வியாழன், 4 ஏப்ரல், 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: புதிய தேடல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா தொ.ப. வாசகர் வட்டம்.



எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
(குறள்:392). திருவள்ளுவர் ஆண்டு எனத் தோராயமாக நாம் ஏற்றுக் கொண்ட 2050 ஆண்டுகளுக்கு முன்பு இக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது. எண்ணையும் எழுத்தையும் மாந்தர்கள் தங்கள் உயிராகக் கொள்ள வேண்டும் என்பது பொருள். வள்ளுவர் காலத்தில் எழுத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறதெனில் அந்த எழுத்தின் தோற்றம், படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும். 2050 ஆண்டுகளுக்கு முன் எழுத்தை சரளமாக புழங்கிய மேம்பட்ட ஓர் குமுகத்தின் மொழியறிவு ஆய்விற்கு உரியது.

அப்படியொரு ஆய்வினை ஆசிரியர் மகாராசன் 'தமிழர் எழுத்து பண்பாட்டு மரபு' எனும் நூல் வழியே நிகழ்த்தியுள்ளார். பேச்சு  மற்றும் எழுத்தின் தோற்றம், தேவை, படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் என விவரிப்பதோடு நிற்காமல் எழுத்து சாமானியர்கள் வாழ்வில் அது  ஆற்றிய பங்களிப்பையும் தொல்லியல் வழிப்பட்டதோடல்லாமல்  மானுட ஆய்வியல் அடிப்படையிலும் சான்றுகளோடு நிறுவுகிறார்.

1. மொழி என்பது ஒரு சிந்தனைக் கருவி
2. மொழி உயிரோடும் உணர்வோடும் இணைந்தது
மேற்சொன்ன இந்த அளவுகோள்களில் தான் மொழியை இந்த குமுகம் இனம் காண்கிறது. ஆனால் மொழி என்பது மானுட  பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்து வருகிறது. இயங்கியல் அடிப்படையில் அறிவியல் வழிப்பட்ட மொழியின் வளர்ச்சியை ஆசிரியர் தரவுகளோடு விளக்குகிறார்.

பேச்சின் தோற்றம் :

எழுத்து + பேச்சு = மொழி
'தேவையில்லாம பேசாதே' - இந்த சொல்லியத்தை இயல்பாக நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் தேவையிலிருந்து தான் பேச்சு பிறக்கிறது. பேச்சு மானுட பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல். உழைப்பு தான் மாந்தனை பேச வைத்திருக்கிறது. உணவு தேடி உழைப்புச் செலுத்தும் போது சக மாந்தனோடு ஏற்படுத்த வேண்டிய கருத்து பரிமாற்றத்தில் பிறக்கிறது பேச்சு. மாந்தனுக்கு சக மாந்தன் தேவைப்படுகிறான். இதைத் தான் ஏங்கெல்சு உழைப்பதற்கு முன்நிபந்தனையாக வைக்கிறார். கூட்டு உழைப்பின் மூலம் கூட்டுச் சிந்தனை மூலம் சங்கேத ஒலியாக, ஒழுங்கமைக்கப்படாத பேச்சொலியாக மொழி பிறக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட சத்தத்திலிருந்து சொற்கள் பிறந்து மொழி உருவாகின்றது. குரங்கிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் கழித்து முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி முதுகெலும்பு நிமிர்த்தி குரல்வளை கொண்டு பேச்சை ஏற்படுத்தியதே மாந்தன் செய்த முதல் புரட்சி என ஏங்கெல்சின் மேற்கோள் காட்டி மொழியின் தோற்றத்தை மானுட பரிணாம வளர்ச்சியோடு மொழி வளர்ச்சி அடைகிறது என ஆசிரியர் விளக்குகிறார்.

எழுத்தின் தோற்றம் :

பேச்சை கேட்க முடிகிறது ஆனால் ஒலியை காண முடிவதில்லை. எழுத்தை காண முடிகிறது ஆனால் கேட்க முடியவில்லை. இவ்விரண்டு செயல்களையும் இணைப்பது தான் மொழி. எழுத்து தகவல் சேர்மையமாக விளங்குகிறது. எப்போது வேண்டுமானால் ஒரு கருத்தை வெளிப்படுத்த எழுத்து உதவுகிறது. எழுத்து உருவான பின் தான் மொழியின் இலக்கணம் பிறக்கிறது. எழுத்து தான் ஒரு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. பேச்சை தாயெனக் கொண்டால் எழுத்தை சேய் எனக் கொள்ளலாம். தாயைக் காக்கும் சேயாக எழுத்து பரிணமிக்கிறது. எழும் ஒலியை எழுதுவதால் அது எழுத்தெனப்படுகிறது.

எழுத்தின் படிநிலை:

பேசுகின்ற பொழுது எழுந்த தகவல் பரிமாற்ற சிக்கலை ஓவியங்களாக வரைந்து தீர்த்தனர்.பாறைகளில் விலங்கை வேட்டையாடுவது போல ஓவியங்கள் வரைந்தால் அந்த விலங்கு வேட்டையில் நிறைய கிடைக்கும் என நம்பினர். இதை தோழர் ஆ.சி ஒத்த சடங்கு(similarity rituals) என சொல்கிறார். இவ்வாறாக ஓவியங்களாக வரைந்தவை பின்னர் எழுத்துகளாக உருப்பெறுகின்றன.
பாறை ஓவியம் - குறீயிடு - கருத்தெழுத்து - ஒலியெழுத்து என வளர்ச்சி அடைந்ததை ஆசிரியர் விளக்குகிறார்.

தமிழி × பிராமி :

பிராமி எனும் எழுத்து வடிவம் (writing system) அசோகர் கால கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. ஆய்வாளர்கள் தென்னகத்தில் கிடைத்த எழுத்து சான்றுகளை தமிழ் பிராமி எனக் குறிக்கிறார்கள். ஆனால் பிராமியைப் போலவே தமிழி எனும் எழுத்து வடிவம் தனித்து இயங்கக் கூடியது(stand alone), பிராமியினை விட தமிழி மூத்தது என புலிமான் கோம்பை எனும் இடத்தில் கிடைத்த தொல்லியல் சான்றை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். பிராமிக்குள் தமிழி அடக்கம் என நிறுவும் முயற்சிகள் தவிடு பொடியாகின்றன. இந்தியாவில் கிடைத்த ஒட்டு மொத்த பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எண்ணிக்கையை விட கொடுமணிலில் கிடைத்தவை அதிகம்.

எழுத்து வகைகள் :

கண்ணெழுத்து, சாதியெழுத்து, நாள் எழுத்து, யோனி எழுத்து, தன்மையெழுத்து என எழுத்து வகைகளைப் பற்றி நிறைய தகவல்கள் இந்நூலில் காணலாம்.

எழுத்து பரவலாக்கம் :

இந்த நூலின் மிக முதன்மையான பகுதி இது தான். அசோகர் காலத்து பிராமி எழுத்து அரச மரபெழுத்தாகவே கல்வெட்டுக்களில் உறைந்து கிடக்க தமிழி (தமிழ் பிராமி அல்ல!) எழுத்துகள் சாமானியர்களின் புழங்கு பொருட்களில் பொறிக்கப்பட்ட சான்றுகள் மூலம் தமிழி எழுத்து  சாதி/சமய வேறுபாடற்று பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது. தமிழி அரச மரபில்  வட்டெழுத்தாகவும் குமுக பயன்பாட்டில் தமிழ் எழுத்தாகவும் விரவிக் கிடந்திருக்கிறது. இந்த எழுத்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொன்னால் அது சாமானியர்கள் கையில் புழங்கியதால் தான் என ஆசிரியர் ஆணித்தரமாக விளக்குகிறார்.

இலக்கண நூல்களின் பங்கு :

தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கல காரிகை போன்ற இலக்கண நூல்கள் தமிழி எழுத்துகளை மொழியியல் கோட்பாட்டோடு அறிவியல் வழியில் எழுத்து வடிவங்களை விவரிக்கின்றதை மேற்கோளோடு விவரிக்கிறார் ஆசிரியர்.

'மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே' என தொல்காப்பியம் உயிர் மெய்யெழுத்துகளின் ஒலிப்பில் முதலில் மெய்யெழுத்து ஒலித்து பிறகு உயிரெழுத்து ஒலிக்கும் என ஒலியமைப்பை பேசுகிறது. தொல்காப்பியம், நன்னூல் இலக்கண விதிகள் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டவை எனும் செய்தி இன்னும் சிறப்பானது.

இன்னொரு புறம், பாட்டியல், வெண்பா மாலை போன்ற நூல்கள் எழுத்துகளை கடவுளர்களாகவும், வர்ணநிலை கொண்டவை களாகவும், சாதியமாகவும் பால் சார்ந்தவைகளாகவும்(ஆண்பால், பெண்பால், அலிபால்), தன்மை சார்ந்தனவையாகவும் பிற்போக்குத்தனமாக இலக்கணம் எழுதி தமிழ் எழுத்துகளை ஒரு பக்க சார்புடையனவாக ஆக்க முயற்சி செய்தவற்றை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

பிள்ளையார் அரசியல் :

எழுதத் தொடங்குமுன் 'உ' போடுவது நம்மிடையே இருக்கும் வழக்கம். இதை பிள்ளையார் சுழி என சொல்கிறோம். ஆரிய/வைதீக மரபு இந்த வழக்கத்தை எவ்வாறு திரித்து தனதாக்கிக் கொண்டது என விளக்கி பிள்ளையார் வேறு! கணபதி வேறு! என காத்திரமான ஆதாரங்களோடு வைதீகத்திற்கு குட்டு வைக்கிறார் ஆசிரியர்.

உலகம் :

உலகம் எனத் தொடங்கும் இலக்கியப் பாடல்களையெல்லாம் சான்றாகக் கொண்டால் தமிழ் இலக்கியம் உலகப் பொதுமையை பேசியிருப்பது திண்ணம். உலகத்தை குறித்த பெயர்கள், ஊரின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், தெய்வங்களின் பெயர்கள் எல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது தமிழ் குமுகம் உலகப் பொதுமையை நேசித்தது விளங்கும். எழுதுவதற்கு முன் போடும்  'உ' உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும்  இளமையோடும் வளமையோடும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற குறீயிடாகத் தமிழ் குமுகம் கொண்டிருக்கிறது என சொல்லி ஆசிரியர் நிறைவு செய்கிறார்.

கைலாசபதி, ஆ. சி, ஏங்கெல்சு, ஜார்ஜ் தாம்சன் தொட்டு தொல்காப்பியம் சென்று பொருந்தல், கீழடி வரை தேடித்தேடி சான்றுகளை பகர்ந்து இந்நூலினை படைத்திருப்பதற்கு ஆசிரியருக்கு தமிழ் குமுகம் கடமைப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தை எழுதிக் கொண்டும்,தட்டச்சு செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

இயல்களாக பிரித்து நூலினை அமைத்திருந்தால் படிப்பதற்கு இலகுவாக இருந்திருக்கும். பிள்ளையார் அரசியல் பற்றி பேசுகிற பொழுது விவரனைகளை குறைத்து இருக்கலாமே எனவும் தோன்றியது. ஏற்கனவே அண்ணன் சுதாகரன் சொன்னது போல அந்த பகுதி கத்தி மேல் நடக்கின்ற பகுதி என்பதாலோ ஆதியிலிருந்து தரவுகள் கொடுத்து விட்டார் ஆசிரியர். துறைசாராத என்னைப் போன்றோர் எளிதில் அணுகும் வண்ணம் நூல் அமைந்துள்ளது. துறை சார்ந்தவர்கள் இந்நூலின் ஏற்பன/மறுப்பன ஆய்ந்தறிந்து ஆரோக்கியமான விவாதம் ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். எனக்குள் புதிய தேடல்களை திறந்துவிட்டிருக்கிறது இந்நூல் 'உ' போட்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக