ஞாயிறு, 11 நவம்பர், 2018

தமிழ் அடையாள அரசியல் - திசை நோக்கிய நகர்வு: மகாராசன்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கொள்கை மற்றும் பண்பாட்டு அறிக்கையை அவ்வமைப்பின் மாநிலச் செயலர்களுள் ஒருவரான தோழர் கண்மணிராசா அனுப்பி வைத்திருந்தார்.

கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, ஆய்வு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த படைப்பாளிகளுக்கான இடதுசாரிக் கண்ணோட்டத்தையும் நிலைப்பாட்டையும் தெளிவுபட வரையறுத்துக் கொள்வதற்கான கருத்தியல் ஆவணமாகவும், வழிகாட்டுக் கையேடாகவும் பல்வேறு பொருண்மைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, 2009 இல் ஈழத்தில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குப் பின்பாகத் தமது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

"ஈழப் போரின் அழிவுகள் மிக முக்கியமாகத் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த தமிழ் அடையாளத்தின் மேட்டுக்குடி நலன் சார்ந்த பண்பை வெளிப்படுத்துகின்றன. தமிழ் மேட்டுக்குடிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தமிழ் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி, உழைக்கும் தமிழ் மக்களை அவர்களது உரிமைகளுக்காக ஒன்றிணைக்கவில்லை என்பது இன்று அப்பட்டமாகத் தெளிவாகியுள்ளது. இன்னொருபுறம், தமிழ் அடையாளத்தை வெகுமக்கள் சார்ந்த ஒன்றாக இடதுசாரி சனநாயக சக்திகள் வளர்த்தெடுக்க இயலாமல் போன குறைபாட்டையும் இச்சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் அடையாளம் என்பது எதிர்காலங்களிலும் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு பண்பாட்டு அரசியல் பிரச்சினை என்பதையும் இச்சூழல் உறுதிப்படுத்துகின்றது " என, தமிழ் அடையாள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் குறித்து முனைப்புடனும் அக்கறையுடனும் கூடிய செயல்பாடுகளை வகுக்க வேண்டும் எனத் தமது நிலைப்பாட்டை மறுவரையறை செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

அவ்வகையில், தமிழ் அடையாள அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலே ஆகும். உழைக்கும் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலே இடதுசாரித் தமிழ் அடையாள அரசியல் ஆகும். ஆக, தமிழ்த் தேசியம் குறித்த அரசியல், பொருளியல், சமூகவியல், பண்பாட்டியல் சார்ந்த கருத்தியல் உரையாடல்களுக்கும் அவை சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் மிக முக்கியமான களத்தை ஏற்படுத்தி இருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

தமிழ்த் தேசிய அடையாள அரசியலைக் குறித்த இந்நகர்வுக்கு முன் வந்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தினர் இந்நிலைப்பாடு சார்ந்த செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவதே அவர்கள் முன் இருக்கும் பெருங்கடமை என்பதை உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு செயல்படும் தளங்களில் எமது தோழமைப் பங்கேற்பும் கண்டிப்பாய் இருக்கும்.

அவ்வறிக்கையின் ஓரிடத்தில், பெருமன்றம் 'இந்திய மற்றும் தமிழ் மரபுகளைச் சுவீகரித்துக் கொண்ட '
ஒரு அமைப்பாகச் செழுமைப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய மரபு என்பது ஆரிய வைதீக மரபாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழ் மரபுகளுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்திய மரபு என்பதற்குப் பதிலாக, தமிழ் மரபுகளைப் போல ஆரியத்திற்கும் வைதீகத்திற்கும் எதிரான இந்திய மரபுகள் என்பதாகத் திருத்தம் செய்தலே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இது குறித்துக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் மீளாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.

கலை இலக்கியப் பெருமன்றத்திற்குப் புரட்சிகர வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
01.11.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக