ஞாயிறு, 25 நவம்பர், 2018

வதை நிலம் : மகாராசன்


விதை நிலமெல்லாம்
வதை நிலமாகிக் கிடக்கிறது.

சோறுடைத்த மண்ணெல்லாம்
வயிறு காஞ்சு கிடக்கிறது;
வியர்வை மணக்கும் நெல்லை
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம்
பருக்கைகளுக்காகக்
கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளைப் போல
முதுகொடிந்து கிடக்கிறது;
குலையோடு சரிந்த வாழைகளைப் போல
குலம் நொடிந்து கிடக்கிறது.

கூடிழந்த பறவைகள் போல
வீடிழந்து நிற்கிறது;
கருப்பம் கலைந்த நெல் பயிர்போல
உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும்
கண்ணீர் தேங்கிக் கிடக்கும்
வதை நிலமாகிப் போச்சே மக்கா
வதை நிலமாகிப் போச்சே.

நிலத்தை விட்டு விடுவோமா?

நிலம் தான்
நம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு,
நிலத்தாளோட தொப்பூள்க் கொடிய
அறுத்தெறிய மனசில்லயே மக்கா
அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

எழுத்தோவியம்
தோழர் Palani Nithiyan

வெள்ளி, 23 நவம்பர், 2018

வலியெழுத்து : மகாராசன்

நாடிழந்த ஈழத் தமிழர்
அகதி வாழ்வின் வலியை,
இப்போது தான்
கூடும் வீடுமிழந்த சனமெல்லாம்
உணரத் தொடங்கியிருக்கிறது.

வெட்டியான் நிழலில் வெள்ளாளனும்
வெள்ளாளன் நிழலில் வெட்டியானுமாக
நிழல்களை  ஒன்றாக்கியது
அந்நிலத்துப்
போர்.

ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும்
சேரிக்குள்ளிருந்த குச்சுக் குடிசையவும்
வாரிச் சுருட்டி
ஊரையும் சேரியவும்
ஒன்றாக்கி விட்டுப் போயிருக்கிறது
இந்நிலத்துப்
புயல்.

அவர்களுக்கொரு நாடிருந்தது;
நமக்கொரு வீடிருந்தது.

இரு நிலத்துத் தமிழரும்
வாழ்விழந்து அகதியானோம்;
வலி சுமக்கும் பிறவியானோம்.

ஏர் மகாராசன்.

சம்சாரிப் பிஞ்சுகள் : மகாராசன்

ஊருக்குச் சோறு போட
ஒழச்ச சனமெல்லாம்
ஒரு வாய்ச் சோத்துக்கு
ஊரிடம் கையேந்தி நின்றபோது
உக்கிப் போனது
நிலமும்.

புயலடித்துக் கூடிழந்த பிஞ்சுகளின்
கண்களில் கசிந்தது
பசியின் வலி மட்டுமல்ல;
சம்சாரி வீட்டுப் புள்ளைகளாய்ப்
பிறந்ததன் வலியும் தான்.

ஏர் மகாராசன்.

மிச்ச உசுரு :- மகாராசன்

அம்மா அப்பா செத்துப்போனா
சுடுகாட்டுக்குப் போய்ட்டு திரும்பும்போது,
நாமும் செத்துப்போயிருக்கலாம்னு தோனுமே,
அதுமாதிரி அனாதையாகிப் போன மனநிலையில இருக்காக
சனமெல்லாம்.

வயல், தோப்பு, தோட்டம், ஆடு, மாடு, வீடு என அத்தனையவும் வாரிச் சுருட்டி நாசமாக்கிவிட்டுப் போன இந்தப் புயலும் மழையும்,  உசுர மட்டும் விட்டு வச்சிட்டுப் போயிருக்கு.

உசுரக் கொடுத்த அத்தனையும்
போன பின்னால,
இந்த உசுரும் போயிருக்கலாம்.

நெலம் நெலம்னு கிடந்த
சாதி சனமெல்லாம்
நெலத்துல அழுது மடியுது.

இது தான் இந்தச் சனம்
வாங்கியாந்த தலையெழுத்து.

நெலத்த விட்டுப் போட்டு
நாங்க வெளியேறும் போது,
வேடிக்க பாக்குற சனத்தோடு
தலையெழுத்து மாறத்தான் போகுது
கல்லு மண்ணு திங்குற சனமாக.

ஏர் மகாராசன்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

தமிழ் அடையாள அரசியல் - திசை நோக்கிய நகர்வு: மகாராசன்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கொள்கை மற்றும் பண்பாட்டு அறிக்கையை அவ்வமைப்பின் மாநிலச் செயலர்களுள் ஒருவரான தோழர் கண்மணிராசா அனுப்பி வைத்திருந்தார்.

கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, ஆய்வு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த படைப்பாளிகளுக்கான இடதுசாரிக் கண்ணோட்டத்தையும் நிலைப்பாட்டையும் தெளிவுபட வரையறுத்துக் கொள்வதற்கான கருத்தியல் ஆவணமாகவும், வழிகாட்டுக் கையேடாகவும் பல்வேறு பொருண்மைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, 2009 இல் ஈழத்தில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குப் பின்பாகத் தமது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

"ஈழப் போரின் அழிவுகள் மிக முக்கியமாகத் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த தமிழ் அடையாளத்தின் மேட்டுக்குடி நலன் சார்ந்த பண்பை வெளிப்படுத்துகின்றன. தமிழ் மேட்டுக்குடிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தமிழ் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி, உழைக்கும் தமிழ் மக்களை அவர்களது உரிமைகளுக்காக ஒன்றிணைக்கவில்லை என்பது இன்று அப்பட்டமாகத் தெளிவாகியுள்ளது. இன்னொருபுறம், தமிழ் அடையாளத்தை வெகுமக்கள் சார்ந்த ஒன்றாக இடதுசாரி சனநாயக சக்திகள் வளர்த்தெடுக்க இயலாமல் போன குறைபாட்டையும் இச்சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் அடையாளம் என்பது எதிர்காலங்களிலும் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு பண்பாட்டு அரசியல் பிரச்சினை என்பதையும் இச்சூழல் உறுதிப்படுத்துகின்றது " என, தமிழ் அடையாள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் குறித்து முனைப்புடனும் அக்கறையுடனும் கூடிய செயல்பாடுகளை வகுக்க வேண்டும் எனத் தமது நிலைப்பாட்டை மறுவரையறை செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

அவ்வகையில், தமிழ் அடையாள அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலே ஆகும். உழைக்கும் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலே இடதுசாரித் தமிழ் அடையாள அரசியல் ஆகும். ஆக, தமிழ்த் தேசியம் குறித்த அரசியல், பொருளியல், சமூகவியல், பண்பாட்டியல் சார்ந்த கருத்தியல் உரையாடல்களுக்கும் அவை சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் மிக முக்கியமான களத்தை ஏற்படுத்தி இருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

தமிழ்த் தேசிய அடையாள அரசியலைக் குறித்த இந்நகர்வுக்கு முன் வந்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தினர் இந்நிலைப்பாடு சார்ந்த செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவதே அவர்கள் முன் இருக்கும் பெருங்கடமை என்பதை உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு செயல்படும் தளங்களில் எமது தோழமைப் பங்கேற்பும் கண்டிப்பாய் இருக்கும்.

அவ்வறிக்கையின் ஓரிடத்தில், பெருமன்றம் 'இந்திய மற்றும் தமிழ் மரபுகளைச் சுவீகரித்துக் கொண்ட '
ஒரு அமைப்பாகச் செழுமைப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய மரபு என்பது ஆரிய வைதீக மரபாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழ் மரபுகளுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்திய மரபு என்பதற்குப் பதிலாக, தமிழ் மரபுகளைப் போல ஆரியத்திற்கும் வைதீகத்திற்கும் எதிரான இந்திய மரபுகள் என்பதாகத் திருத்தம் செய்தலே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இது குறித்துக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் மீளாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.

கலை இலக்கியப் பெருமன்றத்திற்குப் புரட்சிகர வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
01.11.2018

சனி, 10 நவம்பர், 2018

இலக்கணம் கற்றல்: வேர் அறியும் தடம்.

எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது.

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை.

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது.

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது.

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

ஒளிப்படம்:
Palani Nithiyan