகியுள்ளன.

தமிழின் இருப்பையும் அதன் அடையாளத்தையும் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாக உயர்வான இடத்திற்குக் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்கு உரியது.

தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும், வரவேற்க வேண்டிய மற்றும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெருமுயற்சியை நாம் கொண்டாடத்தான் வேண்டும். ஆம், கல்வியாய்ப் பரிணமித்திருக்கும் தமிழைக் கொண்டாடத்தான் வேண்டும். பாடத்திட்டக் குழுவினருக்கும் இதனை ஒருங்கிணைத்த திருமிகு உதயச்சந்திரன் அவர்களுக்கும் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் அனைவருக்கும்.

4 கருத்துகள்: