தமிழ்மொழியைத்
'திராவிட மொழி'என்றும்,
தமிழ் இனத்தைத்
'திராவிடர்' என்றும்,
தமிழ்நாட்டைத்
'திராவிட நாடு' என்றும்,
தமிழ்ப் பண்பாட்டு நாகரிகத்தைத்
'திராவிடப்
பண்பாட்டு நாகரிகம்' என்றும்,
தமிழர் திருநாளைத்
'திராவிடத் திருநாள்' என்றும்
தெரிந்தோ தெரியாமலோ 'திராவிடமயமாக்கம்' நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன.
இச்சூழலில், தமிழர் மரபு அறிவின் நீட்சியாக - அனுபவ அறிவின் பயனாக - இயற்கை உறவின் கொடையாக - தமிழர் நிலத்திற்கே உரித்தான இயற்கை மருத்துவமாக- பயில்முறைக் கல்வியாகப் பரிணமித்த மருத்துவ முறையாகச் 'சித்த மருத்துவம்' தோன்றி வளர்ந்திருக்கிறது. தமிழ்மொழிக்கும் சித்த மருத்துவத்திற்குமான பிணைப்பு இணைபிரியாதது. சித்த மருத்துவம் என்பது, 'தமிழ் மருத்துவம்' என்று சொல்லுமளவிற்குத் தமிழின் மருத்துவ அடையாளமாகத் திகழக்கூடிய ஒன்று.
தமிழின் அடையாளங்கள் அனைத்தையும் திராவிடமயமாக்கி வந்த சூழலில், தமிழ் அடையாளங்களுள் ஒன்றான சித்த மருத்துவத்தை - தமிழ் மருத்துவத்தை மட்டும் திராவிடமயமாக ஆக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தைத் 'திராவிட மருத்துவம்' என்பதாகத் திராவிட மயமாக்கவில்லை. திராவிட மருத்துவம் என்பதாகக்கூட, சித்த மருத்துவத்தை முன்னிறுத்தவோ அல்லது முன்மொழியவோ செய்திடவில்லை.
தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ சித்த மருத்துவம் எந்த வகையிலும் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சதியும், ஏமாற்றும், மாயத்தோற்றமும், அச்சுறுத்தலும், கட்டுப்பாடும், சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்கள் அழிப்பும், குல நீக்கமும், அதிகாரத் துணைகொண்ட ஒடுக்குமுறையும், படுகொலையும் 16ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து இன்றுவரையிலும் நீடிக்கின்றன. ஏனெனில், அறிவியல் தொழில்நுட்பத் தோற்றத்தில் - வணிகமயக் கண்ணோட்டத்தில் உள்நுழைக்கப் பார்த்த அலோபதி மருத்துவ நுழைவுக்குப் பெருந்தடையாக இருந்தது சித்த மருத்துவ முறைதான்.
இன்றும் கூட அலோபதியின் வணிக நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் அதுதான். அதனால்தான், சித்த மருத்துவத்தைத் திராவிட மருத்துவமாகவோ அல்லது தமிழ் மருத்துவமாகவோ பரவலாக்கம் செய்திடவில்லை அதிகாரத் தரப்பினர்.
அலோபதி மருத்துவக் கட்டமைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவங்கள், உள்கட்டமைப்புகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை போல, சித்த மருத்துவத்தையும் நவீனப்படுத்தவும் பரவலாக்கவும் செய்கின்ற முயற்சிகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவுதான். இந்த மண்ணில்-இந்த மக்களால்-இந்த மரபில் தோன்றி பன்னெடுங்காலமாக மக்கள் மருத்துவமாகத் திகழ்ந்துவந்த சித்த மருத்துவமானது, அலோபதி மருத்துவ நுழைவுக்காகவே இரண்டாம்தர மருத்துவமாகத் திட்டமிட்டுத் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இது அறிவியல் அற்றது; நவீனப்படாதது; நிரூபிக்கப்படாதது; அனைத்து நோய்க்கும் மருந்தில்லாதது என்கிற புனைவுகள் அக்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் முன்வைக்கப்படுகிற கொச்சை வாதங்கள்தான்.
இவர்களது நோக்கமெல்லாம், சித்த மருத்துவமானது தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ நவீனமாக மாறிவிடக்கூடாது என்கிற எண்ணம்தான். கூடவே, அலோபதியின் வணிக நோக்கில் கைகோர்ப்பதும்தான்.
சித்த மருத்துவம் என்பதைப் பொருத்தளவில், அதனைத் திராவிட மருத்துவம் என்று சொல்லும்படியாகவும் அதை ஆக்க முடியவில்லை; அப்படியாக அதை ஆக்கவும் விரும்பவில்லை. இதில்தான் திராவிடமயமாக்கலின் தோல்வி அடங்கி இருக்கிறது; கூடவே வெற்றியும் மிதமிஞ்சி இருக்கின்றது.
பிற்குறிப்புகள்:
1. சித்த மருத்துவத்திற்கும் தமிழகத்தில் இருந்த மடங்களுக்கும் நிறையத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, தமிழக மடங்கள் சமயக் கல்வியை வலுப்படுத்தும் விதமாக கட்டடக் கலை, ஓவியம், இசை, நாட்டியம், மருத்துவம், மெய்ப்பொருள் அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், அடிப்படையான மொழி, மொழியைச் செம்மைப்படுத்தும் இலக்கணம், கோவில் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தோத்திர நூல்கள் போன்றவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தன.
தமிழர்களின் பொது அறமாக வழிவகுக்கப்பட்ட 32 பொது அறங்களில் பசிக்கு உணவளித்தல், ஆதுலர்க்குச் சாலை அமைத்தல், கல்விச் சாலை அமைத்தல் மூன்றும் தலையாயன. ஆன்மா எனும் மனதைச் சுத்தப்படுத்த யோக ஞானப் பயிற்சியும், உடம்பை வலுவாக்க அன்னம் அளித்தும், உடம்பை நோயில் இருந்து பாதுகாக்க மருத்துவப் பயிற்சியும் மடங்கள் மூலமாக அளிக்கப்பட்டு வந்தன.
அனைத்துத் தமிழக மடங்களும் சமய நூல்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான தமிழ் அனுபவச் சித்த மருத்துவச் சுவடிகளைப் பாதுகாத்தும் வந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதிகைச் சித்தர் மரபு, திருமூலர் மரபு, வள்ளலார் மரபு போன்ற பல்வேறு அமைப்புகள் மடங்கள் மூலமாக வந்த வழித் தோன்றல்கள்தான். இவர்கள் தொண்டை மண்டலம் முழுமையும் ஞானக்கல்வியும், சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து வந்தனர். மேலும், இலவச அன்னம் அளித்து, சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து, இலவச தர்ம வைத்திய சாலைகளை நடத்தி வந்துள்ளனர். இதில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் அன்றைய காலத்தில் கைவிடப்பட்ட ஏழைப் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மடங்கள் யாவும் கோயிலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன. இந்த மடங்களுக்குக் கோயில்கள் மூலமாகவே மானியம் அளிக்கப்பட்டு வந்தன. இந்த மானியங்களைக் கொண்டுதான் பல்வேறு வகையில் அறப்பணிகளைச் செய்துவந்தன. பொதுவாக, கோயில்கள் அனைத்தும் அதிகார அமைப்புகளின் மிக முக்கியமான நிறுவனமாகச் செயலாற்றி வந்த நிலையில், பிற்காலத்தில் நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டன் அரசாங்கம்கூட கோயில்களுக்குள்ளும் மடங்களுக்குள்ளும் அதிகப்படியாகத் தலையிட்டுக்கொள்ளவில்லை.
பிரிட்டன் அரசுக்கு முன்பான காலங்களில் அரசுகளின் நிர்வாகத் தளங்களாக இருந்தவை
கோயில்களும்அதன் துணை அமைப்பான மடங்களுமே ஆகும். இங்குதான் வானியல், சிற்பம், ஓவியம், கட்டிடம், பண்டுவம், கூவகம், நாடகம், பாடல், நடனம், இசை, கல்வி போன்ற சாத்திரத் துறைகளும் அதன் கலைஞர்களும் இயங்கினார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் அரசு சார்ந்து மட்டும் இருந்தன. இதனால் மக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளி அதிகமாக இருந்தது. இந்தக் காலத்தில் ஆட்சிக்கு வந்த பிரிட்டன் அரசு 'கோயிலில் ஊழல்; எளிய சூத்திர மக்கள் நுழையத் தடை' இருப்பதாக் கணக்கில் கொண்டு முடக்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, கோயில் மற்றும் மடங்களின் மானியத்தால் மட்டும் பிழைத்துக்கொண்டிருந்த இக்கலைஞர்கள் தெருக்கூத்தாடிகளாக மாறினர் என்பதே வரலாறு.
பண்டுவர்கள் கிராமங்களை நோக்கி வேளாண்குடிகளைச் சார்ந்து தனித்தனியாகப் பிரிந்து போயினர். இதனால், அவர்களிடையே பண்டுவம் தொடர்பாக இருந்து வந்த விவாதக் கருத்துப் பரிமாற்றங்களும் செத்துப்போயின. இதையும் தாண்டி "இவர்களால் நமக்குப் பெரும் தொல்லை இல்லை" என சில வேதாந்த மடங்களைப் பிரிட்டன் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டதால், தொண்டை மண்டலத்திலும் தென்தமிழகத்திலும் சித்தமருத்துவப் பண்டுவம் சாமனிய மக்களைக் காக்கவும் செய்தது.
கோவில் நிறுவனங்கள் அனைத்தும் நீதிக்கட்சி ஆட்சியில் (Endowment Bord) அறநிலையத்துறை என்ற துறையின்கீழ் கொண்டுவரப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, 1947 காலத்திற்குப் பிந்தைய எல்லா வகைப்பட்ட ஆட்சிக் காலங்களிலும் கோயில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதோடு, கோயில்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்பட்டன. மானியங்களை நம்பியே செயல்பட்டு வந்த மடங்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. மடங்களில் செயலாற்றி வந்த சித்த மருத்துவப் பண்டுவமும் பண்டுவர்களும் அரசின் ஆதரவின்றிப் போனதாலும், அரசின் நெருக்கடி மிகுதியாலும் மடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், மடங்களில் இருந்த பல லட்சக்கணக்கான மருத்துவச் சுவடிகள்/ ஆவணங்கள் மறைந்தும் அழிந்தும் போயின.
இத்தகைய அறமடங்களை வெறும் ஆன்மீக மடங்களாகவே பார்த்துக் கருதியதும், அதைச் சமய அடையாளங்களாக ஒதுக்கியதும் நீதிக்கட்சி தொடங்கி திராவிட ஆட்சிக்காலங்கள் வரையிலும் அதிகம் நடந்தேறியுள்ளன.
2. ஆந்திரம் கர்நாடகம் கேரளத்தில் ஆயுர்வேதமே அம்மக்களின் மருத்துவமாக உள்ளதற்குக் காரணம், அங்கு சமற்கிருதக் கலப்பு என்பதைவிடவும் சமற்கிருதத்தில் அது அரசு மாயமானதே. இங்கு சமற்கிருதத்திற்குள் போகாதது திராவிடக் கட்டமைப்பு என்பதும் பொய். திராவிடக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே சித்த மருத்துவப் பண்டுவமானது கொரோனா தனிமைப்படுதல் போல் தன்னைச் சுற்றித் தானே வளப்படுத்தி வந்திருக்கிறது. இதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் என்பதே ஆய்வுப்பூர்வமானது.
3. பிரிட்டன் அரசு இந்திய ஒன்றியப் பகுதிகளில் மருத்துவங்களுக்காகப் பள்ளி / கல்லூரி தொடங்கியபோது சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பொருட்படுத்தவில்லை. இதைப் பிரிட்டன் அரசுக்கு எடுத்து வைக்க வேண்டிய நீதிக்கட்சியும் முனைப்பு காட்டவில்லை. அதேவேளை, மக்களிடம் சித்த மருத்துவப் பண்படுவம் பரவலாக இருந்தது. இதை நிராகரித்தால் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். இதே சூழலில், தமிழகத்தில் ஆயுர்வேதப் பள்ளியைத் தெலுங்கு பிராமணர்கள் துவக்கியபோதும், நீதிக்கட்சிக்காரர்கள் சித்த மருத்துவப் பண்டுவப் பள்ளி தொடங்க உதவவில்லை என்பதே வரலாறு.
4. உடல் உள்ளுறுப்பு அறுவை சிகிச்சை தொடங்கிய காலத்தில், ஆங்கில மற்றும் உலகளவில் உள்ள மருத்துவக் கூட்டுக் குழுவே செய்திடத் தொடங்கியது என்பதைப் பிரிட்டன் குறிப்புகளே சொல்கின்றன (குரோத் ஆப் மெடிக்கல் இன் இராஜ் நூலில்).
இதைத்தொடர்ந்தே, ஆட்சி அதிகாரத்திலிருந்த கிழக்கு இந்தியப் பிரிட்டன் கம்பெனியானது, அரசைத் தனக்குரியதாக்கியதுடன் தான் ஆண்ட நாடுகளில் எல்லாம் அதைப் பரப்பிப் பணம் ஈட்டியது.
5. சித்த மருத்துவப் பண்டுவத்தில் 4446 நோய்கள் மட்டுமே உள்ளது. புதிய நோய்களுக்கு மருந்தில்லை என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பூமிப்பந்தில் மரபணு திடீர்மாற்றம் (Genetical change and mutation) அடைவது பல கோடி ஆண்டுகள் என ஆய்வு அறிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொண்டது விஞ்ஞானம். இதன்படி எந்த உருமாற்றமும் மனித குலத்தில் நிகழாதபோது, எப்படி புதிய கண்டுபிடிப்பு மருந்துகள் உருவாகி இருக்கும்?
உடற் கூறுகளில் உள்ள (body mechanism and metabolism) உட்கூறுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதேபோல் நுண் கிருமிகள் மூட்டேசன் நடக்கவில்லை. நடந்தது என நாம் நம்புவது கலப்பு; ஒட்டு. இதனாலும் பெரும் மாற்றம் நிகழவில்லை.
எச்அய்வி, காலரா, பிளேக் போன்ற நோய்களுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை புதிய நோய்கள் இல்லை. எச்அய்வி தீநுண்மி கண்டறியப்பட்டதால் அன்று முதலே அந்நோய் உருவானதல்ல. அதற்கு முன்பே மேக வெட்டை என்ற பெயரில் முன்பே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
6. உள் உறுப்புகள் தொடர்பான கணிப்புக் கருவிகள் எக்ஸ்ரேயில் தொடங்கி இன்றுவரையிலும் பலவகையான நுண் நுட்பமான கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இதற்கு ஏற்றால்போல் சித்த மருத்துவப் பண்டுவத்தில் இல்லையென்பதால் சமற்கிருதம் போல் அழிந்து விடும் என எழுதுவது, சித்த மருத்துவப் பண்டுவ அறிவை நாம் இழக்க வைத்தன் விளைவாகும்.
நாடி பார்ப்பதற்கு இன்று அரசுக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியப் பெருமக்களே குறைவு என்பதைவிட, அதன் அடி நாளத்தைத் தொடவில்லை. காரணம், அரசு நிறுவனமாக்கிய கல்வியைக் கொடுத்தவுடன் இவர்கள் சித்த மருத்துவப் பண்டுவர்களைப் போலியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரத்தில், சித்த மருத்துவப் பண்டுவர்களிடமிருந்த அறிவைப் பெற மறுத்ததுடன், அந்தப் பட்டறிவைத் தள்ளுபடியும் செய்தனர்.
நாடி பார்ப்பது நூலில் இருந்தாலும், நாடி பார்ப்பது என்பது அனுபவத்தின் நுட்பமான அறிவாகும். இதைப் படிப்பதால் மட்டுமே பயன்படுத்திட இயலாது என்பதை அவர்கள் அறிந்ததால்தான், டெத்தஸ்கோப் வேண்டும் எனப் போராடிப் பெற்று ஆங்கில மருத்துவர்களைப்போல் கல்வி நிறுவனங்களில் பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் வலம் வருகிறார்கள். அதேபோல், சித்த மருத்துவப் பண்டுவத்தில் உள்ள செந்தூரம், அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடமாகவே உள்ளது. இதில் அனுபவ அறிவைப் (practical) பெற்றவர்கள் மிகக்குறைவு என்பதே உண்மை.
7. பிரிட்டன் அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரியாவே எடுத்தது. இதை இன்று வரை சாதிவாரிக் கணக்கெடுப்பு எனச் சொல்லுவதற்குப் பதிலாக, மக்கள் தொகைக் கணக்கு எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். இதைப்போலவே, அன்றைய காலத்தில் இறப்பு விகிதம் அதிகம் என்றும், குறைந்த வயதில் மட்டுமே இறந்தார்கள் என்றும் சொல்வது, தமிழ் மொழியின் சித்த மருத்துவப் பண்டுவ அறிவை எதிர்க்கும் இலக்கை நோக்கியதாகும்.
'ஆங்கில மருத்துவக் கண்டுபிடிப்பால் மட்டுமே ஆயுள் கூடியது' என்ற பரப்புரையும் முன்வைக்கப்படுகிறது. அதேவேளையில்,
இன்றும் எவ்விதமான மருந்து மாத்திரை மட்டுமல்ல; மருத்துவப் பண்டுவமே பார்க்காத கிழடு கட்டைகளை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மறுக்கப்படுகிறது.
1730 முதல் கிழக்கு இந்தியன் கம்பெனியான இங்கிலாந்தோடு மன்னர் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் போட்ட காலமான 1857 வரை எத்தனையோ போர்கள்; எத்தனையோ கலவரங்கள். இந்தக் காலகட்டத்தில் அரசு என்பது எங்கு இருந்தது?. இக்காலகட்டத்தில் என்ன விதமான மருத்துவம் இருந்திருக்கும்?. மக்கள் பட்டினியால் செத்ததைவிட, பண்டுவம் இல்லாமலே செத்தார்கள்.
நோயால் சாகக்கிடந்த மக்களுக்குப் பிரிட்டன் அரசு என்ன செய்தது? உள்ளூரில் சித்த மருத்துவப் பண்டுவம் பார்த்தவர்களைப் போலி மருத்துவர்கள் என்றும், புட்லெக் கன்ரி மெடிசனிஸ்ட் என்றும் சொல்லி, கைது செய்து உள்ளே தள்ளியது. இதனால், போர்க் கலவரங்களில் செத்தவர்களைவிட, பண்டுவம் இல்லாமல் செத்தவர்களே அதிகம் என்ற வரலாற்றை மறைப்பது உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல; நேர்மையற்றதுமாகும்.
8. பிரிட்டன் அரசு ஆங்கில மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுவரவில்லை. அவர்களது மிலிட்டரி கண்டோமெண்ட்டில் மட்டுமே மருத்துவம் செய்தனர் என்ற வரலாற்றை மறைப்பதன் நோக்கம் என்ன?
பேராயக் கட்சியில் ( Indian National Congress party) தீவிரவாதப் பிரிவு தொடங்கிய பின்னர், இந்திய ஒன்றிய மொழிகளில் அவர்களின் மருத்துவத்தைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர். அதன் பின்னரே இந்த மருத்துவம் மக்களுக்கு லேசுவாசாக, அதுவும் 36 நகராட்சிகளில் பெயரளவிற்குக் கொண்டு வந்தனர். இந்தக் காலகட்டத்தில் சித்த மருத்துவப் பண்டுவர்கள் கொத்துக்கொத்தாகக் கைது செய்த வரலாறு உள்ளதையும் பார்க்க மறுப்பதேன்?
இதே காலகட்டத்தில், ஆங்கில மருத்துவம் பார்க்க மக்கள் வர மறுத்தனர். இதற்குக் காரணம், உயிர் பயம் மட்டுமல்ல; அந்த மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கையின்மையைப் பிரிட்டன் பரப்பிய ''இந்திய ஒன்றிய மக்கள் கடவுள் சொல்படி நடப்பவர்கள்' என்ற பிரச்சாரத்தை இன்றும் இங்குள்ளவர்கள் பரப்பி வருகிறார்கள்.
சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பிரிட்டன் அரசு 1921 படிப்பாகத் தொடங்கினாலும், 1932 வரை பதிவு செய்திடாமல் வைத்து, போலி மருத்துவர் என அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அன்றும் சரி இன்றும் சரி, சித்த மருத்துவப் பண்டுவம் பார்க்கும் மருத்துவர்களிடம் மக்கள் நம்பிக்கையோடு செல்லக் காரணம், சித்த மருத்துவப் பண்டுவ அறிவு மக்களுக்கு இருப்பதாலும், ஏற்கனவே நம் மக்களிடம் சித்த மருத்துவப் பண்டுவர்கள் இருப்பதாலும்தான்.
மருத்துவர்கள் மீதும், சித்த மருத்துவப் பண்டுவத்தின் மீதும் உள்ள நம்பிக்கை இன்னும் சாகாமல் இருக்கிறது என்பது படித்துப் பட்டம் பெற்ற பெரும்பாலான சித்த மருத்துவப் பண்டுவ மருத்துவர்கள் உணர மறுக்கிறார்கள்.
இந்த சித்த மருத்துவப் பண்டுவர்களிடம் இருக்கும் அறிவைப் பெற மறுப்பதும், மருத்துவ செடி கொடிகளை அடையாளப்படுத்தவும் அவர்களைப் பயன்படுத்தவும் மறுப்பதும் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களின் பெரும் போக்காக மாறி இருப்பதற்குக் காரணம், ஆங்கில மருத்துவர்களைப்போல் இவர்களும் உந்தப்பட்டிருப்பதே ஆகும்.
9. பிரிட்டன் அரசுக் காலத்தில் அமைக்கப்பட்ட கோமான் மற்றும் உஸ்மான் விசாரணைக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் ஆங்கில மருத்துவத்துடனே சித்த மருத்துவமும் பிற இந்திய ஒன்றிய மருத்துவமும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால் இவர்கள் ஆங்கில மருத்துவர்களாகவே மேல்நிலையாக்க உணர்வை அடைந்து, மரபு அறிவுக்கான சித்த மருத்துவப் பண்டுவப் பாட நூல்களைத் தயாரிக்கவும் முன்வரவில்லை. இதன் நீட்சியாகவே பெரும்பாலான பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
10. மருந்து மட்டுமே உள்ள சித்த மருத்துவப் பண்டுவத்தில், மய்ய மருந்தான செந்தூரம், கந்தகம் பூதம் (பாதரசம்), வெடிப்புத் துத்தம், துருசு போன்றவை இன்றும் சீனத்தில் கிடப்பவை. சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பில்லாமல் அவை இங்கு வந்திருக்காது.
ஆயுர்வேதத்தில் இந்த மருந்துகள் சுத்தி செய்திடும் முறை வேறு. அதேவேளை, சித்த மருத்துவப் பண்டுவத்தில் இங்கு உள்ள மூலிகைகளில் மட்டுமே சுத்தி செய்தனர். பாதரசம் போன்ற திரவ உலோகத்தைத் திடமாக்கி குண்டுமணியாகவும் செந்தூரமாகவும் செய்த அறிவியல் முறை, சித்த மருத்துவப் பண்டுவத்திற்குரியது.
சித்த மருத்துவத்தில் குல்லைப் பூ, அபினி பாசனங்கள், வெடிமருந்தாகப் பயன்படும் இதர மருத்துவப் பொருள்கள் பிரிட்டன் காலம் முதல் இன்று வரையிலும் தடை செய்யப்பட்டிருப்பதும், சித்த மருத்துவத்தில் உள்ள பெரும்பகுதி மருந்துகள், ஆங்கில மருந்துக் கலவையாக எப்படி மாறியது? என்ற வரலாற்றைத் தேடினால், ஆதிக்க அதிகார இருப்பால் அதனைத் தன்வயப்படுத்தியிருப்பதும் புலப்படும்.
ஏர் மகாராசன்
02. 04. 2020.
பிற்குறிப்புத் தரவுகள்:
சுளுந்தீ நூலாசிரியர்
இரா. முத்துநாகு,
ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.
நூல் சான்றுகள்:
1. Evolution of medical education in India.
2. Physicians of colonial India (1757–1900).
3. நவீன சித்த மருத்துவச் சிற்பிகள்.
4. காலனி ஆட்சியில் நம் வாழ்வும் நலவாழ்வும்.
5. Understanding of Human Genetic study and Variation.
6. Human Evolution.
7. வியக்க வைக்கும் தமிழர் அறிவு.
8. காலனி ஆட்சியில் வேளாண்குடிகள்.
9. Growth of medical in Raj.
10. Social economic history (1500 to 1960).
11. சுளுந்தீ - தமிழ்ப்புதினம்.
எழுத்தோவியம்
ஓவியர் நித்யன்.
சித்த மருத்துவம் தமிழர்களிடத்தில் வளர்ந்த மருத்துவ மரபு கொண்டது என்பதில் அய்யமில்லை ஆனால் அது பரவலாக்கப்பட்ட மக்களிடையே இல்லை என்பதே வரலாறு. உயர்குடி மக்களின் தேவையை மட்டுமே அது நிறைவு செய்தது நாட்டுப்புற மூலிகை வைத்தியமும், மரபு வழி மூதாதயர்களின் வைத்தியமும் மட்டுமே பெரும்பான்மை மக்களிடம் வழ்க்கத்தில் இருந்தது அந்தநேரத்தில் காலனியாட்சிகளின் காலத்தில் கொடிய நோய்கள் வந்த போது அலோபதி மருத்துவம் அனைத்து தரப்பு மக்களிடம் சென்ற வரலாற்று பின்புலத்தையும் இணைத்தே இதனை காண வேண்டும் .அலோபதி மருத்துவம் வணிக சந்தையின் கையடக்கத்தில் சிக்கி உள்ள சூழலில் சித்த போன்ற மாற்று மரபுகள் தன் வலிமை இழந்தே நிற்கின்றது என்பதே உண்மை. இதில் திராவிட ஒவ்வாமை தேவையில்லை திராவிடம் பண்பாட்டு சூழலில் ஆதிக்க மரபை எதிர்த்து தமிழர்களிடத்தில் எழுந்த வரலாற்றின் தேவையை உணர்த்திய இயக்கம் இதனை ஒவ்வாமையில் தமிழர் திராவிடம் என்று வேறுபடுத்தி காட்டுவது பிழை. சமூக பொருளாதார அழுத்தத்திலிருந்து அவ்வளவு எளிதான விடுதலை எந்த தேசிய இனமும் சந்திக்கமுடியாது இதில் பண்பாட்டு அசைவுகளை கணக்கில் எடுத்தே நாம் சிந்திக்க முடியும்
பதிலளிநீக்குவணக்கம் தோழர். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றியும் அன்பும். ஒரு தேசிய இனத்தின் அடையாளங்கள், குறிப்பாக, தமிழ்த் தேசிய இனத்தின் பல அடையாளங்கள் பல்வேறுவிதமான அதிகாரமயமாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதே வரலாறு. ஆரியமயமாக்கம், சமக்கிருதமயமாக்கம், சமணமயமாக்கம், பவுத்தமயமாக்கம் எனப் பல மயமாக்கங்கள் நிகழ்ந்துள்ளன. அந்தவகையில், திராவிட ஆட்சிக்காலங்களில் நடந்த அதிகாரமயமாக்கம் என்பதை திராவிட மயமாக்கம் என்கிற சொல்லால் குறிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தைத் திராவிட மருத்துவம் எனப் பரவலாக்கம் செய்ய முடியாமல் போனதற்கான சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டியல் பின்புலத்தில் ஆராய வேண்டும். மற்றபடி, திராவிட ஒவ்வாமை உணர்விலிருந்து எழுதப்படவில்லை. திராவிடம் எனும் கருத்தியல் தமிழ்த் தேசியம் நோக்கி நகர்வதே அதன் பரிணாம வளர்ச்சியாகும். இதைத் திராவிடம் உணரும் நிலையில்தான் தமிழ் ஒவ்வாமையிலிருந்தும் அது விடுபடும். விமர்சனம்-சுயவிமர்சனத்தோடு இதை அணுகினால் எந்த ஒவ்வாமையும் வர வாய்ப்பில்லை. சிறுவயது முதலே திராவிட இயக்கங்களின் கருத்தியலால் வளர்ந்து வந்தவன் நான். அதை விமர்சனம் சுயவிமர்சனமாக முன்வைத்திருக்கிறேன். இதைப் பரிசீலிக்க வேண்டிய நிலையில்தான் அனைவரும் இருக்கிறோம். இந்தக் கட்டுரையின் நோக்கம் குற்றம் சுமத்துவதும் அல்ல; பரிசீலிக்கக் கோருவதே ஆகும். மிக்க நன்றி தோழர் தங்கள் உரையாடலுக்கு.
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி தோழர்.
பதிலளிநீக்கு