வியாழன், 13 ஜனவரி, 2022

அறுவடையும் பொங்கல் பண்பாட்டுத் தளுகையும் - மகாராசன்


அறுவடைக் காலத்தின் மகிழ்வைக் குறித்துப் பழந்தமிழ் இலக்கியங்கள் நிரம்பவே பதிவு செய்திருக்கின்றன. உழவுத் தொழிலின் நிறைவாய் அமையும் அறுவடை நிகழ்வில் உழவர் யாவரும் மனமகிழ்ச்சி கொள்வார்கள். உழவர்கள் மகிழ்ச்சி அடையும் நிலத்தை ஆளும் அரசரே நல்லரசின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கிறார்.

அவ்வகையில், அறுவடை நாளில் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டையுடையவன் எங்கள் அரசன் என்று, பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து பாடுவதைப் புறநானூறு பதிவு செய்யும்போது, 

நும்கோ யார் என வினவின், எம்கோ 

களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் 

யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,

ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,

வைகு தொழில் மடியும் மடியா விழவின் 

யாணர் நன்னாட்டுள்ளும், பாணர் 

பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகி 

கோழியோனே கொப்பெருஞ் சோழன் 

என்கிறது. 

உழவர்களைக் களமர்கள் எனக் குறிக்கும் இப்பாடல் குறித்து நா.வானமாமலை கூறும்போது, ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது; என்றும் நிறைய வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாக வெளியிடுகிறார். உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்களை மகிழ்விக்கிறார்கள். 

இந்நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினந்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும் என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்தரிக்கிறது என்கிறார்.

அதேபோல, அறுவடைக்கு வேண்டிய நிலமும், மேழியும், எருதுகளும், உழவர்களும்தான் வேளாண் தொழிலுக்கு வேண்டியவை. இவற்றால்தான் அறுவடை நடைபெற முடியும். இவற்றை ஒருங்கே கொண்டிருந்தவர்களே புகழப்பட்டிருக்கிறார்கள். 

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் எனும் புலவர், சிறுகுடிக் கிழான் பண்ணனைப் புகழ்ந்து பாடும்பொழுது, விளைநிலங்களை அளிக்கும் எம் பண்ணனைக் குறித்துக் கேட்டீர்கள். அவனுடைய உழவு எருதுகளையும் உயர்வினையும் பொருளாகக் கொண்டு, கிணை கொட்டி நாடோறும் யான் பாடுவேன். பாடேனாயின், மணி விளங்கும் முற்றத்துத் தென்னவன் வழியினன், முரசு முழங்கும் தானையன் ஆகிய பெருமைமிக்க வழுதியும், என் சுற்றத்தைப் புரந்து அருள் செய்யாது போவானாகுக என்கிறார். இதனை,

வெல்லும் வாய்மொழிப் புல்லுடைவி

பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ; அவன்

வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா, 

நாடொறும் பாடேன் ஆயின், ஆனா 

மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன், 

பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை

அண்ணல் யானை வழுதி,

கண்மாறிலியர்என் பெருங்கிளைப் புரவே!

என, உழவுத் தொழில் மரபினர்களையும், அவர் வழிமரபினரான பாண்டியர்களையும் மேற்காணும் புறப்பாடல் பதிவு செய்திருக்கிறது. 

இந்நிலையில், அறுவடைக் காலத்தில் உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையிடும் சடங்கானது, மாட்டுப் பொங்கலன்றுதான் நிகழ்த்தப்படுகிறது. ஏரையும் உழவையும், நிலத்தையும் மாடுகளையும், பயிர்களையும் அறுவடையையும், உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில்தான், மாட்டுப் பொங்கல் பண்பாட்டுத் தளுகையை வளப்படுத்தியிருக்கிறார்கள். மாட்டுப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சியாக மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகளையும் நிகழ்த்துவது மரபாக இருந்திருக்கிறது. 

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல். அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும். 

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும். 

உழவுத் தொழில் புரியும் அவரவர் வீடுகளில் வளர்க்கப்படும் அனைத்து மாடுகளுக்கும் தளுகைப் பொங்கலும் வாழைப் பழங்களும் ஊட்டி விட்டதற்குப் பிறகு, அம்மாடுகளின் மீது கண்ணேறு கழிக்கும் நீர்த் தெளிப்புச் சடங்கு நடைபெறும். பொங்கல் வைக்கும்போது பானையில் பொங்கி வழியும் பால் நீரை எடுத்து வைத்திருந்து, கும்பாவில் ஊற்றிய அப்பொங்கல் நீரை, வாழை இலையால் மாடுகளின் மீது அள்ளித் தெளித்தபடியே,

பொங்கலோ பொங்கல்!

பால் பானைப் பொங்கல்!

பட்டி பல்க! பார்த்த கண்ணு வெடிக்க!

பிணியும் நோவும் தெருவோடு போக!

எனப் பாடி, கண்ணேறு கழிக்கும் நீர்த் தெளிப்புச் சடங்கை நிகழ்த்துவர் உழவு மரபினர்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது. 

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனனப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்றுகூடி நடத்தப்பட்டிருக்கிறது. 

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும், உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர். 

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்ளும் இச்சடங்கு, வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப்பட்டிருக்கிறது. சடங்கியல் சார்ந்த இந்த நேர்த்திக்கடன், வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது. 

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர். 

மாட்டுப் பொங்கல் தளுகையை மாடுகளுக்கு ஊட்டிவிட்டும், நீர்த் தெளிப்புச் சடங்கு முடிந்ததன் பிறகும், அலங்கரிக்கப்பட்ட அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொள்ளும் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு, தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனேதான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை, ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர். 

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன. 

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும்தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும். 

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் - உழவுத் தொழில் மரபினரின்  நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அவ்வகையில், மாட்டுப் பொங்கல் தளுகையும், பொங்கல் சார்ந்த நடத்தைகளும் வேளாண்மைத் தொழிலுக்கான வளமைச் சடங்காகவே பயிலப்பட்டு வழமையாக்கப்பட்டு வந்திருக்கின்றன. 

காளை மாடுகள் தழுவும் சடங்கியல் நிகழ்த்தல்களைக் குறித்துப் பள்ளு நூல்கள் நிறையவே பதிவு செய்திருக்கின்றன. 

மள்ளர் கட்டிய வெள்ளைக் காளையைப் 

பேய்த்தண்ணீர் வெறியாலே 

கொம்பை உயர்த்திப் பிடிப்பாராம், 

குருமலைதனில் வாழும் கெச்சிலாக்

குடும்பன் கட்டிய இடும்புக் காளையை

மருவில்லாத தென்னிசைக் குடும்பன் வளைத்துப் பிடிக்கவே

என, உழவுத் தொழில் மரபினரின் ஏறு தழுவல் சடங்கை எட்டையபுரப் பள்ளு சுட்டியிருக்கிறது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக