ஞாயிறு, 9 ஜனவரி, 2022

போகிப் பண்டிகை: மழைத் தெய்வ - இந்திர வழிபாட்டின் பண்பாட்டு வடிவம் : மகாராசன்


ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.  இத்தகையப் பொங்கல் விழாவைப் போகி வழிபாட்டுச் சடங்குடன் தொடங்குவதுதான் உழவுத் தொழில் மரபினரின் வழக்கமாய் இருந்திருக்கிறது. வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும். மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு. போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர். 

வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை - இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது. 

கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர். எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது. 

ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது. 

பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

போகி என்னும் மழைத் தெய்வத்திற்கான வளமைச் சடங்கின் பண்பாட்டுப் பின்புலத்தை விவரிக்கும் ம.சோ.விக்டர் இதுகுறித்துக் கூறும்போது, கதிரவனுக்கும், மழைக்கும், இயற்கைக்கும், வேளாண் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகப் பொங்கல் விழா கருதப்படுகிறது. உலக நாகரிகங்களில் இதனை அறுவடை விழா எனக் கொண்டாடினர். சங்ககாலத்தில் தொடர்ந்து ஒரு மாதம் நிகழ்வுற்ற  இந்திர விழாவின் தொடர்ச்சியாக அல்லது அந்த விழாவை மீண்டும் புதுப்பிக்கும் விழாவாகப் பொங்கலைக் கருத இடம் உண்டு. 

போகிப் பொங்கல் என்ற முதல் நாள் விழா, பழையன போக்கி புதியன ஏற்றல் என்ற பொருளில் அறியப்படுகிறது. போகி - போக்கி என்ற சொற்சுருக்கமாகக் கூறுவர். போகி என்ற பெயர் இந்திரனுக்கு உரியது. போகுதல் என்பது நுழைதல், புணர்தல் என்ற பொருளிலும் விரியும். பொங்கல் விழாவின் முதல் நாள் விழா, இந்திரனை நினைவுகூறும் விழாவாகவும் கருத இடமுண்டு என்கிறார். 

மேலும், சங்ககாலத்தில் இந்திரவிழா ஒன்றே தமிழகத்தின் பெருவிழாவாக இருந்தது. சங்கம் மருவிய பின் அயலாருடைய ஆட்சி தமிழகத்தில் தோன்றிய பிறகு இந்திர விழா கைவிடப்பட்டது. பொங்கல் விழா சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவும் காளைகளுக்கும், உரம் முதலியவற்றை அளிக்கும் மாட்டுக்கும் நன்றி கூறும் விழா என்று சொல்லப்படுகிறது. 

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாளில் கொண்டாடப்படும் விழா வேளாண்மையை மையப்படுத்துகிறது. வேளாண்மைக்கு அடிப்படையான நீரைப் பற்றிய செய்திகளும் நீரை வழிபடுவதும் பொங்கல் விழாவில் காணப்படவில்லை. போகி என்ற சொல் பழையவற்றைப் போக்கி அழித்தல் என்றும், அதனால் பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவது என்றும் சொல்லப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்று சொல்லப்படுவதற்கும் தீயிடல் போன்ற நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

போகி என்ற சொல் இந்திரனைக் குறிப்பது (போகி தமிழ்ச் சொல்லே). பொங்கல் விழாவின் முதல் நாளில் போகி நாள் என அறியப்படுவது இந்திரனை நினைவு கூறுவதே எனக் கருத இடமுண்டு. எனவே, போகி நாள் நீருக்கு நன்றி சொல்லும் நாளாகக் கருதலாம். எனவே, கைவிடப்பட்ட இந்திர விழாவின் மறு விழாவாக இந்திரனை முதல் நாள் வாழ்த்தித் தொடங்கும் விழாவாகப் பொங்கல் விழாவை கருத இயலும் என்கிறார் ம.சோ.விக்டர். ஆகவே, உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் பண்பாட்டுப் புலப்பாட்டு நடத்தைகள், மழைத் தெய்வமான போகியை  - இந்திரனைத் தொழுத பிறகே நடைபெறுகின்றன எனலாம். 

தை மாத வேளாண்மைப் போகத்தின் அறுவடை என்பது, மருத நிலத்தின் வயல்வெளி சார்ந்த நெல் அறுவடையை மட்டும் குறிப்பதல்ல. மருத நிலத்தில் பெருவாரியாக நெல் விளைவிக்கப்பட்டாலும், கரும்பு, மஞ்சள், வாழை போன்றவையும் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, குறிஞ்சி, முல்லை நிலங்களிலும், நெய்தல் நிலத்தின் அருகமைப் பகுதிகளிலும், மிக அரிதாகப் பாலை நிலத்திலும் வேளாண்மைத் தொழில் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்தந்த நிலத்தின் வாகுக்கும் மழைப் பொழிவுக்கும் ஏற்ற வகையில் வேளாண் பயிர்கள் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. 

மேற்குறித்த நிலங்களிலும் வேளாண் போகம் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நில மக்கள் யாவருக்குமான உணவின் பெருந்தேவையையும் பெருமகிழ்வையும் தந்திருப்பது நெல்லின் அறுவடைதான். அதனால்தான், அய்ந்து வகைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர் யாவரும், நெல்லரிசிப் பொங்கலிட்டு அறுவடைப் பண்பாட்டைப் புலப்படுத்தியிருக்கின்றனர். 

பொங்கல் தளுகையில் மருத நிலத்தின் நெல்லரிசி மட்டுமே இடம்பெறுவதில்லை. மருத நிலத்தில் விளைந்த கரும்பும் மஞ்சளும் வெற்றிலையும், குறிஞ்சி நிலத்தின் கிழங்குகளும் பாக்கும், முல்லை நிலத்தின் பூசனி, சுரை, புடலை போன்ற காய்களும் மொச்சை போன்ற பயறுகளும், நெய்தல் நிலத்தின் உப்பும் பனங்கிழங்கும் என, எல்லா நிலப்பகுதியிலும் விளைவிக்கப்பட்ட உணவு மற்றும் உணவு சார்ந்த அறுவடைப் பொருட்கள் யாவும் பொங்கல் தளுகையில் இடம்பெற வைப்பது பொங்கல் வழிபாட்டு மரபில் இருந்திருக்கிறது. 

இவ்வாறு, பொங்கல் தளுகையில் மற்ற அறுவடைப் பொருட்கள் இடம்பெற வைத்ததன் நோக்கம் என்பது, அய்ந்து வகைத் திணைநிலப் பரப்புகளில் விளைவிக்கப்பட்ட வேளாண் போகத்தைச் சமமாகப் பாவித்தலை அடிப்படையாகக் கொண்டதாகும். 

அய்வகை நிலப்பரப்பிலும் வேளாண்மைத் தொழில் நடைபெற்று வந்திருப்பதையும், பண்டமாற்று மட்டுமல்லாமல், உணர்வுப் பறிமாற்றங்களும் நடைபெற்று வந்திருப்பதையும்தான் இத்தகையப் பண்பாட்டு நடத்தைகள் காட்டுகின்றன. அதனால்தான், அய்வகைத் திணை நிலம் சார்ந்த தமிழர் யாவருக்குமான பண்பாட்டுப் புழங்கு வெளியாகப் பொங்கல் தளுகைச் சடங்கு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506



1 கருத்து:

  1. வணக்கம் அய்யா , என்னுடைய குல தெய்வமான அய்யனாரும் நீங்கள் பதிவு செய்துள்ள இந்திரன் உருவத்தை போன்றே ஒத்துள்ளது . நான் உங்களுக்கு அதனை whatsapp இல் அனுப்பியுள்ளேன் .

    பதிலளிநீக்கு