மொழியின் துணையில்லாமல் மாந்த இனம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்திருக்க முடியாது. அதேபோல, மொழியும் மாந்தரின் துணையில்லாமல் செழுமை பெற்றிருக்க முடியாது.
மொழி என்பது வெறும் தொடர்புக் கருவியாகப் பார்க்கப்படுகிறது. இன்னொருபுறம், மொழிப் பெருமிதம் காரணமாகத் தூய புனித நிலைக்கு அடையாளப்படுத்தும் போக்கும் நிலவுகின்றது.
மொழியின் அடிப்படை பேச்சு. பேச்சின் அடிப்படை சிந்தனை. மாந்தன் சிந்திக்கத் துவங்கிய நிகழ்வு, தற்செயல் நடவடிக்கையாகதான் அறிவியல் உலகம் பார்க்கிறது. அகண்ட பெரிய பரப்பில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்த தொகுப்பில் மாந்த இனம் மட்டுமே பேசக் கற்றுக்கொண்டது. இந்தப் பேச்சை கற்றுக்கொள்வதற்குப் பல்வேறு போராட்டங்களை நேர்கொண்டது முந்து நிலை மாந்தர் கூட்டம்.
இந்நிலையில், இயற்கைப் பெருவெளியில் - பல்வேறு உயிரினங்கள் வாழும் தொகுப்பில் மாந்த இனமே மட்டும் பேசக் கற்றுக்கொண்ட உயிரினமாகப் பரிணமித்து வந்திருக்கும் மாந்தரினச் செயல்பாடுகளையும், மொழித்தோற்றத்தின் முதன்மை நிலையில் உள்ள ஒலிகளைத் தொடர்புக் கருவியாக மாற்றிய மாந்தன் முயற்சி நிலைகளைப் பற்றியும் சமூகவியல் கண்ணோட்டத்தில் விவரித்திருப்பதோடு, மொழி தோன்றுவதற்கு அடிப்படைக் கூறுகளாகக் கருதப்படுகிற ஒலி, ஓவியம், கீறல்கள், வாயொலி, பேச்சு, எழுத்து இவற்றைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.
மாந்தர் கூடி வாழும் முறைக்கு அடிப்படையே பேச்சு. பேசுவதைக் கடத்துவதற்குக் குறியீடுகளைப் பண்டைய மாந்தர் பயன்படுத்தினர் என்றும், குகைகளில், பாறைகளில் காணப்படும் கீறல்கள் தொடர்புக் கருவியாக இருந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறார் மகாராசன்.
மேலும், கீறல்கள் ஒழுங்கு முறை வடிவம் பெற்ற பின்னர், சித்திர எழுத்துகளாக மாறி உள்ளன. எழுத்துக்களின் முந்தைய நிலை ஓவியம், வரி இருந்திருக்கின்றன என்றும், விலங்குகளின் ஒலியைக் குறிக்கும் வகையில் ஒலி எழுத்துரு முறை இருந்தது என்பதையும் காட்சிப்படுத்துகிறார்.
இன்றைய வணிகப் பயன்பாட்டில் உள்ள கணினி வரையிலான குறியீடுகள் பண்டைக்கால வரைவுக் கோடுகளை நினைவுப்படுத்துகின்றன. மேலும், குழுக்குறிச் சொற்களும் அவற்றின் நீட்சியாகத் தான் தெரிகின்றது என்பதையும் விவரிக்கிறது இந்நூல்.
உணவுத் தேவையின் காரணமாக வேட்டைச் சமூக நிலையில் இருந்த சமூகம் உற்பத்தி நிலையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய காலத்தில்தான் மொழி அறிவு தோன்றியிருக்கக்கூடும். எண்ணங்களைப் பரிமாறுவதற்காகக் கோடுகள், ஓவியங்கள், எழுத்துக்கள் போன்ற வடிவில் தொடர்பு நிலை இருந்திருக்க வேண்டும். தொடர்பு நிலை மேலும் செழுமை அடைந்த பின்னர், அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் மொழிக்கான இலக்கணம், இலக்கியங்கள் படைக்கப்பெற்றிருக்கும் என்ற பார்வையும் தோன்றுகிறது.
மொழியை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இலக்கணக் குறிப்புகள் தோன்றியிருக்கின்றன. வாய்மொழிச் சொற்கள் வரி வடிவத்தில் இடம்பெறவும் இலக்கண மரபுகளை வகுத்திருந்தனர் பண்டையத்தமிழர்.
பண்டையத்தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கினர். குறியீடுகள் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தன என்றும், அதற்குக் கண்ணெழுத்து என்ற பெயர் இருந்தது என்பதையும் இலக்கியச்சான்றுகளோடு நிறுவுகிறது இந்நூல்.
இலக்கியமும் இலக்கணமும் ஒரு மொழியின் இருகண்கள் போன்றது. அந்தக் கண்களுக்கு ஒளி கொடுப்பது எழுத்துகள் மட்டுமே. அந்த எழுத்துக்களின் வகைப்பாடுகள் பற்றிய குறிப்புகளை இலக்கியச் சான்றுகளின் உதவியோடு பட்டியலிடுகிறது நூல். மேலும், பாட்டியல் நூல்களில் உள்ள முரண்பாடுகளையும் பதிவு செய்வதோடு, எழுத்துகள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் காட்சிப்படுத்துகிறது.
பண்டையத் தமிழி எழுத்துக்கள் மற்றும் பிராமி எழுத்துக்களுக்கு இடையேயான வேறுபாடுகள், தமிழி எழுத்துகளின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் உள்ள முரண்களையும் பதிவு செய்துள்ளார் மகாராசன். கிரந்த மொழிப்பயன்பாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.
தமிழ் எழுத்து மரபின் வளர்ச்சி நிலைகள் கடந்து வந்த பாதைகளை வரலாற்றுத் தடங்களோடு நிறுவும் மகாராசன், தமிழ் எழுத்துக்கள் வகைப்பாடு என்ற பெயரில் பாலினம், சமயம், சாதி, விலங்கு என்ற பெயரில் வேறுபடுத்தி உள்ள அறுவெறுப்பு நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். தமிழர் மட்டும் ஒடுக்குமுறையை நேர்கொள்ளவில்லை. தமிழ் எழுத்துகளும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின என்பதையும் சான்றுகளோடு நிறுவுகிறார்.
மேலும், தமிழ் எழுத்துக்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஆய்வாளர்களின் சறுக்கல்களையும், இரண்டகத்தினையும் காட்சிப்படுத்துவதோடு, தமிழ் எழுத்துகள் தனித்த மரபு கொண்டவை என்பதையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.
தமிழர் எழுத்து முறையை வைதீக மரபு தன்வயப்படுத்தும் நோக்கில், தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பிராமிய அடையாளத்தோடு சேர்த்து, தமிழ் பிராமி என்ற அடையாளத் திணிப்பின் பின்னணியில் உள்ள வைதீக நிறுவன சமயத்தின் போக்குகளையும் பதிவு செய்துள்ளார் மகாராசன்.
உலகப் பெரும்பரப்பில் மாந்த இனத்தின் குமுகக் கூட்டமைப்பிற்கு மொழியின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும். பண்பாடு என்பது ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையாகும். அந்தப் பண்பாட்டு ஒழுங்கு முறை எழுத்துகளுக்கும் பொருந்தும் என்ற வகையில் எழுத்துகளின் பண்பாட்டியல் பின்புலத்தைப் பதிவு செய்கிறார் மகாராசன்.
மொழி வரலாற்று நூல்கள் பெரும்பாலும் இலக்கண, இலக்கியச் சான்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் வேளையில், தமிழ் எழுத்துக்கென்று ஒரு பண்பாட்டு வரலாறு இருக்கிறது; அத்தகைய எழுத்துப் பண்பாட்டு மரபின் உள்ளே மண் சார்ந்த மக்களின் பண்பாட்டு அரசியலும் இருக்கிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
பிள்ளையார் வழிபாடு சார்ந்த இயங்கியல் முறைகளில், வைதீக மரபிற்கும் தமிழ் மரபிற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துக்கும் மகாராசன், பிள்ளையார் சுழி என்ற குறியீடு உணர்த்தும் பண்பாட்டு மெய்ப்பொருளை மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் விவரிக்கிறார்.
சமக்கிருத மொழியின் - வைதீக மரபின் பிள்ளையார் உருவத்தின் குறியீடு பழங்குடிகள் வீழ்ச்சியின் அடையாளத்தைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழர் வழிபடும் பிள்ளையார் உருவமற்ற பிடிமண் வகையைச் சார்ந்த ஒன்றாகும்.
இந்நிலையில், தமிழில் உள்ள "உ" என்ற குறியீட்டின் பண்பாட்டு மெய்பொருளை இலக்கியச் சான்றுகளின் துணைக்கொண்டு நிறுவுகிறார் மகாராசன். அவ்வகையில், உ என்ற குறியீட்டின் அடையாளம் என்பது, நிலம் என்னும் உலகத்தைக் குறிக்கிறது என்று பதிவு செய்கிறார்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று உழவுப்பண்பாடு. அந்தப் பண்பாட்டின் கருப்பொருளில் உலகைப் போற்றும் வகையில் பிள்ளையார் பிடித்தல் செய்முறையும், நாற்றுமுடிக்குப் பிள்ளை முடி என்று விளிப்பதும் தனித்த பண்பாட்டு மரபின் அடையாளமாகத்தான் தெரிகிறது.
தமிழர்களின் அனைத்து நற்செயல்களில் ஆவணப்படுத்தப்படும் "உ"என்ற எழுத்து உணர்த்தும் பண்பாட்டு மெய்யியலைப் பதிவு செய்கிறது. தமிழின் உ என்ற எழுத்து உலகத்தைக் குறிக்கும் பொருட்டே பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு நிறுவுகின்றது நூல்.
செழுமையான இலக்கண, இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி. இச்சிறப்பிற்கு அடிப்படையான தமிழ் எழுத்துக்களின் பண்பாட்டு மெய்யியல் மரபு பற்றி மானுடவியல், தொல்லியல், இலக்கண இலக்கியம், வரலாறு, பண்பாடு எனப் பன்முக நோக்கில் தமிழர் எழுத்து மரபின் அறத்தையும் அரசியலையும் பேசுகின்ற மிக முக்கியமான ஆய்வு நூலாகத் திகழ்கிறது இந்நூல்.
தமிழ்ச்சமூகத்திற்காக ஆய்வுத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவரும் மகாராசனின் படைப்பான தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு எனும் ஆய்வு நூல், அறிவுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதி பதிப்பகம் மிக நேர்த்தியாக வடிவமைப்பு செய்து வெளியிட்டிருக்கிறது. வாழ்த்துகள்.
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக