திங்கள், 6 ஏப்ரல், 2020

பகடி மனப்போக்கும் மடைமாற்ற நுண் அரசியலும்: மகாராசன்.




பெரும்பாலான பெருந்திரள் மக்கள் கூட்டம், அதிகாரத்தின் கோரப்பசிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி அரசு எனப் படர்ந்திருக்கும் அதிகாரத்தின் துணையோடு மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இன்னும் பலவற்றின் பெயராலும் நடக்கிற அத்தனை நடவடிக்கையாலும் உடலும் உள்ளமும் நொந்துபோய் வெந்து சாகிறார்கள்.

புரட்சியும் போராட்டமும் கசிந்து பெருகாதா? என ஏங்கிக் கிடக்கிறார்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கூட்டத்தினர். புரட்சிகர உணர்வும், அதிகாரத்திற்கு எதிரான கோபமும், போராட்டங்களோடு பங்கேற்பும் என்பதெல்லாம் அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டியிருக்கும் இயல்பு.

அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் தேவை. புரட்சிக்கும் போராட்டத்திற்குமான அரசியல் சூழலை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். இதைச் செய்யவேண்டிய மக்கள் திரள் இயக்கங்களின் வாக்கு அரசியல் பங்கேற்பாலும், அதைச் சார்ந்த தொழிற்சங்கங்களின் பலவீனங்களாலும் புரட்சிகர அரசியல் சூழல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. புரட்சிகர இயக்கங்களின் போதாமைகளும் பலவீனங்களும் கூட இதற்குக் காரணம்.

தமிழகச் சூழலில், ஆரியத்துக்கும் தமிழுக்குமான நெடும்பகையும் முரணும் எல்லாத் தளங்களிலும் பரவிக் கிடக்கின்றன. மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், பண்பாட்டியல், அறிவியல், கலைகள், அறிவு, நடத்தை, வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், வாழ்வியல், தொழில், சமூக உறவுகள், கல்வி என அனைத்திலும் ஆரியத்திற்கு எதிரான அடையாளமும் மரபும் ஏகத்துக்கும் இருக்கின்றன.

இவற்றின் ஒவ்வொரு இண்டு இனுக்கிலும் காணப்படுகிற ஆரியத்திற்கு எதிரான அடையாளங்களை இனம் காண்பதை விட்டுவிட்டு, அதன் வேர்களையும் வரலாற்றையும் மீட்டெடுப்பதை விட்டுவிட்டு, ஆரியத்திற்கு எதிரான தமிழர் மரபுகளை முன்னெடுப்பதை விட்டுவிட்டு, வெறுமனே ஆரியத்தைப் பகடி செய்யும் கேளிக்கை மனிதர்களாக மட்டுமே இருக்கும் சூழலைப் புறந்தள்ள வேண்டியதைக் குறித்துத் தமிழர்கள் பரிசீலிக்கவேண்டியது அவசியம் ஆகும்.

அரசதிகாரத்தின் அறிவிப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், அட்டூழியங்கள், அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள், பயங்கரவாதப் போக்குகள், மத அடையாளங்கள், சாதியக்கூறுகள், அரசதிகாரத்தின் முகங்கள், அதன் அடிவருடிகள் பற்றியெல்லாம் வெறுமனே கேலியும் கிண்டலுமான பகடி செய்வதால் மட்டுமே அவற்றை வீழ்த்திவிட முடியும்; அவை வீழ்ந்திடும் என நினைப்பதும், அத்தகைய பகடிகளே அரசதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாகப் பாவிப்பதும் இன்னொரு வகையில் மூடநம்பிக்கைதான்.

அண்டா திருடர்கள், பிரியாணித் திருடர்கள், டவுசர் சங்கிகள் எனப் பகடி செய்துகொண்டிருந்த காலத்தில்தான், யாரைப் பகடி செய்தார்களோ, அவர்களேதான் அரசதிகாரத்தை இன்னொருமுறையும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

கொரானா தீநுண்மி நோய்த்தொற்று பரவலாகப் பரவி வரும் சூழலில், அரசதிகாரம் முன்மொழிந்த ஊரடங்கு, தனித்திருத்தல், கைதட்டுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றையெல்லாம் பகடி செய்யும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் பரவி வருகின்றன.

வெறுமனே பகடி செய்துவிட்டுக் கடந்துபோய் விடுவதே அரசதிகாரத்தினை எதிர்ப்பதாகக் கொள்ள முடியாது. அரசதிகாரத்தின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிரான கோப உணர்வுகளுக்குப் பதிலாக, பகடி செய்து மகிழும் இந்த மனப்போக்கையே அரசதிகாரமும் விரும்புகின்றது.

கோப உணர்வும் புரட்சிகர உணர்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவேதான் பகடியான-கேளிக்கையான பதிவுகளை அரசதிகாரத்தின் ஊடக நிறுவனங்களே உருவாக்கிக் கொடுக்கின்றன. இந்தப் பகடிச் செய்திகளை, காட்சிகளை, பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலமே அரசதிகாரத்தை எதிர்த்து நின்றவர்கள் என்கிற தகுதிப்பாட்டை அடைந்துவிடச் செய்து விடுகிறார்கள்.

அதிகாரத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தி, அதன் அட்டூழியங்களுக்கு எதிரான மக்களின் எழுச்சியை உருவாக்கும் கலைப் படைப்புகளையும், காட்சிப் படங்களையும், கட்டுரைகளையும் அதிகமாக உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உழைக்கும் மக்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. அந்த வேலைகளையெல்லாம் நாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மறந்துவிட்டு, அரசதிகாரத்தைப் பகடி செய்வதில் மட்டுமே நிறைவடையும் மனப்போக்கானது, அரசதிகாரத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, நம்மை மடைமாற்றம் செய்து, அரசதிகாரத்திற்குத் துணையாகவே இருக்கும் என்பதை உணரும் காலமும் இதுதான்.

ஆயினும், மிகச் சில ஓவியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், தோழர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களது படைப்புகள், பதிவுகளின் வாயிலாக அரசதிகாரத்தின் மீதான எதிர்ப்பைப் புலப்படுத்தியும் வருகின்றனர். இதுவே இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.

இறுதியாக ஒன்று,
அதிகாரத்தின் நிழலில் அண்டி வாழப் பழகிவிட்ட ஒரு சமூகம்தான், பகடியால் மட்டுமே தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கும்.

ஏர் மகாராசன்
06.04.2020

13 கருத்துகள்:

  1. மிக சரியான பார்வை
    தொழிற்சங்கங்கள் மட்டும் அல்ல தனிமனிதர்கள் சிலரும் தன் சார்ந்த குழுவினரை இதுபோன்ற பகடிதான் நம்மை மற்றவர்கள் முன் போராளிகளாக காட்டும் என சொல்லி சொல்லி அவர்களை மடைமாற்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மடைமாற்றத்திற்கு நம்மவர்கள் பலியாகிக் கிடக்கிறார்கள். பின்னூட்டத்திற்கு நன்றி தோழர்

      நீக்கு
  2. பகடி அரசியல் ஆயதமகாது அது போராட்ட சிந்தனையின் கூர் மழுங்கச் செய்யும் என்பதனை தமிழ்ச் சமூகம் அறிந்திட உணர்த்தும் கட்டுரை அய்யா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்ப்பின் ஒருவகை வடிவம் பகடிதான் என்றாலும், பகடி என்கிற ஒன்றே எதிர்ப்பு என்றாகிவிடாது என்பதை நம்மவர்கள் உணரவேண்டும். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. உண்மையில் பகடி எனப்படுவது வலியில்லாமல் நெஞ்சுடைக்கும் ஒரு உளவியல் தந்திரம்.
    ஆளும் வர்க்கம் ஒரு சமூகத்தின் திறனை வெள்ளோட்டம் பார்க்கும் முறையிலே பாதி வெற்றியை அடைந்துவிடும்.
    தெளிவான பதிவு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் பகடி எனப்படுவது வலியில்லாமல் நெஞ்சுடைக்கும் ஒரு உளவியல் தந்திரம்.
    ஆளும் வர்க்கம் ஒரு சமூகத்தின் திறனை வெள்ளோட்டம் பார்க்கும் முறையிலே பாதி வெற்றியை அடைந்துவிடும்.
    தெளிவான பதிவு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நம்மவர்கள் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் கவலை அளிக்கிறது. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. Useless.தேவையற்ற பதிவு.இந்த மேடை தமிழரின் வணிக ஊக்குவிப்புக்காக ஏற்படுத்தப்பட்டது. அதை அரசியலிட்டு அழிக்காதீர்.

    பதிலளிநீக்கு
  6. எதிர்ப்பை படியாக வெளிப்படுத்துவது அதை ஏற்பவர்களும் பகடி ஆகவே ஏற்கின்றனர் என்ற ஐயமும் எழத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
  7. உருப்படியான செயல்பாடுகளே விரும்பும் மாற்றத்தைத் தரும். பகடி செய்து கடந்து போவது தனக்குத் தானே தற்காலிக இன்பம் அடைந்து கொள்வதாகும் என் அழகாக விளக்கியுள்ளீர்கள். அதிகாரத்தின் காலில் அண்டிப் பழகிவிட்ட சமூகத்துக்கும் விடுதலை உணர்வு வருமல்லவா? தனி மனித உணர்வைக் கடந்து குடும்பச் சூழ்நிலைக் கைதியானவர்களுக்கு பகடி அல்லது ஏகடியம் பேசுவதோ எழுதுவது மட்டுமே மன இறுக்கத்தைக் குறைக்கிறது தோழர்
    நல்ல சூடு கொடுத்துள்ளீர்கள் வெட்கமடைகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கான செயல்திட்ட வேலைகளை வகுக்காமல் வெறும் பகடியம் செய்வதையே வேலையாக்கி வைத்துள்ள அரசதிகாரத்தின் தந்திரங்கள்தான் இவை. பகடி செய்வதை அது அனுமதிக்கிறது. பகடியைத் தவிர்த்து வேறுவகையில் எதுவும் செய்யக்கூடாது என்றே அந்த சுதந்திரத்தை நமக்கு வழங்கி இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல்தான் நமது சமூகம் பகடியில் குறியாய் இருக்கிறது. நன்றி தோழர் தங்கள் பின்னூட்டத்திற்கு.

      நீக்கு