புதன், 13 ஏப்ரல், 2022

பொன்னேர் - நாளேர் பூட்டல் பண்பாடு - வரலாற்றுக் குறிப்புகள் : மகாராசன்




தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். 

சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும், நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். எனினும், கோடை உழவுத் திருநாளாக - நாளேர் பூட்டுத் திருநாளாக - பொன்னேர் பூட்டுத் திருநாளாக - ஏர்பூட்டுத் திருநாளாக, ஆரியத்தின் சாயல் படாமல் உழவுப் பண்பாட்டுச் சடங்கை முன்னெடுத்து வந்துள்ளனர் உழவுத் தொழில் மரபினர். பழந்தமிழ் நூல்களும் இத்தகைய மரபைப் பதிவு செய்திருக்கின்றன.

கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து

விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்

பாருடைப்பனர்போற் பழிச்சினர் கைதொழ

ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்

என வரும் சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதைப் பகுதியானது, ஏர் மங்கலம் பாடி நல்லேர் உழுததைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 

கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்

தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; 

பொன்னேர் பசலை பாவின்று மன்னே;

பொன்னேர் பசலை ஊர்தரப் பொறிவரி

நல்மா மேனி தொலைதல் நோக்கி

என, அகநானூற்றின் பாடல்கள் பொன்னேர் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. பொன்னேர் உழுதலை, நல்லேர் நடத்தல் என்பதாக மதுரைக்காஞ்சி கூறுகையில்,

நல்லேர் நடந்த நகைசால் விளைவயல்

என்கிறது. இதனைக் கடி ஏர் என்னும் சொல்லால் அடையாளப்படுத்தும் வகையில், 

அருஞ்செலல் பேர்யாற்று இகுகரை உடைத்து

கடியேர் பூட்டிக் கடுக்கை மலைய

வரைவில் அதிர்சிலை முழக்கிப் பெயல் சிறந்து

ஆர்கலி வானம் தளி சொரிந்து ஆங்கு

என்கிறது பதிற்றுப்பத்துப் பாடல். 

மழை காக்கவேண்டும் என்று வேண்டி, ஆண்டில் முதல்முதலாக ஏர் பூட்டுவது கடியேர் எனக் குறிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதனால்தான், வானம் கடியேர் பூட்டி பேர்யாற்றுக் கரையை உடுத்து உழுதது எனக் கூறுவதன் மூலம், கடியேர் விழாவினை அப்பாடல் நினைவூட்டுகிறது. 

திருவிளையாடற்புராணம், இத்தகைய உழவுச் சடங்கு நிகழ்வை

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடல்

குளமகிழ் சிறாரின் ஏறும் ஒருத்தலும் உவகை தூங்க

வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற

அளமரு பொறிபோலே வலாற்றவாள் வினையின் மூண்டார்

எனப் பதிவு செய்திருக்கிறது. இவ்வாறு, முதன் முதலாக உழுகின்ற உழவுச் சடங்கைப் பல பெயர்களால் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன.

தமிழர்களின் பண்பாடும், பண்டிகையும் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. நாளேர், நல்லேர், சித்திர மேழி என்றழைக்கப்படும் பொன்னேர் நிகழ்வும் வேளாண் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போனதாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் ஆந்திரம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் பொன்னேர் விழா நடக்கிறது. 

இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மன்னர்களும் மக்களும் பொன்னேர் உழுதலை (Royal Ploughing Ceremony) கொண்டாட்டமாகவே நடத்துகின்றனர் எனக் கூறும் கப்பிகுளம் ஜெ.பிரபாகர், பொன்னேர் உழவு எனும் இச்சடங்கைப் பருவ காலத்தோடு தொடர்புடையது என்பதாக விவரிக்கிறார். 

பண்டையத் தமிழர்கள் அறுபது நாழிகை, ஆறு சிறு பொழுதுகள், ஆறு பருவங்கள் எனக் காலத்தை வகுத்தனர். தை, மாசி - இளவேனில்; பங்குனி, சித்திரை - முதுவேனில்; வைகாசி, ஆனி - கார்; ஆடி, ஆவணி - கூதிர்; புரட்டாசி, ஐப்பசி - முன்பனி; கார்த்திகை, மார்கழி - பின்பனி என்று காலங்களுக்கு ஏற்பவே வேளாண்மை செய்தனர். வைகாசி, ஆனியில் தென்மேற்குப் பருவமழை அடைமழையாகப் பெய்யும். ஐப்பசியில் வடகிழக்குப் பருவமழை. சித்திரையில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்யும்; வெயில் அதிக உச்சத்தை அடைந்து முதுவேனில் தொடங்கும். 

அறுவடைத் திருநாளைத் தைத் திங்களில் நடத்தி விட்டு, இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி, மாசி, பங்குனியில் இளவேனிற்கால வசந்தத்தை வரவேற்று, பங்குனி முழு நிலவில் குல தெய்வங்களை வழிபட்டு, சித்திரைத் திங்களில் கடற்கரை, ஆற்றங்கரை மணலில் முழு நிலவு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் சித்ரா பெளர்ணமி நாளில் இந்திர விழாக்கள் நடைபெற்றுள்ளன. அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறைந்திருக்கும் சித்திரை மாதம் வேளாண் மக்களின் கொண்டாட்ட மாதமாகும் என்கிறார் கப்பிகுளம் ஜெ.பிரபாகர்.

வேளாண் மக்களின் இத்தகைய உழவுச் சடங்கு பற்றிய செய்திகள் கல்வெட்டுக் குறிப்புகளிலும் காணப்படுகின்றன என்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். முதன்முதலாகப் பிடிக்கும் ஏர் உழவுச் சடங்கை - பொன்னேர் உழுதல் எனும் சடங்கை உவா ஏர், உவாவேர், கரிழ்சணை, கர்சணம் எனக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. முதல் ஏர் பூட்டி முதன் முதலாக உழுகின்ற உழவுச் சடங்கைப் பொன்னேர் உழவு எனக் குறிக்கப்பட்டதன் பின்புலத்தை விவரிக்கும் பாண்டிய மள்ளர், இச்சடங்கை வேந்தர்களே ஏர் பிடித்துத் தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, மருதநில மள்ளர்கள் உழுதலை முறையாகத் தொடங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒரு சடங்கினைச் செய்தனர். அதனைப் பொன்னேர் பூட்டுதல் என்று அழைத்தனர். இதற்கு, நாளேர் பூட்டுதல் என்ற பெயரும் உண்டு. சங்க காலத்தில் வேளிர்கள் முதற்கொண்டு வேந்தர்கள்வரை தங்கள் எல்லைக்குட்பட்ட ஒரு பொது இடத்தில் இவ்விழாவைத் துவங்கினர் என அறிஞர்கள் கூறுவர். இன்றும் மள்ளர் சமூகத்தவர்கள் வாழும் ஊரில் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. 

முதலில் ஊர்க் குடும்பன் ஏர்பூட்டி தன் நிலத்தை உழுது, நெல்மணிகளைத் தூவி வழிபடுவார். அதைத் தொடர்ந்து உழவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஏர்களைப் பூட்டி தங்கள் நிலத்தை உழுது நெல்மணிகளைத் தூவி வழிபடுவர். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர்க் கலப்பையை - பொன் ஏர் கொண்டு, வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவைத் தொடங்கி வைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து, முதலில் நான் உழவன்; அதன்பிறகே அரசன் என்பதை, இந்நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்பட்டது என்கிறார் அவர்.

இத்தகைய உழவுச் சடங்கு, பழங்காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வந்திருப்பதைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் சான்று பகர்ந்துள்ளன. வேந்தர்களாலும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினராலும் நிகழ்த்தப்பட்டு வந்த, பொன்னேர் உழவு எனும் இச்சடங்கின் பண்பாட்டு முக்கியத்துவத்தை அறிந்திருந்த கம்பரும், வடநாட்டுச் சனக மன்னனைப் பற்றிக் குறிக்கும் ஓரிடத்தில், பொன்னால் செய்த கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுதார் என்று பதிவு செய்திருக்கிறார். 

வரம்பின்மணிப் பொற்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு

உரம்பொருவி நிலம் வேள்விக்கலகில் பல சால் உழுதேம் 

என, பொன்னேர் உழுதலைப் பொற்கலப்பை உழவு என்பதாகக் குறித்திருக்கிறது கம்பராமாயணம்.

இதேபோல, பொன்னால் செய்த நுகத்தடிகளில் எருதுகளைப் பூட்டி, ஒளி பொருந்திய பங்குனி உத்திர நன்நாளில், விண்ணயன் எனப்பட்ட இந்திரனைத் தொழும் மள்ளர்கள் எனும் உழவுத் தொழில் மரபினர் பொன்னேர் பூட்டி உழுதனர் என்பதைத் தென்புதுவைப் புராணம் கூறுகையில், 

மன்னியவேலுடன் மணிவொறுத்தலும் 

பொன்னிய நுகத்திடை புணர்த்து வீக்கியே 

ஒண்ணிய பங்குனி உத்திரத்தினில்

விண்ணயன் மள்ளர் பொன்னேர்கள் பூட்டினார்

எனத் தெரிவிக்கிறது. அதேபோல, மருத நில வேளாண்மையை எடுத்துரைக்கும் எல்லாப் பள்ளு இலக்கியங்களும் பொன்னேர் பூட்டுதலான உழவுச் சடங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. 

உழவுத் தொலில் மரபினர் தமது உழவுச் செயல்பாடுகளை வானியல் கணிப்புகளுக்கு ஏற்பவே நடத்தியிருக்கின்றனர். இதனை நாளேர் எனவும் குறிப்பது வழக்கம். நல்ல நேரத்தில் நாளேர் பூட்டி உழுததாகத் திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு கூறும்போது, 

உழவுமள்ளர் திரண்டு சஞ்சுவங் கொண்டு

உழுங் காளைகள் அனைத்தும் பற்றிக் கொண்டுபோய் 

புலவர்தமிழ் மணக்கும் நல்லூர்த் தருமன்

பிள்ளையார் குளப்புரவில் உட்கிடைச் செய்யில் 

வலவர் அடியில் நின்ற செடியும் வெட்டி

வரம்பில் மடை உயர்த்திப் புனல் நிறுத்திக் 

குலவு கணக்கன் ஓரை ராசத வேளையும் வந்து 

கூடும் கடிகையில் நாளேரைப் பூட்டினரே

எனக் குறிப்பிடுகிறது. 

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல், அரசாட்சியின் எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும், அதன்பொருட்டுத் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஓர் அரச நிகழ்வுகளுக்கு முன்பும், பொன்னேர் பூட்டி உழும் சடங்கை ஒரு வழக்கமாக மேற்கொண்ட வழக்கமும் இருந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. 

அரிகேசரி பராக்கிரம பாண்டியன், காசி விசுவநாதர் ஆலயம்போல் ஒன்றை, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கட்டுவதெனத் தீர்மானித்து கி.பி. 6.5.1446ஆம் நாளில் பொன் ஏர் பூட்டி உழுது, உழுத இடத்தில் கோயில் கட்டும் பணியைத் தொடங்கியதாகவும், ஆலயத்தை ஓராண்டில் கட்டி முடித்து 15.6.1447ஆம் நாளில் அபிசேகம் செய்தார் எனவும் கல்வெட்டு கூறுகிறது. 

அக்கல்வெட்டில் உள்ள கரிழ்சணை பற்றிய வாசகப் பகுதி வருமாறு:

அன்பினுடன் சகாத்தமாயிரத்து முன்னூற்றறுபத் தெட்டதன்மெல் வைகாசித்திங்கள் மன்தியது யீரைந்திற் பூறுவபக்க மருவு தெசமியில் வெள்ளிவாரந் தன்னில் மினதி சூழுத்திரநாள் மீனத்தில், வாகைவெலரிகேசரி பராக்கிரம மகீபன் தென்திசையிற் காசி நகரக்கோயில் காணச்சென்று நின்று, கரிழ்சணை தான் செய்வித்தானெ என்பதாகக் கூறும் அக்கல்வெட்டு, பொன்னேர் உழவு எனும் உழவுச் சடங்கை நிகழ்த்திய செய்தியைத் தருகின்றது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 26 / 537 and A. R. No. 507 of 1909). 

பொன்னேர் உழும் சடங்கைக் கரிழ்சணை எனக் குறிக்கும் அக்கல்வெட்டுச் செய்தி பற்றிய தொல்லியல் துறையின் குறிப்புரையானது, It records that the king visited the temple at Tenkasi on Saka 1368, Vaikasi 10, Su. 10, Friday, Uttiram=1446 A.D., May 6 and arranged for the performance of the ceremony of ploughing (karilsanai Skt. karshanam). Then on the date quoted above the construction of the central shrine of the Siva temple at Tenkasi was completed (SSI No.537, Page No 366, A. R. No. 507 of 1909) என விவரித்திருக்கிறது.

அரிகேசரி பராக்கிரம பாண்டியருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியரும், அந்த ஆலயத்தில் சிற்சிலக் கோயில்களைக் கட்டியுள்ளார். அந்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பும், தன் தந்தையைப் போல் அவரும் கரிழ்சணை என்கிற பொன்னேர் உழவுச் சடங்கு விழா நடத்தியே பணிகளைத் தொடங்கியுள்ளார் எனக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. 

கரிழ்சணை பற்றிய அக்கல்வெட்டு வாசகப் பகுதி வருமாறு:

நமக்கு தட்சிண காசியாக ஆலயஞ் செய்து தரவேனும் என்று, எங்களுடைய கர்த்தர் பெருமாள் அரிகேசரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர் இருந்தருளிய இடத்தின் உடனே சுப்னத்திலே திருவுள்ளம் பற்றி அருளுகையாலே, முன்னாள் சகாத்தம் ஆயிரத்து முன்னூற்று ஆறுபத்தெட்டின் மேல் ரிஷப ஞாயற்றுப் பத்தாத் தியதியும் பூர்வ பக்ஷத்து தசமியும் சுக்ரவாரமும் பெற்ற உத்திரத்து நாள் மீனமு சுத்தமாக, கரிழ்சணையும் செய்து.. 

தட்சிண காசியாகத் திருப்படை வீடும் உண்டு ஆக்கி, உடையார் விஸ்வநாயனையும் நாச்சியார் உலகமுழுதுமுடைய நாச்சியாரையும் பிரதிஷ்டித்து, இன்னாயனார்க்குத் திருக்கோயில் உபாநாஷித்துபெயத்தமாகவும் அர்தமண்டபம் இடைய நாழிகை மகாமண்டபம் சோபானம் ஆவர்ண ஹொவீராஷிகளுந் திருப்பணி செய்து, நாச்சியார் உலகமுழுமுடைய நாச்சியார்க்குந் திருக்கோயிலும் ஆவரணமுங் குறைவற திருப்பணியுஞ் செய்து, ஹொபுரமுமாரம்பித்து சகஸ்வரலிங்காலயமும் சக்திபீடாலயமும் செய்து ரிஷபதேவர் முதலாக உள்ள பரிவார நாயன்மாரையும் பிரதிஷ்டித்து…. 

அரிகேசரி நங்கை என்று திருநாமமுடைய பிடாரியையும் பிரதிஷிடித்து, பிடாரி கோயிலும் மேலை அஞ்சாந்திருவீதியில் அரிகேசரிப் பிள்ளையார் திருக்கோயிலும் ஆரூட்டு மண்டபமும் வெச்சமுது மண்டபமும், மற்றுமிக் கோயில்களிலுள்ள திருப்பணிகளும் மஹாகோபுரமும் எங்கள் கர்த்தர் இருந்தளிய இடம் முன்னாள் இரண்டாவதின் எதிர் இருப்பதிரண்டாவது வைகாசி மாதந் துடங்கி, முப்பத்து ஒன்றாவதின் எதிர் ஒப்பதாவது வரை பதினேழு வருஷத்துக்குள்ளுத் திருப்பணி செய்து நிறைவேற்றின இது, மானுஷமல்ல தேவிகமென்று எல்லாருமறிந்து கொள்ளவும், எங்களுடைய கர்த்தர் இருந்தருளிய இடம் திருவுள்ளம் பற்றி அருள நாங்களுங் கரிழ்சணை துடங்கி… 

இந்தத் திருப்பணியெல்லாங் கூடச் செய்கையுஞ் செய்து, எங்கள் இருந்தருளிய இடம் இன்னாயனார்க்கும் நாச்சியார்க்கும் மற்றுள்ள நாயன்மார்க்கும் பூஜாங்கத்துக்கு வேண்டும் அனைத்துக் கொத்திலுள்ளாரையுங் கற்பித்து திருவாபரணமும் பரிகல பரிஸந்நமுங் குடுத்து பூசையுங் குறைவற நடத்த.... என, பொன்னேர் உழவுச் சடங்கு பற்றிய வரலாற்றுக் குறிப்பைத் தந்திருக்கிறது அக்கல்வெட்டு. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 26 / 561 and A. R. No. 531 of 1900).

அதேபோல, திருக்கோயிலூரில் உள்ள திருவிக்கிரம பெருமாள் எனும் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டானது, அக்கோயிலுக்கு இராசராச சோழன் இரண்டு பொன் ஏர்கள் (தங்கக் கலப்பைகள்) கொடுத்ததை, பொந்நெர் இரண்டு திருமஞ்சணமுஞ் செய்து இப்பொந்நில் திருமஞ(ச)ணம்தொறும் எண்ணாழிக்காலால் கலக்கல அரிசி அமுது செய்வித்து என, அக்கல்வெட்டு வாசகம் குறிப்பிடுகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 7 /142. and A.R. No. 129 of 1900).

இதேபோல, பல இடங்களில் தங்கள் திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, பாண்டிய வேந்தர்கள் பொன் ஏர் பூட்டி உழுது உழவுச் சடங்கு விழாவை நடத்தியுள்ளனர் என்பதைப் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரன் குளத்தில் கிடைத்த தங்க ஏர் (கலப்பை) பற்றிய செய்தி அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அருமைராஜ், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய மின்சக்தித் தகடு (சோலார்) பணி நடந்து வருகிறது. இதில் கயத்தாறு மற்றும் ஓட்டபிடாரம் தாலுகாக்களில் தெற்கு மயிலோடை மற்றும் கோவிந்தபுரம் கிராமங்களில் சோலார் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தப் பகுதிகளில் சோலார் பணிக்காகத் தோண்டியபோது பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் தினந்தோறும் கிடைத்து வருகிறது. சித்தாறு ஆற்றுப்படுகையில் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் அமைந்துள்ள பகுதியில் கற்சிற்பங்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன...

ஏற்கனவே இந்தப் பகுதியில் தங்க ஏர்க் கலப்பை கண்டெடுக்கப்பட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் பகுதியைத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பிற பணிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இங்கு கண்டெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ள செய்தி கவனிக்கத்தக்கது. அதேபோல, கோவைக்கு அருகில் உள்ள முட்டம் அகழாய்வில் சிறிய காளைகளுடன் கூடிய பொன் ஏர்த் திருமேனி கிடைத்துள்ளதாகவும் இரா.ப.கருணானந்தன் குறிப்பிடுகிறார். 

இந்நிலையில், கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரமேழிக் கல்வெட்டானது, பழங்கால உழவுத்தொழிலின் சிறப்பை விளக்கும் வகையிலும், பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கைக் குறிப்பதாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகேயுள்ள கல்நார்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது உருவம் செதுக்கப்பட்டிருந்ததை ஆ.பிரபு தலைமையிலான குழுவினர் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர். 

இது குறித்து ஆ.பிரபு கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் களப்பணி மேற்கொள்கையில் கல்நார்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம். தொடர்ந்து அந்தக் கல்லினைச் சுத்தம் செய்து மாவு தடவிப் படியெடுத்துப் பார்க்கையில், அது பழமையான ‘சித்திரமேழி’க் கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது. 

‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும். சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். சித்திரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவிற்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது. 

கல்நார்சாம்பட்டியில் உள்ள இக்கல்வெட்டில் பூமாதேவி (தமிழில் நிலமகள்) தலையில் கிரீடத்துடன் அமர்ந்த நிலையில் தம் இரு கைகளிலும் மலர்ச்செண்டுகளை ஏந்தியவாறு காட்சியளிக்கிறாள். அவளது வலது பக்கம் இரு அடுக்குகளைக் கொண்ட குத்துவிளக்கும் அதன் மேல் கும்பக் கலசமும் உள்ளன. பூமாதேவியின் இடதுபக்கம் கலப்பையும் கண்ணாடியும் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்லானது 3 அடி அகலமும், 2அடி உயரமும் கொண்டதாக உள்ளது. இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக் குழுக்கள் செயல்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரிய நாட்டார் சபை’ என்று அழைக்கப்படும் என்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இந்தக் கல்வெட்டு பழங்கால உழவுத் தொழிலின் சிறப்பை விளக்குகிறது. ஏரோட்டும் சடங்குகளாக, கல்நார்சாம்பட்டி மக்கள் பொங்கல் பண்டிகையின்போது காணும் பொங்கலன்று கரகம் எடுத்துச் சுற்றிவந்து, இக்கல்வெட்டின் அருகே மாடுகளை அழைத்து வந்து இவ்விடத்தில் கட்டி வைத்துப் பாரதம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் முதல் புதன் கிழமையன்று ஏர்பூட்டி தங்கள் நிலத்தில் உழுது, முளை கட்டிய நவதானியங்களைத் தூவி வழிபடுகின்றனர். இவ்வழக்கமானது பண்டைக் காலத்தில் ‘பொன்னேர்‘ பூட்டி உழும் சடங்கினை நினைவூட்டுவதாக உள்ளது என்கிறார். 

இவ்வாறு, ஆங்காங்கு மேற்கொள்ளப்படும் தொல்லியல் அகழாய்வில் கிடைத்திருக்கும் தங்கக் கலப்பைகள் (பொன் ஏர்கள்) பண்டைக் காலத்தில் வேந்தர்கள் ‘பொன்னேர்’ பூட்டி உழுத சடங்கினைப் புலப்படுத்துகின்றது. இத்தகையப் பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கை வேந்தர்கள் மட்டுமல்லாமல், உழவுத் தொழில் வேளாண் மரபினரும் நிகழ்த்தி வந்துள்ளதையும் தொல்லியல் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் மெய்ப்பித்துள்ளன. பொன்னேர் பூட்டும் இத்தகைய உழவுச் சடங்கு, ஆதிகாலம் தொட்டு இன்றுவரையிலும் உழவுத் தொழில் மரபினரால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக