வியாழன், 13 ஜனவரி, 2022

வேளாண் அறுவடையும் போலச்செய்தல் சடங்கும் - மகாராசன்

 



அறுவடையை மய்யமிட்டுப் புலப்படுத்தப்படும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டு நடத்தைகள், வழிபாட்டுச் சடங்கியல் மரபிலும் காணப்படுகின்றன. அதாவது, உழவுத் தொழில் மரபினரின் அறுவடைச் செயல்பாட்டைப் போலச்செய்து காட்டும் சடங்கியல் நிகழ்வுகள் பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தில், தைப்பூசத்திற்கு முதல்நாள் நெல்கதிர் அறுவடைத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் கோயிலிருந்து புறப்பட்டு, மதுரை அருகே அனுப்பானடி - சிந்தாமணியைச் சுற்றியிருக்கும் வயல் பகுதிக்கு அறுவடைக்காக வருகை தருவதான சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அறுவடைச் சடங்கு நடக்கும் இந்த நிலப்பகுதியானது, கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை ஆற்றின் கிளை ஆறாக, இந்தக் கிருதுமால் ஆற்றின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாக நடந்திருக்கிறது.

மீனாட்சி அறுவடை செய்யும் வயல், அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டதாகவும், இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம் எனவும் கூறப்படுகிறது. தற்காலத்தில், அந்த இடத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றித் தற்காலிக வயலாக மாற்றி, வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிர்களைத் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு, மீனாட்சி அம்மன் கதிர் அறுப்பதைப் போன்ற அறுவடைப் பாவனைச் சடங்கு நடைபெறுகிறது.

மருத நிலத்தின் வேளாண்மை உழவுத் தொழில் மரபைக் குறிக்கும் பாண்டியம் எனும் சொல்லால் அடையாளப்படுத்திக் கொண்ட பாண்டியர்களின் வழிமரபினராகவே மீனாட்சி கருதப்படுகிறார். பாண்டிய வேந்தர்களின் காலத்திலிருந்து இத்தகைய அறுவடைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதன் நீட்சியாகத்தான், உழவுத் தொழிலின் வேளாண் மரபினராக மீனாட்சி - சுந்தரேசுவரர் நெல் கதிர் அறுவடை செய்யும் அறுவடைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

நெல் கதிர் அறுவடைச் சடங்கு நடந்து முடிந்த மறுநாளில்தான், அனுப்பானடி அருகிலிருக்கும் மாரியம்மன் கோயில் வண்டியூர்த் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கின்றது. மீனாட்சி - சுந்தரேசுவரர் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்குக் காட்சி அளிக்கும் வகையில் அமையும் இவ்விழா, ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெற்று வருகின்றது.

அறுவடைச் சடங்கிலும், தெப்பத் திருவிழாச் சடங்கிலும் உழவுத் தொழில் வேளாண் மரபினர்களான அனுப்பானடி ஊர்க் குடும்பர்களே பெருவாரியாகப் பங்கேற்பதோடு, அங்கு நடைபெறும் சடங்கியல் பண்பாட்டுக்கு உரித்தான நிகழ்த்து உரிமைகளையும் வழிவழியாகப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் நடைபெறும் நெல் அறுவடைச் சடங்கைப் போலவே, திருக்குற்றாலீசுவரர் கோயிலிலும் அறுவடைச் சடங்கு நிகழ்ந்து வருகின்றது. அங்கு நடைபெறும் அறுவடைச் சடங்கையும் உழவுத் தொழில் வேளாண் மரபினரான குடும்பர்களே நடத்தி வருகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது.

இவ்வாறாக, வேளாண்மை உழவுத் தொழிலின் உற்பத்திச் செயல்பாடுகளைப் பண்பாட்டு வடிவத்தில் புலப்படுத்தப்படுகிற மழை, உழவு, விதைப்பு, நடவு, அறுவடை சார்ந்த வளமைச் சடங்குகள் யாவும், உழவுத் தொழில் வேளாண் மரபினரின் வேர்த் தடங்களைத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளன.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக