ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பொங்கல் பண்டிகை: அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடு - மகாராசன்


மழை வளம் கருதிய நீர்ச் சடங்கு, நிலம் வளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி வளம் - உணவு வளம் கருதிய அறுவடைச் சடங்கும் வேளாண்மை உற்பத்திச் சமூகத்தின் நிகழ்த்து வடிவமாய் - பண்பாட்டு வழக்கமாய்த் தமிழ்ச் சமூகத்தில் பன்னெடும் காலமாய் இருந்து வருகின்றது. அவ்வகையில்,  தை என்னும் சுறவம் மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. 

சூரியன், மழை, கால்நடைகள் போன்றவற்றுக்கும், வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்ட - ஈடுபடுகிற உழவர்களுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடைதான். 

இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான். 

தமிழரின் பொங்கல் விழாவானது, அறுவடைத் துய்ப்பின் உணவுப் பண்பாடு சார்ந்த சடங்கியல் கூறுகளை மட்டும் கொண்டதல்ல. பொங்கல் சார்ந்த பண்பாட்டுப் புலப்பாட்டில் பல பொருண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும் சொல்லே பொங்கு என்பதாகும். பொங்குவதால் பொங்கல் என்றாயிருத்தல் வேண்டும். 

பொங்கல் என்பது வெறும் உணவுப் பொருள் சமைத்தலை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பொங்கல் எனும் சொல்லானது, பொங்குதல், கொதித்தல், கொந்தளித்தல், செழித்தல், சமைத்தல், உயருதல், மேலேருதல், வளர்தல், விளம்புதல், விளங்குதல், செறுக்குறுதல், மகிழ்தல் எனப் பல பொருண்மைகளைத் தருகின்ற குறியீட்டுச் சொல்லாகவும் இருக்கின்றது. உணவுப் பொருள், செல்வம், வளமை, செழிப்பு, உற்பத்தி சார்ந்த வளமையின் குறியீடாகவே பொங்கல் அமைந்திருக்கிறது. அவ்வகையில், பொங்கல் சார்ந்த பண்பாட்டுப் புலப்பாடுகளும் நடத்தைச் செயல்பாடுகளும் வளமை சார்ந்த சடங்கியல் பின்புலத்தையும் உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன எனலாம். 

தை மாத அறுவடைக் காலத்தில் வளமை சார்ந்த பண்பாட்டுப் புலப்பாடாக வழமையாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற பொங்கல் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகி இருக்கின்றன. குறுங்கோழியூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலானது, நெல் களத்தை வருணித்துக் கூறும்போது போர்க்களத்துக்கு உவமையாகச் சுட்டுகிறது. 

வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த 

வாய்க் கரும்பின் கொடிக் கூரை 

சாறு கொண்ட களம் போல, 

வேறு வேறு பொலிவு தோன்ற 

குற்றானா வுலக்கையால் 

கலிச் சும்மை வியாலங் கண் 

என, அறுவடை விழாவானது சாறு கொண்ட களம் போல இருப்பதாகப் புலவர் கூறுகிறார். 

சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச்செய்யுளிலிருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன என்பார் நா.வானமாமலை. இதுகுறித்து அவர் கூறும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது. நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. 

தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளைக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வள்ளைக் கூத்து; நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து. இக்கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது என்கிறார்.

சங்ககாலத் தமிழ் நூல்கள் பலவும் அறுவடைக் காலமான தை மாதத்தைச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்)

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறு)

தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறம்)

தைஇத் திங்கள் தண்கயம் போது (ஐங்குறு)

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலி)

எனப் பலவாறாகத் தையின் சிறப்பியல்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. 

இதன் பின்புலத்தில் இருப்பது, அறுவடைக் காலத்தின் பொங்கல் விழாவே ஆகும். 

இதனையே, சீவக சிந்தாமணி குறிப்பிடும்போது, 

மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்

என, பொங்கலினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் ஓர் அங்கமாக அமையும் அறுவடைச் செயல்பாடானது காலம், இடம், சூழல், தேவை, நோக்கம், நிலம், பயிர் போன்றவற்றால் வேறு வேறான வடிவங்களையும் துய்ப்புகளையும் பண்பாட்டு உள்ளீடுகளையும் கொண்டதாகும். 

தமிழர்களின் பண்பாட்டு மரபில் காணலாகும் பொங்கல் விழாவும் சடங்கியல் கூறுகள் நிறைந்த அறுவடைத் துய்ப்பின் புலப்பாடுதான். அதிலும் குறிப்பாக, நெல் அறுவடையை மய்யமிட்டுத்தான் பொங்கல் விழாச் சடங்குகள் அமைந்திருக்கின்றன. நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் அதேவேளையில், உழைப்பிற்கும் உற்பத்திக்கும் உதவி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிக்கடன் செலுத்தும் தளுகை விழாவாகவே கொண்டாடப்படுகிறது. 

மழைப் பொழிவைப் பொருத்தும், நீர் ஆதாரங்களைப் பொருத்தும்தான் வேளாண்மை உற்பத்தித் தொழில் நடபெற்று வந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற பழமொழிகள் ஒருபோக வேளாண்மைச் சாகுபடியைத்தான் குறிக்கின்றன. அதேவேளையில், ஆற்றுப்படுகையோரங்களில் இருபோகச் சாகுபடிகள் நடந்திருக்கின்றன. மழை நீரை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில், தேக்கி வைத்திருக்கும் மழை நீரைக்கொண்டு ஒருபோக வேளாண்மைதான் விளைவிக்க முடியும். 

ஒரு போகமாகவோ அல்லது இரு போகமாகவோ மேற்கொள்ளப்பட்டு வந்த வேளாண்மை உற்பத்தியானது, தை மாதத்தில்தான் ஏகபோகமாக அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் முடிவையும் - கூட்டுழைப்பின் மகிழ்வையும் - உணவுத் தேவையின் நிறைவையும் தருவது அறுவடைக் களமும் காலமும்தான். அதனால்தான், அறுவடைச் செயல்பாடுகளைச் செயல்பாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் உழவுத் தொழில் மரபினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். 

உழவுத் தொழில் மரபினரும், உழவுக்குத் துணை புரிந்த இதரத் தொழில் மரபினரும் ஒருங்கிணைந்த கூட்டுறவாலும் உழைப்பாலும்தான் வேளாண் உற்பத்தியின் அறுவடையைத் துய்க்க முடிந்திருக்கிறது - துய்க்கவும் முடிகிறது. வேளாண்மை உற்பத்தியில் பங்கெடுத்த அனைத்துவகைத் தொழில் மரபினர்கள் மட்டுமல்லாமல், உணவுப் பொருள் வேண்டி நின்ற - நிற்கும் யாவருமே வேளாண்மை அறுவடையை மகிழ்வுடனும் நிறைவுடனும் கொண்டாடி வந்திருக்கின்றனர்; கொண்டாடியும் வருகின்றனர்.

அறுவடைத் துய்ப்பின் பண்பாட்டுச் செயல்பாட்டில் இரண்டு வகையான புலப்பாட்டு நிலைகள் அமைந்திருக்கின்றன. முதலாவதாக, வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டில் நேரிடையாக உழைப்பைச் செலுத்தும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டுத் தளுகை சார்ந்தவை. இரண்டாவது, உழவுத் தொழிலுக்குப் பக்கத்துணையாய் இருந்த இதரத் தொழில் மரபினரும் மற்றவர்களும் புலப்படுத்தும் பண்பாட்டுத் தளுகை சார்ந்தவை. 

அறுவடைத் துய்ப்பும் மகிழ்வும் இரண்டு தரப்பினருக்கும் பொதுவான ஒன்று; புலப்பாட்டு நோக்கங்களும் ஒன்றுதான். தளுகையிடும் பண்பாட்டு நோக்கங்கள்தான் வேறு வேறாகும். மிக நுட்பமாகத்தான் இந்த வேறுபாடுகளை அறிய முடியும். போகிப் பொங்கல், மனைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனும் நால்வகைப் பொங்கல் சார்ந்த பண்பாட்டு நடத்தைகளும் தளுகைச் செயல்பாடுகளும் புலப்படுத்தப்படும் பாங்கும் நோக்கமும் வேறு வேறானவை.

உழவுத் தொழிலில் நேரிடையாகப் பங்கேற்காத இதரத் தொழில் மரபினரும் மற்ற தரப்பினரும் பழையன கழிதலாகவும் புதியன புகுதலாகவும் போகி நாளைக் கருதுவர். மனைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கலிட்டுப் பண்பாட்டுத் தளுகையை அவர்கள் படைப்பர். மேலும், காணும் பொங்கலன்று உறவுகள் சூழ விருந்துண்டு மகிழ்ந்திருப்பர். இந்தத் தரப்பினரைப் பொருத்தளவில், வேளாண்மை அறுவடைத் துய்ப்பும், வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கும், வேளாண்மை செய்வித்த உழவர்க்கும் பொங்கல் தளுகையிட்டுத் தொழுவதுதான் பொங்கல் பண்பாட்டுச் சடங்கின் உள்ளீடாக அமைந்திருக்கின்றன.

வேளாண்மை உற்பத்தியில் நேரிடையாகப் பங்கேற்கும் உழவுத் தொழில் மரபினர் புலப்படுத்தும் பொங்கல் பண்பாட்டுத் தளுகைச் சடங்கியலானது, அறுவடைத் துய்ப்பைக் கொண்டிருக்கும் அதேவேளையில், வேளாண்மை உற்பத்தியோடு நேரடித் தொடர்பு கொண்ட யாவற்றுக்கும் நன்றிப் பெறுக்கைக் காட்டி, பொங்கல் படையலிட்டுத் தொழுவதாகும். 

வேளாண்மைக்கு அடிப்படையானதும் துணையானதுமான நிலம், மழை, சூரியன், உழவு மாடுகள், பசு மாடுகள், வித்துகள் போன்ற யாவற்றுக்கும் பொங்கல் தளுகைப் படையலிட்டுத் தொழுது வழிபடும் சடங்கியல் மரபு வேளாண் உழவுத் தொழில் மரபினரிடம் தனித்துவமாகக் காணப்படுவதுண்டு. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


4 கருத்துகள்:

  1. தமிழர் பண்பாட்டில் பொங்கல் திருநாள் அடையாளத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.எந்த சமயச் சாயலும் இல்லாத ஒரு பண்டிகை தான் பொங்கல் திருநாள்.தமிழினத்தின் அடையாளத்திருநாள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா14/1/24, PM 11:05

    கட்டுரை வாயிலாக சங்க இலக்கியத்தில் தை குறித்து உள்ள பாடல்களை அறிய முடிகிறது. இன்னும் விளக்கமாக சங்க இலக்கியத்தில் பொங்கல் விழா என்ற ஒரு கட்டுரை எழுதினால் படித்து அறிந்து அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் என்று அன்பு வேண்டுகோள்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா15/1/24, AM 12:14

    இருக்கும் வளங்களில் தன்னுடைய கருத்தை இணைய தளங்களில் பதிவிடும் உங்கள் பணி சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு