புதன், 15 ஏப்ரல், 2020

சித்திரையும் ஆடியும் தையும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே! : மகாராசன்




தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை முதல் நாள் எனவும்,
தை முதல்நாள் எனவும்
இருவகைக் கதையாடல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில்,
சித்திரை முதல் நாளையும், தை முதல் நாளையும் கொண்டாடும் சடங்கு மரபு தமிழர் வழக்காற்றில் இன்றும் நிலவிக்கொண்டிருக்கிறது.

தமிழர் நாட்டுப்புற வழக்காற்றில் சித்திரை முதல் நாளையும் தை முதல் நாளையும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுவதைக் காட்டிலும், மாதப் பிறப்பு என்பதாகவே கொண்டாடும் மரபு இன்றளவிலும் இருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களின் முதல் நாள்களைக் கொண்டாடுகிற அல்லது உவப்பாய் வரவேற்கிற நாள்களாகக் கருதப்பட்டதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் சடங்கு மரபுகளும் வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் வளமைக் குறியீடுகளாகவே பயிலப்பட்டு வந்துள்ளன. உழவுத்தொழில் மரபின் அங்கமாய் எவையெல்லாம் இருந்ததோ, அவையெல்லாம் குறியீடுகளாகவும், போலச் செய்தலாகவும், வழிபடு வாழ்த்துச் சடங்குகளாகவும் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

'உழந்தும் உழவே தலை'யாக இருந்த அல்லது தலையாக இருக்கிற ஒரு சமூக அமைப்பில், உழவுத்தொழில் உற்பத்திச் செயல்பாடுகளின் பண்பாட்டுப் புலப்பாடுகளும் தலையாய இடத்தைப் பெற்றிருப்பதும் அல்லது பெறுவதும், பெருவாரி மக்களின் பண்பாட்டு நடத்தைகளில் அது செல்வாக்கு செலுத்துவதும் இயல்பு. தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் உழவுத்தொழில் மரபினர் மற்றும் உழவுத்தொழில் துணை மரபினர் பின்பற்றி வந்த புலப்பாடுகளே ஆகும். உழவுக்குடிகள் உள்ளிட்ட பதினெட்டு குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுதான் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பதும்.

அந்தவகையில், சித்திரை, ஆடி, தை போன்ற மாதங்கள் தமிழர்களின் பண்பாட்டுப் புழங்கலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதும் உழவுத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சடங்கு வடிவங்கள்தான்.

ஆடி மாதப் பெருக்கு என்பது, ஆற்றுநீர்ப் பெருக்கை பதினெண் குடிகளும் ஒன்றாகச் சேர்ந்து வரவேற்கும் நீரியல் சடங்கு ஆகும். உழவுக்கும் வேளாண்மைக்கும் பெரும்பங்காற்றும் நீர்த் தடங்களைத் தூர்வாரி ஆற்றுநீரை மேலாண்மை செய்யும் இன்னொரு சடங்கு வடிவம்தான் அது. அதனால்தான், ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் நிகழ்வு அந்த மாதத்தில் நடந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் சொல்லாடல், உழவுக்கு அடிப்படையான நீரை அடிப்படையாகக் கொண்டது.

இதேபோல, தை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. உழவர்களுக்கும் கால்நடைகள், சூரியன் போன்றவற்றுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடை தான். இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான்.

சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடை காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கி காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடை காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைகாலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது.

இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர்.
கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும் ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்துசேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி,வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். இத்தகைய கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நாளேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகையக் கோடை உழவுச் சடங்கை சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் பொன்னேர் பூட்டுதல், ஏர் மங்கலம் எனும் பெயர்களால் குறிக்கின்றன. ஆக, கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும் நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீக பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். ஆரிய வைதீக மரபு தன்வயப்படுத்திக் கொண்ட சித்திரை முதல்நாள் விழாவை அதனிடமிருந்து மீட்டெடுத்து கோடை உழவுத் திருநாளாக / நாளேர் பூட்டுத் திருநாளாக/பொன்னேர் பூட்டுத் திருநாளாக/ ஏர்பூட்டுத் திருநாளாக முன்னெடுத்து உழவுப்பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது தமிழரின் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

சித்திரையும் தையும் ஆடியும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே.
இதற்கும் ஆரிய வைதீக மரபுகளுக்கும் துளியும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஏர் மகாராசன்
14.04.2020.

5 கருத்துகள்:

  1. சித்திரை தமிழர்களின் புத்தாண்டு கிடையாது என்று அனைவரிடமும் எடுத்து சொல்ல வேண்டும் ஆனால் கிராமத்தில் உள்ள மக்கள் சித்திரை புத்தாண்டு என்பது நமக்கு இல்லை அது சமஸ்கிருத புத்தாண்டு
    என்று நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மக்கள் பண்பாட்டு வழக்காறுகளை ஆரிய மரபுகளிடமிருந்து மீட்பது அவசியம். மிக்க நன்றி தோழர் தங்கள் பின்னூட்டத்திற்கு

      நீக்கு
  2. மிகச் சரியான பதிவு தோழர்.. ஆரிய / திருட்டு திராவிட திருட்டு புரட்சியாளர்கள் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதற்கு நமக்குள் மணக் குழப்பங்களை ஏற்படுத்தும் பொருட்டு சித்திரை என்றும் தை என்றும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளனர்..ஆம் சித்திரை தை ஆடி என்பதல்லாம் தமிழர்களின் நிலம்சார்ந்த பண்பாட்டு விழும்பியங்களாக நம் முன்னோகள் காரணகாரியங்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் எனவே சித்திரை தைஆடி என்னும் நாட்களை திருநாட்களாக போற்றிக்கொண்டாடுவது ஒவ்வொரு தமிழனின் கடமையே.. நிலம் சார்ந்த மரபுகளை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள் தோழர் மனம் நிறைத வாழ்த்துகள்...மிகச் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு,

      நீக்கு
  3. பெயரில்லா14/4/23, AM 2:40

    சித்திரையும், தை மாதமும் உழவர்களின் பணிச் சார்ந்த மாதமாகத்தான் பயணிக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு