புதன், 13 ஏப்ரல், 2022

பொன்னேர் உழவுச் சடங்கு - உழவுப் பண்பாட்டின் அகமும் புறமும்: மகாராசன்



சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடைக் காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கிக் காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். 

கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடைக் காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். 

கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைக் காலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். 

கோடை உழவு செய்வதால், இறுகலான நிலம் பொலபொலவென நெகிழ்ந்து காற்றோட்டத்தைப் பெறும். மேலும், பயிர்களுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாகக் கிடைக்கும். உழவுச் சால்கள் மழைநீரை உறிஞ்சி வேளாண்மை செய்யும் நிலத்திற்குள் தக்க வைப்பதோடு, மண்ணரிப்பையும் தடுத்திடும். 

இத்தகையக் கோடை உழவானது, வேளாண் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புழு, பூச்சிகள், களைச்செடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தவும் செய்வதோடு, வேளாண்மை நிலத்தின் வளம் பாதுகாக்கப்படும். வேளாண்மை உழவுத் தொழிலின் பட்டறிவு இதுபோன்ற உழவுச் செயல்பாடுகளில் புலப்படுவதைக் காணலாம். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது. இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர். 

கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும், ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்து சேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். 

ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி, வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். 

இத்தகையக் கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நல்லேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். வரலாற்றுச் சான்றுகள் பலவும், இத்தகையக் கோடை உழவுச் சடங்கைப் பல்வேறு பெயர்களில் குறித்துள்ளன. கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது. 

இத்தகையப் பொன்னேர் உழவு பற்றிக் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறும்போது, தமிழக மரபில் பொன்னேர் உழவுக்கு ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஏர்க் கலப்பை, எருதுகள், நிலங்களை வைத்துச் செய்யப்படும் ஒரு புனிதமான சடங்கு இது. கோடையில் உழும் உழவுதான் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. 

இன்னொன்று, இந்தச் சடங்கின் போது சிறிய தங்கக் கலப்பையை வைத்து வழிபடுவதும் வழக்கம். இது வட்டார வழக்குதான். வட்டாரத்துக்கு வட்டாரம் இந்த வழக்கம் மாறுபடும். இதோடு கலப்பைகளுக்கு மஞ்சள், சந்தனம் பூசியும் வழிபடுவார்கள். சித்திரையில் உழவு செய்யப்படும் மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் களைகள் அழிந்து, அந்த நிலம் விதைப்புக்குத் தயாராகிவிடும். அடுத்து வருகிற தென் மேற்குப் பருவ மழைக்கு நிலங்களில் விதைப்பு தொடங்கிவிடும். 

எப்போது பொன்னேர் கட்டணும் என்பதற்கும் பஞ்சாங்கத்தில் நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும். அந்தந்த வட்டாரப் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாட்களில் பொன்னேர் கட்டலாம். பஞ்சாங்கக் கணிப்புகள் வானியல் அடிப்படையில் கணிக்கப்பட்டவைதான். இந்த வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை. ஆந்திரா மாநிலத்திலும் உண்டு. தமிழ் நூல்களிலும், சுவடிகளிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார். 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் - வேளாண்மை உழவுத் தொழில் நடைபெறும் சிற்றூர்ப் புறங்களில், கோடைக் காலத்து உழவுச் சடங்குகள் இன்றளவிலும் நடைபெற்று வருகின்றன. இச்சடங்கு, சில வட்டாரங்களில் சித்திரை பத்தாம் நாள் நடைபெறுவதாகக் கூறும் வெள் உவன், வருடம்தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறும் ஒரு நிகழ்வு பொன்னேர் பூட்டுதல் ஆகும். அன்று ஊர்க் கோயில் நிலத்தில் அனைத்து வேளாண் மக்களும் தங்கள் ஏர் கொண்டு உழுவதே இந்நிகழ்ச்சியின் தலையாயது. சில பகுதியில் இதை நல்லேர் கட்டுதல் என்பர். 

அன்று அதிகாலையிலேயே வீடுகளைக் கழுவி, மாடுகளைக் குளிப்பாட்டிக் குளித்து, கலப்பையைத் தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க, அவர்களின் பின்னால் மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் பூஜைப் பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர். கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு கொஞ்சமும் எடுத்துச் செல்வர். 

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்துப் பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்தத் திசை நல்ல திசையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். 

குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் அனைவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள். இது ஒரு சம்பிரதாய உழவு என்பதால், வயலின் சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவைக் கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு, எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டிப் பூஜைகள் செய்து, இனிப்பு கலந்த பச்சரிசியைப் பிரசாதமாக வழங்குவர். 

இந்தச் சித்திரைப் பத்து என்பது, இன்றைய தமிழ்ப் பூமியில் சூரியன் உச்சிக்கு வரும் நாள் என்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த நாளே புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதின் குறியீடாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. சில அம்மன் ஆலயங்களில் இந்த நாள் ‘பத்தாம் உதயம்’ என்ற பெயரில் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு. 

சில ஊர்களில் அங்குள்ள தச்சு ஆசாரியை அழைத்து ஊர்க் கோயிலில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து சன்மானம் வழங்கும் வழக்கமும் இருக்கிறது. உழவுக்கு வேண்டிய கருவிகளைச் செய்து கொடுப்பதால் அவருக்கு இந்தச் சிறப்பு மரியாதை வேளாண் மக்களால் செய்யப்படுகிறதாம். இந்தப் பொன்னேரு பூட்டல் சடங்கு சிந்து வெளியிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று என்று சொல்லப்படுகிறது என்கிறார். 


மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக