செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆரியத்திற்கும் வாக்கில்லை; துரோகத்திற்கும் வாக்கில்லை.

வாக்குரிமை என்பது,
வாக்கை அளிப்பதற்கான உரிமை என்பதோடு, வாக்களிக்க மறுத்தலையும் உரிமையாகக் கொண்டிருக்கிறது.

நிலவுகிற போலி சனநாயக அமைப்பிற்கான தேர்தல் என்பது சனநாயகத்திற்கான தேர்தல் என்பது போலத் தோன்றினாலும், உண்மையில் இத்தகையத் தேர்தல் மக்களின் சனநாயகத்திற்கானது அல்ல.

பேருக்கு வேண்டுமானால் எதிர் எதிர் அணிகள் போலக் காட்டிக் கொண்டாலும்,  பெரும் பெரும் பலத்தோடு நிற்கும் இந்திய தேசியக் கட்சிகள் யாவும் இந்திய வடிவிலான ஆரிய / பார்ப்பனிய - தரகு முதலாளித்துவ - ஏகாதிபத்தியக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதைப் பாதுகாக்கவும் தான் முனைந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு தேசிய இனங்களை அடக்கியும் ஒடுக்கியும் - அவற்றின் உரிமைகளைச் சிதைத்தும் - தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்தும் இந்திய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்கான முயற்சிகளுள் ஒன்றுதான் இந்தத் தேர்தல் முறைகளும்.

தேசிய இன விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியலாகக் கொண்டிருக்கும் இடதுசாரிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் பலவும் இப்போதைய போலி சனநாயகத் தேர்தல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் வேலைமுறைகளைக் கைவிட்டிருக்கின்றன அல்லது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை நோக்கித் தடம் மாறியிருக்கின்றன.

தமிழர் / தமிழ் மரபின் பன்னெடுங்காலப் பகையான ஆரிய / வைதீக மரபின் நீட்சியாகப் பரவியிருக்கும் பாரதீய சனதா கட்சியின் சர்வதிகாரக் காவி பயங்கரவாதத்தையும், ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கத் துணை போன காங்கிரசின் துரோகத்தையும் வேறு வேறாகப் பார்க்க வேண்டியதில்லை. இரு பெரும் கட்சிகளுமே தமிழர் / தமிழ் மரபுக்கு எதிரான துரோகத்தையும் வன்மத்தையும் பகையையும் உள்ளீடாகக் கொண்டிருப்பவையே. இதில் எதிர்க்க வேண்டிய அணி என்றோ அல்லது ஆதரிக்க வேண்டிய அணி என்றோ என ஒன்றுமில்லை. இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டிய அணிகளே. இரண்டு அணிகளுமே இந்தியத்தைப் பாதுகாக்கும் அரசு எந்திரத்துக்கான தேர்தலைத் தான் எதிர்கொண்டுள்ளன.

இந்திய அரசதிகார வடிவம் என்பதும் இந்துத்துவம் எனப்பெறும் ஆரியத்தின் நவீன வடிவம்தான். இந்தியத் தேர்தல் நடைமுறைகள் யாவும் ஆரியத்தின் வேர்களைச் சட்டப்பூர்வ அரசு எந்திரமயமாக்கலின் இன்னொரு முயற்சிதான். ஆக, இந்தியத்தைப் பாதுகாக்கும் எந்தத் தேர்தலும் ஆரியத்திற்கான ஆதரவும் பாதுகாப்பும்தான்.

உண்மையிலேயே, ஆரிய எதிர்ப்பு என்பது இந்திய ஒன்றியங்களில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் தனித்த இறையாண்மை மிக்க அதிகாரத்தைப் பெறுவதில் தான் இருக்கிறது. அதை நோக்கிய அரசியல் செயல்பாடுகளைத் தான் புரட்சிகர / தமிழ்த் தேசிய / இடதுசாரிகள் முன்னெடுக்க வேண்டுமே ஒழிய, ஆரிய எதிர்ப்பு / சர்வதிகார எதிர்ப்பு எனும் பேரில் காங்கிரசை ஆதரிப்பது என்பது மட்டும் அல்ல.

பாரதிய சனதா அல்லது காங்கிரசு இவற்றுள் எதையாவது ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இங்குள்ள மக்கள் திரள் அமைப்புகள் மட்டுமல்ல, புரட்சிகர இடதுசாரிகள் மற்றும் தமிழ்த் தேசியர்கள் கூட முன்னெடுக்க வேண்டும் என்கிற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்குள் நிற்க வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன.

அவ்வகையில், இந்த முறை காங்கிரசு கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கின்றன இந்திய உளவு மற்றும் முதலாளித்துவ ஊடக நிறுவனங்கள். இவர்களின் இத்தகைய காங்கிரசு கூட்டணி ஆதரவு நிலைப்பாட்டை முன்னெடுப்பதற்கு ஆரிய எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டாலும், பாரதிய சனதா கட்சியும் காங்கிரசும் வேறு வேறு என்றோ, அல்லது, காங்கிரசு கட்சியானது பாரதிய சனதா கட்சியிலிருந்து வேறுபட்டது என்பதற்கான வலுவான காரணங்களையும் ஆதாரங்களையுமோ இவர்களால் முன்வைக்க முடியவில்லை.

பெரும்பாலும், காங்கிரசும் பாரதிய சனதா கட்சியும் வேறு வேறல்ல என்கிற அரசியல் பார்வையும் தமிழ்த் தேசியர்களிடமும் இருக்கிறது. அவ்வகையில், தோழர் நலங்கிள்ளி அவர்களது பதிவு சில முக்கியமான உரையாடலை முன்வைத்திருக்கிறது.

"எவருக்கும் வாக்கில்லை எனத் தமிழ்த் தேசியர்கள் கூறுவது ஏன்?

2019 மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் முதன்மையாக பாஜக தலைமையிலான கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மோதுகின்றன.

இந்த மோதலில் இவ்விரு கூட்டணிகளில் இல்லாது போட்டியிடும் மாநிலக் கட்சிகளைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் 545 பேர் இருக்கும் மக்களவையில் இந்தக் கட்சிகளின் வெற்றி சிறு அளவில் கூட தாக்கம் செலுத்தப் போவதில்லை. ஏனென்றால் சட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்வதற்குக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். மாநிலக் கட்சிகள் எவ்வளவு எட்டிப் பிடித்தாலும் இந்த அளவுக்கான இடங்களை வெல்லப் போவதில்லை.

எனவே நாம் பாஜக, காங்கிரஸ் ஆகிய  இரு கூட்டணிகளுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனப் பார்ப்போம்.

மோதி கடந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஆட்சியையே தந்துள்ளார் என்றும்,  மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால், இதுவே கடைசித் தேர்தலாக இருக்கும் என்றும், இந்தியாவின் அனைத்துச் சனநாயக அமைப்புகளையும் மோதி நொறுக்கித் தள்ளி விடுவார் என்றும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நடிகர்கள், சிறு முற்போக்கு இயக்கதினர் எனப் பலரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஏதோ மோதி ஒருவர்தான் இந்தியாவின் பெருங்கேடர் போலவும், ராகுல் காந்தி வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அப்பாவி போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

மோதி சனநாயக விரோதியா? பாசிஸ்டா? இந்துத்துவரா? சமூகநீதி மறுப்பாளரா? மத வெறுப்பரசியல் செய்பவரா? இத்தனைக்கும் ஆமாம் ஆமாம் என்பதே என் பதில். ஆனால் இதற்கு ராகுல் காந்தி எப்படி மாற்றாக முடியும்?

மோதியாவது நெருக்கடி நிலை போன்ற ஓர் ஆட்சியை நடத்தி வருவதாக காங்கிரஸ், திமுக ஆதரவாளர்களே கூறுகின்றனர். ஆனால் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி உண்மையான நெருக்கடி நிலைக் கொடுங்கோன்மை ஆட்சியை நடத்திக் காட்டியவர். இந்திராவின் அந்தக் கேடு கெட்ட ஆட்சியை அனுபவித்தவர்களைக் கேட்டால்,  மோதியின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்பார்கள்.

ராகுலின் பாட்டி சரி, ராகுலின் அப்பா எப்படி? இந்திரா காந்தியைக் கொன்றது ஒரு சீக்கியர் என்பதற்காக ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட  சீக்கியர்களின் குருதியை புது தில்லி வீதிகளில் ஓட விட்டவர்கள் ராஜீவ் காந்தி கூட்டத்தினர். அதற்கு இன்று வரை ராஜீவ் குடும்பம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஒரு பெரும் மரம் சாயும் போது சிறு சிறு செடிகள் நசுங்கத்தான் செய்யும் எனத் திமிராகப் பேசினார் ராஜீவ் காந்தி. இது பாசிசச் செயல் இல்லையா?

வி. பி. சிங் மண்டல் குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய போது, அதனை எதிர்த்து 2 மணி நேரம் மக்களவையில் பேசியவர் ராஜீவ். அவர் மகன் ராகுல் ஏழை இதர சாதியினருக்கு 10% ஒதுக்கீட்டை மோதி கொண்டு வந்த போது அதனை ஆதரித்தார். இவர்கள்தான் சமூகநீதிக் காவலர்களா?

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மோதி நடத்தி வரும் இரத்தக் களரிக்குத் துணை நிற்பவர்தானே ராகுல்? அதைத்தானே ராகுல் ஆட்சிக்கு வந்தாலும் செய்யப் போகிறார்? அப்படியானால் மோதி இந்துத்துவர், ராகுல் இந்துத்துவர் இல்லை எனச் சொல்வதற்கு ஏதேனும் நியாயம் உண்டா?

சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் சல்வா ஜுடும் கொடூரத்துக்கு பாஜக, காங்கிரஸ் இரண்டுக்குமே சமப் பங்கு இல்லையா?

பசு மாட்டு கோமியத்துக்கு எனத் தொழிற்சாலை அமைக்கப் போவதாக மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை சொல்லவில்லையா?

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் மறுப்பதில், எழுவர் விடுதலை எதிர்ப்பில், ஐட்ரோ கார்பன், மீத்தேன் உறிஞ்சுவதில், நியூட்ரினோ திட்டத்தில், ஸ்டெர்லைட் நஞ்சு கக்குவதில், தமிழீழ இனக்கொலையில் தமிழகச் சுற்றுச் சூழல் அழிப்பில் மோதிக்கும் ராகுலுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?

மோதி எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றும் பலரும் திமுகவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையோ மத்திய அரசிடம் இதை வலியுறுத்துவோம், அதை வலியுறுத்துவோம் என ஒரே வலியுறுத்தல்கள் கதையாக இருக்கிறது (அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வலியுறுத்தல் மயந்தான்). இந்த வலியுறுத்தல் அறிக்கையே எந்த அதிகாரத்தையும் நிறைவேற்றவியலாத நிலைமையை அம்பலப்படுத்துகிறது.

இந்தியைத் திணிக்கும் பிரிவு 17 பற்றி எல்லாம் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை. இதற்காகவா 1965இல் தீக்குளித்து உயிர் விட்டோம் என அன்று போராடிய வீரர்கள் இந்த அறிக்கையைப் படிக்க நேர்ந்தால் கொதித்துப் போவார்கள்.

இத்தனையும் மீறி பாஜகவை விட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஓரிரண்டு புள்ளிகளில் சிறந்து விளங்கலாம். ஆனால் ஒரு கட்சியை ஆதரிக்க இது போதாது. அந்த விஞ்சி நிற்கும் புள்ளி அடிப்படை மாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் இதை எல்லாம் செய்யுமா?

•  தமிழ்நாட்டுக்குக் காவிரி தரும் வகையில் அதிகாரப் பல் உள்ள ஆணையத்தை அமைத்துத் தருமா?

• இந்தியைத் திணிக்கும் பிரிவு 17ஐ முற்றாக நீக்குமா?

• ஜம்மு காஷ்மீரிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் இராணுவத்தைத் திரும்பப் பெறுமா?

• இனி இந்தியாவில் ஆள் தூக்கிச் சட்டங்களுக்கோ கறுப்புச் சட்டங்களுக்கோ வேலையில்லை என அறிவிக்குமா?

• மாநில எல்லைப் பிரிவினையில் நேரு சதி செய்து தமிழ்நாட்டிலிருந்து பிடுங்கிய தேவிகுளம், பீர்மேடு, திருவேங்கடம், கோலார் போன்ற பகுதிகளைத் தமிழர்களுக்கே மீட்டுத் தருமா?

• தமிழீழ இனக்கொலை குறித்து விசாரிக்க ஐநாவிடம் கோரிக்கை வைக்குமா?

• தமிழ்நாட்டில் நீதித்துறை, ஒன்றிய அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அனைத்தும் தமிழில் மட்டுமே இயங்க சட்டம் இயற்றுமா?

• சிபிஎஸ்இ, நவோதயா என எந்த மத்திய அரசு கல்வி வாரியம் எதற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என அறிவிக்குமா?

• தமிழ்நாட்டிடமிருந்து இந்திரா களவாடிச் சென்ற கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றித் தருமா? 

இத்தகைய அடிப்படை மாற்றங்களை காங்கிரஸ் செய்து காட்டட்டும், அல்லது செய்து காட்டுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கட்டும்.. பிறகு தமிழ்த் தேசியர்களும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆதரிப்பது பற்றி யோசிக்கலாம்" என்கிற அரசியல் பார்வையை முன்வைத்திருக்கிறார் தோழர் நலங்கிள்ளி.

காங்கிரசு மீதான இந்த விமர்சனம் என்பதைக் கூட ஆரியச் சார்பானது; பாசிச ஆதரவானது எனப் பலவாறாகச் சொல்லவும் கூடும்.

தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில் ஆரியம் எப்போதுமே எதிரானது; நஞ்சானது; எதிர்க்கப்பட வேண்டியது. அதேபோல, தமிழர் நிலத்திற்கும் இனத்திற்கும் நலத்திற்கும் துரோகம் செய்த காங்கிரசும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். காங்கிரசுடன் விமர்சனமற்று கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கட்சிகளும் துரோகத்திற்குத் துணை போனவை என அம்பலப்படுத்த வேண்டியவைதான்.

ஆகவே, தமிழ் நிலத்தையும் இனத்தையும் மொழியையும் காத்திடும் பெரும் போராட்டக் களத்தில் ஆரியமும் துரோகமும் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பதை மக்களிடத்தில் திரும்பத் திரும்ப விதைத்துக் கொண்டே இருப்போம்.

ஏர் மகாராசன்
16.04.2019

திங்கள், 8 ஏப்ரல், 2019

பெண் குலசாமிகள் : மகாராசன்


நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

கத்திய கதறலும்
பீறிட்ட அழுகையும்
சிந்திய கண்ணீரும் மட்டுமல்ல;
துணிவான போராட்டங்களும்
வீண் போவதில்லை.

நிலத்தைக் காத்த
பெண்குலசாமிகள்
எதிரிகளையும் துரோகிகளையும்
பழிவாங்கியே தீருவர்.

அந்தக் கண்ணீர்
கற்களை மட்டுமல்ல;
காவியெனப் படரும்
சர்வதிகாரத்தையும்
பிடுங்கி எறியும்.

கொத்துக் கொத்தாய்
ஒரு நிலத்தையும் இனத்தையும் கொன்றொழித்த
அரத்தம் தோய்ந்த
கைகளையும் உடைத்தெறியும்.

நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

ஏர் மகாராசன்
08.04.2019.

ஓவியம்
தோழர் இரவி பேலட்
Ravi Palette

மீள் களம் : மகாராசன்

பகையெல்லாம்
நமைக் கொல்லக் காத்திருக்கிறது.
துரோகமெல்லாம் கூட்டு சேர்ந்து
பகை முடிப்போம் என்கிறது.

பகையின் காவியுருவங்களும்
துரோகத்தின் முகமூடிகளும்
கையேந்தி
மடிப்பிச்சை கேட்டலைகின்றன.

பகையின் பக்கமும் நாமில்லை;
துரோகத்தின் நிழலையும் நம்புவதாயில்லை.

இப்போதைய சனநாயகமெல்லாம்
போலியென ஒரு நாளும்,
இப்போதைய நிலைப்பாடெல்லாம்
சந்தர்ப்ப வாதமென ஒரு நாளும்
மீளவும் பேசும் காலம்.

துரோகத்தையும் பகையையும்
வேரறுத்து மீளும்
தமிழ் நிலம்.

ஏர் மகாராசன்
28.03.2019.

ஓவியம்:
Vishnu Ram

வியாழன், 4 ஏப்ரல், 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: புதிய தேடல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா தொ.ப. வாசகர் வட்டம்.



எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
(குறள்:392). திருவள்ளுவர் ஆண்டு எனத் தோராயமாக நாம் ஏற்றுக் கொண்ட 2050 ஆண்டுகளுக்கு முன்பு இக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது. எண்ணையும் எழுத்தையும் மாந்தர்கள் தங்கள் உயிராகக் கொள்ள வேண்டும் என்பது பொருள். வள்ளுவர் காலத்தில் எழுத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறதெனில் அந்த எழுத்தின் தோற்றம், படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும். 2050 ஆண்டுகளுக்கு முன் எழுத்தை சரளமாக புழங்கிய மேம்பட்ட ஓர் குமுகத்தின் மொழியறிவு ஆய்விற்கு உரியது.

அப்படியொரு ஆய்வினை ஆசிரியர் மகாராசன் 'தமிழர் எழுத்து பண்பாட்டு மரபு' எனும் நூல் வழியே நிகழ்த்தியுள்ளார். பேச்சு  மற்றும் எழுத்தின் தோற்றம், தேவை, படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் என விவரிப்பதோடு நிற்காமல் எழுத்து சாமானியர்கள் வாழ்வில் அது  ஆற்றிய பங்களிப்பையும் தொல்லியல் வழிப்பட்டதோடல்லாமல்  மானுட ஆய்வியல் அடிப்படையிலும் சான்றுகளோடு நிறுவுகிறார்.

1. மொழி என்பது ஒரு சிந்தனைக் கருவி
2. மொழி உயிரோடும் உணர்வோடும் இணைந்தது
மேற்சொன்ன இந்த அளவுகோள்களில் தான் மொழியை இந்த குமுகம் இனம் காண்கிறது. ஆனால் மொழி என்பது மானுட  பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்து வருகிறது. இயங்கியல் அடிப்படையில் அறிவியல் வழிப்பட்ட மொழியின் வளர்ச்சியை ஆசிரியர் தரவுகளோடு விளக்குகிறார்.

பேச்சின் தோற்றம் :

எழுத்து + பேச்சு = மொழி
'தேவையில்லாம பேசாதே' - இந்த சொல்லியத்தை இயல்பாக நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் தேவையிலிருந்து தான் பேச்சு பிறக்கிறது. பேச்சு மானுட பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல். உழைப்பு தான் மாந்தனை பேச வைத்திருக்கிறது. உணவு தேடி உழைப்புச் செலுத்தும் போது சக மாந்தனோடு ஏற்படுத்த வேண்டிய கருத்து பரிமாற்றத்தில் பிறக்கிறது பேச்சு. மாந்தனுக்கு சக மாந்தன் தேவைப்படுகிறான். இதைத் தான் ஏங்கெல்சு உழைப்பதற்கு முன்நிபந்தனையாக வைக்கிறார். கூட்டு உழைப்பின் மூலம் கூட்டுச் சிந்தனை மூலம் சங்கேத ஒலியாக, ஒழுங்கமைக்கப்படாத பேச்சொலியாக மொழி பிறக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட சத்தத்திலிருந்து சொற்கள் பிறந்து மொழி உருவாகின்றது. குரங்கிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் கழித்து முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி முதுகெலும்பு நிமிர்த்தி குரல்வளை கொண்டு பேச்சை ஏற்படுத்தியதே மாந்தன் செய்த முதல் புரட்சி என ஏங்கெல்சின் மேற்கோள் காட்டி மொழியின் தோற்றத்தை மானுட பரிணாம வளர்ச்சியோடு மொழி வளர்ச்சி அடைகிறது என ஆசிரியர் விளக்குகிறார்.

எழுத்தின் தோற்றம் :

பேச்சை கேட்க முடிகிறது ஆனால் ஒலியை காண முடிவதில்லை. எழுத்தை காண முடிகிறது ஆனால் கேட்க முடியவில்லை. இவ்விரண்டு செயல்களையும் இணைப்பது தான் மொழி. எழுத்து தகவல் சேர்மையமாக விளங்குகிறது. எப்போது வேண்டுமானால் ஒரு கருத்தை வெளிப்படுத்த எழுத்து உதவுகிறது. எழுத்து உருவான பின் தான் மொழியின் இலக்கணம் பிறக்கிறது. எழுத்து தான் ஒரு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. பேச்சை தாயெனக் கொண்டால் எழுத்தை சேய் எனக் கொள்ளலாம். தாயைக் காக்கும் சேயாக எழுத்து பரிணமிக்கிறது. எழும் ஒலியை எழுதுவதால் அது எழுத்தெனப்படுகிறது.

எழுத்தின் படிநிலை:

பேசுகின்ற பொழுது எழுந்த தகவல் பரிமாற்ற சிக்கலை ஓவியங்களாக வரைந்து தீர்த்தனர்.பாறைகளில் விலங்கை வேட்டையாடுவது போல ஓவியங்கள் வரைந்தால் அந்த விலங்கு வேட்டையில் நிறைய கிடைக்கும் என நம்பினர். இதை தோழர் ஆ.சி ஒத்த சடங்கு(similarity rituals) என சொல்கிறார். இவ்வாறாக ஓவியங்களாக வரைந்தவை பின்னர் எழுத்துகளாக உருப்பெறுகின்றன.
பாறை ஓவியம் - குறீயிடு - கருத்தெழுத்து - ஒலியெழுத்து என வளர்ச்சி அடைந்ததை ஆசிரியர் விளக்குகிறார்.

தமிழி × பிராமி :

பிராமி எனும் எழுத்து வடிவம் (writing system) அசோகர் கால கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. ஆய்வாளர்கள் தென்னகத்தில் கிடைத்த எழுத்து சான்றுகளை தமிழ் பிராமி எனக் குறிக்கிறார்கள். ஆனால் பிராமியைப் போலவே தமிழி எனும் எழுத்து வடிவம் தனித்து இயங்கக் கூடியது(stand alone), பிராமியினை விட தமிழி மூத்தது என புலிமான் கோம்பை எனும் இடத்தில் கிடைத்த தொல்லியல் சான்றை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். பிராமிக்குள் தமிழி அடக்கம் என நிறுவும் முயற்சிகள் தவிடு பொடியாகின்றன. இந்தியாவில் கிடைத்த ஒட்டு மொத்த பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எண்ணிக்கையை விட கொடுமணிலில் கிடைத்தவை அதிகம்.

எழுத்து வகைகள் :

கண்ணெழுத்து, சாதியெழுத்து, நாள் எழுத்து, யோனி எழுத்து, தன்மையெழுத்து என எழுத்து வகைகளைப் பற்றி நிறைய தகவல்கள் இந்நூலில் காணலாம்.

எழுத்து பரவலாக்கம் :

இந்த நூலின் மிக முதன்மையான பகுதி இது தான். அசோகர் காலத்து பிராமி எழுத்து அரச மரபெழுத்தாகவே கல்வெட்டுக்களில் உறைந்து கிடக்க தமிழி (தமிழ் பிராமி அல்ல!) எழுத்துகள் சாமானியர்களின் புழங்கு பொருட்களில் பொறிக்கப்பட்ட சான்றுகள் மூலம் தமிழி எழுத்து  சாதி/சமய வேறுபாடற்று பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது. தமிழி அரச மரபில்  வட்டெழுத்தாகவும் குமுக பயன்பாட்டில் தமிழ் எழுத்தாகவும் விரவிக் கிடந்திருக்கிறது. இந்த எழுத்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொன்னால் அது சாமானியர்கள் கையில் புழங்கியதால் தான் என ஆசிரியர் ஆணித்தரமாக விளக்குகிறார்.

இலக்கண நூல்களின் பங்கு :

தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கல காரிகை போன்ற இலக்கண நூல்கள் தமிழி எழுத்துகளை மொழியியல் கோட்பாட்டோடு அறிவியல் வழியில் எழுத்து வடிவங்களை விவரிக்கின்றதை மேற்கோளோடு விவரிக்கிறார் ஆசிரியர்.

'மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே' என தொல்காப்பியம் உயிர் மெய்யெழுத்துகளின் ஒலிப்பில் முதலில் மெய்யெழுத்து ஒலித்து பிறகு உயிரெழுத்து ஒலிக்கும் என ஒலியமைப்பை பேசுகிறது. தொல்காப்பியம், நன்னூல் இலக்கண விதிகள் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டவை எனும் செய்தி இன்னும் சிறப்பானது.

இன்னொரு புறம், பாட்டியல், வெண்பா மாலை போன்ற நூல்கள் எழுத்துகளை கடவுளர்களாகவும், வர்ணநிலை கொண்டவை களாகவும், சாதியமாகவும் பால் சார்ந்தவைகளாகவும்(ஆண்பால், பெண்பால், அலிபால்), தன்மை சார்ந்தனவையாகவும் பிற்போக்குத்தனமாக இலக்கணம் எழுதி தமிழ் எழுத்துகளை ஒரு பக்க சார்புடையனவாக ஆக்க முயற்சி செய்தவற்றை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

பிள்ளையார் அரசியல் :

எழுதத் தொடங்குமுன் 'உ' போடுவது நம்மிடையே இருக்கும் வழக்கம். இதை பிள்ளையார் சுழி என சொல்கிறோம். ஆரிய/வைதீக மரபு இந்த வழக்கத்தை எவ்வாறு திரித்து தனதாக்கிக் கொண்டது என விளக்கி பிள்ளையார் வேறு! கணபதி வேறு! என காத்திரமான ஆதாரங்களோடு வைதீகத்திற்கு குட்டு வைக்கிறார் ஆசிரியர்.

உலகம் :

உலகம் எனத் தொடங்கும் இலக்கியப் பாடல்களையெல்லாம் சான்றாகக் கொண்டால் தமிழ் இலக்கியம் உலகப் பொதுமையை பேசியிருப்பது திண்ணம். உலகத்தை குறித்த பெயர்கள், ஊரின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், தெய்வங்களின் பெயர்கள் எல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது தமிழ் குமுகம் உலகப் பொதுமையை நேசித்தது விளங்கும். எழுதுவதற்கு முன் போடும்  'உ' உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும்  இளமையோடும் வளமையோடும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற குறீயிடாகத் தமிழ் குமுகம் கொண்டிருக்கிறது என சொல்லி ஆசிரியர் நிறைவு செய்கிறார்.

கைலாசபதி, ஆ. சி, ஏங்கெல்சு, ஜார்ஜ் தாம்சன் தொட்டு தொல்காப்பியம் சென்று பொருந்தல், கீழடி வரை தேடித்தேடி சான்றுகளை பகர்ந்து இந்நூலினை படைத்திருப்பதற்கு ஆசிரியருக்கு தமிழ் குமுகம் கடமைப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தை எழுதிக் கொண்டும்,தட்டச்சு செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

இயல்களாக பிரித்து நூலினை அமைத்திருந்தால் படிப்பதற்கு இலகுவாக இருந்திருக்கும். பிள்ளையார் அரசியல் பற்றி பேசுகிற பொழுது விவரனைகளை குறைத்து இருக்கலாமே எனவும் தோன்றியது. ஏற்கனவே அண்ணன் சுதாகரன் சொன்னது போல அந்த பகுதி கத்தி மேல் நடக்கின்ற பகுதி என்பதாலோ ஆதியிலிருந்து தரவுகள் கொடுத்து விட்டார் ஆசிரியர். துறைசாராத என்னைப் போன்றோர் எளிதில் அணுகும் வண்ணம் நூல் அமைந்துள்ளது. துறை சார்ந்தவர்கள் இந்நூலின் ஏற்பன/மறுப்பன ஆய்ந்தறிந்து ஆரோக்கியமான விவாதம் ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். எனக்குள் புதிய தேடல்களை திறந்துவிட்டிருக்கிறது இந்நூல் 'உ' போட்டு...

திங்கள், 1 ஏப்ரல், 2019

சுளுந்தீ : கதைக் களப் பயணங்களும் கதையின் நுண் அரசியலும்:- மகாராசன்




கடந்த ஓராண்டுக்கு முன்பாக முகநூல் வாயிலாகத் தோழர் முத்துநாகு அவர்களிடம் நட்பறிமுகம் இருந்தாலும், நேரிடையான அறிமுகமும் பழக்கமும் எம் இருவருக்கும் முன்பின் இருந்திருக்கவில்லை.

ஒரு நாள், உங்களைச் சந்திக்க வேண்டும் என்றார். நானும் வாருங்கள் என்றேன். வந்தவர், பெரிய அளவிலான  ஒளி அச்சுப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தக் கதையைப் படித்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று சொல்லுங்கள் என்றார். நான் தயங்கியபடி, ஏறு தழுவுதல் பற்றிய இன்னொரு நூலுக்கான எழுத்துப் பணியில் இருக்கிறேன் தோழர். என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியாது. இருப்பினும், ஒரு இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள். படித்து விட்டுச் சொல்கிறேன் என்றேன்.அவரும் சரி என்றார்.

கதையைப் பற்றி ஆலோசனை சொல்ல ஏகத்துக்கும் ஆள் இருக்கையில, என்னய எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? என்று கேட்டேன். முகநூலில் உங்களது எழுத்துகளைக் கவனித்து வருகிறேன். நீங்க தான் இதப் படிச்சி சொல்றதுக்குச் சரியான ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன் என்றார். முகநூல் வித்தைகள் ஒருத்தரக் கொண்டாந்து சேத்துருக்கேன்னு உள்ளுக்குள் மப்பேறிக் கொண்டதை உணர்ந்தவாறே, மனசுக்கு என்ன படுதோ அத வெளிப்படையா பட்டுன்னு சொல்லிப் புடுவேன் தோழர். நல்லாச் சொல்லணும்னு மட்டும் நினைச்சுப்புடாதீங்க என்று சொன்னேன். அவரும் சரிங்க என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

நம்மளயும் ஒரு ஆளு நம்பி எதையோ ஒன்ன கொடுத்துட்டுப் போயிருக்கே என நினைத்துக் கொண்டு தான் அதைப் படிக்கத் தொடங்கினேன். அவராகவே  தமிழில் ஒளி அச்சு செய்திருந்ததால் எழுத்துப் பிழைகள் ஏகத்துக்கும் நிறைந்து கிடந்தன. ஆனாலும், ஒரு பத்துப் பதினைந்து பக்கங்கள் வாசித்துக் கடக்கையில் எழுத்துப் பிழைகளைக் காட்டிலும் வேறு ஏதோ ஒன்று இந்தக் கதைக்குள்ளும் இந்தப் புத்தகத்துள்ளும் ஒருவிதமான உயிரோட்டம் இருப்பதை உணரவும் உள்வாங்கவும் முடிந்தது.

படிக்க படிக்க எழுத்துப் பிழைகள் என்பதையெல்லாம் தாண்டி அதன் தரவுகள் என்னை மிரள வைத்தன. நான் இதுவரையிலும் படித்திராத கண்டிராத இந்த நிலத்தின் அரத்தமும் சதையுமான சமூக நிகழ்வுகளைக் கண் முன் நிறுத்தக்கூடிய கதைக்களமாக நூல் விரிந்து கொண்டே போனது.
மிகக் கனமாகவும் அடர்த்தியாகவும் தரவுகளாய் விரிந்து கொண்டே போனது நூல். ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பத் திரும்ப வாசித்து அதன் சொற்களோடும் கதையோடும் பயணித்துப் பயணித்து தான் அடுத்த பக்கத்திற்கு நகர்ந்தேன். பத்திக்குப் பத்தி, பக்கத்திற்குப் பக்கம் குறிப்புகள் போட்டுக் கொண்டே தான் வந்தேன்.

எந்த இடத்தில் என்ன சொல்ல வேண்டும்;சொல்லப்பட்டது சரியா; இந்த இடத்தில் போதவில்லை; இந்த இடம் தேவையில்லை. இந்தப் பகுதியில் முரண்பாடு இருக்கிறது; தகவல் பிழை, தரவுகள் சரிதானா. இந்தப் பகுதி அங்கு வர வேண்டும். இது இப்படி இருந்தால் சரி என்று எல்லாப் பக்கங்களிலும் குறிப்புகள் எழுதிக் கொண்டேதான் வந்தேன். ஒரு கட்டத்தில், நான் வெகுகாலமாக எந்த வரலாற்றை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அந்த வரலாற்றையே ஒரு கதைக்குள் இந்த மனுசன் கொண்டாந்துட்டாப்பளயே என்று மெய்சிலிர்த்துப் போனேன்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும்கூட கிட்டத்தட்ட ஒரு ஆறு மாத காலம் இந்த நூல் குறித்த செப்பனிடுதல் பணிகளில் எம்மை முழுதுமாக ஒப்படைக்கும்படி இந்த நூல் கோரியதாகவே நான் உணர்ந்தேன். படித்துப் படித்து வியந்து போய் தோழர் முத்து நாகுவிடம் செல்பேசியிலும் நேரில் வரவழைத்தும் நிறைய நிறையப் பேசிக் கொண்டே இருந்தேன்.

வேறு எவரும் செய்யாத - செய்ய முடியாத - செய்ய விரும்பாத ஒரு வேலய நீங்க செஞ்சிருக்கீங்க தோழர். மிக நேர்மையாவும் உண்மையாகவும் இந்தக் கதைய வரலாறாகச் சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இது பேசப்பட வேண்டிய புத்தகம். கண்டிப்பா இந்த நூல் பேசப்படும் என்று அடிக்கடி அவரிடம் சொன்னேன்.

இந்தக் கதைய நிறையப் பேத்துட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லி கருத்த கேட்டேன். பலரும் படிச்சாங்களா என்னான்னு தெரியல. எல்லாரும் நல்லா இருக்கு என ஒத்த வார்த்தையோட நிப்பாட்டிக்குவாங்க. நீங்க ஒருத்தருதான், இந்தப் புத்தகத்தப் பத்தி ரொம்ப சிலாகிச்சுப் பேசுறீங்க. நீங்க தான் இதக் கொண்டாடுறீங்க என்று சொன்னார்.

நூல் செப்பனிடுதலில் தலையிடலாமா தோழர் என்றவுடன், அவரும் மனமுவந்து நூலின் பல பகுதிகளைக் குறித்துத் திரும்பவும் மீளவும் திருத்தியும் சேர்த்தும் எழுதி எழுதிக் கொண்டு வந்து கொண்டே இருந்தார். கதைக்களம்-கதையோட்டம் - கதைமாந்தர்கள் என்பதற்கேற்ப அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நூல் பெரும்பான்மையான செம்மை வடிவம் பெற்றது.

இதைப் பதிப்பகம் வாயிலாக அச்சில் நூல் வடிவமாகக் கொண்டு வரலாம் என்ற எனது விருப்பத்தைச் சொன்னேன். ரெண்டு மூணு பதிப்பகத்திடம் கொடுத்திருக்கேன். அவங்க ஒன்னும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல என்றார்.

என்னுடைய நூல்களை அண்மைக்காலங்களில் வெளியிட்டு வரும் தோழர் அடவி முரளி வாயிலாக நூலைக் கொண்டு வரலாம். அவருக்கு இது போன்ற கதைக்களம் பிடிக்கும் என்றேன். உடனே அனுப்பியும் வைத்தோம். தோழர் முத்துநாகு அவர்களை முரளி தோழருக்கு முன் பின் தெரியாது. எனினும், முரளி தோழரும் படித்து விட்டு ஆதி பதிப்பகம் மூலமாக  புத்தகமாகக் கொண்டு வந்திரலாம் என்றார். சென்னை புத்தகக் காட்சிக்குச் சாத்தியமா என்றேன். கண்டிப்பாகக் கொண்டு வந்திரலாம் என்று வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன. தோழர் முரளி நம்பியது என்னையவோ தோழர் முத்துநாகுவையோ அல்ல. அந்த நூலை மட்டுமே நம்பினார். அந்தளவுக்கு நூல் தரமாய் இருக்கிறது என்றார்.

இடையில், நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகள் வேறு ஒருவர் செய்து கொடுப்பதாக இருந்தது. அவருக்கு உடல் நிலை சரியில்லாது போக, கடைசியில் நானே மெய்ப்பும் பார்த்தாக வேண்டிய நிலைக்கும் வந்துவிட்டது. நான் எழுதிய எந்தவொரு நூலுக்கும் கூட இப்படி மெனக்கெட்டது கிடையாது. அந்தளவுக்கு மனதுக்கு நெருக்கமாய் இந்த நூல் உள்நுழைந்து கொண்டது.

தோழர் முத்துநாகுவும் தோழர் முரளியும் இந்த நூல் செம்மையாகக் கொண்டு வருவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அனுமதியையும் எமக்கு வழங்கியதால் நூலைச் செப்பனிட நானும் மெனக்கெட்டுப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

மிகப் பெரிய நூலா வந்துருச்சே தோழர். இத எப்புடி கொண்டு போய்ச் சேக்குறது என்று தயங்கிச் சொன்னார் முத்துநாகு. வேறு எந்தப் பின்புலமும் படை பலமும் இல்லாது போனாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த நூலைக் குறித்த அறிமுகத்தைக் கொண்டு போக முடியும் என்று சொன்னேன். அதன்படியே அந்த நூலைக் குறித்து முகநூலில் பதிவொன்று எழுதினேன். அதில் உள்ள ஒரு சில பகுதிகளை நூலின் பின் அட்டையில் இடம் பெறச் செய்திருக்கிறார் தோழர் முரளி.

இந்த நூல் தமிழில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்றே கருதினேன். அது இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரது வாசிப்புக்கும் கவனிப்புக்கும் உள்ளாகி வருகிறது.

மிக முக்கியமான - நல்லதொரு நூல் உருவாக்கத்தில் பங்கெடுத்தமைக்கு மனம் நிறைவடைந்திருக்கிறது.

சுளுந் தீ நூலைக் குறித்து
நான் எழுதிய பதிவு வருமாறு:

சுளுந்தீ:
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம்.

வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல்.

தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு.

தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது.

இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட.

தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.

இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது.

தோழர் முத்துநாகுவின் சுளுந்தீ, மக்கள் வரலாற்றியலின் தமிழ் அடையாளம் என்றே கருதலாம்.

படங்கள்:

சுளுந்தீ கதைக் களத்தின் மிக முக்கியமான இடங்களினை நேரிடையாகப் பார்க்க வேண்டும் என்றவுடன், ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் சென்று வரலாற்றுத் தடயங்கள் சிலவற்றைக் காட்டினார் தோழர் முத்துநாகு.

1. பாண்டியர்களின் பெரு வழிச்சாலையில்  (கன்னாபட்டி - செக்கா பட்டி) இருந்த சுங்கச் சாவடி மற்றும் வணிகச்சந்தையாக இருந்த கோட்டை. (குன்னுவராயன் கோட்டை).
2. பாண்டியர் காலக் கோயிலான விண்ணதிரப் பெருமாள் கோயில்.
3. சோழர் கால சிவன் கோயில்.
4. மஞ்சளாறு, வைகையாறு, மருதாநதி எனும் மருதையாறு ஆகிய மூன்று ஆறுகளும் சேர்கிற கூடுதுறை.







ஏர் மகாராசன்.