நீரின்றி அமையாது உலகு என்பார் திருவள்ளுவர். மாமழைப்போற்றுதும்! மாமழைபோற்றுதும்! திங்கள் போற்றுதும்! திங்கள் போற்றுதும்! என்கிறது சிலப்பதிகாரம். அவ்வகையில், திங்கள் எனும் 'நிலா' வணக்கமும், மழை வழிபாடும்
தமிழர்களிடையே பண்டையக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதை நாம் அறியமுடியும்.
இறை வணக்கத்திற்கு அடுத்து 'வான் சிறப்பு' அதிகாரத்தை வைத்து நீரின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவர் வள்ளுவர். 'நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' என்கிறார் வள்ளுவர். இந்தக் குறளில் திருவள்ளுவர் 'ஒழுக்கு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மழை இல்லையென்றால் நாட்டில் ஒழுக்கம் கெட்டு விடும் என்கிறார். மேலும், 'நீரின்றி அமையாது உலகு' எனும் வரியில் 'அமைத்தல்' என்பது செயற்கையானது; 'அமைந்திருத்தல்' தான் இயற்கையானது! இந்த பூமி நீரைக்கொண்டே விரிவடைகிறது என்றும் எழுதுகிறார் வள்ளுவர். அதனால்தான், விரிநீர் வியன் உலகு! என்று எழுதினார் வள்ளுவர்.
"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று" என்று, சாவா மருந்து எனக் கூறப்படும் அமிர்தத்திற்கு நிகரானது 'மழை!' என்றும் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
உழவர்களின் உழைப்பைப் பயனுள்ளதாக்குவது மழையே!
அந்த மழை வேண்டி உழவர்களால் செய்யப்படும் சடங்கே மழைச்சடங்காகும்.
மழைச் சடங்கு, வேளாண் மக்களால் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளில் முதன்மையானது.
இந்த மழைச்சடங்கு சமூக நன்மை கருதிச் செய்யப்படும் கூட்டுச்சடங்கே!
மழைச்சடங்கும், முளைப்பாரிச் சடங்கும் தானியங்களின் செழிப்பையும், மனித வாழ்வின் செழிப்பையும் தூண்டச் செய்யும் வளமைச் சடங்குகளே!
உழவர்கள் மழை வளமில்லாத நிலையில், தங்களது துன்பத்தையெல்லாம் தீர்க்கவேண்டும் என்று இரங்கி மழைத்தெய்வத்தை வேண்டுகிறார்கள் என்பதை,
ஏர் பிடிக்குந் தம்பியெல்லாம் பின்னப்பட்டு நிக்கிறாங்க!அந்தக்குறை கேட்டு வந்திறங்கு இந்திர தேவா!
மேழிபிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ்சோந்து நிக்கிறாங்க!
அந்தக் குறை கேட்டு வந்திறங்கு
இந்திர தேவா !
பூமி செழிப்பதெப்போ?
எங்க புள்ளைப் பஞ்சம் தீர்ப்பதெப்போ?
ஓடி வெதச்ச கம்பு
ஐயோ இந்திரதேவா!
ஊடு வந்து சேரலையே!
பாடி வெதச்ச கம்பு ஐயோ இந்திரதேவா!
பானை வந்து சேரலையே! என்று பாடுகிறார்கள்.
உழவர்களின் வேண்டுதலுக்கிணங்க இந்திரன் அருள் கிடைக்கப்பெற்று 'ஈசானிமூலை' கருத்து, மழை கொட்டுகிறது. அப்போது பாடும் பாடலாக,
"நாடு செழிச்சிருச்சு
நல்ல மழை பெஞ்சிருச்சு!
ஊரு செழிச்சிருச்சு
ஒத்த மழை பெஞ்சிருச்சு!
கொல்ல செழிச்சிருச்சு
கொள்ள மழை பெஞ்சிருச்சு!
கோடு திரிஞ்சிருச்சு
கோடைமழை பெஞ்சிருச்சு!
காலம் செழிச்சிருச்சு
காரிமழை பெஞ்சிருச்சு" என்று உழவர்கள் மழை பெய்த மகிழ்ச்சிப்பெருக்கில் பாடுகிறார்கள். ஆக, நீரின்றி அமையாது உழவு!
நீரே கடவுள்! தேவேந்திரனே நீரே
என் கடவுள்! என்று மழைத்தெய்வமான இந்திரனை வழிபடு தெய்வமாகக் கொண்ட மருதநில மள்ளர்கள் தமது வேந்தனாகிய இந்திரனுக்கு
இந்திரவிழாவின்போது மழைச்சடங்கை நிகழ்த்தி
"மள்ளர் எல்லாம் கூடி மழைக்குறி பார்த்துக் காத்திருக்கிறார்கள்". அப்போது காவுக் இறைவனாகும் இந்திரன், கற்பகப்பூங்காவின் தலைவனாகிய இந்திரனின் ஏவற்கட்டளையை ஏற்று மழை பொழிந்தது என்பதை,
காவுக்கு இறைவனாகும் இந்திரன்
எவற் பணி கொண்டெழுந்த கார் என்று பதிவுசெய்கிறது முக்கூடற்பள்ளு. ஆக, மருதநில வேளாண் மக்களால் மழைக்கடவுளாக வணங்கப்படுகிறவன் இந்திரனே!வேளாண் மரபினரால் செல்வத் திருமகனாகச் சங்க காலத்திலிருந்தே
கொண்டாடப்பட்டவன்
இந்திரன். இந்திரனுக்கு வச்சிரமே படைக்கலம்! ஆதலால், அவனை
"வச்சிரத்தடக்கை நெடியுயோன்" என்கிறது புறநானுறு.
இந்திரனும் முருகனும் 'கோட்டங்களில்தான்' வாழ்ந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம்!
கோயிலுக்கு முந்தைய வடிவம் கோட்டமல்லவா?! ஆதலால்தான், அவர்கள் பக்தி இயக்கத்திற்கும் முந்தியவர்கள்; மூத்த தொல்குடிமக்களின் தொன்ம வழிபாட்டுச்சடங்கில் நிலைகொண்டவர்கள்.
முருகனும், இந்திரனைப்போலவே மழைக்கடவுளாக, வளமை வழிபாட்டுக்குரியவனாகவே வணங்கப்பட்டிருக்கிறான்.
இந்திரனுக்கு மழைச்சடங்கு, என்றால் முருகனுக்கு மழைவேண்டி "வயந்தன் கம்பாட்டம்!" முருகனுக்குக் காவடிஆட்டம் என்றால்?! இந்திரனுக்கு இந்திராணியோடு வயலில் ஆடிய கடையஆட்டம்!
இந்திரனுக்கு இந்திர விழா! என்றால், முருகனுக்குக் கார்த்திகைத் தீபத் திருநாள்!
கார்த்திகை விழா! என்பது ஒரு பண்பாட்டுவிழா! பெய்த மழை போதும் என்று நன்றிகூறி மழையை வழியனுப்ப ஆகாயத்தைநோக்கி நெருப்பைக்காட்டுகிற இந்த விழாவே தமிழர்கள் கொண்டாடும்
திருக்கார்த்திகை எனும்
தீபத் திருநாளாகும்.
மழையை வழியனுப்பும் விழாவைப்போல மழையை வரவேற்கும் ஒருவிழாதான் ஆடி-18;
ஆடிமாதம் 18ஆம் நாள். ஆடிமாதம் நல்ல மழைபெய்து ஆற்றில் வரும் புதுப்புனல் வருகையை வரவேற்றுக் கொண்டாடும் விழாதான் ஆடி 18.
இது மருதநில வேளாண்குடிகளும் அவர்களது உழவோடு தொடர்புடையை 18 தொழிற் குடிகளும் இணைந்து கொண்டாடும் விழாவாகும்.
மழையை வரவேற்கும் விழா! மழையை வழியனுப்பும் விழாவைப்போல, மழைத்தெய்வமான வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றிகூறும் விழா வேண்டுமல்லவா?!அதுதான் இந்திரவிழா!
"தீவகசாந்தி செய்தரு நன்னாள் " என்று பண்டையக் காலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்தில் நடடைபெற்றுவந்த இந்திரவிழாவைப் பற்றி மணிமேகலை கூறுகிறது.
அந்த விழாவின்போது, இந்திரவிழாவிற்கு வரும் மகளிர் எல்லாம் பல்வேறு வகையான பூக்களை, மலர்களைச் சூடியிருந்தனர் என்கிறது ஐங்குறுநூறு!
"இந்திர விழவின் பூவின் அன்ன
புன்தலைப் பேடை" என்கிறது ஐங்குறுநூறு!
இந்திரன் அறத்தின் தெய்வம்/ஆற்றலின் குறியீடு/ வளமைக்கான தெய்வம்/ பஞ்சபூதங்களின் தலைவன்/ முதல் வேந்தன்/ மருதநில மள்ளர்களின் குல முதல்வன்/அதனால்தான், இந்திரனைப் புலியெனக் கொடியில் வைத்தான் சோழன் என்கிறது இந்நூல்.
உழத்தியர் வணங்கும் முதல்நாற்று முடியை இந்திரமுடி என வழங்கும் உழவர் வழக்காற்று மரபு!
தீம்புனல் உலகின் வேந்தனான பாண்டியன் முடிக்கு(கிரீடம்)ம் 'இந்திர முடி 'என்றே பெயர்.
இந்திரன் உயர்ந்தவன்/ஆற்றலில் சிறந்தவன். ஆகையால்தான் குஞ்சர மல்லன் தென்குடும்பன் இராச இராச சோழன் தன்னை "இந்திர சமானன்" என்று கூறி இந்திரனோடு தம்மை ஒப்புமைக் காட்டி சிலிர்த்துக்கொண்டான்....
'மங்கலம்' என்ற சொல்லுக்கும் இந்திரனுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆம், அவன் மங்கலன்தான்.
இந்திரனை அமங்கலனாக்க அகலிகைக் கதையைப் புனைந்து வீழ்த்த நினைத்த ஆரிய வைதீகச் சூழ்ச்சியைக் கட்டுடைத்து போடுகிறது வேளாண் மரபின் தமிழ்அடையாளம் எனும் இந்நூல்!
வேளாண் மக்களின் வளமைச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டதாகும். மழைத்தெய்வம் இந்திரனே, தேவேந்திரனே! இந்திர குலத்தார் எனும் உழவுத்தொழில் மரபினரே இந்தச் சடங்கை முன்னெடுக்கிறார்கள். மழை இல்லாத காலங்களில் மழைவேண்டி
மழைச் சோறு சடங்கு நிகழ்த்தப்படுகிறது.
மழைச்சோறு எடுக்கும் போது எல்லா வீடுகளிலும் கூட மறக்காமல் மழைச்சோறு சடங்கு நடத்துவதற்காக சோறு வாங்குகிறார்கள் பகை வீடுகளிலும்கூட... இந்நிகழ்வின் மூலம் பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இதில் மங்குகிறது என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் ஏர் மகாராசன்.
பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான் நிலத்தின் மழை ஏக்கத்தை, நிலத்தின் மழைத் தவிப்பை, நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள் என்றும், இந்திர வழிபாட்டின் நீட்சியாகத்தான் பல்வேறு வளமைச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அவை பெண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன என்றும், சோறு வாங்கும்போது கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பாடல் பாடுவது எனப் பெண்களே இந்தச் சடங்கில் மையம் கொள்கிறார்கள் என்கிறார் மகாராசன்
இந்திரனை வைதீக அடையாளமாக நுழைத்தது முதல் சித்திரை முதல் நாளை ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாகக் கட்டமைத்தது வரை தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வைதீகமானது தன்வயப்படுத்திக் கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பல காலமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழர் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் வேளாண்மையை இழிவான தொழில்; பாவப்பட்ட தொழில் என்கிறது ஆரியம்.
உழவுத்தொழிலை இழிவானது என்கிறது மனு சாஸ்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவமாகக் கருதிய வைதீக மரபு, அதனுடைய சமஸ்கிருத மொழியில் ஏர் எனும் சொல்லே இல்லை என்றும், அதே வேளையில், வேளாண்மைத் தொழிலே தமிழர் வாழ்விலும் தலையாயத் தொழிலாக இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார் மகாராசன்.
உழவைப் பாவமாகக் கருதிய ஆரிய மரபின் சடங்குகள், மரபுகள் நெருப்போடும் வானத்தோடும் தொடர்புடையவை. அதற்கு மாறாக, வேளாண் பண்பாட்டு மரபு என்பது மண் சார்ந்தது. அதன் சடங்குகள், மரபுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆரிய வைதீகத்துக்கு எதிரானது.
மழைச்சோறு சடங்கு எனும் வேளாண் பண்பாட்டுச் சடங்கானது வைதீக மரபுக்கு எதிரானது!
தமிழர் பண்பாட்டு மரபுச் சடங்குகளில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளும் நீரில்லாமல் அமைவது இல்லை. ஆகையால், வேளாண் பண்பாட்டு மரபு என்பது, வேளாண் பண்பாடு என்பது இயல்பாகவே நீர் சார்ந்தும் மண் சார்ந்தும் இயங்கக் கூடியது என்கிறார் மகாராசன்.
ஆகவே, ஆரிய வைதீகச் சடங்கு உடன் கூடிய ஆரிய மரபு இந்திரனுக்கும்,
இந்திர அடையாளத்துடன் கூடிய மருதநில உழவர்கள் முன்னெடுக்கும் வேளாண்மைச் சடங்குகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இயல்பிலேயே வேளாண் பண்பாடும், அவர்தம் வழிபாட்டு மரபும், ஆரியர் வழிபாட்டு மரபும் வேறுவேறாகும். இதையேதான் அம்பேத்கரும் ஆரிய வைதீக வேதங்களில் இந்திரன் பாதியிலேயே வந்து பாதியிலேயே காணாமல் போய்விடுகிறான் என்றும், ஆரிய இந்திரன் என்பதும் புனைவே என்கிறார்.
இயற்கை உற்பத்தியும், மானிட உற்பத்தியும் செழிப்பை நோக்கியே நகருகின்றன. பொங்கல், பூ, சந்தனம், குங்குமம், தேங்காய், வாழை இவையெல்லாம் செழிப்பின் அடையாளங்கள்தான். பெரிய வயிறும், நிறைந்த மார்பும் செழிப்பின் அடையாளம்தான். உரத்தின் கடவுளான ஜேஷ்டாதேவி என்கிற 'தவ்வை' வளமையைக் குறிக்கிற விதமாகவே பெரிய, பருத்த மார்புகளோடு காணப்படுகிறாள்.
அதேபோலத்தான், இந்திரனும் முருகனும் தாந்திரீக மரபின் வளமை வழிபாட்டின் நீட்சியேயாகும்.
முருகன் 'செய்யோன்' என்று அழைக்கப்பட்டான்! இந்திரன் 'செங்கண்மால்' என்று அழைக்கப்பட்டான். இரண்டுமே செம்மையோடு, செந்நிறத்தோடு தொடர்புடைய பெயர்களே ஆகும்.
செம்மை என்பது மகப்பேறு காலக் குருதி! பூப்பு எய்தல் குறியீடுதான் செம்மை என்பதாகும்.
பரிபாடலில் முருகனை வர்ணிக்கும்போது, முருகன் உடல் எல்லாம் குங்குமம் பூசியுள்ளார்கள்.
அவனது யானைக்கும் குங்குமம் இடப்பட்டது. தந்தத்தில் குங்குமம், பிடரியில் குங்குமம், அவனது 'கொடி ' உட்பட எல்லாவற்றையுமே செம்மையாகக் காட்டப்படுகிறது.
செம்மை என்பது குருதியின் குறியீடே!
செய்யோனாகிய முருகனும் வளமைக்கான கடவுள்தான் என்பதையே இது உணர்த்துகிறது.
வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூலின் அட்டைப் படத்தில் நெல்நாற்றுமுடியில் குங்குமம் இடப்பட்ட காட்சியை நூல் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பதுகூட விதை, நாற்று என்பதெல்லாம் விளைச்சலை, போகத்தை, வளமையையே குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகத்தான்!
'நெல் நாற்றுமுடி'க்குக் குங்குமம் வைத்திருப்பதே தாந்திரீக மரபின் வளமைக்கான குறியீட்டு மரபு வடிவம்தான்.
மேலும், நாற்றுமுடி, 'இந்திரமுடி' என்றே இன்றுவரை அழைக்கப்படுகிறது. அதில் குங்குமம் இடுவது என்பது, வளைமை வழிபாட்டின் குறியீட்டு மரபின் நீட்சியேயாகும்!
விதையிடுதல், நாற்றுநடுதல்,
மழைபெய்வித்தல், மழைநீரைக்காத்தல், ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளைக்
காத்தல் என்ற வளமை சார்ந்த வழிபாட்டுக் குறியீட்டு மரபைச் சார்ந்தவர்களாகத்தான் ஐயனாரும்/இந்திரனும் காணப்படுகிறார்கள்.
இந்த போதிசத்துவர்களின் நினைவாகத்தான் போகிப்பண்டிகையன்று நெல்லோடு சிறுபூளைப் பூவையும் கலந்து தூவுதல், வேப்பிலை, மாவிலை, கூழைப்பூ எனும் கண்ணுப்பீளை தோரணங்களையெல்லாம் குளக்கரையிலும்,
வீட்டின் முகப்புகளிலும் வைத்துக்கட்டி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதுவே காப்புக்கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.
அறுவடைக்கான வேளாண் உற்பத்தியைப் போகம் எனும் சொல்லால் குறிப்பது வழக்கம். போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான் போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் 'போகி' என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார்கள் தமிழர்கள். அதாவது, போகத்தைத் தருவதால் 'போகி' என மழையைக் குறித்துள்ளார்கள். மேலும், வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாக இருப்பவை இந்த மழையும் மாடுகளும்தான்.
அந்தவகையில், உழவுத்தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.
மழையைத் தெய்வமெனத்
தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்கிறார்கள் உழவுமரபினர் என்றும், அத்தகைய மழைத்தெய்வமானது 'போகி' என்னும் இந்திரனே என்கிறது இந்நூல்!
இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிச்சொல்லே.
வருணன்(நீர்)/ வாயு(காற்று)/ சூரியன்/ அக்னி மற்றும் பிறதெய்வங்கள் /தேவர்கள் இந்திரனுக்குக் கீழே இருப்பவைகளாகும்.
இந்த ஐம்பூதங்களே பலபொருட்களின் உற்பத்திக்கு ஆதாரம்.
அந்த உற்பத்திக்குக் காரணமான இந்திரனே பஞ்சபூதங்களின் தலைவனுமாவான்.
வேளாண்மரபின் மழைநீர்த்தெய்வம் இந்திரனே! அவனே முதல்வேந்தன்/காப்புக்குரியவன். காப்புக்கட்டுதல் என்பது ஒரு வளமைச்சடங்காகும்.
பொங்கலுக்கு முதல்நாள் மழைத்தெய்வத்துக்கு நன்றி பாராட்டுதல் எனும் வளமைச்சடங்குதான் இந்தக் காப்புக் கட்டுதல்.
காப்புக்கட்டுதலில் வேப்பிலை /மாவிலை/ கண்ணுப்பூவிலை அல்லது கூழைப்பூ!/ஆவாரம் பூ போன்றவை வீட்டுமுகப்புகளிலும் குளக்கரையிலும் வைத்து காப்புக்கட்டப்படுகிறது. இந்தக் கண்ணுப்பூவிலையைப் பற்றி அதன் பல பெயர்களாக கண்ணிப்பிள்ளை/ கூழைப்பூ/கண்ணுப்பூளை/ கூரைப்பூ என்றெல்லாம் விவரிக்கும் இந்நூல், எதற்காக இந்திரனுக்கு இந்தப்பூவை வைத்துக் காப்புக் கட்டுகிறார்கள் என்றால்?! ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திர அடையாளத்தை-
போகியைக் குறிக்கவே பொங்கலுக்கு முதல்நாளான காப்புக்கட்டுதலில் இந்தப்பூவானது பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஏர் மகாராசன்.
மேலும், போகி என்பது நீருக்கு நன்றிசெலுத்தும் நாள்;
பொங்கல் என்பது 'போகி' யாகிய இந்திரனுக்கும் மாடுகளுக்கும் நன்றிசெலுத்தும் நாளே என்றும் குறிப்பிடுகிறார் மகாராசன்.
சிந்து என்பதற்கு நீர்ப்பொருள்தான்.
நீர் என்று சொல்லப்படவேண்டிய இடங்களிலெல்லாம் 'சிந்து' என்றே நூற்றுக்கணக்கான பாடல்களில் ரிக்வேதம் கூறுகிறது.
சிந்து+அரன்=சிந்திரன்.
சிந்திரன் என்பதே இந்திரன் என்று மருவியது. ஆகையால், இந்திரன் தமிழ்ச்சொல்லே என்று இந்திரனுக்குச் சொல்லாய்வுகளின் வழி விளக்கம்காட்டி சிலிர்க்க வைக்கிறது இந்நூல்....
நீர் திரவ வடிவம்!
திட வடிவம்! என இரு வடிவங்களையுடையது என்பது அறிவியல் மரபு!
அந்த மரபை உடைத்து?!
நீருக்கு ஒரே வடிவம்தான். அது, இந்திரன்தான் என்கிறது இந்நூல்!
நீரியல் சிந்தனையறிவு வேளாண் மக்களுக்கு மட்டுமல்ல, இந்நூலாசிரியக்கும் மிகஅதிகம் என்ற உணர்வு இந்நூலை வாசிக்கும்போதே நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
'நீரின்றி அமையாது உலகு'-என்பது
எவ்வளவு உண்மையோ?! அவ்வளவு உண்மை! இந்நூலின்றி இனி அமையாது வேளாண் மரபு!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! என்கிறான் பாரதி!
'வந்தனை' செய்திருக்கிறார்
ஏர் மகாராசன்.
வாழ்த்துக்கள்!
கட்டுரையாளர்:
கவிஞர்.மா.ஜெயச்சந்திரன்,
மாவட்டச் செயலாளர்,
நாம் தமிழர் கட்சி.
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு :
9080514506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக