ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தமிழின் தொன்மையான வரலாற்றுக்காலம் பற்றி அறிய உதவும் நூல்: செல்வா தமிழ், சமூகச் செயல்பாட்டாளர்.






முனைவர் மகாராசன் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' என்னும் ஆய்வு நூலானது, ஒரு மொழி என்பது எவ்வாறு தோன்றியது? எப்போது எழுத்து வடிவம் எடுத்தது? மொழியைச் செழுமைப்படுத்த இலக்கண நூல்கள் எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அது எவ்வாறு ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாய் உள்ளது? என்பன பற்றி விரிவாக ஆய்வு செய்து தரவுகளுடன் தரப்பட்டுள்ளது.

மொழியைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நூலை நான் படிப்பது இதுதான் முதல் முறை. தோழர் மகாராசனின் எழுத்துநடை ஒரு ஆய்வு நூலைப் படிப்பதற்குச் சிரமமின்றி எளிமையாக இருந்தது.

இந்நூலில் உள்ள சில கருத்துக்கள்...

மனித சமூகத்தின் உழைப்பில் விளைந்ததே மொழி. எனவே, சமூகம் இல்லாமல் மொழி இல்லை; மொழி இல்லாமல் சமூகத்தின் வளர்ச்சி இல்லை. எனவே, இரண்டும் இணைந்தே இயங்குகிறது.

மொழிக்கு நிலைபேறு என்கிற தகுதிநிலை அளிப்பது எழுத்தாகும். மொழியின் ஒலி வடிவத்திற்கு வரி வடிவம் கொடுப்பதே எழுத்துதான். எழுத்து என்னும் சொல்லை நோக்கும் போது உண்மையில் எழு என்னும் சொல்லே வேர்ச் சொல்லாக இருப்பது புலனாகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவமான பிராமி என்னும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும் தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகும் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் இதனை மறுத்து, கி.மு .15 ஆம் நூற்றாண்டு வரை வழமையான எழுத்து வடிவத்தைக் கொண்டதாகத் தமிழ்மொழி உள்ளதாக நிறுவுகின்றன. தமிழில் உள்ள எழுத்து வடிவத்திற்குத் தமிழி எனக் குறிக்கலாம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

எ.கா. 1970ம் ஆண்டு கொற்கைத் துறைமுகக் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த பானை ஓடு ஒன்றில் தமிழ் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதனைக் கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதன் காலம் கி.மு. 550 முதல் கி.மு. 660 இருக்கலாம் என்பதை நிறுவுகிறது.

அதேமாதிரி, தற்போது கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்து வடிவத்தின் பழமையை நிறுவுகிறது. எனவே, பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து தமிழ் எழுத்து உருவாகவில்லை. மாறாக, அதற்கு முன்பே தமிழ் எழுத்து வடிவம் இருந்திருக்கின்றது; அது தமிழி எழுத்து வடிவம் ஆகும். அதற்கென தனி வரலாறும் உண்டு.

தமிழி எழுத்து வடிவம் கிடைக்கப்பெற்ற பொருட்களில் எல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்தியவை ஆகும். மற்றும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்திய பொருள்களில் எழுதப்பட்டுள்ளது. இது சமூகத்தில் அடித்தட்டு மக்கள் வரை கல்வி அறிவு பெற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துள்ளதை நிறுவியுள்ளது.
ஏனென்றால், பெரும்பாலும் வட இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் செப்பேடுகள் போன்றவற்றில்தான் முதன்முதலாகப் பிராமி எழுத்து வடிவத்தில் பிராகிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது . ஆனால், அதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு சாதாரண மக்கள் பயன்படுத்திய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே ஒரு மொழியின் வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால் மொழி எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பாகப் பல நூறு வருடங்கள் பேச்சு மொழியாக இருக்கும். எனவே, தமிழ்மொழியின் வரலாறு என்பது கிடைக்கப்பட்ட தரவுகள் ஆதாரங்கள் அடிப்படையில் தோராயமாக கி.மு. 2000ஆம் ஆண்டுகள் என மதிப்பிடலாம்.
இது போன்ற பல தகவல்கள் இந்நூலில் உள்ளன.

தமிழ்மொழியின் தொன்மையான வரலாற்றுக் காலம் பற்றியும், சிறப்பைப் பற்றியும் அதை பயன்படுத்திய மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இவ்வாய்வு நூலைத் தோழர்கள் அவசியம் வாசிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக